|
படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் நீரற்ற மேகம்... |
|
- கேடிஸ்ரீ|மே 2005| |
|
|
|
படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் நீரற்ற மேகம், பாலற்ற பசு, பழமற்ற மரம். நிறையப் படிக்க வேண்டும். வாழ்வுக்குத் தேவையானவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். மனிதனுக்கு ஒழுக்கம், அடக்கம், பொறுமை அவசியம். இவற்றைப் பின்பற்றுபவர்கள் உண்மை, நாணயம், பண்பாடு காக்க வேண்டும். நன்மதிப்பு உயரும். ஒவ்வொருவருக்கும் பெரிய குறிக்கோள் இருக்க வேண்டும். குறிக்கோள் உறுதிப்பாட்டால் எதிலும் தெளிவு வரும். துணிவு வரும். பணிவு வரும். பொறுமை வரும். தொலை நோக்குப் பார்வை வரும். அனைத்தும் சேரும்போது நினைத்த இலக்கை எட்டிவிட முடியும். வெற்றி பெற்றவர்களை உற்றுப் பாருங்கள். அதுதான் உங்கள் வெற்றிக்கு வழிகாட்டி. தோல்வி பெற்றவர்களை உற்றுப் பாருங்கள். அதுதான் நீங்கள் தோல்வி அடையாமல் இருக்க வழி.
ஒரு புத்தகம் பண்பாட்டை உருவாக்கா விட்டால் அது அச்சடிக்கப்பட்ட 'காகிதக் கத்தைகள்' என்று தான் நினைக்க வேண்டும்.
கற்பக விநாயகம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, வானதி பதிப்பகத்தின் பொன்விழாவில்...
******
பணம் சம்பாதிக்கும் ஆசையில் இக்கல்லூரியை நான் தொடங்கவில்லை. பணம் சம்பாதிக்க விரும்பியிருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்பே இக்கல்லூரியைத் தொடங்கி இருந்திருப்பேன். அல்லது இன்னும் பல திருமண மண்டபங்களைக் கட்டியிருப்பேன். நான் படிக்கவில்லை. நான் அனுபவித்த கஷ்டங்களை மற்ற மாணவர்கள் அனுபவிக்கக் கூடாது என்பதற்காகவும் அனைத்து மாணவர்களும் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதற்காகவும்தான் இந்தக் கல்லூரியைத் தொடங்கினேன்.
சினிமாவைக் கண்டு மயங்கிவிடாதீர்கள். சினிமாவிலும் நிறையச் சிரமங்கள் உண்டு. கஷ்டப்பட்டால்தான் இங்கும் வெற்றி பெற முடியும். ஜாதியின் பெயரில் நாம் கல்லூரியைத் தொடங்கினால் சில சலுகைகள் கிடைக்கும் எனச் சிலர் கூறினார்கள். எக்காரணத்தைக் கொண்டும் ஜாதியைப் பயன்படுத்தக்கூடாது என்று நான் கூறி விட்டேன். அதே போல் வரதட்சிணை வாங்குவதும் தவறு. நீங்கள் (மாணவர்கள்) திருமணம் செய்யும் போது வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.
விஜயகாந்த், நடிகர் மற்றும் ஸ்ரீ ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் நிறுவனர், அதன் நான்காவது ஆண்டுவிழாவில்...
******
ஹிந்துத்துவா கொள்கையில் பற்றுடையவர்களே பா.ஜ.க.வுக்கு முக்கியமான ஆதரவாளர்கள். அவர்களது மனதில் பா.ஜ.க. மீண்டும் இடம் பிடிக்கும். அவர்களின் ஆதரவு நமக்குத்தானே என்று மிகச் சாதாரணமாக இருந்துவிட்டோம். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைய அதுவும் ஒரு மிக முக்கிய காரணம்.
அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டப்பட வேண்டும் என்ற பா.ஜ.க.வின் கொள்கை நீர்த்துப்போகவில்லை. அதே வீரியத்துடன் உள்ளது. அந்தக் கொள்கை மாறாது. அதை யாரும் மாற்றிவிட முடியாது. பரஸ்பர நம்பிக்கை, நல்லெண்ணம், இணக்கச் சூழலில் ஹிந்து, முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகள் பேசி இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும் என்ற கருத்தில் பா.ஜ.க. நம்பிக்கையுடன் உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் பா.ஜ.க. உறவு தொடர்வதில் தவறு ஏதும் இல்லை. சங்கப் பரிவார அமைப்புகளுக்கு வெளியே ஏராளமான தேசபக்தர்கள் உள்ளனர். அவர்களும் பா.ஜ.க.வை ஆதரிக்கின்றனர். இத்தகையோர் இடம்பெற்றுள்ள அமைப்பு களுடன் பேசி உறவை பலப்படுத்த வேண்டும்.
எல்.கே. அத்வானி, பா.ஜ.க. தேசியக் குழுவில்...
****** |
|
நான் படித்து முடித்தபின் ஜெமினி ஸ்டூடியோவில் வேலைவாய்ப்புக் கோரி விண்ணப்பித்தேன். அங்கிருந்து எனக்கு வந்த கடிதத்தில் வேலைவாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது. ஜெமினி ஸ்டூடியோவில் நடிப்பு உதவியாளராக இருந்த ஜெமினி கணேசன் அக்கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தார்.
எனது வைராக்கியத்தின்படி பின்னாளில் ஜெமினி நடித்த இருகோடுகள், காவியத் தலைவி, புன்னகை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கினேன். காவியத் தலைவியில் நடித்த போது, சிவாஜியின் பாதிப்பு வரக்கூடாது என ஜெமினியிடம் கடுமையாகக் கூறுவேன். கடும் உழைப்பால் அவருக்கு விருது கிடைத்தது.
கே. பாலசந்தர், மறைந்த நடிகர் ஜெமினிகணேசனுக்கு அஞ்சலிக் கூட்டத்தில்...
******
எனது மூதாதையர்கள் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்தாம். இந்திரா காந்தியும் ராஜீவ் காந்தியும் தமது உயிரைத் தியாகம் செய்யும் வரையில் காஷ்மீர் மக்களின் நலனைக் காக்க உறுதிபூண்டிருந்தார். அந்தப் பாரம்பரியத்தை நானும் காப்பாற்றுவேன்.
இருபத்தொன்றாம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாகும். எனவே இந்தியாவும், பாகிஸ்தானும் பின்தங்கி இருக்க முடியாது. அதை அவை நனவாக்க வேண்டும். இந்த வட்டாரத்தில் அமைதியை நிலைநாட்டும் நமது முயற்சியில் ஒரு வாய்ப்பைக்கூட நாம் தவறவிடக்கூடாது. இந்தியா-பாகிஸ்தான் இடையே சமாதானம் ஏற்படுவதை சில சக்திகள் விரும்பவில்லை. முஸாபராபாத் பஸ் பயணத்தைச் சீர்குலைக்க பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதல் இதற்கு ஓர் எடுத்துக் காட்டு. அத்தகைய சக்திகளை எதிர்த்துக் கடந்த காலங்களில் காஷ்மீர் மக்கள் தீரத்துடன் போராடியுள்ளனர். சமாதானத்திற்காக அந்த யுத்தம் தொடரும். சகோதரத்துவத்தையும், மதச் சார்பின் மையையும் கட்டிக்காக ஜம்மு-காஷ்மீர் மக்கள் செய்துள்ள தியாகங்களை வரலாறு என்றும் மறக்காது.
சோனியா காந்தி, ஸ்ரீநகரில் பேருந்துச் சேவைத் தொடக்க விழாவில்...
தொகுப்பு: கேடிஸ்ரீ |
|
|
|
|
|
|
|