|
சதுரங்கப் புலி: ஆஷ்ரிதா ஈஸ்வரன் |
|
- பாலாஜி கோவிந்தன், மீனாட்சி கணபதி|நவம்பர் 2014| |
|
|
|
|
|
பெண்களுக்கான செஸ் தரவரிசைப் பட்டியலில் அமெரிக்க தேசிய அளவில் 30 இடங்களுக்குள் வந்துவிட்ட ஆஷ்ரிதா ஈஸ்வரனின் வயது 13 தான்! இவர் யூ.எஸ். சேம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் 22 வயதான, தன்னைவிட உயர்ந்த ரேங்கிங் கொண்ட, விக்டோரியா நீ என்பவரை அதிரடியாகத் தாக்கி விளையாடி வென்றது செஸ் உலகின் கவனத்தைக் கவர்ந்தது. அந்த ஆட்டம், தொடரின் மிகச்சிறந்த ஆட்டமாகத் தேர்வு பெற்று அவருக்கு 1,000 டாலர் பரிசையும் வென்று தந்தது. 7 வயதில் செஸ் ஆடத் தொடங்கினார் ஆஷ்ரிதா. 2008ல் அமெரிக்க செஸ் ஃபெடரேஷனில் (USCF) சேர்ந்தபிறகு வியக்கத்தகு வளர்ச்சி பெற்றுள்ளார். தற்போது 2231 புள்ளிகளுடன் இவர் முன்னணியை நோக்கிப் பயணித்துக் கொண்டுள்ளார். கடந்த ஆறு வருடங்களில், இவர் யூ.எஸ். செஸ் ஃபெடரேஷனின் 99 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
Norcal House of Chess அமைப்பில் தனிப்பயிற்சி வகுப்புகளைத் தொடங்கிய இவர், பின்னர் பல்கேரிய கிராண்ட் மாஸ்டர் டிஜான் பொஜ்கோவிடம் (Dejan Bojkov) பயிற்சி பெற்றார். அதன்பின் ரேட்டிங் இரு மடங்கானது. ஜனவரி 2010ல் 650 புள்ளிகள் பெற்றிருந்த இவர், அவ்வருட இறுதியில் 1300 புள்ளிகளை எட்டினார். ஜனவரி 2013ல் முதன்முறையாக 2200 புள்ளிகளைத் தொட்டார். சென்ற பிப்ரவரியில் கேண்டிடேட் மாஸ்டர் பட்டம் பெற்றார். தற்சமயம் கூடுதலாக ஆர்மீனியப் பயிற்சியாளர் ஆர்தர் அருத்யூனியனிடமும் பயிற்சி பெறுகிறார்.
ஓவியம், பியானோ, கர்நாடக சங்கீதம், நடனம் இவற்றிலும் ஆர்வம் இருந்த போதிலும், ஆஷ்ரிதா சதுரங்கத்திலேயே முழுகியிருக்கிறார். தாக்கி விளையாடுதல் இவரது பலம். செஸ் மென்பொருளின் உதவியோடு ஆட்டத்தை அலசி ஆராய்வது இவரது பயிற்சியின் அங்கம். ஒரு நாளில் 2 முதல் 3 மணி நேரம்வரை பயிற்சி செய்கிறார். "2014ல் நேஷனல் மாஸ்டர் பட்டம் பெற்றது மிகுந்த நிறைவு தந்தது" என்கிறார். |
|
|
2012ல் 12 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவில் தேசிய பட்டத்தை முதன்முறையாக வென்ற இவர், அடுத்த ஆண்டும் பதினான்கு வயதுக்குட்பட்டோர் பிரிவில் பட்டம் வென்றார். சர்வதேசப் போட்டிகளில், அமெரிக்காவுக்காக ஸ்லோவேனியா, துபாய், தென்னாப்பிரிக்கா ஆகிய இடங்களில் முறையே 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் விளையாடியுள்ளார். செஸ் தனக்கு ஒரு புதிய உலகத்தை திறந்து வைத்திருப்பதாகக் கூறும் இவர், பல புதிய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் தருவதாகக் கூறுகிறார்.
எதிராளியின் விளையாட்டை முதலிலேயே அலசி ஆராய்ந்து, வித்தியாசமாகக் காய் நகர்த்தி அவர்களை திணறடிப்பதில் இவர் வல்லவர். ஒரு தொழில்முறை செஸ் வீராங்கனை ஆக விரும்புகிறார் ஆஷ்ரிதா. செஸ் ஆர்வலர்களும், நிபுணர்களும் கூர்ந்து கவனிக்கும் ஒருவராக இவர் ஆனதில் சற்றும் வியப்பில்லை. நாமும் இவரது வளர்ச்சியைக் கண்டிப்பாகப் பின் தொடர்வோம்.
ஆங்கிலமூலம்: பாலாஜி கோவிந்தன், அலபாமா; தமிழில்: மீனாட்சி கணபதி |
|
|
|
|
|
|
|