Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | குறுநாவல் | ஜோக்ஸ் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 18)
- கதிரவன் எழில்மன்னன்|ஜூன் 2011|
Share:
பொருளாதாரச் சூழ்நிலை முன்னேறி வருகிற இந்த நிலையில் எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires/cordless), சுத்த நுட்பம் (clean tech) போன்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம். முதல் மூன்று CL துறைகளில் உள்ள வாய்ப்புக்களைப் பற்றி விவரித்து விட்டு, இறுதியான சுத்த நுட்பத்தைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தோம். சுத்த நுட்பத்தின் உபதுறைகளான மாசற்ற சக்தி உற்பத்தி, மாசு மிகக் குறைவாக்கி எரிக்கும் சக்தி, சக்திப் பயனைக் குறைவாக்கல் மற்றும் கரியடைப்பு என்பவற்றின் பல நுட்பங்களைப் பற்றிக் கண்டோம். இப்போது மற்ற சுத்த சக்தி நுட்பத்தின் இறுதி நுட்பத்தைப் பற்றிக் காண்போம்...

*****


சுத்த சக்தி நுட்பங்கள் மிக சுவாரஸ்யமாக உள்ளன. ஆனால் இவை மிகப்பெரும் மூலதனம் வேண்டிய துறைகளாக உள்ளனவே? குறைந்த மூலதனம் வேண்டிய மென்பொருள் நுட்பத்துக்கு சுத்த சக்தித் துறையில் வாய்ப்பே இல்லையா?!

ஏனில்லை? நிச்சயமாக உள்ளது. முன்பு பட்டியலில் சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். அதைப்பற்றி இப்போது மேற்கொண்டு விவரிப்போம்.

இதுவரை நாம் கண்ட சுத்த சக்தி உபதுறைகளான மாசற்ற சக்தி உற்பத்தி, மாசு மிகக் குறைவாக்கி எரிக்கும் சக்தி, சக்திப் பயனைக் குறைவாக்கல் மற்றும் கரியடைப்பு உபதுறைகளுக்கு மிக அதிக மூலதனம் தேவை என்பது உண்மைதான். அதுமட்டுமல்ல, சிலிக்கான் பள்ளத்தாக்கில் பற்பல பத்தாண்டுகளாக நிலை நாட்டியுள்ள மின்னணு சில்லுத் (electronic chips) துறை சுத்த சக்தியில் ஒரு சிறு பகுதியையே வகிக்கிறது. வேதியியலும் (chemistry), இயற்பியலும் (physics), உயிரியலும் (biology) கலந்து பல்துறை விஞ்ஞானம் அதில் பெரிதும் புழங்குகின்றன. அதனால், இதில் நாம் என்ன செய்ய முடியும் என்று மென்பொருள் வல்லுனர்கள் குழம்புவதில் ஆச்சரியமேயில்லை.

ஆனால், இத்துறையில் மென்பொருள் நுட்பங்களுக்கு பெரும் வாய்ப்பு உள்ளது! அதுதான் சுத்த சக்தித் தகவல் நுட்பத் துறை (clean energy information technology).

அதற்கு முதலில் ஒரு உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். எனக்குத் தெரிந்த ஆரம்பநிலை விற்பன்னர்கள் இருவர் ஒரு சூரிய சக்தி உற்பத்தி நிறுவனத்தை ஆரம்பித்தனர். நகரங்கள் மற்றும் பள்ளிகளில் கதிர்மின் பலகைகளை அமைத்து அதில் உற்பத்தியாகும் மின்சக்தியைத் திரட்டி பெரும் மின்சக்தி வினியோகிக்கும் நிறுவனங்களுக்கு அளித்து லாபமடைவதாகத் திட்டம். இத்திட்டத்தின் ஒரு முக்கிய பங்கு என்னவென்றால் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட கதிர்மின் பலகைகளில் எவ்வளவு மின்சக்தி உற்பத்தியாகிறது என்று தொடர்ந்து கண்காணித்து அது குறைய ஆரம்பித்தால் என்ன காரணம் என்று ஆராய்ந்து, சுத்தமாக்கல் அல்லது வேறு பலகையமைத்தல் போன்ற செயல்களைப் பணிப்பதற்கான மின்வலை மற்றும் மென்பொருள் நுட்பங்கள்.

