Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | சாதனையாளர் | சமயம்
நூல் அறிமுகம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சாதனையாளர்
ஃபுல்பிரைட் கல்வி நிதியம் பெற்றோர்
- செய்திக்குறிப்பிலிருந்து|ஜனவரி 2014||(1 Comment)
Share:
ஃபுல்பிரைட் கல்வி நிதியம் பெற்றோர் அதைக்கொண்டு அமெரிக்காவில் மேலே படிக்கலாம், ஆராய்ச்சியில் ஈடுபடலாம். இதைப் பெற்றுள்ள சாதனையாளர் இருவரைச் சந்திக்க வாருங்கள்:

டாக்டர். லலிதா முத்துஸ்வாமி
இரண்டுமுறை ஃபுல்பிரைட் நிதியம் பெற்றவர் சென்னைவாசி வயலின் வித்வான் முனைவர் லலிதா முத்துஸ்வாமி. முதன்முறையாக 2005ல் இந்த நிதியம் பெற்றபொழுது பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆய்வுசெய்ததோடு இசைத்துறையில் போதிக்கவும் செய்தார். அதே ஆண்டு இவருடைய சகோதரி நந்தினி இங்கிலாந்தின் CWIT ஆய்வு நிதியம் பெற்றார். இருவரும் இவ்விரு நாடுகளுக்கும் கலாசாரத் தூதுவர்களாக நியமிக்கப்பட்டனர்.

இம்முறை ஃபுல்பிரைட்-நேரு விரிவுரையாளர் ஆய்வு நிதியம் (Fulbright Nehru Lecture Fellowship) பெற்று இலையுதிர்காலத்தில் அயோவா பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் உதவியிணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவருடைய மாணவர்கள் இசைத்துறை முதுகலை மாணாக்கர்கள், இன இசையியல் மற்றும் ஜாஸ் கலாசாரம் கற்போர்.

கலைமாமணி விருதுபெற்றுள்ள இவர் MS Academy of global Music என்னும் கல்விக்கூடத்தைத் தொடங்கி இணையத்தின் மூலம் வயலின் வகுப்புகள் நடத்துகிறார். இதற்கு முன் தம் அன்னயார் சங்கீதசரஸ்வதி திருமதி. சுப்புலக்ஷ்மி முத்துஸ்வாமி அவர்களின் லக்ஷ்மிநாராயணா இசைப் பள்ளியில் கற்பித்துள்ளார். இவருடைய சகோதரி நந்தினி முத்துஸ்வாமியும் கலைமாமணி விருது பெற்ற வயலின் வித்துவான். இவர்களின் மாணவர்கள் உலகம் முழுவதும் பரவியுள்ளனர். குறிப்பிடத்தக்கவர்கள் யுவன் சங்கர், சைந்தவி. வயலின் மட்டுமின்றிக் கீபோர்ட், வாய்ப்பாட்டு ஆகியவையும் கற்பிக்கிறார்.

இவரும் சகோதரி நந்தினியும்தான் தென் ஆஃப்ரிகாவில் உள்ள க்ளேஸ் பேலஸ் அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர்கள். பிபிசி நிறுவனத்தின் வேர்ல்ட் ரௌட்ஸ் நிகழ்ச்சியிலும் வாசித்தது மட்டுமின்றி பேட்டியும் காணப்பட்டனர். விரிபோணி என்னும் பைரவி ராக அடதாள வர்ணத்தை நான்கு கதிகளில் வாசிப்பது இவருடைய சிறப்பு.

தற்போது அயோவாவில் வயலின் வகுப்புகள் நடத்துகிறார். ஆஃப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டுக் கலைஞர்களுடன் இணைந்தும், தனியாகவும் அயோவா, ஆர்லாண்டோ, இந்தியானா, மயாமி, ஒஹையோ, ஆகிய இடங்களில் கச்சேரிகள் நிகழ்த்த்தியுள்ள இவர் டிசம்பரில் எல்லேயிலும், நியூ யார்க்கிலும் கச்சேரிகள் செய்ய உள்ளார். ஆர்லாண்டோ ஜுகல்பந்தி நிகழ்ச்சி மறக்கமுடியாத அனுபவம் என்கிறார்.
டாக்டர். உமா வாங்கல்
ஃபுல்பிரைட் - நேரு உதவித்தொகையைப் பெற்று, கென்யான் கல்லூரியில் (Kenyon college, Ohio) பணிபுரியும் மற்றொரு சென்னைவாசி முனைவர். உமா வாங்கல். 'இந்தியத் திரைப்படங்கள்-ஒரு சமூகக் கண்ணோட்டம்: பாலிவுட்டும், அதற்கு மேலும்' என்பது குறித்து இவர் போதிக்கிறார். நிருபர், விமரிசகர், படத்தயாரிப்பாளர், ஊடக மற்றும் தகவல் தொடர்புத்துறை ஆசிரியர் எனப் பலமுகங்கள் கொண்டவர் இவர். எல்வி பிரசாத் பட, தொலைக்காட்சிக் கல்விக் கழகத்தில் பேராசிரியப் பணியாற்றுவதோடு, லயோலா கல்லூரியில் (அமெரிக்கா) வருகைப் பேராசிரியராக இருக்கிறார்.

