Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்|டிசம்பர் 2020|
Share:
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

★★★★★


கேள்வி: நான் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து விற்பொருள் தயாரித்து, முதல் சில வாடிக்கையாளர்களையும் பெற்றுவிட்டேன். இந்நிலையில், ஒரு சூறாவளியோடு (tornado) ஒட்டிக்கொண்டால் வேகமாக வளர வாய்ப்புள்ளது என்று கேள்விப்பட்டேன். அப்படியென்றால் என்ன அர்த்தம்? சூறாவளி வணிகச் சந்தையில் களேபரம் விளைவிக்குமே, அத்தோடு ஒட்டினால் நாம் சுக்கு நூறாகிவிட மாட்டோமா? எப்படி வேகமாக வளர வாய்ப்புக் கிட்டும்? சூறாவளியில் நானே மாட்டிக்கொண்டது போலத் தலை சுற்றுகிறது. சற்று விளக்குங்களேன்!
கதிரவனின் பதில் (தொடர்ச்சி): சென்ற பகுதிகளில், நம் செயல்பாட்டுப் பரப்பில் சூறாவளி என்றால் வெகுவேகமாக வளரும் விற்பொருட்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகச்சந்தைகள் என்பதாகப் பொருள் கண்டோம். மேலும், சூறாவளியைச் சார்ந்து செயல்பட்டதால் தாங்களும் வேகமாக வளர்ந்த உதாரணங்கள் சிலவற்றையும் பார்த்தோம். அதற்கான வழிமுறைகளைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தோம். ஸிட்ரிக்ஸ் நிறுவனம் ஆப்பிள் ஐபேட் சூறாவளி மேடையைச் சார்ந்து எப்படி மென்பொருள் விற்பனையை அதிகரித்துக் கொண்டது என்றும் கண்டோம்.

இப்போது, சூறாவளி மேடைகளைச் சார்ந்து அனுகூலம் தேடிக்கொண்ட மேலும் சில உதாரணங்களைக் காண்போம்.

பொதுவாக சூறாவளி மேடைகளைச் சார்ந்து அனுகூலம் பெறவேண்டுமானால், அம்மேடையின் பயனர்களில் பெரும்பாலானோருக்குப் பலனளிக்கும் விற்பொருள் அல்லது சேவையை அளிக்கவேண்டும். இவ்வகைக்கு இன்னொரு உதாரணம் PayPal நிறுவனம். அதை ஆரம்பித்தபோது பயனர்கள் தமக்குள் பணப் பரிமாற்றத்தை எளிதாக்கும் நோக்கத்துடன் ஆரம்பித்தது. ஆனால் ஆரம்பத்தில் அது அவ்வளவாக வெற்றி காணவில்லை. மேலும் பயனர்கள் கட்டணமின்றிப் பயன்படுத்தியதால், அதன்மூலம் ஓவ்வொரு பயனர் பரிமாற்றத்திலும் வருமானம் வரவும் வழியில்லை. அப்போதுதான் பேபால் நிறுவனம் ஒரு சூறாவளி மேடையைக் கண்டறிந்தது! அதுதான் eBay நிறுவனம்.

ஈபே நிறுவனத்தில் ஏலம் அல்லது விற்பனை ஒன்று நடந்தால், வாங்கியவர் விற்பவருக்குப் பணம் செலுத்தவேண்டும். அதைக் கடனட்டை (credit card) அல்லது வங்கி மூலமாகச் செலுத்துவது எளிதாக இல்லை. அந்த வாய்ப்பை பேபால் நன்கு பயன்படுத்திக் கொண்டது.

வாங்கியவர், விற்பவர் இருவரும் பேபால் பயனர்களாக இருந்தால் பணம் செலுத்துவது மிக எளிதாயிற்று. அதற்கு விற்பவரின் மின்னஞ்சல் முகவரிமட்டுமே தேவை! மேலும் அத்தகைய நிதி செலுத்தல் ஒவ்வொன்றுக்கும் பேபால் விற்பவரிடமிருந்து கட்டணம் வசூலித்தது. அதனால் ஈபே நிறுவனம் வளர்ந்த வேகத்தில் பேபாலும் வளர்ந்தது.