ஆனால், 2008-இல் விளைந்த பொருளாதாரச் சீரழிவில் இந்த நிறுவனமும் சிக்கி அல்லாடியது. மூலதனத்தார் அவர்களது வளைகளுக்குள் பதுங்கிக் கொண்டுவிட்டனர். அதனால் இந்தச் சிறு நிறுவனம் தனது மொத்த வணிகத் திட்டத்துக்கும் (business plan) தேவையான முதல் சுற்று மூலதனத்தைத் திரட்ட முடியவில்லை. ஆனால் அதனால் அவர்கள் சோர்ந்துவிடவில்லை. தங்கள் திட்டத்துக்குள் ஒரு ரத்தினமாகத் திகழ்ந்த மென்பொருள் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவர்களின் கதிர்மின் சக்தி அமைப்புக்களுக்கு அதைப் பயன்படுத்த ஆரம்பித்தனர். இது மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தது. இந்த குறுக்கப்பட்ட திட்டத்துக்கு இந்தியாவில் பெரும்பாலான வேலை செய்ய முடிந்தது. அதனால் முன்பு முழுத்திட்டத்துக்குத் தேடியதை விடக் குறைந்த அளவே மூலதனம் தேவைப் பட்டது. மூலதனமும் கிடைத்தது. அதை வைத்து நிறுவனத்தை ஓரளவு வளர்த்து, இம்மாதிரியான சுத்த சக்தி மென்பொருள் சேவைகளை பல்வேறு வகையில் செய்துவந்த ஒரு பெரிய நிறுவனத்துக்கு விற்று விட்டனர். இப்போது அவர்களின் மொத்த நான்கு வருட காலப் பங்கு சேர்க்கும் பருவத்தில் (VIP-vesting in peace) உள்ளனர்!
மென்பொருள் துறையில் மட்டுமல்லாமல் மின்வலைத் துறையிலும் கூடச் சுத்த சக்தித் துறையில் முன் குறிப்பிட்ட உதாரணத்தைப் போல பல வாய்ப்புக்கள் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு உயிரியல் நுட்பத்திலும் கூட உயிரியல் தகவல்துறை (bio-informatics) என்ற வாய்ப்பு மென்பொருளுக்கு எழுந்தது. இப்போது இத்துறையில் பல ஆரம்பநிலை நிறுவனங்கள் வளர்ந்துள்ளன.அதேபோல், சுத்த சக்தியிலும் புதிய மென்பொருட்களுக்குத் தேவை எழும். சக்தி உற்பத்தி, தேக்கம், பயன்பாட்டின் செயல் திறனை (efficiency) இன்னும் அதிகமாக்கவும், அவற்றைக் கண்காணிக்க (monitor) மற்றும் அவற்றைப் பற்றிய தகவல் வெளியீட்டுக்காகவும் (reporting) மென்பொருள் நுட்பங்கள் தேவைப்படும்.

உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் தொழிற்சாலைகள், ஆழ்பூமி, கடல் மற்றும் விண்வெளியில் அமைக்கப்படும் சக்தி உற்பத்தி நிலையங்களைப் பிணைக்கப் புதுவகை மின்வலை நுட்பங்களும் தேவைப்படும். அது மட்டுமல்ல. ஏற்கனவே உள்ள மின்சக்தி வினியோக வலையிலேயே புதிய சாதனங்களைப் பொருத்தி, வலை நுட்பங்களையும் பிணைத்து, அறிவு வலைக்கட்டம் (smart grid) என்னும் உபதுறையை ஆரம்பித்துள்ளனர். இதற்கான பல நுட்பங்கள் ஆராயப் படுகின்றன; ஒரு சில நுட்பங்கள் வணிக ரீதியாகவும் வந்துள்ளன - அறிவுக் கணிப்பை (smart metering) ஒரு உதாரணமாகக் குறிப்பிடலாம். ஸிஸ்கோ நிறுவனம் அறிவு வலைக் கட்டத்தை, ஒரு வணிக வளர்ச்சித் துறையாகக் குறிப்பிட்டுள்ளது. சமீப காலமாக, ஸிஸ்கோ நுகர்வோர் (consumer) துறையிலிருந்து விலகி, நிறுவனங்கள் மீது நிறையக் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதால், இத்தகைய நிறுவன வளர்ச்சித் துறைக்கு முக்கியத்துவம் அதிகம் அளித்து இத்துறையில் ஒரு சில ஆரம்பநிலை நிறுவனங்களை வாங்கக்கூடும்.

