ஆரம்பப் படிகள் நுகர்வோர் உரிமைகள் வெட்டும் துண்டும் தண்ணீர் இனி கானல் நீரா? மணிக்கட்டி வைணவர்கள் பூகம்பங்களை முன்கூட்டியே அறிய முடியுமா? பேரழிவில் உதவாத பேரழகிகள் தெய்வ மச்சான் பதில்கள் தெய்வங்களை உருவாக்கும் பூலோக பிரம்மாக்கள் கிரிக்கெட் ஸ்ரீகாந்த்தின் அதிரடி வணிகம் "மாற்றம் இல்லையேல் மரணம்" மோகினியாட்டக் கலைஞர் கல்யாணிக் குட்டியம்மா போலிகளைக் கண்டு ஏமாறுங்கள்
|
|
"இலக்கியமும் தெரியாது சினிமாவும் தெரியாது" - இளையராஜா |
|
- ஜெயராணி|மார்ச் 2001| |
|
|
|
சாகித்ய அகாதமிக்கு சினிமா, இலக்கியம் என்ற இரண்டு மலைகளை இழுத்துப் பிடித்து முடிச்சுப் போட ஆசை வரவே, பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலை பள்ளியுடன் கை கோர்த்துக் கொண்டு கடந்த 22, 23, 24 ஆகிய நாட்களில் 'சினிமாவும் இலக்கியமும்' என்ற மூன்று நாள் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்து விட்டது செழுமையான சாப்பாட்டுடன்.
முதல் நாள் வழக்கப்படி ஜெயகாந்தனை அழைத்து திறப்பு விழா நடத்திக் காட்டினார்கள். அதனாலோ என்னவோ சினிமாக்காரர்களை இலக்கியவாதிகளும், இலக்கியவாதிகளை சினிமாக்காரர்களும், 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்று மாறி மாறி அழைத்துக் கொள்வதைப் பார்க்க முடிந்தது. முதல் நாள் பேச்சு முழுவதுமே சினிமா சீரழிஞ்சு போய் கிடக்கு என்கிற ரீதியில் போகவே போரடித்துப் போனவர்களின் சங்கப் பிரதிநிதியாக, கொதித்தெழுந்தார் ராஜன் குறை.
‘'சும்மா சும்மா குறை சொல்வதை முதலில் நிறுத்துங்க, ஏதோ தமிழ்ச் சினிமாவுக்கு மோசமான நோய் இருக்கற மாதிரியும் அதைத் தீர்க்கவே முடியாதது மாதிரியும் விவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அண்டை மாநிலங்களோடு ஒப்பிட்டு அடூர், அரவிந்தன் என்று புலம்புவதே உங்களுக்கெல்லாம் பழக்கமாகப் போய்விட்டது. ஆதிக்கச் சாதிகள் வெகுஜனக் கலைகளைக் கீழ்த்தரமாகப் பார்த்தனர். இன்று அதே குரலில் நாமும் பேசிக் கொண்டிருக்கிறோம். ·பெலினி, பெர்க்மென் என்று புகழ் பாடாதீர்கள், அது வேறு விளையாட்டு. நமக்கில்லாத ஆற்றலுக்கு, நமக்கில்லாத கலாச்சார மேதமைக்கு அடுத்தவர்களைக் குறை சொல்லாதீர்கள்' என்று வேகமாகப் பேசிவிட்டு அமர்ந்தார்.
அடுத்ததாக வந்த சிவக்குமார், மெசேஜ் இல்லாமல் எந்தப் படமுமே இல்லை. எல்லாப் படத்துக்குமே ஏதாவது ஒரு மெசேஜ் இருக்கும் என்று சொன்னாலும் சொன்னார், கலந்துரையாடலில் 'படையப்பா'வில் சொல்லப்படும் மெசேஜ் என்ன என்று கேட்டு அவரைச் சங்கடப் படுத்திவிட்டார்கள் பார்வையாளர்கள்.
