|
விஷ்ணுபுரம் விருது |
|
- |அக்டோபர் 2023| |
|
|
|
|
அரசுசார் அமைப்புகளாலும் கல்வித் துறையாலும் கௌரவிக்கப்படாத படைப்பாளிகளைக் கௌரவிக்கும் வகையில் எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் அவரது நண்பர்களால் 2010ல் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம். இது ஆண்டுதோறும் தகுதி வாய்ந்த சிறந்த இலக்கியப் படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து விருது வழங்கிக் கௌரவித்து வருகிறது. இதுவரை ஆ. மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், வண்ணதாசன், சீ. முத்துசாமி, ராஜ் கௌதமன், கவிஞர் அபி, எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித், கவிஞர் விக்கிரமாதித்யன், சாருநிவேதிதா போன்றோர் இந்த விருதினைப் பெற்றுள்ளனர். 2023ம் ஆண்டுக்கான விருதுக்கு எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சந்திரசேகரன் என்னும் இயற்பெயர் கொண்ட யுவன், மதுரை மாவட்டம் சோழவந்தானுக்கு அருகில் உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தில், 1961ல் பிறந்தார். குள்ளச்சித்தன் சரித்திரம் (2002) இவரது முதல் நாவல். பகடையாட்டம், கானல் நதி, வெளியேற்றம், பயணக்கதை, நினைவுதிர்காலம், ஊர்சுற்றி, வேதாளம் சொன்ன கதை, எண்கோண மனிதன், எதிர்கரை போன்றவை இவரது பிற புதினங்கள். ஒளிவிலகல் தொடங்கி, கடலில் எறிந்தவை வரை ஏழு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மணற்கேணி, தலைப்பில்லாதவை போன்ற குறுங்கதைகளையும் படைத்துள்ளார். கவிதை, மொழிபெயர்ப்பு என்று இயங்கி வரும் யுவன் சந்திரசேகர் தமிழின் தனித்துவமான படைப்பாளி. "மாற்று மெய்மை' என்பதைத் தனது படைப்புகளில் முன்வைத்தவர். பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் இவர், சென்னையில் வசித்து வருகிறார். (மேலும் விவரங்களுக்கு)
விஷ்ணுபுரம் விருது ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கமும், கேடயமும் கொண்டது. பரிசு பெறுபவர் பற்றிய விரிவான ஆவணப் படத்துடன் அவரது வாழ்க்கை, படைப்பு பற்றிய நூல்களும் வெளியிடப்படுவது இந்த விருதின் முக்கியமான சிறப்பம்சம். |
|
யுவன் சந்திரசேகருக்குத் தென்றலின் வாழ்த்துகள். |
|
|
|
|
|
|
|