|
உமா மகேஸ்வரியின் 'மரப்பாச்சி' |
|
- மனுபாரதி|பிப்ரவரி 2004| |
|
|
|
ஆணாதிக்கச் சமூகம் என்பது உலகம் முழுதும் பொதுவாய்க் காணக் கிடைப்பதுதான். எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் பெண்களின் துயரங்களைப் பெண்களை விட நிறைய ஆண் எழுத்தாளர்களே காலம் காலமாய்ச் சொல்ல முற்பட்டிருப்பதும் இந்த ஆதிக்கத்தின் பரப்பைத்தான் காட்டுகிறது. மனதளவில், சிந்தனையில், ஒவ்வொன்றை யும் பார்க்கும் பார்வையில் பெண்கள் ஆண்களிலிருந்து எவ்வளவு வேறுபடுகிறார்கள்! தங்கள் கட்சியைப் பெண்கள் தங்களது வார்த்தைகளில் தாமே வெளிப் படுத்தும்போது உண்மை எந்தவித வெளிப்பூச்சுகளாலும் மறைபடுவதில்லை.
"இப்படித்தான் நீ இருக்க வேண்டும், இதுதான் உன் ஸ்தானம், இவைதான் நீ காப்பாற்ற வேண்டிய மதிப்பீடுகள், இப்படித்தான் உன் யோசனை, எண்ணங்கள் இருக்க வேண்டும்" என்பதாக ஆண் ஏற்படுத்திவைத்த இந்த விதிகளில், சிந்தனைப் போக்கில் சிக்கிக் கறைபடியாமல் பெண்ணுணர்வுகள், பிரச்சனைகள், நேர்மையாய், நிர்மலமாய் வெளிப்படும் சாத்தியம் ஒரு பெண்ணின் எழுத்தில்தான் இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. உமா மகேஸ்வரியின் 'மரப்பாச்சி' சிறுகதைத் தொகுப்பு இதற்கு நல்ல சான்று.
"இன்னும் சும்மாதான் இருக்கியா..?" - கல்யாணங்களில், வளைகாப்பு களில் அவளின் அடிவயிற்றைப் பார்வையால் துளைத்து கேட்கப் படும் கேள்வி. எண்ணற்ற மருத்துவப் பரிசோதனைகள் அவளுக்கு மட்டும். உடலுறவிற்குக் கருமுட்டைகள் வைத்து நாள் குறிக்கப்படுகிறது. அவளது உணர்வுகள், ஆசாபாசங்கள் எல்லாம் எவரது கண்களுக்கும் தெரிவதில்லை. தெரிவதெல்லாம் இன்னும் இவள் கருவுறவில்லை என்ற ஒன்றுதான். 'கரு' என்ற கதையில் ஒரு திருமணமான பெண்ணைச் சமூகம் உற்பத்தித் தராசில் வைத்து எடை போடுகிறது.
வீடற்ற அந்தப் பைத்தியக்காரப் பெண்ணின் புலம்பல்கள், பிதற்றல்கள், பிலாக்கணம் அந்த ஊரையே அலைக்கழிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவள் நிர்வாணம் முகத்தில் வந்து அறைகிறது. உடைகளையும், உடலையும் துறந்து அவள் வேறு உலகில் சஞ்சாரிக்க, ஊர் அவளது "அம்மணத்தில் இடறி வீழ்ந்து எழ மாட்டாமல்" கிடக்கின்றது. கறிக்கு அடிக்க பலாத்காரமாய்த் தூக்கிச்செல்லும் பன்றியின் கதறல் போல் அவளது ஓலம் ஓரிரவு கேட்கிறது. அவளது அலறலில் விதிர்த்து நிற்கின்றன 'புதர்கள்'.
விடுமுறைகளைக் கழிக்க, குழந்தைகளற்ற அத்தை வீட்டிற்குத் தன் செல்ல மரப்பாச்சியை இட்டுச்செல்கிறாள் அனு. அவளது இன்னும் 'ஆளாகாத' உடம்பில் மாமாவின் கண்கள் ஆயிரம் அம்புகளைச் செலுத்தியவண்ணம் இருப்பதை அவளால் என்னவென்று இனம்காண முடியவில்லை. சிறுவயதில் செல்லம் காட்டிய மாமாவின் தொடுகையில் இப்பொழுது வேறு அர்த்தம் தொனிக்கிறது. 'மரப்பாச்சி' கதையில் தன் குழந்தைத் தனத்திலிருந்து பலாத்காரமாக 'ஆளாக்க'ப் படுகிறாள் அனு.
ரமாவும் கல்பனாவும் சமையலறை ஜன்னல்வழி தூரத்தே தெரியும் மலையின் சவாலை ஏற்றுக்கொள்கிறார்கள். வீட்டை, தெருவை, நகரத்தைத் தாண்டி மலையை நோக்கிப் பயணிக்கிறார்கள். மலையின் பேராண்மை (இதில் கூட ஆண்மை) மருட்டுகிறது. அதன் கரடு முரடான மேற்புறம், செதில் செதிலான பாறைகள், இடரக் காத்திருக்கும் சரளைக் கற்கள், இதுவரை மனித சஞ்சாரத்தின் வாசனையே படாத காட்டுச் செடிகள், புதர்கள், பளிங்கு நீர்த் தேக்கம். அவர்களின் பயணத்தில் ஆச்சர்யங்களும், சோர்வுறவைக்கும் கடின ஏற்றங்களும், உடலின் சாரத்தையே உறிஞ்சிவிடக் காத்திருக்கும் உயரங்களும், போகப்போக போதையாய் ஏறும் சிகரத்தைத் தொடும் ஆசையும் வந்து ஆட்கொள்கின்றன. 'மலையேற்றம்' சூட்சும மாய் நூதன அனுபவமொன்றை நம் முன் பரத்தி விரிக்கிறது.
