|
|
உல்லாசப் பயணம் செய்யும் வழக்கம் எமக்கு இல்லை. மேலை நாட்டவர் களும், அவுஸ்திரேலியர்களும், யப்பானியர்களும் குளிர்காலங்களில் இலங்கை, மாலைதீவு போன்ற நாடுகளுக்கு உல்லாசப் பயணங்களை மேற்கொள்வார் கள். இவர்கள் பெரும்பாலும் ஒரு வருடத்துக்கு முன்னமே தாம் அடுத்த ஆண்டு இன்ன இடத்திற்கு விடுமுறையில் செல்லவேண்டுமென்று திட்டமிட்டுப் பணத்தைச் சேமிப்பார்கள். நாம் பேச்சில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று சொல்லிக்கொள்வோம், ஆனால் நடை முறையில் ஒதுங்கியே வாழ்கிறோம். விதிவிலக்காகச் சிலர் உளர். அவர்களில் அ. முத்துலிங்கமும் ஒருவர்.
அவர் பாக்கியசாலி. உத்தியோகத்தின் நிமித்தம் வெவ்வேறு நாடுகளைச் சுற்றிப் பார்த்து அந்தந்த நாட்டு மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களுடைய பழக்க வழக்கங்களையும், பண்பாட்டையும் ஊன்றி அவதானித்து வந்திருக்கிறார். அவருடைய அறிவும், ஆற்றலும் அவரை ஆங்கில எழுத்தாளராய் ஆக்கியிருக்கலாம். ஆனால் தமிழில், அதுவும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சொற்களையே ஆங்காங்கே பெய்து அவர் எழுதுகிறார். பெரும்பாலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் படும் அவலங்களை நையாண்டி தொனிக்கும் வகையில் கதைகளைப் புனைகிறார். ஆயினும் பிறநாட்டவர்களைப் பாத்திரங் களாக்கிப் படைக்கும் கதைகளிலும் இந்த நளினமும், நையாண்டியும் தோன்றவே செய்கின்றன.
முத்துலிங்கத்தின் கதைகளில் வேறு சிறப்புகளையும் காணலாம். 'மகாராஜாவின் ரயில்வண்டி' என்னும் கதைக்கோவையில் 20 கதைகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சிறந்த கதையென ஒன்றைச் சுட்டிக் காட்டுதல் சிரமம். சொல் புதிது, பொருள் புதிது எனப் பாராட்டத் தகுந்த வகையில் ஒவ்வொரு கதையும் புனையப்பட்டுள்ளது. சேக்ஸ்பியர் ஒருபோதும் சொன்ன விடயத்தை திருப்பிச் சொல்லார் என்பது அ. முத்துலிங்கத்தின் கதைகளுக்கும் பொருந்தும். மற்றொரு சிறப்பு கதைகளில் கையாளப்பட்டிருக்கும் உவமானங்கள். ஆங்கில இலக்கியத்திலும், தமிழ் இலக்கியத் திலும் மட்டுமல்லாமல் இசைத்துறையிலும் பரந்த ஈடுபாடு உள்ளவரென்பதை அவரின் கதைகள் புலப்படுத்துகின்றன.
அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர் என்பதும் சில கதைகளில் பளிச்சிடுகின்றது. குறிப்பாக 'தொடக்கம்' என்னும் கதையை சுட்டிக் காட்டலாம். அதே கதையில் வரும் கீழ்க்காணும் பந்திகள் இன்றைய உலகாளும் நிறுவனங்களின் அந்தரங்கத்தை அம்பலமாக்குகின்றன: "உலகில் உள்ள கம்பனிகள் எல்லாம் ஒரு பொருளை அல்லது சேவையை வாங்கி, பிறகு விற்கும்; அல்லது உற்பத்தி செய்து விற்கும். ஆனால் இந்த நிறுவனம் அதற்கு விதி விலக்கு. இது ஒரு அடி மேலே போய் அந்தக் கம்பனிகளையே வாங்கி விற்கும் தொழிலைச் செய்தது." "இதற்கு வேண்டிய மூலதனத்தில் முக்கியமானது அயோக்கியத்தனம். இதன் அடித்தளமே தர்ம விரோதமாகச் செயல் படுவதுதான். இது தவிர வஞ்சகம், சூழ்ச்சி போன்ற குணாம்சங்களும் வரவேற்கத் தக்கவை."