இரண்டாம் அமர்வுக்குத் தலைமையேற்றார் 'கருவேலம் பூக்கள்' பூமணி. 'அரசியலுக்காகக் கலையைப் பயன்படுத்துவது அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது. அதே சமயம் சாதியும் உள்ளே நுழையத் துவங்கிவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கின்ற போது தான் எந்தக் கலை வடிவமுமே முழுமை பெறும்' என்று பேசினார். ஆனால், இடையிடையே திருநெல்வேலித் தமிழில் கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தார்.
இந்த அமர்வில் ரொம்பவும் மாட்டிக் கொண்டவர் வெங்கட் சாமிநாதன் தான். கலந்துரையாடலில் மேம்போக்காக நிறைய விஷயங்களைப் பேசி வசமாக மாட்டிக் கொண்டார். திரைப்படங்களில் எதிர்ப்பு, கலகம் பற்றி பேசிய அவர்
'சினிமாவைப் பற்றி சினிமாக்காரர்களுக்கு ஒன்றுமே தெரியாது. 'இருவர்' படத்தைக் கருணாநிதியிடமும், 'பம்பாய்' படத்தைப் பால் தாக்கரேயிடமும் போட்டுக் காண்பித்த பிறகு தான் திரைக்கு வந்ததாக எனக்கொரு செய்தி வந்தது. இந்தச் சூழலில் எப்படி திரைப்படங்களில் எதிர்ப்பு, கலகம் போன்றவை வரும்' என்றார்.
"நீங்கள் கேள்விப்பட்ட அந்தச் செய்தி உண்மையா?" என்று ஒருவர் கேட்க, வெங்கட் தெரியாது என்று கூற, அதெப்படி ஆதாரமில்லாத செய்தியைக் கட்டுரையாளர் சொல்லலாம்... என்று வாக்குவாதம் தொடர, 'நான் உங்களை மாதிரி கல்வியாளர் கிடையாது. நான் டாக்டர் பட்டம் வாங்கியவனில்லை ஆதாரங்களைக் காட்ட' என்று வெங்கட் சரணடைந்தார்.
எடிட்டர் பி. லெனினைத் தலைமையாகக் கொண்ட அடுத்த அமர்வில், ஷாஜகான் கனி கற்பிக்கும் ஊடகமாகத் திரைப்படம் பற்றி பேசினார். இலக்கியம் மாதிரி சினிமா கல்விக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொன்னார். சினிமாவின் ஆரம்ப காலங்களில் பெண்கள் நடிக்க முன் வரவில்லை, 'சிவப்பு விளக்கு பெண்கள் கூட' என்று சொல்லி சர்ச்சைக்குள்ளானார். தான் சேர்த்துக் கொண்ட 'கூட' என்ற வார்த்தைக்காகப் பின் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும் என்று வந்த அ. மார்க்ஸ் தமிழ்த் திரைப் படங்கள், குறிப்பாக திராவிட இயக்கப் படங்கள் தீண்டாமை பற்றியோ, பெண்களின் பிரச்சனைகள் பற்றியோ பேசவில்லை என்றார்.