ஒரு சராசரி மேல்நாட்டுவாசிக்கு இந்தியப் படங்கள் என்றாலே பாலிவுட் மசாலாதான் என்ற எண்ணம் இருக்கிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மண்வாசனையும் கருத்தாழமும், கலையாழமும் கொண்ட வித்தியாசமான படங்கள் எடுக்கப்படுகின்றன. அவை உலகத்தரம் வாய்ந்தவை. அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவரத் துடிக்கிறேன் என்கிறார் உமா.

"ஏன் உங்கள் இந்தியப் படங்கள் ஆட்டமும் பாட்டமுமாக உள்ளன? அவற்றில் தொடர்ச்சி இல்லை; சம்பந்தமின்றிக் கதாநாயகனும், நாயகியும் ஆல்ப்ஸ் மலையிலோ, நியூ யார்க்கின் தெருக்களிலோ கும்மாளமிடுகிறார்கள்" இது என் மாணவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது முதலில்.

நான் சொன்னது: "இந்தியர்கள் தொன்றுதொட்டுக் கலா ரசிகர்கள். பாட்டும் நடனமும் எங்கள் கலாசாரத்தில் பின்னிப் பிணைந்தவை. திரைப்படம் என்பது பாட்டும், நடனமும் நிறைந்த ஊடகந்தான். அக்குவேறு ஆணி வேறாக அலசாமல், வாழ்க்கையின் அவலங்களை மறந்து சில மணிநேரம் சந்தோஷத்தில் மனம் சிறகடித்துப் பறக்கத் திரைப்படங்கள் உதவுகின்றன. மேல் நாட்டுப் படங்களையும் எந்தவிதக் கேள்வியும் கேட்காமல்தான் பார்க்கவேண்டியுள்ளது. எந்த நாட்டுப் படமாக இருந்தாலும் ஒவ்வொன்றையும் மணிக்கணக்காக விளக்கிக் கொண்டிருக்க முடியாது. அமெரிக்காவில் 'சோப்' என்று சொல்லப்படும் சின்னத்திரைத் தொடர்களில் சில, பல ஆண்டு காலம் ஓடுகின்றன. அவற்றில் ஏற்படும் திடீர்த் திருப்பங்கள் பாலிவுட் படங்களையும் விஞ்சிவிடும்" என்றேன்.

ஆறுவார காலத்திலேயே ஆங்கிலத் துணைத்தலைப்புகள் இன்றி 'சாகர சங்கமம்' படத்தைப் பார்த்து ரசிக்கும் அளவுக்கு மாணவர்கள் முன்னேறியிருப்பது தனது சாதனை என்கிறார்.

இனவியல் படங்கள் (சிதம்பரத்துத் தீக்ஷிதர்கள், பீகார் பேகங்கள்), கல்விப் படங்கள் (கரிம விவசாயம்-இலங்கை), வளர்ச்சிப் படங்கள் (இந்தியாவிலும் இலங்கையிலும் ஆக்ஸ்ஃபாமுக்காக), ஆவணப்படங்கள் (சென்னைப் பல்கலைக்கழகம், பாலியல் வன்முறை) தவிர ஒரு குறும்படம், விளம்பரப் படங்கள் தயாரித்துள்ளார். குட்டி, கனவு மெய்ப்பட வேண்டும் ஆகிய திரைப்படங்களின் தயாரிப்பில் பெரும்பங்கு ஏற்றுள்ளார். வசனமெழுதுதல், படத்தயாரிப்பு, பாலியல்துறை போன்றவற்றில் பயிலரங்குகள் நடத்துகிறார். அரசுசாரா நிறுவனங்களில் தனிமனித உறவுகள் பற்றிப் பாடம் எடுக்கிறார்; ஆளுமைப் பயிற்சியும் அளிக்கிறார்.

