|
|
|
புலம்பெயர்ந்த தமிழர்களிடையே திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய நூல்களைப் பரப்பும் உயரிய குறிக்கோளுடன் அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் செயல்படுபவர் முனைவர் இர. பிரபாகரன். அவர் 2003ம் ஆண்டில் 'தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம்' என்னும் அமைப்பை உருவாக்கி அதில் மாதம் இருமுறை தமிழிலக்கியம் மற்றும் பேரா. மு.வ.வின் 'தமிழ் இலக்கிய வரலாறு' ஆகிய நூல்களைப் படித்தும் விவாதித்தும் வருகிறார்.
முன்னர் திருக்குறள் (2005), புறநானூறு (2013) ஆகியவற்றுக்காகப் பன்னாட்டு மாநாடுகளை அமெரிக்காவில் நடத்தியிருக்கிறார். 2012-13 ஆண்டுகளில் புறநானூற்றுக்கு இரு தொகுதிகளில் எளிய உரை எழுதி வெளியிட்டிருக்கிறார். இப்பணிகளின் தொடர்ச்சியாக இர. பிரபாகரன் ஆகஸ்ட் 26, 2017ல் மேரிலாந்தில் நடைபெற்ற பன்னாட்டுக் குறுந்தொகை மாநாட்டில் குறுந்தொகைக்கு எளிய உரையை எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்த உரைநூல் ஒவ்வொரு பாடலுக்கும் பாடியவர் பெயர், பாடலுக்குரிய திணை, கூற்று, கூற்று விளக்கம், பாடல், கொண்டுகூட்டு, அருஞ்சொற்பொருள், உரை, சிறப்புக் குறிப்பு என்னும் ஒன்பது கூறுகளைக் கொண்டுள்ளது. 'சிறப்புக் குறிப்பு' என்ற நிறைவுப் பகுதியில் தொல்காப்பியம் தொடங்கி இன்றைய திரையிசைப் பாடல் வரையிலான பல்வேறு இலக்கியங்களில் இருந்து குறுந்தொகைப் பாடலுடன் ஒத்துச்செல்லும் பகுதிகள் எடுத்துக் காட்டப் பெற்றுள்ளன.
புதிய இலக்கியங்களிலும் நூலாசிரியருக்கு நல்ல ஈடுபாடு உள்ளது. ஆதிமந்தியாரின் குறுந்தொகைப் பாடலுக்கு எழுதிய சிறப்புக் குறிப்பில் 20ம் நூற்றாண்டு இலக்கியங்களில் இருந்து அவர் காட்டியிருக்கும் ஒப்புமைப் பகுதிகள் இதற்குச் சான்று. “இருபதாம் நூற்றாண்டில், சிறந்த கவிஞராக விளங்கிய கவியரசு கண்ணதாசன், ஆதிமந்தியின் வரலாற்றை 'ஆட்டனத்தி ஆதிமந்தி காவியம்' என்று ஒரு நூலாக இயற்றியிருக்கிறார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆதிமந்தியின் வரலாற்றைச் 'சேர தாண்டவம்' என்ற பெயரில் ஒரு நாடகமாக இயற்றியுள்ளார். ஆட்டனத்தி ஆதிமந்தியின் காதலை மையமாக வைத்து 'மன்னாதி மன்னன்' என்ற திரைப்படம் 1960ம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது". |
|
|
ஆசிரியரின் உரை எளிமைக்கு ஒரு சான்று பார்ப்போம்:
காலே பரிதப் பிளவே; கண்ணே நோக்கி நோக்கி வாள்இழந் தனவே; அகல்இரு விசும்பின் மீனினும் பலரே மன்ற இவ்வுலகத்துப் பிறரே (44)
என்பது வெள்ளிவீதியாரின் சாகாவரம் பெற்ற பாடல். பாலைத் திணையில் அமைந்த இப்பாடலின் கூற்று 'இடைச்சுரத்துச் செவிலித்தாய் கையற்றுச் சொல்லியது' ஆகும். “என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன; எதிரில் வருபவர்களைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளி இழந்தன; நிச்சயமாக, இந்த உலகத்தில், அகன்ற பெரிய வானத்தில் உள்ள விண்மீன்களைக் காட்டிலும் பலர் உள்ளனர். ஆனால், நான் தேடுகின்ற என் மகளைக் காணவில்லை" என இப்பாடலுக்கு உரை வரைந்துள்ளார் ஆசிரியர். “ஆகாயத்தில் பல விண்மீன்கள் இருந்தாலும் ஒரே ஒரு திங்கள் மட்டுமே உண்டு. அதுபோல், மிகுந்து காணப்படும் விண்மீன்கள் போல் எண்ணற்ற அளவில் பிறரைக் கண்டாலும், திங்களைப் போன்ற, தான் தேடுகின்ற தன் மகளைக் காணவில்லையே என்று செவிலித்தாய் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. திங்கள் ஒன்றே ஆதலால், தன் மகள் ஒப்பற்றவள் என்று செவிலித்தாய் புலப்படுத்துகிறாள்” என இப்பாடலின் சிறப்புக் குறிப்பில் தெரிவித்திருக்கும் கருத்து புதியது, இதுவரை எவரும் சொல்லாதது.
அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையும் முழுமையும் உடைய உரை ஒன்று இக்காலத்தில் தேவைப்படுவதை உணர்ந்த இர. பிரபாகரன், தாமே காலத்துக்கேற்ற உரை கண்டிருப்பது போற்றத்தக்கது. இந்த உரையினைப் படித்து முடித்ததும் இலக்கிய ஆர்வலர்களின் உள்ளங்களில் உடனடியாகத் தோன்றும் எண்ணம் 'இவர் மீதமுள்ள சங்க இலக்கியங்கள் அனைத்திற்கும் உரை எழுதினால் எவ்வளவு நன்றாக இருக்கும்!' என்பதுதான்.
நூல் கிடைக்கும் விவரம்: அமெரிக்காவில்: நூல் விலை $20; அஞ்சல் $5.00. தொகையைக் காசோலை மூலம் அனுப்பவேண்டிய முகவரி: Dr. R. Prabhakaran, 1103 Bluebird Court East, Bel Air, MD 21015
முனைவர் இரா. மோகன் |
|
|
|
|
|
|
|