முதல் இரண்டு நாட்களும் சுமாராக நிரம்பியிருந்தது அரங்கு. மூன்றாவது நாள் பார்த்தால் ஜே ஜே என கூட்டம். காரணம் முதல் இரண்டு நாட்களும், பெரும்பாலும் சினிமாவை பற்றி இலக்கியவாதிகளே பேசிக் கொண்டிருந்தார்கள். மூன்றாவது நாள் பாலு மகேந்திரா, மௌனிகா, சசி, தங்கர் பச்சான், நாசர், இளையராஜா என்று திரை முகங்கள் எதிர்பார்த்த கூட்டத்தைக் கொண்டு வந்து சேர்த்தது. பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் நோட்டும் கையுமாகவே இருந்தனர். கருத்தரங்கின் கருத்துக்களைக் குறிப்பெடுக்க என்று யாரும் தயவுசெய்து அவசரப்பட வேண்டாம். ஆட்டோகிரா·ப் கலாச்சாரத்தை ஒழித்தால் தான் மாணவ சமூகம் திருந்த முடியும் என்று தோன்றியது. |
|
மூன்றாம் நாள் தங்கர் பச்சான், பாவண்ணன் ஆகியோர் நாசர் தலைமையிலான அமர்வில் கட்டுரை வாசித்தார்கள். சினிமா என்ற வடிவத்தைக் கையிலெடுத்த இலக்கியவாதிகள் தோற்றே போயிருக்கிறார்கள் என்ற வாதத்தை முன் வைத்த ஞாநியின் கட்டுரையை ரவி சுப்பிரமணியன் வாசித்தார். அதிரடியாகப் பேசும் ஞாநியின் கட்டுரையைச் செய்தி வாசிக்கும் கண்களோடு ரவி வாசித்தது பொருந்தவில்லை.
நிறைவு விழாவில், இளையராஜா, பாலு மகேந்திரா ஆகியோர் மேடையை அலங்கரித்தனர். இளையராஜா தனக்கு இலக்கியமே தெரியாது என்றார், மாணவர்கள் கைதட்டினார்கள். தனக்கு சினிமாவும் தெரியாது என்றார், மாணவர்கள் கை தட்டினார்கள். தான் இசையைப் பற்றித் தான் பேசப் போகிறேன் என்றார். மாணவர் சமூகம் புளகாங்கிதத்தில் விசிலடித்தது. ராஜா சொன்னார்,' இசையைப் பற்றி பேச முடியுமாய்யா? பேசிப் புரிய வைக்கக் கூடிய விஷயமா இசை? என்று. அவ்வளவு தான் அரங்கமே அதிர்ந்து தலை சுற்றி நின்றது. அப்படியொரு ஆரவாரம். இன்னும் தனது கடந்த காலம் பற்றியும், இசை வாழ்க்கை பற்றியும், அதன் அரசியல் பற்றியும், ஏதோ நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது போல் ராஜா பேசிக்கொண்டிருந்தார்.
ஈரோடு தமிழன்பனைத் தலைமையாகக் கொண்ட அமர்வில், முதலில் பி. செல்வராஜ் பேசினார். 'சினிமா என்பது யதார்த்தத்தில் இருந்து தப்பித்தல், மேலும் தப்பித்தல், மேலும் தப்பித்தல், என்ற கனவாகவே இருக்கிறது'. உழைக்கும் மக்களின் கலாச்சாரங்களை வெளிக் கொணரக் கூடிய படங்கள் தமிழில் இல்லை. மாற்றுக் கலாச்சாரத்தை உருவாக்கக்கூடிய படங்கள் வர வேண்டும் என்றார்.
மூன்று நாள் அமர்விலும் பெண்கள் பற்றிய சித்திரிப்பைப் பேசியவர் என்ற முறையில் செல்வராஜ் அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். தமிழ்த் திரைப்படங்கள் இன்னும் தாலி என்ற வேலியைத் தாண்டவில்லை என்றார். மிக ஆழமான அக்கறையோடு, தயாரிக்கப்பட்ட செல்வராஜின் கட்டுரையைக் கேட்டு தமிழன்பன், கட்டுரையாளருக்கு வழங்கப்பட்ட 15 நிமிட கால அவகாசத்தை மறந்து, மெய் சிலிர்த்துக் கேட்டுக் கொண்டிருக்க, நேரச் சிக்கலால் ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.குணசேகரன் தவித்துக் கொண்டிருந்தார்.
