|
தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 5) |
|
- கதிரவன் எழில்மன்னன்|மே 2010| |
|
|
|
|
|
இதுவரை: பொருளாதாரச் சூழ்நிலை சற்று முன்னேறியுள்ளதே, இப்பொது எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech) என்ற CL துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமுள்ளதாகக் கண்டோம். மேலும் வலைமேகக் கணினி ஏன் தற்போது முன்னணிக்கு வந்துள்ளது என்பதற்கான காரணங்களையும் கண்டோம். இப்போது, வலைமேகக் கணினியின் உபதுறைகளைப் பற்றிய மேல்விவரங்களைக் காண்போம்.
*****
ஒலி வடிவத்தில் கேட்க - Audio Readings by Saraswathi Thiagarajan
வலைமேகக் கணினி (cloud computing) துறையின் பல்வேறு உபதுறைகளைப் பற்றிக் கூறினீர்கள்; அதில் மென்பொருள் சேவை (SaaS) ஒரு முக்கியமான உபதுறை, ஆனால் அது சில வருடங்களாக உள்ளது அல்லவா? அதில் இன்னும் மூலதனப் பரபரப்பு உள்ளதா? ஏன்?
| நிறுவனங்கள் மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்துவதை தாமதப்படுத்திய பல நுட்ப ரீதியான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதால் இப்போது பயன்பாடு துரிதமாகியுள்ளது. | |
மென்பொருள் சேவை பல வருடங்களாகப் பல ரூபங்களில் இருந்து வருவது உண்மைதான். சேல்ஸ்ஃபோர்ஸ்.காம் நிறுவனமே முன்னணிக்கு வந்து பல வருடங்களாகிவிட்டன. ஆனால், இப்போது மென்பொருள் சேவை என்பது சர்வ சகஜமாகி, சிறிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல், பெரும் நிறுவனங்கள் கூட பயன்படுத்த ஆரம்பித்துவிட்டதால், எல்லா மென்பொருள் வகைகளையும் சேவைகளாக்கித் தரும் ஆரம்பநிலை நிறுவனங்களில் மூலதனமிட ஆர்வம் உள்ளது.
இந்தத் துறை சற்றுப் பழகி, பழையதாகிவிட்டது (!) என்பதால், இது சுத்தசக்தி போன்று, ஏன் மின்வலைக் கணினித் துறையிலேயே மற்ற உபதுறைகளைப் போல் கவர்ச்சியானதாக இல்லை என்பது உண்மைதான். ஆனால், இத்துறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சில நிறுவனங்கள் பல்லாண்டுக் கணக்காக ஒவ்வொரு நிறுவனத்திலும் அடியெடுத்து வைக்கவே பல மில்லியன் டாலர்கள் என்று வாங்கி வந்த பெரும் மென்பொருள் நிறுவனங்களுக்கும் அவற்றோடு சேர்ந்து தனிச்சிறப்பாக்கம் (customization) என்ற பெயரில் இன்னும் பல மடங்கு மில்லியன் டாலர்களை வாரிக் கொள்ளும் சேவை நிறுவனங்களுக்கும் போய்ச் சேரும் தொகைகளைப் பெருமளவில் குறைத்து அதன் மூலம் பெரிதாக லாபமடையும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.
நிறுவனங்கள் மென்பொருள் சேவைகளைப் பயன்படுத்துவதை தாமதப்படுத்திய பல நுட்ப ரீதியான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதால் இப்போது பயன்பாடு துரிதமாகியுள்ளது. அலைப்பட்டை வேகம் (bandwidth), தொலைவலை துரிதமாக்கல் (WAN acceleration) பயனர் இடைமுகம் (user interface), போன்ற நுட்ப முன்னேற்றங்களால் பல இடையூறுகள் நீக்கப்பட்டுவிட்டன. தகவல் பாதுகாப்பு (information security) இன்னும் சற்று தடங்கலாகத்தான் உள்ளது. அதை நிவர்த்திப்பதில் பெரும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சொல்லப் போனால், மென்பொருள் சேவைத் துறையில் இடப்படும் மூலதனத்தில் ஒரு முக்கியப் பங்கு இத்தகையத் தகவல் பாதுகாப்பு நுட்பத்துக்குத்தான்!
சமீப காலமாக, வெபெக்ஸ், கோ-டு-மீட்டிங் போன்ற வலைக்கூட்ட (WebEx, Go-to-meeting web conference) சேவைகளின் மூலம் உலகில் பல இடங்களிலுள்ளவர்களும் சேர்ந்துப் பணியாற்றுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதனால்தான் ஸிஸ்கோ, ஸிட்ரிக்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களே அத்தகைய சேவைகளை அளிக்கின்றன். மைக்ரோஸாஃப்ட் கூட இதில் சேர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் மைக்ரோஸாஃப்ட், தன் பலதரப்பட்ட மென்பொருட்களையும் வலைமேகச் சேவைகளாக அளிப்பதிம் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது.
