|
முதுசொம் சாளரம் |
|
- கண்ணன்|ஜூலை 2002| |
|
|
|
http://www.naa-kannan.net/thf/
தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகு தழுவிய ஒரு இயக்கமாகும்.
பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வம் தமிழ் மொழியாகவும், அதன் இலக்கியமாகவும், அதன் கலைகளாகவும் பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. இவை தமிழ் கூறும் நல்லுகங்களான தமிழ் நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் சமீபத்தில் தமிழர் இடப்பெயர்வு கண்ட ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களில் காணக் கிடைக்கின்றன. ஓலைசுவடிகளில் பதிவுற்ற இலக்கியமும் மற்ற பிற கலை வளங்களும், நாட்டிய கர்நாடக இசை வடிவங்களும் காலத்தால் அழிவுற்ற நிலையில் காக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.
இத்தகைய தமிழ் மரபுச் சின்னங்கள் காலத்தை வென்று நிற்கக்கூடிய ஒரு வாய்ப்பைச் சமீபத்திய கணினி சார்ந்த தொழில்நுட்பத் திறன் அளித்துள்ளது. ஒலி, ஒளி மற்றும் வரி வடிவங்களை இலக்கப்பதிவாக்கி வைய விரிவு வலை மற்றும் மின்காந்த இலத்திரன் வடிவாக நிரந்தரப் படுத்த முடியும். தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ் மரபை இலத்திரன் வடிவில் நிரந்தரப்படுத்த ஏற்பட்டிருக்கும் அகில உலக இயக்கமாகும்.
அச்சுக் கூடங்கள் தமிழுக்கு அறிமுகமாகும் முன் தமிழர்கள் மரபுச் சேதிகளைப் பனையோலைகளில் எழுதி பல்லாண்டு காலங்களாகப் பத்திரப்படுத்தி வந்தனர். ஆயினும் மர இலையிலான இவ்வூடகம் காலத்தால் அழிவுறக்கூடியதே. இத்தகைய பதிவுகள் இன்னும் ஐந்து, பத்து வருடங்களில் இலக்கப் பதிவாக்கப் பட்டு நிரந்தரப் படுத்தப் படவில்லையெனில் ஏறக்குறைய 10 இலட்சம் சுவடிகளில் பதிவுற்ற கலை, இலக்கிய, மருத்துவ, வானியல் மற்றும் பல்கலைச் செல்வங்கள் என்னவென்று அறியப்படாமலே அழிந்து போக வாய்ப்புள்ளது. 15ம் நூற்றாண்டு தொடக்கம் பதிவுற்ற (அச்சு) நூல்களுக்கும் இதே கதிதான். எனவே இவை முறையாக இலக்கப் பதிவாக்கப்படத் தேவையான விஷயங்களை அலச 'இ-சுவடி (இலத்திரன் சுவடி) என்றொரு மடலாடற்குழு உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் மரபின் மீது ஆர்வமுள்ள எவரும் 'இ-சுவடியில்' உறுப்பினராகி பங்கு பெறலாம்.
உலகத்தமிழ் எழுத்தாளர்களின் புகைப்படக் களஞ்சியம் இத் தளத்தின் சிறப்பு அம்சங்களில் ஒன்று.
ராம காதையில் வால்மீகி சொல்லாத ஒரு நிகழ்வை, கம்பன் வர்ணிக்கின்றான். அதுதான் சேது அணை கட்டுவதில் அணிலின் பங்கு. சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் அணில் அளவு உதவி ஆயினும், மின்வெளியில் தமிழ் மரபு பாலம் கட்டுவதற்கு அது உதவும்.
நீங்களும் தமிழ் மரபு அணிலாக விரும்பு கிறீர்களா? http://www.naa-kannan.net/thf/ முகவரியில் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுங்கள்.
இணையத்திலிருந்து.... |
|
அன்புள்ள சுவடியரே:
எனது சமீபத்திய முதுசொம் வேட்டையில் கிடைத்த பொக்கிஷங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
முதுசொம் என்ற அழகான சொல்லை இங்கு அறிமுகப்படுத்திய பெர்லின் நண்பர் சுசீந்திர னுக்கு நன்றி. இந்தப் பயணித்தில் பலருக்கு இந்தப் பெயர் பிடித்திருப்பது தெரிந்தது.
