Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2001 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பயணம் | சிறப்புப் பார்வை | தமிழக அரசியல் | Events Calendar | கவிதைப்பந்தல் | சமயம்
எழுத்தாளர் | சினிமா சினிமா | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
பொது
தமிழ் வருடங்களின் பெயர்
இந்திய பட்ஜெட்
புத்தரின் புன்னகை
தெய்வமச்சான் பதில்கள்
க்ளின்டனாதித்யன் கதை!
பஞ்சாங்க யுகத்துக் கணினி
- ஹரி கிருஷ்ணன்|ஏப்ரல் 2001|
Share:
Click Here Enlarge'பழம் பஞ்சாங்கம்' என்று அடிக்கொரு தரம் அலுத்துக்கொள்வார் நண்பர். 'கம்ப்யூட்டர் யுகம் சார் இது. இப்ப போயி இந்தப் பழம் பஞ்சாங்கம் இப்படிச் சொல்கிறது' என்று யாரைப் பற்றியாவது சொல்வார். ஆனால் கணினி யுகத்தில் பஞ்சாங்கம் - பாம்புப் பஞ்சாங்கம் மட்டும் எவ்வளவு விற்கிறது தெரியுமா? நம்புங்கள். இரண்டரை லட்சம் பிரதிகள். ஆமாம். அசல் 28 நெ. ஈஸ்வர சுத்த வாக்ய பஞ்சாங்கம்தான்.

பலருக்குப் பஞ்சாங்கம் என்றால் பாம்புப் பஞ்சாங்கம்தான். 'வேற பஞ்சாங்கம் கூட இருக்கிறதா என்ன' என்று கேட்பவர்களும் உண்டு. மேலட்டையில் நீண்டு கிடக்கும் ஐந்து தலைப் பாம்புதான் இந்தப் பஞ்சாங்கத்தின் பெயர்க் காரணம் என்பது புரிகிறது. ஆனால், அதென்ன
அசல் 28 நெ.?

பாம்புப் பஞ்சாங்கம் முதன் முதலில் கொன்னூர் மாணிக்க முதலியாரால் 150 வருஷங்களுக்கு முன்னால் பதிப்பிக்கப் பட்டது. அவருடைய அதிர்ஷ்ட எண் 28. அவர் வீட்டுக் கதவிலக்கம் 28. இந்த எண் ராசி அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. பஞ்சாங்கம் 28 பக்கங்கள் கொண்டதாகப் பதிப்பிக்கப் பட்டது. இந்த ஆண்டு வந்திருக்கும் பஞ்சாங்கத்தை வேண்டுமானால் புரட்டிப் பாருங்களேன்!

அப்படியாகத்தான் 28 நெ பஞ்சாங்கத்தின் பெயரோடு இணைந்தது. ராசியைப் பற்றிய நம்பிக்கையைக் கொஞ்சம் தளர்த்தினால் பக்கங்களின் எண்ணிக்கையைக் கூட்டி, விளம்பரங்களும் பிரசுரிக்கலாம். அதிக வருவாய் கிட்டும். ஆனால் பதிப்பாளர்கள் இந்த விஷயத்தில் விட்டுக் கொடுப்பதாக இல்லை. அப்புறம் சுத்த வாக்கியம் என்ற பெயர். பஞ்சாங்கம் வாக்கிய கரண அடிப்படையில் கணிக்கப்படுவதால் அந்தப் பெயர்.