மேற்கூறியபடி மென்பொருள் நுட்பங்களுக்கும், மின்வலை நுட்பங்களுக்கும், மின்சில்லு நுட்பங்களுக்கும் சுத்த சக்தித் துறையில் பல தரப்பட்ட வாய்ப்புக்கள் உள்ளன. பல சிறு தொகை ஆரம்பநிலை மூலதனத்தார், நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் தேவைப்படாமல், சில பத்துக் கணக்கான மில்லியன் டாலர்கள் தேவைப்படும் சுத்த சக்தி வாய்ப்புக்களை நாடுவதால், இத்தகைய சுத்த சக்தித் தகவல் துறையில் பல நிறுவனங்கள் தோன்றுவதற்குத் தற்சமயம் ஒரு நல்ல தருணமாக உள்ளது.

*****


இதுவரை இக்கட்டுரைத் தொடரில் கண்டவாறு, சுத்த சக்தித் துறையில் ஆரம்பநிலை வாய்ப்புக்களுக்குக் குறைவேயில்லை - உங்கள் யோசனை மற்றும் கற்பனா சக்தி எவ்வளவுள்ளதோ அவ்வளவுக்கு உள்ளது எனலாம்! பெருமளவுக்கு மூலதனமும் காத்துக் கொண்டிருக்கிறது. சரியான திட்டத்தைக் காட்டி மூலதனம் பெற்று, பெரும் வெற்றியும் காணுங்கள்; அதே சமயம் புவிவெப்பத்தைக் குறைக்கும் வழி கண்டு உலகத்துக்கும் உதவலாம். உங்கள் திறன் உள்ள துறை என்ன, ஆரம்பக் குழுவில் வேறு எந்தத் திறன் உள்ளவர்களைச் சேர்த்துக் கொண்டால் இத்துறைகளில் ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து மூலதனம் பெறலாம்; அல்லது அவ்வாறு ஆரம்பிக்கப்பட்டு விட்ட ஒரு நிறுவனக் குழுவில் சேர்ந்துகொண்டு அதன் வளர்ச்சியிலும் வெற்றியிலும் பங்கேற்கலாம் என்று யோசித்துச் செயலில் இறங்குங்கள். உங்கள் முயற்சிகள் வெற்றி பெற என் நல் வாழ்த்துக்கள்!

அடுத்த தொடரில் சந்திப்போம். வணக்கம், நன்றி!

(முற்றியது)

கதிரவன் எழில்மன்னன்

*****


சூர்யா துப்பறிகிறார்: தூய தண்ணீரின் தவிப்பு!
கதிரவன் எழில்மன்னன் மற்றொரு விறுவிறுப்பான தொழில்நுட்ப மர்ம நாவலைத் தென்றல் வாசகர்களுக்குத் தர இருக்கிறார். நீங்கள் அறிந்தபடி, சிலிக்கான் மின்சில்லுத் தொழில்நுட்ப நிபுணர் சூர்யாவின் துப்பறியும் திறமை பிரபலம். பலரும் அவரது உதவியை நாடவே, முழுநேரத் துப்பறிவாளர் ஆகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் ஆர்வத்தோடு அவருக்கு உதவுகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தொழில் பங்கு வர்த்தகம். ஆனால், சூர்யாவுடனே நிறைய நேரம் செலவிடுகிறான். ஷாலினி ஸ்டான்போர்ட் மருத்துவ மனையில் மருத்துவராகவும், உயிரியல் மருத்துவ நுட்ப (bio-med tech) ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிகிறார். மூவருமாகத் துப்பறிந்து பல பிரச்சனைகளைத் தீர்த்துள்ளனர்.

வரவிருக்கும் கதையில், ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் தன் நண்பர் ஒருவரின் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஷாலினி அவருக்கு சூர்யாவை அறிமுகம் செய்கிறாள். தூய தண்ணீரின் தவிப்பை சூர்யா எப்படி நிவர்த்திக்கிறார் என்பதை வரும் தென்றல் இதழ்களில் பார்ப்போம்!
Share: 




© Copyright 2020 Tamilonline