|
பேரா. எம்.சி. மாதவன் |
|
- காந்தி சுந்தர், KPBS & ராமசேஷன், மெலிஸா ஜேகப்ஸ்|டிசம்பர் 2014| |
|
|
|
|
|
இவரைச் சாதனையாளர் என்றாலும் தகும், அமெரிக்கத் தமிழ் முன்னோடிகளில் ஒருவர் என்றாலும் தகும். 2014ம் ஆண்டுக்கான ஆசியா பசிஃபிக் அமெரிக்கன் ஹெரிடேஜ் மாதத்தின் (Asian Pacific American Heritage Month) Local Hero என்னும் பெருமைமிகு விருதினைப் பெற்றவர் டாக்டர். எம்.சி. மாதவன். 81 வயதான இவர் ஏறத்தாழ 54 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவருகிறார். தமது வாழ்க்கைப் பாதை மற்றும் அனுபவங்கள் சுவையானவை மட்டுமல்ல, வரும் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக அமைபவை.
செட்டிநாட்டில் கண்டரமாணிக்கம் என்ற கிராமத்தில், முருகப்பச் செட்டியார் மற்றும் அடைக்கம்மை ஆச்சி தம்பதியினருக்கு மூத்த மகனாகப் பிறந்தார் மாதவன். இவருக்கு ஒரு இளைய சகோதரர் உண்டு. கண்டரமாணிக்கம், அமராவதிபுதூர், திருப்பத்தூர் மற்றும் திருச்சியில் பள்ளிக்கல்விக்குப் பிறகு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தார். பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத் துறையில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். 1960ல் ஃபுல்பிரைட் ஃபெலோஷிப் (Fullbright Fellowship) பெற்றதன் பெயரில் அமெரிக்கா வந்தடைந்து மேடிஸனிலுள்ள விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் தமது மேலே படித்தார். 1963ல் Young Professional என்ற பிரிவினைத் தொடங்கிய உலக வங்கி, 2000 நபர்களை நேர்காணல் செய்து, பதினொரு பேரை மட்டும் தேர்ந்தெடுத்தது. அவர்களில் ஒருவர் மாதவன்.
1968ம் ஆண்டில் விண்ணப்பமோ, பேட்டியோ இல்லாமல் சான் டியகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் இவர் விரிவுரையாளராக நியமனம் பெற்றார். இதற்கு இவர் தேர்ந்தெடுத்த ஆராய்ச்சியின் தலைப்பு "இந்திய விவசாயிகளின் சப்ளை ரெஸ்பான்ஸ்" (Supply Response) என்பதாகும். இவரது மிக முக்கியச் சாதனை என்னவென்றால் அமெரிக்காவிலேயே அதிகம் ஃபுல்பிரைட் நியமனங்கள் (Fullbright Appointments) பெற்ற பேராசிரியர் என்பதுதான். ஐந்து ஃபுல்பிரைட் நியமனங்களைப் பெற்றதில், ஒன்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்காக என்பதும் சிறப்பு.
அவ்வளவாக இந்தியர்கள் அமெரிக்காவில் இல்லாத காலத்தில், இந்தியரிடையே கலாசாரப் பரிவர்த்தனையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் 1971ம் ஆண்டு தமது தோழர்களுடன் இணைந்து, மாதவன் Indian American Society-யை சான் டியகோவில் தொடங்கினார். அங்கே World Affairs Council தலைமைப் பொறுப்பினை ஏற்று நடத்தினார். இதன்மூலம், நலிவுற்ற சமூகத்தினருக்கு நிதியுதவி செய்தார். குறிப்பாக நேடிவ் அமெரிக்க சமூகத்தினருக்கு சுயமேம்பாட்டுத் திட்டங்களுக்கு உதவி புரிந்ததை நினைவு கூர்கிறார் மாதவன். 1974ல், சான் டியகோவில் Union of Pan Asian Communities என்ற அமைப்பைத் தொடங்கினார். ஆசிய இனத்தைச் சார்ந்த அத்தனை சமூகத்தினரையும் ஒன்றிணைத்த முதல் அமைப்பு இதுவே ஆகும். 2013ம் ஆண்டு தனது நாற்பதாவது ஆண்டுவிழாவை இந்த அமைப்பு கொண்டாடியது.
வாழ்க்கையின் மறக்க முடியாத சில தருணங்களை நினைவுகூர்ந்த மாதவன், இரண்டு சம்பவங்களை நினைவில் நிறுத்தியுள்ளார். ஒன்று, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது சக மாணவர்களுடன் இணைந்து, வசதியற்ற பள்ளி மாணவர்களுக்கு மாலை வேளையில் வகுப்புகளை நடத்தி வந்தாராம். அதில் பயனுற்ற பல மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புவரை வெற்றி நடை போட்டனராம். அதே பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்த பிறகு ஒருநாள், துணைவேந்தர் திரு. ராமநாதன் பிள்ளை அவர்களுடன் நடந்து சென்றபோது, இவரிடம் பாடம் படித்து வளர்ச்சியடைந்த ஒரு மாணவர் "குட் ஈவ்னிங் சார்" என்று கூறினாராம். அதைக் கேட்ட துணைவேந்தர், "இவர் யாரை சார் எனக் குறிப்பிடுகிறார், உங்களைத்தானே?" என்று மாதவனிடம் கூறினாராம். அந்த மாணவனின் அங்கீகாரத்தை இன்றும் மறக்க முடியாது என்கிறார் மாதவன். |
|
|
மற்றொரு பெருமையான தருணம், Gandhi King IKEDA Peace Award விருதினை இவர் பெற்றதாம். இவ்விருது அட்லாண்டாவிலுள்ள மோர் ஹவுஸ் கல்லூரியில் எம்.எல். கிங் ஜூனியர் இண்டர்நேஷனல் கிளையின் டீன் டாக்டர். லாரன்ஸ் கார்ட்டர் அவர்களால் வழங்கப்பட்டது. இதன் பின்னணி சுவாரஸ்யமானது. மகாத்மா காந்தியின் நினைவினை அமெரிக்கவாழ் இந்திய மாணவர்கள் மறவாவண்ணம் ஜனவரி 14ம் தேதி 1984ல் சான் டியகோ இந்தியன் அமெரிக்கன் சொஸைட்டி மூலம் மகாத்மா காந்தி ஸ்காலர்ஷிப் ப்ரோக்ராம் என்ற கட்டளையை இவர் துவங்கினார். உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கெனத் துவங்கப்பட்ட இக்கட்டளை மூலம், நலிவுற்ற மாணவர்களுக்குக் கல்லூரி செல்ல உதவியாக நான்கு வருடங்கள் தலா நான்காயிரம் டாலர்கள் சன்மானம் வழங்கப்பட்டு வருகிறது. 'அஹிம்சை' என்ற தலைப்பில் மாணவர்கள் கட்டுரை எழுத வேண்டும். அதில் நன்கு அமைந்த கட்டுரைகளைத் தேர்வுசெய்து, அப்படித் தேர்வுபெற்ற மாணவர்களின் SAT மற்றும் GPA மதிப்பெண்கள் மற்றும் பிற அடிப்படை வழிமுறைகளுக்கு உட்பட்ட தேர்வுகளின் பெயரில் மகாத்மா காந்தி நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனால் இந்தியரல்லாத மாணவர்களும் மகாத்மா காந்தியைப் பற்றி அறிவது மட்டுமல்லாமல் இந்த நிதியையும் பெற்றுள்ளனர். 32 ஆண்டுகளாக இந்நிதியினை வழங்கி வருகிறார்கள். அத்தோடு, மகாத்மா காந்தியைப் பற்றிய விரிவுரை ஒன்றும் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன் துவக்க விரிவுரையை ஆற்றியவர் நோபல் பரிசு பெற்ற திரு. ஜோனஸ் சால்க் என்பது குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டில் பணி ஓய்வு பெற்ற பின்னரும் சான் டியகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் அயலகக் கல்வித் திட்டம் ஒன்றைத் துவக்கி, (Study Abroad Program) அதற்குத் தலைமை வகிக்கிறார் மாதவன். இதன்மூலம் ஆண்டுதோறும் பத்திலிருந்து பன்னிரண்டு மாணவர்களை இந்தியா அழைத்துச் சென்று இந்திய கலாசாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு அறிமுகம் செய்விக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு மூன்று யூனிட் கிரெடிட்டும் உண்டு. கோவையிலுள்ள பி.எஸ்.ஜி. மையத்துடன் இணைந்து நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் கோவை, சென்னை, ஹொசூர், கொச்சின் போன்ற மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள பள்ளி, தொழிற்சாலை, மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து விரிவுரைகளும் கல்விச் சுற்றுலாக்களும் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் தாம் பெற்ற கல்வியே ஏராளம் என அடக்கத்துடன் கூறுகிறார் மாதவன்.
தற்போது எண்பத்தோரு வயதினை அடைந்த மாதவனின் பணிகள் இவ்வளவு மட்டுமே அல்ல. ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் இந்திய அமெரிக்க சொஸைட்டியினர் 'பன்மையில் ஒருமை' (Unity In Diversity) விழாவினை ஏற்பாடு செய்து அதில் இந்திய நாட்டிய வடிவங்களை அரங்கேற்றம் செய்கின்றனர்.
அக்டோபர் மாதத்தில் தீபாவளி விழா தற்போது எட்டாம் ஆண்டாக நடந்து வருகிறது. மெஹந்தி, பொருட்காட்சி தொடங்கி நாட்டிய நிகழ்ச்சிகள், தீபம் ஏற்றுதலோடு விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கென்றே பிரத்யேகமாக இதுவரை 54 பெரிய குத்து விளக்குகளைத் தயார் செய்துள்ளார் மாதவன். இவை ஒவ்வொன்றும் அபூர்வமானவையும் கூட. வரலாற்றுப் படங்களைப் பார்த்து அவற்றைப் போலவே பூம்புகார் நிறுவனத்தாரிடம் தனி ஆர்டர் செய்து கொணரப்பட்ட விளக்குகள் இவை. ஆமை விளக்கு, சிலுவை விளக்கு, பிறை விளக்கு என பலதரப்பட்ட விளக்குகளை இங்கு பார்க்கலாம். பேராசிரியருக்கு ஓர் ஆசை என்னவென்றால் 54 ஆக இருக்கும் விளக்குகளை, 108 ஆக்க ஆசைப்படுகிறார். நாகர்களின் விளக்கு, பவுத்தர்களின் விளக்கு என விளக்குகள் செய்ய நன்கொடையும் நாடுகிறார்.
San Diego Indian American Society வழியே, சமூகப் பணியில் தம்மை ஈடுபடுத்திய நபர்கள் சிலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு வெள்ளியில் செய்த சக்கரம் ஒன்றினைப் பரிசாக வழங்குகிறார்கள். இந்தச் சக்ரா விருதினைப் பெற்றவர்களுள் திரு. யோகானந்த பரமஹம்சர், திரு. திலீப் சிங் சந்தூ (இந்திய வம்சத்தில் வந்த முதல் காங்கிரஸ்மேன்) திரு. அமர் போஸ், பண்டிட் ரவிசங்கர், திரு. ஆமார்த்யா சென் அடங்குவர். சான் டியகோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தன்னை Most Influential என நியமனம் செய்ததை மறக்க இயலாது என்று நெகிழ்கிறார் பேரா. மாதவன்.
தற்போது அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்கு இவர் கூறுவது, "ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த கல்வி உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும். இதன் தொடக்கமாகத் தமது பிள்ளைகளின் பள்ளிகளில் பெற்றோர்-ஆசிரியர் அவையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும்" என்பதே. வரக்கூடிய சந்ததியினர் மகாத்மா காந்தியை மறவாமல் இருக்க வேண்டும். சத்தியம், தர்மம், நியாயம் இவற்றைக் கடைப்பிடித்தல் அவசியம் என்பது இவரது அறிவுரை. தமது வெற்றியின் அடிப்படை தமது தாயார் திருமதி அடைக்கம்மை ஆச்சியும் அவர் பிறருக்கு எதிர்பார்ப்பின்றிச் செய்த உதவிகளும்தான் என்கிறார். "பலன் கருதாது பணி செய்தலை பகவத்கீதைதான் நமக்குப் போதிக்கிறதே!" என்கிறார் பேராசிரியர்.
பேராசிரியருக்கு இரண்டு மகன்கள். நான்கு பேரக் குழந்தைகள். இவருக்குப் பெரிய உறுதுணை இவரது துணைவியார் திருமதி நாச்சா மாதவன். திருமணமாகி 66 ஆண்டுகள் ஆகின்றன. இன்றுவரை சேலையைத் தவிர வேறு நாகரிக உடை ஏதும் திருமதி. நாச்சா மாதவன் அணிவதில்லையாம்.
உலகில் பல இடங்களுக்குச் சென்றுவந்த மாதவனுக்குப் பிடித்த இடம் அவர் பிறந்த கண்டரமாணிக்கம் கிராமம்தான். ஆண்டுதோறும் அங்கு சென்று வருவதை பொக்கிஷமாகக் கருதுகிறார்கள் இத்தம்பதியினர். ஐ.நா. சபையின் இந்திய விரிவுரை இயக்கத் தலைவர், 1985-87 காலத்தில் தமிழ்நாடு அறக்கட்டளைத் தலைவர் எனப் பல பெரிய பொறுப்புகளை வகித்தவர் மாதவன். அவரது நிறைவான வாழ்க்கைக்கும் சாதனைகளுக்கும் தென்றலின் வாழ்த்துக்கள்.
காந்தி சுந்தர், சான் டியகோ, கலிஃபோர்னியா புகைப்படம் உதவி: KPBS & ராமசேஷன் புகைப்படக்காரர்: மெலிஸா ஜேகப்ஸ் |
|
|
|
|
|
|
|