அவரைத் தொடர்ந்து வந்த ஆர்.ஆர். சீனிவாசன், தன்னுடைய உரை முழுக்க முழுக்க மாணவர்களுக்கானது என்று முன் ஜாக்கிரதையாகச் சொல்லிவிட்டுத் தான் பேச்சைத் துவங்கினார். 'ஐயாயிரம் ரூபாயில் படமெடுக்கலாம்' என்ற தலைப்பில் பேசிய அவர், '1925-ல் ஐன்ஸ்டீன், சினிமாவுக்கும், இலக்கியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது ஓவியத்தோடும், இசையோடும் சம்ப்ந்தப்பட்டது' என்றார். இந்தக் கருத்தியலோடு நானும் உடன்படுகிறேன். ஓவியம், இசை தவிர வாழ்க்கையைப் பற்றிய புரிதல், இவற்றோடு இலக்கியப் புரிதல் போதும். நல்ல இலக்கியத்தைத் திரைப்படம் எடுத்தால் அது நல்ல திரைப்படம் ஆகாது என்று கருத்தரங்கின் தலைப்பையே கேள்விக்குள்ளாக்கினார்.
'சினிமா ஆழ்ந்த சிந்தனைப் பூர்வமானது. ஆழமான கருத்துக்களை முன் வைக்கக் கூடிய படங்கள் தமிழில் இல்லை. இதயப்பூர்வமாக மக்களைப் பதிவு செய்கிற படம் வேண்டும். கண்ணுக்குக் குளுமையாக நாம் வாழவில்லை. நம்மிடம் அழகான மரங்கள், பூக்கள் இல்லை. ஊட்டியில் படம் எடுப்பதை விடவும் நம் நாட்டில் இருக்கும் புழுதியும் புழுக்கமும் தான் நம் படத்தில் தெரிய வேண்டும். என்னுடைய வெயிலைப் பதிவு செய்வது தான் என்னுடைய சினிமாவாக இருக்க முடியும். இதுவரை அப்படிப்பட்டதான பதிவைத் தராத 75 ஆண்டு சினிமாவைப் புறக்கணியுங்கள். நம் அம்மா, அப்பா, பாட்டி, தங்கையைப் பதிவு செய்யும் புதிய சினிமாவை எடுக்க மாணவர்கள் கிளம்பியாக வேண்டும்' என்று கிட்டத்தட்ட மூச்சேவிடாமல் சொல்லி விட்டு உட்கார்ந்துவிட்டார்.
பாக்கெட்டில் கை வைத்துக் கொண்டே சாதாரணமாக எழுந்து வந்தார் பாலு மகேந்திரா. ''தம்பி சீனிவாசன் சொன்னபடி தமிழ்ச் சினிமாவில் எதுவுமே நடக்கவில்லை என்று கூறுவது அபத்தம். 'உன்னைப் போல் ஒருவன்', 'வீடு', 'சந்தியாராகம்' போன்ற நல்ல படங்களும் அத்தி பூத்தாற் போல் வந்திருக்கின்றன. அவற்றை முதலில் அங்கீகரிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். ஊட்டியில் படம் எடுப்பது என்னுடைய உரிமை. அதைக் கேள்வி கேட்பதற்கு நீங்கள் யார்?" என்ற அவரது கோபமான பேச்சைப் பார்வையாளர்கள் கைதட்டி ஆதரித்தது அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கக் கூடும்.
ஆனால், அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை, பார்வையாளர்களில் ஒருவர் எழுந்து, 'சீனிவாசனின் ஒட்டுமொத்தமான புறக்கணிப்போடு உடன்பாடில்லை என்றாலும், அவர் சொன்ன கருத்துக்கள் யதார்த்தமானவை. பாலு மகேந்திரா சொல்வது பொது மக்களுக்கு எதிரான கருத்து. நாங்கள் சாக்கடைக்கு அருகிலும், கொசுக்கடியிலும் நகரும் வாழ்க்கையில் தான் உங்களின் படங்களைப் பார்க்கிறோம். எங்களின் வாழ்க்கைச் சூழலைப் புறக்கணித்து விட்டு, நான் ஊட்டியின் சவுகரியத்தைத் தான் படம் பிடிப்பேன் என்று சொல்வது கண்டனத்திற்குரியது' என்று சொன்னவுடன் பார்வையாளர்கள் மீண்டும் கை தட்டினர். இப்படி இரு சாராருக்குமே கை தட்டியதால், பார்வையாளர்கள் யாரைத் தான் ஆதரிக்கிறார்கள் என்ற குழப்பமே மிஞ்சியது.