சென்னையிலுள்ள கீழத்திய சுவடி நூலகத் திற்கு கடைசியாகப் போகலாமென்று முதலில் எண்ணினேன். காரணம் அது அரசினர் கீழத்திய சுவடி நூலகம் என்பதுதான். வரவேற்பு அப்படித் தான் இருந்தாலும் காப்பாளர் முனைவர். சொளந்திரபாண்டியன் இளகக்கூடியவராக இருந்தார். நான் கேட்ட புத்தகங்கள், சுவடிகள் இவைகளை தேடி எடுத்துத்தருவதிலும், சில பல நல்ல யோசனைகள் சொல்லியும் நமது தேடுதலை மேம்படுத்தினார். அவருக்கு இந் நேரத்தில் நன்றி கூறாவிடில் நான் பிரம்ம ராட்க்ஷசனாகப் பிறப்பேன் :-)
இந்த நூலகத்தில் நான் தேட நினைத்தது அறிவியல் சுவடிகள்தான். ஆனால் என்னை இரண்டு பயணத்திலும் ஆட்கொண்டு, வழி நடத்தும் 'தென் குருகூர் ஏறு' சடகோபன் தனது 'நம்மாழ்வார் திருத்தாலாட்டு' என்ற நூலையும், என்னையும் ஒரு பொருட்டாகக் கொண்டு ஆட் செய்யும் கோதை நாச்சியாரின் திருத் தாலாட்டையும் முனைவர் சொளந்திரபாண்டி யன் வழியாகக் காண்பித்துக் கொடுத்தார்.
நான் மதுரைத் திட்டத்தில் வெளியிட்ட கோதை நாச்சியார் தாலாட்டில் விட்டுப்போன பல கண்ணிகள் இந்தப் படியில் கிடைக்கப் பெற்ற மகிழ்வில் திளைத்துக் கொண்டிருக்கும் போது...
நண்பர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் இந்த 'எக்காலக் கண்ணி' என்ற அற்புதமான நூலைக் கண்டுபிடித்தார். இந்த நூல் நூலகத்திலுள்ள சுவடியிலிருந்து பெயர்த்து எழுதப்பட்டது. இந்த அற்புத நூலைத் தந்தவர் யாரென்று தெரியவில்லை (நாம் பெயருக்கு அடித்துக் கொண்டு இருக்கிறோம் :-) இவர் தாயுமாகி நம்மை அனுகிரஹிக்கும் தாயுமானவராகக்கூட இருக்கலாம்.
இந்த நூலை வாசித்து அனுபவிப்பதுடன் நில்லாமல் இது பற்றிப் பேசுங்கள். மரபு என்பது பேசப்படும்போது, எழுதப்படும்போது, நிகழ் விக்கும் போதுதான் வாழ்கிறது. மதுரைத் திட்டமும், முதுசொம் அறக்கட்டளையும் ஒரு நூலகத்தைப் பெயர்த்து இன்னொரு வடிவில் வைக்கும் வேலை மட்டுமல்ல. கோயிலின் அழகு அதன் வழிபாட்டில்தான். நமது மரபுச் செல்வங்களும் அவ்வாறே. எனவே ஒவ்வொரு நூலும் வரும்போது அதுபற்றி இக்குழுவில் பேசுங்கள். மற்றக் குழுக்களுக்கும் எடுத்துச் செல்லுங்கள். அப்போதுதான் பாரதி சொல் வதுபோல் 'வாழ்க தமிழ்மொழி, வாழ்க நிரந்தரம்' என்பது பலிக்கும்.
இந்த நூலை மதுரைத் திட்டத்திற்கு யாராவது எழுத்து வடிவில் கோண்டுவர நினைத்தால் தயவுசெய்து செய்யுங்கள். ஏடு திருத்த முன் எப்போதும் இல்லாத வசதி இப்போது கிடைத்துள்ளது! மூலம் எல்லோரும் பார்க்கும் வண்ணம் நமது வலைத்தளத்தில் 24 மணி நேரமும் கிடைக்கும்!!
நமது நூலகம் வாழும் ஒரு கலை.
அன்புடன்,
கண்ணன் |
|
|
|
|
|
|
|