அம்மாவின் இளவயது மரணத்திலிருந்து நிவேதாவிற்குப் பாடப்புத்தக எழுத்துக்கள் புலப்படவில்லை. நிதமும் குளித்து விடுகை யில் பெண்ணுடம்பின் வளர்ச்சி, மாற்றம் பற்றிப் பாடமெடுக்கும் அம்மா... பருவமெய்தும் வலிகளை எதிர்கொள்ள அவளைத் தயார்படுத்திய அம்மா... படிப்பிற்குத் தயார் செய்த அம்மா.. மரணத்திற்கு மட்டும் தயார் பண்ணவில்லை. சித்தியின் எந்தப் பரிவும் அம்மா காட்டிய வாஞ்சையை நினைவு படுத்தவில்லை. பிரிவுத் துயரில் துண்டுபட்ட 'ரண கள்ளி'யாய் நிற்கும் அவளுக்கும் சேர்த்து மழை நம்பிக்கையைக் கொண்டு வருகிறது.
எல்லாக் கதைகளிலும் பெண்களின் அவலங்களை, மெல்லிய காற்றில் திரும்பும் பக்கங்களைப் போல மிகவும் மென்மையாய் நம் கண்முன் கொண்டுவந்துவிடுகிறார் ஆசிரியர். எதிலும் உரத்துக் குரலெழுப்பி நம் காதுகளை அடைத்து வார்த்தைகளைப் புரியாமல் அடிக்கவில்லை. இவரது கதாபாத்திரங்களின் நினைவலைகளில் மிதந்து வரும் நிகழ்வுகளும், காட்சிகளும் நம் சிறு வயதின் சில ஞாபகங்களை அபூர்வமாகக் கிளறிவிட்டுப்போகின்றன. மிகவும் யதார்த்தமான மனிதர்களுக்குள்ளும் கற்பனைகள், கானல் நீராய் மாயைகள். தங்கள் சிக்கல்களிலிருந்து தற்காலிக விடுதலை தேடும் கனவு முயற்சிகள். இந்தக் கனவுகள் முடிவதற்குள் நிஜத்தின் துக்கம் வந்து அழுத்துகின்றது. |
|
உமா மகேஸ்வரியின் எழுத்து முதல் மழையினைப் போல் நம்முள் பரவசத்தை விதைக்க வல்லது. மொழியின் பல புதிய பரிமாணங்களை, கவித்துவம் மிக்க உவமானங்களை இவர் கண்டெடுத்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. உதாரணங்கள் சில...
"நிறம் நிறமாய்க் கண்ணாடியில் என் னென்ன வளையல்கள். சின்னச் சின்ன வட்டங்களுக்குள் செருகிக்கொள்வதில் என்னவொரு ஆனந்தம் இந்தப் பெண் களுக்கு... அசைவுகளை ஒலித்து அறிவிக்கும் வளையல்களைப் பூட்டிக்கொள்ளுங்கள். பார்த்துப் பார்த்துப் பரவசமும் பெருமையும் அடையுங்கள். திருப்பங்களற்ற செக்குவட்டச் சுழற்சியில் சுற்றுங்கள். உலகமே அதில் அடங்கிய திகட்டலோடு" - 'கரு'.
"ஆறுதலற்ற தனிமையில் அக்காவின் துக்கங்கள் கொப்புளித்துக் கொண்டிருக்கும்... சன்னலோரம் நின்றிருப்பாள்... என் அக்காவின் விரல்கள் கம்பிகளின் இறுகல்மீது நீந்திக்கொண்டிருக்கும். நீவி நீவி அதன் இரும்புத்தன்மையைச் சற்று இளக்க முனைவது போல். மீட்டி மீட்டி அவற்றை நெறித்துத் தன் சிறையின் விளிம்புகளை விஸ்தாரமாக்க முனைவது போல்.." - 'ஆண்'.
"பசுமை; குறுமண்ணின் செம்மை; மூக் குத்திப் பூச்செடிகள்; ... சொடக்குத் தக்காளிச் செடியின் சடசடக்கும் காய்கள். தொலை வில் தெரிகிற தண்டவளங்கள் ஏகாந் தத்திலும் வாழ்வின் இயக்கத்தை எழுதி நீண்டன" - 'மலையேற்றம்'.
"தூர வீடுகளில் பூதாகரப் பூரானாக ஆன்டெனா... இதோ தெருமுனையில் பூர்த்தியாகாத புள்ளிச்சித்திரமாக அப்பா தெரிகிறார்" - 'வருகை'.
உமா மகேஸ்வரி ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2001ம் ஆண்டின் இந்திய தேசியச் சிறுகதைக்கான 'கதா' விருதைப் பெற்றவர். பெண்ணியம் பேசும் எழுத்தாளர் என்று வாசகர்கள் முதலிலேயே விலக்காமல் இந்தச் சிறுகதைத் தொகுப்பைச் சுவைபார்க்க இவையும் வலுவான காரணங்கள்.
மரப்பாச்சி' சிறுகதைத் தொகுப்பு பெண்ணின் சிக்கல்களை, உணர்வுகளை கலையின் செழுமையுடன் நம் பிரக்ஞைக்கு அறிவிப்பதை மறுக்கமுடியாது.
மரப்பாச்சி உமா மகேஸ்வரி தமிழினி பதிப்பகம் 342, டி.டி.கே சாலை சென்னை - 600 014
மனுபாரதி |
|
|
|
|
|
|
|