இரு விஷயங்களைப் பற்றி இங்கே முக்கியமாகப் பேசியாக வேண்டியிருக்கிறது. ஒன்று, கருத்தரங்கில் கட்டுரையாளர்கள் வரிசையில் பெண்களே இல்லை (ப்ரீதம் தவிர). கிட்டத்தட்ட 50 பேர் கட்டுரை வாசித்த இந்த கருத்தரங்கில் ஒரே ஒருவர் தான் பெண் என்பது வேதனையாக இருக்கிறது. சினிமாவையும், இலக்கியத்தையும் பற்றிப் பேசுவதற்குப் பெண்கள் யாரும் இல்லையா, இல்லை திட்டமிட்டு ஒதுக்கி விட்டார்களா என்பது தெரியவில்லை. பெண்கள் பற்றி நல்ல சினிமாக்களும் இலக்கியப் படைப்புக்களும் வர வேண்டும் என்று பேசிக் கொள்பவர்கள் முதலில் எழுந்து இருக்கை தந்தாலே போதும். சினிமா என்ன, இலக்கியம் என்ன எல்லாத் துறையுமே முன்னேறும்.
மற்றொன்று,
மாணவர்கள் தான் சினிமாவிலும், இலக்கியத்திலும் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மூன்று நாட்களும் மூச்சு முட்டப் பேசிக் கொண்டார்கள் அழைப்பிதழ் முழுக்க நிரம்பியிருந்த பெரிய (நரைத்த) தலைகள். பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கம் நடத்தினால் மட்டும் போதாது. அதில் மாணவர்கள் பங்கீடு குறித்தும் அமைப்பாளர்கள், குறிப்பாக சாகித்ய அகாதமி கவனிக்க வேண்டும். கருத்தரங்கில் கலந்து கொண்ட கொஞ்சமே கொஞ்சம் மாணவர்களும், ஏதோ தங்களுக்கு சம்பந்தமில்லாத ஒன்றைப் பற்றி பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர், நாம் ஏன் அதில் வீணாக மூக்கை நுழைத்துக் கொண்டு என்கிற ரீதியில் வாய்க்குப் பசை போட்டு ஒட்டியது போல அமர்ந்திருந்தனர்.விழா நிறைவடைந்த போது ஆட்டோகிரா·ப் வேண்டி மாணவர்கள் சினிமாக்காரர்களை நெருக்கியடித்ததைப் பார்க்கையில் ஏனோ விரக்தியில் மனசு சுருக்கென்றது.
எழுத்தும் படங்களும்: ஜெயராணி |
|
|
More
ஆரம்பப் படிகள் நுகர்வோர் உரிமைகள் வெட்டும் துண்டும் தண்ணீர் இனி கானல் நீரா? மணிக்கட்டி வைணவர்கள் பூகம்பங்களை முன்கூட்டியே அறிய முடியுமா? பேரழிவில் உதவாத பேரழகிகள் தெய்வ மச்சான் பதில்கள் தெய்வங்களை உருவாக்கும் பூலோக பிரம்மாக்கள் கிரிக்கெட் ஸ்ரீகாந்த்தின் அதிரடி வணிகம் "மாற்றம் இல்லையேல் மரணம்" மோகினியாட்டக் கலைஞர் கல்யாணிக் குட்டியம்மா போலிகளைக் கண்டு ஏமாறுங்கள்
|
|
|
|
|
|
|
|