|
கவிதை - அமைதி |
|
- |ஆகஸ்டு 2006| |
|
|
|
அமைதி என் பெயர் இயற்கை
நான் சிரிக்கிறேன் என்னையே வென்றதாய் என்றென்றும் இறுமாந்திருக்கும் இயந்திரவாதிகளை எண்ணியே - அல்ல எள்ளியே ஆம், நான் சிரிக்கிறேன்.
நான் கோபிக்கிறேன் எண்ணிலா உயிர்களுக்காய் உலகிருந்தும் தமக்கே உரிமையெனும் மனிதகுலத்தோரை கண்டு - பின் வெகுண்டு ஆம், நான் கோபிக்கிறேன்.
நான் வெறுக்கிறேன் பொன்முட்டை தினம் இட்டும் எந்தென் அகப்பையை அகழ்ந்தெடுக்கும் அதிகார வர்க்கத்தை தூற்றியே - பறைசாற்றியே ஆம் நான் வெறுக்கிறேன்.
நான் அழுகிறேன் பெருமையுடன் திறனைந்தைக் கொண்டிருந்தும் நஞ்சினை அதில் சேர்க்கும் வேதியல் வினையோரைக் காட்டியே - பழியேற்றியே ஆம் நான் அழுகிறேன்.
நான் வியக்கிறேன் எண் கணிம எல்லையினை வென்றிருந்தும் என் எல்லை அறியாத மாந்தர்தம் மடமையை சுட்டியே - வாய் பொத்தியே ஆம் நான் வியக்கிறேன். |
|
நான் காதலிக்கிறேன் அதிலாப உலகெதிர்த்து அறிவார்ந்து அன்போடு எனைக்காக்கும் பசுமைவாத அன்பர்களை வளமோடு - என் உளமார ஆம் நான் காதலிக்கிறேன்.
நான் வீருகொண்டெழுகிறேன் சாரத்தைப் பிழிந்தெடுத்துத் தானருந்தி தூரத்தே கழிவுதனை வீசிவரும் இழிசெயலைத் தாக்கவே - மானம் காக்கவே ஆம் நான் வீருகொண்டெழுகிறேன்.
நான் இரங்குகிறேன் விதைநெல்லும் விளைநிலமும் வீணாகி சிதைந்து வரும் வேளையிலே வரும் தலைமுறையைக் கருதியே - மனம் உருகியே ஆம் நான் இரங்குகிறேன்.
நான் அமைதியடைகிறேன் விரைவிலே அறிவுடையோர் வினை பயின்று என் நலம் காத்து தன்னலம் காப்பர், என நம்பியே - அதை நாடியே ஆம் நான் அமைதியடைகிறேன்.
என் பெயர் இயற்கை நான் அமைதியடைகிறேன் அமைதி! அமைதி!! அமைதி!!!
நாகராஜன் |
|
|
|
|
|
|
|