"மீதியான மூலதனம் வாடிக்கையாளர்களிடமிருந்தே கிடைக்கும். மனிதனுக்கு மிக இயல்பான மெளடீகம்தான் இதற்கு ஆதாரம். மக்களிடையே மெளடீகம் ஏராளமாக இருந்ததால் வியாபாரமும் ஏராளமாகப் பெருகியது." அமெரிக்காவிலும் ஏனைய முதலாளித்துவ நாடுகளிலும் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களின் கணக்கு வழக்குகள் பற்றிச் சமீபத்தில் வெளியாகிவரும் செய்திகள் முத்துலிங்கத் தின் இந்தக் குறிப்பினை எண்பிப்பனவாய் விளங்குகின்றன.
'ஆயுள்' என்றொரு கதை. ஒரு கவிதை போல அதன் நடை அமைந்திருக்கிறது. இதில் எந்தப் பகுதியை உதாரணம் காட்டுவதென்பது எனக்குத் தெரியவில்லை. ஆயினும் ஒரு பந்தியை மேற்கோளாகக் காட்டுகிறேன். "பனிதான் நிரந்தரமானது. தண்ணீர் பனியின் மாறுவேடம்தான். சிலுசிலுவென்று தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. பனி உருகி வழிந்த நீர். அவன் குனிந்து அந்த பிளாஸ்டிக் குடுவையில் அதை நிரப்பினான். திவலைகள் சிதறின. சூரிய ஒளியில் அவை தகதகவென்று பிரகாசித்தன. வாயிலே ஊற்றியபோது குளிர்ந்து அவன் களைப்பை நீக்கியது."
இந்தக் கதையில் பிளாஸ்டிக் குடுவைதான் கதாபாத்திரம். இங்கே முத்துலிங்கத்தின் வாழ்க்கை வாஞ்சை நாம் ஓரளவு காணக் கூடியதாக இருக்கிறது. "வேகமும் யந்திர வாழ்க்கையும் அவனுக்குப் பிடிக்காதது. இந்த மலைவாசிகள் இயற்கையைப் பலவந்தம் செய்யாமல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். இங்கே சத்துருக்கள் இல்லை; ஆகவே சமரும் இல்லை. ஆற்றில் கழிவுகள் இல்லை. ஆகாயத்தை மறைத்து நச்சுப் புகையும் இல்லை. உண்மையான பூமியின் மணம் இங்கே அவனுக்குக் கிடைத்தது. எல்லாமே மண்ணில் மறைந்தது, துளிர்த்தது, கிளைவிட்டது, மீண்டும் மறைந்தது." இயற்கையின் இந்த லாவண்யத்தைக் குலைக்கும் வகையில் மனிதனின் செயற் பாடுகளும், அவற்றின் விளைவான பிளாஸ்டிக் நாகரிகமும் அமைந்துள்ளன என்பதுதான் இந்தக் கதையில் முத்துலிங்கத் தின் அங்கலாய்ப்பு. பிளாஸ்டிக் குடுவையின் ஆயுட்காலம் நானூறு வருடம். 'ஒரு நூறு வருடம்தான் இப்போது கழிந்திருந்தது... அது மண்ணோடு மண்ணாகி முற்றிலும் அழிந்து போவதற்கு இன்னும் முன்னூறு ஆண்டுகள் இருந்தன. அது மாத்திரம் நிச்சயம். திறமான நிச்சயம்." இவ்வாறு முடிகிறது 'ஆயுள்' என்னும் இக்கதை. |
|
தேசாந்திரியான ஓர் ஆணுக்கும், மலைவாசியான ஒரு பெண்ணுக்கும் ஏற்படும் உறவுக்குச் சின்னமாக அமைந்த பிளாஸ்டிக் குடுவை அவர்கள் மறைந்து நூறு வருடத்தின் பின்னரும் அழியாதிருக்கும் என்பதை வலியுறுத்தும் ஆசிரியர் இன்றைய நாகரிகத்தின் அனர்த்தத்தை சூசகமாக உணர்த்துகிறார்.
- "கலிவரின் பயணங்களில் வரும் ஒரு ராட்சதப் பறவைபோல அம்மா எங்கிருந்து தான் பறந்து வந்தாளோ தெரியாது."
- "அப்பா! அப்பா! நான் ராப்புன்ஸேல் மாதிரித் தலைமயிரை தொங்கவிட்டுக் கொண்டிருப்பேன். நீங்கள் ராசகுமாரன் மாதிரி அதிலே பிடித்து ஏறிவரலாம்."
- "கர்ணன் போர் உக்கிரத்தில் கவச குண்டலங்களைக் கழற்றி தானம் செய்தது போல இவனும் தந்தான்."
- "நிலவறையில் மறந்துபோன, பாரதிராஜா பார்த்துப் பொறாமைப் படும்படியான, நீண்ட வெள்ளைத் துகில் ஆடை இருந்தது."
- "சாளரம் 2000 வெளியீடு விழாவை பில் கேட்ஸ் மேற்பார்வை செய்வதுபோல, தம்பிராசா கொஞ்சம் தள்ளி நின்று, நெஞ்சிலே கைகளைக் குறுக்காகக் கட்டி, தன் மனையாளைப் பெருமையோடு பார்த்தார்."
- "இலச்சினை மோதிரம் கிடைத்த வந்தியத்தேவன் போல ஒருவித உற்சாகத் துடன் புறப்பட்டார்."
இவற்றில் பாரதிராஜாவின் படங்களில் வரும் விநோத ஆடை அலங்காரத்தை மட்டுமே வாசகர்கள் புரிந்துகொள்வார்கள். கலிவரின் பயணங்கள், ராபுன்ஸேலின் கேசம், சாளரம் 2000, ஏன் வந்தியத்தேவன் பெற்ற இலச்சினை மோதிரம்கூட இன்றைய வாசகர்களுக்கு விளங்குமோ என்பது சந்தேகமே.
இப்படியான உவமானங்கள் எல்லாக் கதைகளையும் அலங்கரிக்கின்றன. இந்த வகையில் முத்துலிங்கத்தின் பல தரப்பட்ட வாசிப்பு மற்றும் கவனிப்புகளை நாம் கண்டு வியக்கிறோம். இவை சாதாரண சம்பவங்களுக்கு ஒரு வகை வேகத்தையும், எழிலையும் வழங்குகின்றன.
"ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது." இப்படி ஆரம்பிக்கிறது விவிலிய நூலிலே யோவான் எழுதின சுவிசேஷம். இதை நினைவூட்டும் வகையில் அமைந்திருக்கிறது முத்துலிங்கம் தன் முன்னுரையில் தெரிவித்திருக்கும் கருத்து. "வார்த்தைகளே என் கதைகளுக்கு ஆரம்பம். ஒரு நடு நிசியிலே அபூர்வமான ஒரு வார்த்தை வந்து என்னைக் குழப்பிவிடும். அது என்னை வசீகரிக்கும். சிந்திக்க வைக்கும். பிறகு ஆட்கொள்ளும். அப்படித்தான் தொடக்கம்." என்று சொல்கிறார். கடவுள் சரி, எழுத்தாளனும் படைப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு வார்த்தைதான் ஆதாரமோ?
முத்துலிங்கத்தின் கதைகளை எவ்வாறு வகைப்படுத்தலாமென எனக்கு விளங்கவில்லை. புதுமைப்பித்தன், கு.ப.ரா, மெளனி, லா.ச.ரா ஆகிய தமிழ்க் கதாசிரியர்கள் அனைவரின் கதைசொல்லும் பாங்கின் சங்கமம் போல அவரின் ஆக்கத்திறன் காணப்படுகிறது. ஆயினும் கதைப் புனைவு, பாத்திர வார்ப்பு, உவமான உவமேயங்களின் பிரயோகம், குறியீடுகள், வார்த்தைகளின் தெரிவு, கதைகளின் நிகழ்விடம் இவை யாவும் தமிழுக்கே புதியவை. முத்துலிங்கத்தின் கதைகளைப் படித்த துணிவிலேதான் எஸ்.பொ "நொபெல் பரிசு பெறும் தகைமை இலங்கை எழுத்தாளர்களுக்கே உண்டு" என்று மார் தட்டினார் போலும்.
மகாராஜாவின் ரயில்வண்டி அ. முத்துலிங்கம் விலை: ரூ. 75 காலச்சுவடு பதிப்பகம் 669 கே.பி. சாலை நாகர்கோவில் 629001
காவலூர் ராசதுரை அவுஸ்திரேலியா |
|
|
|
|
|
|
|