வடசென்னையின் கொண்டித் தோப்புப் பகுதியிலிருந்து வெளிவரும் இந்தப் பஞ்சாங்கம் தமிழ்நாடெங்கும் பயன் படுத்தப்படுகிறது. மட்டுமல்ல. தமிழ் கூறும் நல்லுலகம் எங்கெங்கு உண்டோ அங்கங்கெல்லாம் பாம்புதான் நல்ல நேரத்தைக் கணிப்பதற்குப் பயன்படுகிறது. 'சிங்கப்பூர், மலேசியாவில் மட்டும் ஆயிரம் பிரதிகள் செலவாகின்றன' என்கிறார் பஞ்சாங்கத்தைத் தற்போது பதிப்பிப்பவர்களில் ஒருவரான திரு. சிவகுமார். 'கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தமிழர்கள் அவர்களுடைய நேர அமைப்பிற்கேற்றபடி தனிப்பஞ்சாங்கம் போடும்படி கேட்கிறார்கள். விரைவில் அவர்களின் தேவையையும் பூர்த்தி செய்வோம்' என்கிறார்.
ஆங்கில ஆண்டின் ஏப்ரல் மாதத்தில்தான் தமிழாண்டு தொடங்குகிறது. எனினும் பஞ்சாங்க வேலைகள் எப்போது தொடங்குகின்றன தெரியுமா? இந்த ஆண்டு மே மாதம், அடுத்த தமிழாண்டுக்கான பஞ்சாங்க வேலைகளைத் தொடங்குவார்கள். ஒவ்வோராண்டும் இப்படித்தான். கிட்டத்தட்ட ஓராண்டு முன்னதாகவே வேலை ஆரம்பித்துவிடும். வினாயக சதுர்த்தி வருவதற்குள் வேலை முடிந்து ஒரு திருத்தாப் படிவம் (rough copy) தயாராகிவிடும். அடுத்த ஆங்கில ஆண்டு ஜனவரி மாதம் பஞ்சாங்கம் விற்பனைக்கு வந்துவிடும். அதாவது தமிழ் ஆண்டு பிறப்பதற்குச் சுமார் நான்கு மாதங்களுக்கு முன்னாலேயே!

அப்படி இருந்தாலும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இந்த கால அவகாசமும் போதவில்லை. 'இன்னும் முன்னால் கொண்டு வாருங்கள்' என்கிறார்களாம். ஆமாம். முகூர்த்தம் குறித்தால்தானே திருமணச் சத்திரங்களை முன்னதாகப் பதிவு செய்துகொள்ளலாம்? முகூர்த்த நாளன்று அத்தனைச் சத்திரங்களுக்கும் கிராக்கி ஏறிவிடும். ஐந்தாறு மாதங்கள் முன்னதாகப் பதிவு செய்துவிட்டால் வசதியாக இருக்கும் என்பது அவர்களின் வேண்டுகோள்.

இந்துக்கள் மட்டுமல்ல. முஸ்லிம்களும் பாம்புப் பஞ்சாங்கத்தையே விரும்பிப் புரட்டுகிறார்கள். பிறை தோன்றும் நேரம் போன்ற அவர்களுடைய தேவைகளையும் பூர்த்தி செய்கிறது பாம்புப் பஞ்சாங்கம்.

இருபத்தோராம் நூற்றாண்டு வந்துவிட்டால் மட்டும் அடிப்படை நம்பிக்கைகள் மாறிவிடுமா, பஞ்சாங்கம்தான் தேவையற்றுப் போய்விடுமா? 'கணினி யுகத்துப் பழம் பஞ்சாங்கத்தைப் பற்றி முணுமுணுத்த நண்பருக்குத் தெரியாத ரகசியம் ஒன்றைச் சொல்லவா? இப்போதெல்லாம், அதாவது கடந்த ஐந்தாண்டுகளாக, பாம்புப் பஞ்சாங்கத்தைக் கணிப்பதற்குக் கம்ப்யூட்டர் பெருமளவில் பயன்படுத்தப் படுகிறது. இது கணினி யுகத்துப் பஞ்சாங்கமா அல்லது பயன்படுத்தப்படுவது பஞ்சாங்க யுகத்துக் கணினியா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

ஹரி கிருஷ்ணன்
More

தமிழ் வருடங்களின் பெயர்
இந்திய பட்ஜெட்
புத்தரின் புன்னகை
தெய்வமச்சான் பதில்கள்
க்ளின்டனாதித்யன் கதை!
Share: 




© Copyright 2020 Tamilonline