|
|
|
அன்புத் தென்றலின் அமெரிக்க உலா! ஓக்லாந்தின் சாலையோரக் கூடாரமொன்றில் வேலையின்றி உட்கார்ந்துகொண்டு பொழுதுபோவதற்காக ஒருநாளைக்கு 6 சுருட்டுகளை ஊதித் தள்ளுவது டியனாவின் வழக்கம். அங்கே சாயி பிரசாதின் சாயி ஆஷ்ரயா தொண்டர் குழுவினர் தினமும் காலையில் சூடான ஓட்ஸ் கூழுடன் சர்க்கரையும் ஆவி பறக்கும் காஃபியும் கொண்டு சென்று கொடுக்கத் தொடங்கினர். அவர்களுடன் பேசிய, அவர்களின் அன்புப் பின்னணியை அறியவந்த டியனா, மறுநாளே கையிலிருந்த சுருட்டைப் பிய்த்து எறிந்தாள். சிகரெட்டை, மது அருந்துவதை நிறுத்தி, தன்னை மேம்படுத்திக்கொள்ள ஒவ்வொருவரும் உழைக்கலாம், சுய கௌரவத்தோடு வாழலாம் என்பதைப் பலருக்கு அன்பினால் சாதித்துக் காட்டியவர் சாயி பிரசாத் வெங்கடாசலம்.
அன்பையே தெய்வமாகவும், வழிபாடாகவும் செய்துவரும் இளைஞர் சாயி பிரசாத் வெங்கடாசலம் குறித்துச் சென்ற இதழில் எழுதியிருந்தோம். (பார்க்க) 2018 நவம்பர், டிசம்பர் மாதங்களில் அவரை அமெரிக்காவின் பல்வேறு அமைப்புகளும் தனியாரும் பேச அழைத்திருந்தனர். சென்ற இடங்களில் எல்லாம் அவரது சொற்கள் நெஞ்சைத் தொட்டதோடு நிற்காமல், அன்பைச் செயல்பாடாக மாற்றவும் வழிகளை ஏற்படுத்தியது. அதை ஒரு பருந்துப் பார்வையில் பார்க்கலாம், வாருங்கள்.
ஃப்ரீமான்ட்டில் உள்ள ஆல்சியன் மான்டிசோரி பள்ளி வளாகத்தில் நவம்பர் 30ம் தேதியன்று சாயி பிரசாத் 60 உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் பேசினார். அவரே உடல்நலம் குறைவுபட்டு, சக்கர நாற்காலியில் இருந்தபோதும், சிரியாவில் மக்கள் படும் அல்லல்களைப் பற்றிய செய்திகளைப் பார்த்து மனம் வேதனைப்பட்டதாம். ஓர் அன்பான ஆத்மாவின் வழிகாட்டலைப் பெற்றார் அவர். மிகுந்த சிரமத்துடன் தொப்பிகள், இனிப்புகள், குடிநீர் எல்லாவற்றையும் சுமந்துகொண்டு அந்த எல்லைப்புற முகாம்களை அவர் அடைந்தார். ஒவ்வொரு செக்போஸ்டிலும் காவலர்கள் அவரைச் சந்தேகக் கண்ணுடன் பார்த்தனர்.
சிரியாவில் ஒரு சிறுபெண் நேரடியாக, "உங்கள் நாட்டில் என்னைப் போல உதவி தேவைப்படும் சிறார் இல்லையா?" என்று கேட்டாள். இந்தக் கேள்வி சாயியைச் சிந்திக்கவைத்தது. அப்படித்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தது சாயி ஆஷ்ரயா. இன்றைக்கு அது 24 மணிநேர உணவுச் சேவை, மருத்துவ சேவை என்று பெருகி வளர்ந்துள்ளது. "உங்களுக்குப் பிடிக்காத உணவைக்கூட மறுக்காமல் சாப்பிடவேண்டும். அப்படி உண்ணும்போது உலகில் எத்தனை பேர் அந்த உணவுகூடக் கிடைக்காததால் பசியோடு இருக்கின்றனர் என்பதை யோசியுங்கள். அது அவர்களுக்கு உங்களிடமிருந்து நல்ல அதிர்வுகளைக் கொண்டு செல்லும்" என்று சாயி பிரசாத் கூறியபோது அங்கிருந்த சிறாரின் கண்களில் ஒரு புதிய புரிதலின் ஒளியைக் காணமுடிந்தது. "என் பாடலை இன்றைக்கு நீங்கள் பாடினீர்கள்" என்று மகிழ்ச்சியோடு கூறினார் அங்கிருந்த ஓர் ஆசிரியை.
"உலகத்தில் மாற்றத்தைக் கொண்டுவரும் மந்திரத் திறவுகோல் சுயநலமின்மை" என்று சாயிபிரசாத் ஸ்டான்ஃபோர்டு பல்கலையின் முதுநிலை மற்றும் முனைவர் ஆய்வு மாணவர்களிடம் பேசுகையில் (நவம்பர் 27) குறிப்பிட்டார். சூடானில் அவரை ஏதோ விஷமக்காரர் என்று எண்ணிய அகதிகள், திரும்பத் திரும்பத் தாக்கியபோது சாயி பிரசாத் தற்காத்துக்கொள்ள முயலவில்லை. தான் வந்ததன் நோக்கத்தை அவர் விளக்கிய பின்னர், அதே மக்கள் அவரை அணைத்து, வணங்கி, தூக்கிச் சென்று தமது குடும்பத்தவருக்கு அறிமுகப்படுத்தினராம். "தொழில்நுட்பமும் வணிகத்திறனும் புறவுலகில் நன்மை செய்யலாம். ஆனால், அன்பும் தியாகமும்தான் உலகில் ஆனந்த வாழ்க்கைக்கான சூழலை உருவாக்குகின்றன" என்று சாயி பிரசாத் விளக்கியபோது ஈரமாகாத கண்கள் அங்கில்லை. ஒருமணி நேர உரை எனத் தொடங்கிய அந்த நிகழ்வு 3 மணி நேரம் கேள்வி-பதிலாக நீண்டு, Stanford for Sai Aashraya என்ற வாட்ஸாப் குழு தொடங்கப்பட்டு, நிறைவு கண்டது. உடனடியாகச் சமுதாயப் பணிகளைத் தொடங்க அவர்கள் உறுதி பூண்டார்கள்.
கனெக்டிகட்டின் இரண்டு இடங்களில் தயாள மனங்கள் (டிசம்பர் 1 & 2) அவரை ஆர்வத்தோடு வரவேற்றன. வீடில்லாத வறியோரை அடையாளம் கண்டு அவர்களுக்கு எப்படி உதவலாம் என்று அவர்கள் உரையாடினர். அங்கிருந்த இளைஞர்களிடம் "நீங்கள் ஒன்று சேர்ந்தால், பெரிய மாற்றத்தைத் தருகின்ற சக்தியாக மாறலாம். மற்றவர்களுக்கு உதவப் பயன்படும் அந்தச் சக்தி முதலில் உங்களிடம் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும்" என்று கூறியது உணர்ச்சிப் பெருக்கை ஏற்படுத்தியது.
டிசம்பர் 4 அன்று நியூ ஜெர்சியில் 18 முதல் 60 வயதுவரையிலான அறுபதுக்கும் மேற்பட்டோரைத் தமது நம்பற்கரிய செயல்பாடுகளின் விவரிப்பால் கவர்ந்தார் சாயி பிரசாத். "பிறரை மதிப்பிடுவதை நிறுத்திவிட்டு, ஆழமாக நேசிக்கத் தொடங்கினால் மாற்றத்துக்கான விதைகளை நீங்களும் விதைக்கலாம்" என்று அவர் கூறினார். "தியாகம் என்பது வீட்டில் தொடங்கி, சமுதாயத்தில் பரந்து, பிறகு நாடு, உலகம் என விரிவடையும்" என்பதாக அவர் அழகாக விளக்கினார்.
"ஒரே உண்மைக் கடவுளின் சாரம் அன்புதான்" என்று டாலஸ் ஷிர்டி சாய் ஆலயத்தில் (டிசம்பர் 7) கூடியிருந்த 120 பேரிடம் விளக்கி, "அன்பு என்பது தியாகமாக வெளிப்பட வேண்டும்" என்று கூறினார் சாயி பிரசாத். அங்கிருந்த மாணவர்கள் வரிசையில் நிற்க, ஒவ்வொருவரையும் அரவணைத்து, அவர்களுடன் சாயி பிரசாத் புகைப்படம் எடுத்துக்கொண்டது கண்கொள்ளாக் காட்சி. சாயி கூறியதைக் குறிப்பெடுத்துக் கொண்டு, எப்படி மனிதப் பண்புகளை நெறிப்படுத்திய பாடத்திட்டமாக நடத்தலாம் என அவருடன் மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துரையாடித் தீர்மானித்தனர். அதற்கு முந்தைய நாள் டாலஸில் ஓர் அன்பர் இல்லத்தில் பலர் கூடி சாயி ஆஷ்ரயாவின் செயல்பாடுகளைக் கேட்டு, விவாதித்து மகிழ்ந்தனர்.
பியர்லாந்தின் மீனாட்சி அம்மன் கோவில் அரங்கத்தில் ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் (டிசம்பர் 7) சாயி பிரசாதின் அன்புச் சகாப்தத்தைக் கேட்கக் கூடியது. "நாம் எவ்வளவு சேவை செய்கிறோம் என்பதைவிட, நமது பணியை எவ்வளவு அன்போடு செய்கிறோம் என்பது முக்கியம்" என்று வற்புறுத்தினார் சாயி பிரசாத். இதுவரை 32,000 நோயாளிகளுக்கு சாயி ஆஷ்ரயா இலவச சிகிச்சை செய்திருப்பதாகவும், மாதந்தோறும் ஒரு லட்சம் ஏழைகளுக்கு மேல் உணவளிப்பதாகவும் அங்கே கூறிய அவர், அங்கிருப்போரும் சற்றே முயன்றால் அதைவிட அதிகம் செய்யமுடியும் என்று விளக்கினார்.
டிசம்பர் 19ம் நாளன்று சான் ரமோனில் உள்ள ஜெனரல் எலக்ட்ரிக் (GE) அலுவலகத்தில் இதே அன்புப் பெருக்கை அங்குள்ளோர் அனுபவித்து, உள்வாங்கி, தெளிவுபெற்று மகிழ்ந்தனர்.
*****
ஓக்லாந்து (கலிஃபோர்னியா): அன்பின் மாயம் அது வீடற்றவர்களின் கூடாரங்கள் நிரம்பிய தெரு. அங்குள்ள பெரும்பாலோருக்கு நிரந்தர வேலையோ வருமானமோ கிடையாது. அரசு கொடுக்கும் சிறிய உதவித்தொகையும் சிகரெட்டிலும் மதுவிலும் செலவாகிவிடும். இவர்கள் வெறும் வயிற்றோடு உறங்கப் போவது ஆச்சரியமான செய்தியல்ல.
சாயி ஆஷ்ரயாவின் விரிகுடாப்பகுதி தன்னார்வத் தொண்டர்கள் காலைச் சிற்றுண்டிச் சேவையை இப்படி ஒரு தெருவில் தொடங்கினர். கையில் ஓட்ஸ் கூழ், சர்க்கரை, கொதிக்கும் காஃபி. யாருக்கேனும் என்று கூவி அழைப்பார்கள். சிலர் வந்து வாங்கிக்கொள்வார்கள், சிலர் பொருட்படுத்தவே மாட்டார்கள். இப்படி இரண்டு நாட்கள் போனபின் ஒரு வாரநாள் மாலையில் சாயி பிரசாதும் தொண்டர்களோடு சென்றார். ஆர்வத்தோடு வந்து உரையாடிய கெவின், க்ரிஷா, கார்ல்டன், டயனா ஆகியவர்களுடன் பேசி, அவர்களது பிரச்சனைகளைப் புரிந்துகொள்ள முயன்றார் சாயி.
சாயி ஆஷ்ரயாவின் அன்புப் பணியில் ஈர்க்கப்பட்ட கெவின் அப்பகுதியின் தொண்டராகச் சேர்ந்துகொண்டார். அதற்குப் பிறகு, காலையிலேயே சாயி ஆஷ்ரயா தொண்டர்கள் அங்கே வருவதை எதிர்நோக்கி நிற்பார். அவரும் சிற்றுண்டி வினியோகத்தில் சுறுசுறுப்பாக ஈடுபடுவார். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று கார்களைக் கழுவி அதில் கிடைக்கும் சிறிய தொகையே அவரது வருமானமாக இருந்தது. சாயி ஆஷ்ரயாவின் அன்பைப் பார்த்து அவர் இனிமேற்கொண்டு அதிகமாக உழைக்கவும், கிடைக்கும் வருமானத்தைச் சேமித்து, மற்றவர்களுக்கும் உதவவும் உறுதி பூண்டிருக்கிறார். ஒருநாளைக்கு ஒரு சிகரெட்டுக்கு மேல் பிடிப்பதில்லை என்பது அவரது உறுதிமொழிகளில் ஒன்று! இளம்பெண் டியானா தனது சுருட்டைப் பிய்த்தெறிந்ததை தொடக்கத்தில் நாம் பார்த்தோம்.
முதுகுவலி மற்றும் சில பிரச்சனைகள் இருப்பதாகக் கெவின் கூறியபோது, சாயி பிரசாத் அவருக்கு வலிமருந்து தடவி விட்டதோடு, சில பயிற்சிகளையும் கற்பித்தார். "நீங்கள் இங்கு வந்திருப்பது எங்கள் பசித்த வயிற்றை உணவால் நிரப்புவதற்கு மட்டுமல்ல, எங்கள் இதயத்தில் அன்பிற்கான, ஒருமைப்பாட்டுக்கான பசியை நிரப்புவதற்கும்தான்" என்று கெவின் கூறியது, சாயி ஆஷ்ரயாவின் நோக்கத்தைத் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. |
|
தகவல்: வெங்கட்ராமன் சி.கே., பரத்வாஜ் சுவாமிநாதன் தமிழில்: மதுரபாரதி |
|
|
|
|
|
|
|
|