தற்பொழுது இவர் பரிசீலித்துக்கொண்டிருப்பது - தனி மனிதனொருவன் ஒரு காட்டை விதைத்த விதம், ரஜினிகாந்தின் ரசிகர்கள், வசதியற்ற குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டும் காற்பந்தாட்டம் முதலியவை. விஷ்வம் அறநிலையத்தின் அறங்காவலர்களுள் ஒருவரும் ஆவார். தாம் ஒரு இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளும் இவர், ஊடகக் கலை மையம் ஒன்று தொடங்கக் கனவு காண்கிறார். அது இளங்கலைஞர்களுக்கும், ஊடக வல்லுநர்களுக்கும் உலகையே அரங்கமாக்கும் என்று நம்புகிறார்.

இவருக்கு அமெரிக்காவில் பல சுவையான அனுபவங்கள். ஆமிஷ் வியாபாரிகள் தமிழ்நாட்டு மளிகைக்கடை நாடார்களை நினைவு படுத்தியதாகச் சொல்கிறார். நவராத்திரிக்கெனக் கல்லூரியில் பொம்மைக் கொலுவும், தாம்பூலத்தட்டும் ஏற்பாடு செய்தாராம். கேம்பியர் கிராம மக்களின் ஆதரவும் அரவணைப்பும் இவரது நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. "உலகம் முழுவதும் மக்கள் ஒரேமாதிரிதான். ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்கிறார் உறுதியாக.

ஒரு நூறு பேராவது என்னுடைய முயற்சியால் இந்தியப்படங்களைப் பற்றிய தங்கள் தவறான கருத்துகளை மாற்றிக்கொண்டிருப்பார்கள்" என்று நம்புகிறேன் என்கிறார்.

ஃபுல்பிரைட் கல்வி நிதி
ஃபுல்பிரைட் கல்வி உதவித்தொகை பெற்ற இந்தியர்கள் அமெரிக்காவில் மேல்படிப்புப் படிக்கலாம், ஆய்வு செய்யலாம், கற்பிக்கலாம், தொழில்நுட்ப அறிவைப் பெருக்கிக் கொள்ளலாம், தலைமைச் செயல்பாடுகள் பற்றி அறியலாம். இந்த உதவித்தொகையைப் பெறுவதற்குத் தம் துறையில் தலைசிறந்தவராக இருக்கவேண்டுவதில்லை.

இந்தியாவில் இந்த நிதிக்கொடையை நிர்வகிக்கும் அமெரிக்க இந்தியக் கல்வி அறநிலையம் (USIEF) இருநாடுகளுக்குமிடையே உள்ள நல்லுறவை வலுப்படுத்துகிறது. மாணவர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் கல்விமான்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள் ஆகியோர் இருநாடுகளிலும் தாம் விரும்பும் கல்வி நிறுவனத்திற்குச் சென்று பயின்று தமது அறிவை மேம்படுத்து உதவி செய்வாகிறது. இன்றுவரை பதினேழாயிரத்துக்கும் மேற்பட்ட ஃபுல்பிரைட், ஃபுல்பிரைட்-நேரு, மற்றும் பல மதிப்பிற்குரிய மானியங்கள், உதவித்தொகைகள் ஆகியவற்றைப் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு வழங்கியுள்ளது.

செனடர் ஜே. வில்லியம் ஃபுல்பிரைட்டின் கனவை நனவாக்குகிறது இந்த அமைப்பு. உலகிலேயே அதிகபட்ச அளவில் இந்தியர்கள்தாம் ஃபுல்பிரைட் உதவித்தொகையைப் பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் சுமார் இருநூறு இந்தியர்கள் பயனடைகின்றனர்.

உதவித்தொகை அளிப்பது மட்டுமின்றி இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் மேல்படிப்பைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை எடுத்துரைக்கிறது. EAS என்னும் அமெரிக்கக் கல்வி அறிவுரைச் சேவை நிறுவனத்தின் கிளைகள் புது தில்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை ஆகிய இடங்களில் உள்ளன. மேலும் விவரங்களுக்கு:

EDUSA தொலைபேசி எண்:1-800-103-1231
நேரம்: பிற்பகல் 2:00 லிருந்து 5:00 வரை
நாள்: திங்கள் முதல் வெள்ளி வரை
Share: 




© Copyright 2020 Tamilonline