இத்தகைய வணிகப் போக்குகள், முன்பு நிறுவனங்களுக்குள் நிலைநாட்டப்பட்டு பயன்படுத்தப்பட்ட பலதரப்பட்ட மென்பொருட்களும், வெளிவந்து, மென்பொருள் சேவைகளின் புதிய தலைமுறையாக அவதாரம் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. உதாரணமாக, பீப்பிள்ஸாஃப்டை நிறுவியவர்கள் அதே மாதிரியான ஒரு மென்பொருளை வொர்க் டே (Work Day) என்ற ஆரம்பநிலை நிறுவனத்தின் மூலம் மென்பொருள் சேவையாக்கியுள்ளதைக் குறிப்பிடலாம். அதில் மூலதனமிடப் பெரும்போட்டியே நடந்து பெரும் மூலதனமிடப் பட்டு அது அமோகமாக வளர்ந்து வருகிறது. |
|
| ஆரம்பநிலை மூலதனத்தாரின் இணையதளங்களில் அவர்கள் எந்த நிறுவனங்களில் மூலதனமிட்டுள்ளார்கள் என்ற பட்டியல் உள்ளது. அத்தகைய பட்டியல்களைச் சேகரித்துப் பரிசீலனை செய்தால் மேற்கொண்டு பல விவரங்கள் தெரிய வரும். | |
மென்பொருள் சேவைத் துறையிலும் கூட அதன் ஒரு உபதுறை சமீப காலமாக அதிக அளவில் மூலதன ஆர்வத்தைப் பெற்றுள்ளது. அதாவது, நிறுவனங்களின் கிளைகளில் உள்ள சேவைக் கணினிகளை நீக்கிவிட்டு அவற்றின் பயன்களை வலைமேகச் சேவைகளாகத் தருவது. தூரக்கிளைகளில் சேவைக் கணினிகளை நிறுவிப் பராமரிப்பதின் செலவு மிக அதிகமாகி வருவதால் நிறுவனங்கள் அவற்றை எடுத்து எறிந்துவிட்டு, அல்லது நிறுவாமலே, சேவைகளைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றன.
பல காலமாக மெய்நிகர் தனிவலைத் துறையில் (Virtual Private Network - VPN) சிறிய நிறுவனங்கள் இத்தகைய சேவையைப் பயன்படுத்தின. ஆனால் இப்போது பெரும் நிறுவனங்களும் இச்சேவைகளில் ஆர்வமுற்றுள்ளன. முன்பு கூறியது போல், பெரும் நிறுவனங்கள் முதலில் மின்னஞ்சலில் உள்ள குப்பைக் கடிதங்களையும் அபாயங்களையும் நீக்குவதில் (spam and malware filter) ஆரம்பித்தன. கூகிள் வாங்கிய போஸ்டினி என்ற நிறுவனம் கவனத்துக்கு வரக்கூடும்.
இவ்வகையில் இரண்டு புதிய உபதுறைகள் இப்போது தலையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஒன்று, தொலைத்தகவல் தொடர்பை, வலைமேகத்திலிருந்தே துரிதப் படுத்துவது (Wan Acceleration from cloud). இரண்டாவது, நிறுவனங்களின் கிளைகளிலிருந்து இணையதளங்களைப் பயன்படுத்தும்போது அதிலுள்ள அபாயங்களைத் தடுப்பது (branch security proxy in cloud).
முன்பெல்லாம், இந்த இரு வசதிகளுக்கும் கிளைகளில் பலதரப்பட்ட சிறிய சேவைக் கணினிகளையும் சாதனங்களையும் நிறுவ வேண்டியதாக இருந்தது. அதனால் பல நிறுவனங்கள் கிளைகளுக்கு வசதி கொடுக்காமலே இருந்தன. ஆனால், இப்போது கிளைகளில் சாதனமின்றி, வலைமேகத்திலிருந்தே பயன்படுத்தும் சாத்தியம் வந்துள்ளதால் பல நிறுவனங்கள் சேவைகளாகப் பயன்படுத்த முன்வந்துள்ளன. முக்கியமாக, நடுத்தர நிறுவனங்களுக்கு இது மிக அனுகூலமாக உள்ளது.
சமீபகாலமாகத் தலையெடுத்து வரும் இன்னொரு உதாரணம். கிளைகளில், முழு மேசைக்கணினிகளை (desktop computers) எடுத்து விட்டு, பயனர்களுக்கு வெறும் திரை மட்டும் உள்ள மெல்கணினியைக் (thin computers) கொடுத்து, மேசைக் கணினியில் ஓட வேண்டிய மென்பொருளை மெய்நிகராக்கம் மூலம், தகவல் மையத்தில் (data centers) உள்ள சேவைக் கணினியில் நடத்திச் சேவையாக அளிப்பது.
மூலதன ரீதியாகப் பார்த்தால், இந்த உபதுறைகளில் ஏற்கனவே சில ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு மூலதனமிடப் பட்டுள்ளது. அதனால், நீங்கள் ஆரம்பிக்க எண்ணும் யோசனைக்கு எவ்வளவு நிறுவனங்கள் உள்ளன, எந்த நிலையில் உள்ளன, எவ்வளவு மூலதனமிடப் பட்டுள்ளது என்று நன்கு ஆராய வேண்டியது அவசியமாகிறது. ஆரம்பநிலை மூலதனத்தாரின் இணையதளங்களில் அவர்கள் எந்த நிறுவனங்களில் மூலதனமிட்டுள்ளார்கள் என்ற பட்டியல் உள்ளது. அத்தகைய பட்டியல்களைச் சேகரித்துப் பரிசீலனை செய்தால் எங்கு மூலதனம் ஏற்கனவே அதிகமாகியுள்ளது, எங்கு சற்றுத் திறந்த வெளி உள்ளது என்பது தெரிய வரும்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|