அதன் காரணமாகச் சில காலம் கழித்து ஈபே, பேபால் நிறுவனத்தையே வாங்கிவிட்டது! (சில வருடங்கள் கழித்து பேபால் மீண்டும் தனிப்பட்டு, ஈபேயைவிடப் பெரிய நிறுவனமாகிவிட்டது வேறு விஷயம்!)
சூறாவளி மேடையைச் சார்ந்து பலன் பெற்றதற்கு மற்றொரு நல்ல உதாரணம் சமூக விளையாடல் நிறுவனமாகிய Zinga. ஸிங்கா நிறுவனம் ஒரு காலம்வரை அதிக வளர்ச்சி பெறாமலேயே இருந்தது. ஆனால் முகநூல் (Facebook) சூறாவளி மேடையாகிவிட்டதை ஸிங்கா உணர்ந்ததும் அதன்மேல் முழுக் கவனமும் செலுத்தியது. அதனால் ஸிங்கா பெருவளர்ச்சி அடைந்து, பங்குச்சந்தையிலும் முதல் பொது பங்குவெளியீடு (Initial Public Offiering: IPO) செய்ய முடிந்தது!

ஆனால் முகநூல் நிறுவனத்துடன் ஒரு தனித்துவ உறவை வளர்த்துக்கொண்ட ஸிங்கா, ஒரு தருணத்தில் அந்த உறவை முறித்துக்கொள்ள நேர்ந்தது. (அதற்கான காரண காரியங்களைப் பிறகு பார்ப்போம்). அதன் பிறகு முகநூல் மற்ற பல சமூக விளையாட்டுக்களுக்கும் விளம்பரம் கொடுக்க ஆரம்பிக்கவே, ஸிங்காவின் வளர்ச்சி படுத்துவிட்டது. சூறாவளி மேடையைச் சார்ந்து செயல்படுவதில் உள்ள அபாயத்துக்கும் இது ஒரு உதாரணமாகிறது. அத்தகைய அபாயங்களைப்பற்றிப் பிறகு விவரிப்போம். (அதன் பிறகு ஸிங்கா கோவிட்-19ஆல் உண்டான வீட்டடைப்பின் காரணமாகப் பயனர்கள் பெருமளவில் சமூக விளையாடலில் இறங்கியதால் மீண்டும் நல்ல வளர்ச்சி பெற்றது வேறு விஷயம்!)

சூறாவளி மேடைகளைச் சார்ந்து அனுகூலம் பெறவேண்டுமானால் அம்மேடையைப் பயன்படுத்தும் பலருக்கும் பலனளிக்கும் அம்சங்களை அளிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கான இன்னொரு உதாரணம் Power Soft நிறுவனம். ஆரக்கிள், ஐ.பி.எம், சைபேஸ் போன்ற நிறுவனங்கள் தொடர்புறு தரவுத்தளம் (relational database) என்னும் மென்பொருளை அளித்தன. அத்தகைய மென்பொருள் பலப்பல பயன்பாட்டு மென்பொருட்களுக்கு (application software) பெரும் பலனளித்தன. ஆனால் தரவுத்தளத்தைப் பயன்படுத்தி மென்பொருள் உருவாக்குவது மிகக்கடினமாக இருந்தது. மிகத்திறன் வாய்ந்த மென்பொருள் பொறியாளர்களால்தான் செய்யமுடிந்தது. அதனால் ஒரு மென்பொருளைத் தயாரிக்க மிக அதிகக் காலமாயிற்று. செலவும் மிக அதிகம். அதனால் மிகப்பெரிய நிறுவனங்களால்தான் அத்தகைய மென்பொருட்களை உருவாக்க முடிந்தது.

ஆனால் பவர்ஸாஃப்ட் நிறுவனம் அத்தகைய தரவுத்தள பயன்பாட்டு மென்பொருட்களை உருவாக்குவதை எளிதாக்குவதற்கு, தனியார் கணினியில் (personal computer) பயன்படத்தக்க பவர் பில்டர் என்னும் மென்பொருள் உருவாக்கல் கருவியைத் (software development tool) தயாரித்து அளித்தது. அதைப் பயன்படுத்தினால், தரவுத்தளத் துறையில் மிக அதிகத் திறன் வளராத மென்பொருள் பொறியியலாளர்களும் பயன்பாட்டு மென்பொருட்களைக் குறுகிய காலத்தில் உருவாக்க முடிந்தது. அதனால் தரவுத்தள மென்பொருள் விற்பனையும் அதிகரித்தது. அதோடு, பவர்ஸாஃப்ட் நிறுவனமும் மிக அதி விரைவு வளர்ச்சி பெற்றது. பிறகு ஸைபேஸ் நிறுவனம் பவர்ஸாஃப்டை நல்ல விலைக்கு வாங்கியது.

அடுத்த பகுதியில், சூறாவளி மேடைகளைச் சார்ந்து வளர்வதற்கான மற்ற சில நுட்பங்களையும் அவ்வாறு சார்வதில் உள்ள அபாயங்களையும் விவரிப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline