தமிழில் : அறிவியல் பரவலாக்கத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு கீதாபென்னெட் பக்கம்
|
|
ஏழைகளின் ஊட்டி 'ஏற்காடு' |
|
- சரவணன்|ஏப்ரல் 2002| |
|
|
|
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளையை 'கொடைக்கானல்' வளர்க்கும் என தமிழகக் கிராமப்புறங்களில் நகைச்சுவையாகக் குறிப்பிடுவர். அந்தளவிற்குக் கோடை வாசஸ் தலங்களான இந்த இரண்டும் மக்களின் வாழ்க்கையில் இரண்டறப் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. ஆனால் மருந்துக்குக் கூட ஏற்காடு என்பதை எவரும் குறிப்பிட்டுப் பேசுவதில்லை. அது கோடை வாசஸ்தலமா? என அப்பாவியாய்க் கேட்பார்கள். விஷயம் அறிந்த சிலர் மட்டுமே ஏற்காட்டின் புகழ் அறிந்து சிலாகித்துப் பேச முற்படுவர்.
ஏழைகளின் ஆப்பிள் இலந்தைப் பழம் என்பதைப் போல, ஏழைகளின் ஊட்டி ஏற்காடு. மலைகளின் குட்டி ராணி இவள். பல நூற்றாண்டுகளாக வறட்சி, பஞ்சம், பட்டினி, வெயில் கொடுமைகளால் துன்புறும் வட மாவட்ட மக்களின் தப்பித்தலுக்கான ஒரே கனவு ஏற்காடுதான். அதனால்தான் ஏற்காட்டை ஏழைகளின் ஊட்டி என்றார்களோ என்னவோ!
இலக்கியங்களில் 'சேர்வராயன் மலை' என வழங்கப்பட்டு இந்நாளில் ஏற்காடு என அழைக்கப்பெறும் இம் மலை 333 சதுர கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. தரைப் பகுதியிலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் அமைந்த ஏற்காட்டின் அதிகப்பட்ச வெப்ப நிலையே 29 டிகிரி செல்சியஸ்தான். 67 சிறு, பெரு கிராமங்களை அடக்கியுள்ள இந்த மலையில் மொத்தம் சுமார் 32,746 மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும் பாலானவர் கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரசு வேலை நிமித்தமாக இங்கு குடியேறியவர்களும் சூழ்ந்து வசிக்கும் ஏற்காட்டிற்கு சேலத்தி லிருந்து செல்வதற்குப் பேருந்து வசதிகள் நிரம்பவுள்ளன.
வறட்சியான சேலத்திலிருந்து பேருந்து மார்க்கமாக மட்டுமே இங்கு செல்ல முடியும். சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்தால், உச்சியைத் தொடலாம். மலைகளின் குட்டி ராணியான சேர்வராயன் மலைக்கு அழகுக்கு அழகு சேர்ப்பது போல, அபாயகரமான 20 கொண்டை ஊசி வளைவுகள்.
பயம் வயிற்றைக் கவ்வ, கொண்டை ஊசி வளைவுகளில் நெளிந்து வளைந்து பேருந்து மேலேற, மேலேற டக்கென்று பசுமை வந்து சாலையின் இருபுறங்களிலும் ஓட்டிக் கொள்கிறது. கடந்து வந்த கொண்டை ஊசி வளைவைக் காண சன்னல் வழி எட்டிப் பார்த்தால் பயமுறுத்தும் ஆழம். வழி நெடுக குரங்குகளின் சேஷ்டைகளும், வயலட் நிறப் பூக்களைப் பிரசவிக்கும் மரங்களும் கண்ணைக் கவர்ந்து, நாம் வட மாவட்டத்தில்தான் இருக்கிறோமா என்கிற உணர்வைத் தோற்று விக்கின்றன. பசுமை, பசுமை எங்கும் வியாபித் திருக்கும் இயற்கையின் பரிபூரண அழகு. தோப்புகளைப் பார்த்தே திருப்திப்பட்டு வாழ்ந்து கொண்டி ருக்கும் நமக்கு, காட்டைப் பார்க்கை யில் இனம்புரியாத வினோத உணர்வு. முன்னோ ருக்கு முன்னோரான மூதாதையர்கள் காடுகளில் வேட்டையாடி வாழ்ந்த எச்சம் நமக்குள் ஒட்டிக் கிடக்க, குதூகலமிக்க குழந்தையாகிப் போகிறது மனது.
நம்முடைய இயற்கைச் செல்வங்களை நம்ம வர்கள் உணர்ந்ததைவிட நம்மை ஆளவந்த ஆங்கிலேயர்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்கு ஏற்காடும் மற்றுமொரு எடுத்துக்காட்டு. ஊட்டி, கொடைக்கானல் போன்ற வாசஸ்தலங்க ளெல்லாம் தேயிலைக்குப் பேர் போனவை என்றால், ஏற்காடு காபி, மிளகு உற்பத்திக்குப் பேர் போனது. ஏற்காட்டின் வளத்தை அறிந்த ஆங்கிலேயர்கள் இதையும் தங்களது கோடை வாசஸ்தலமாக மாற்றிக் கொண்டார்கள். இன்னும் சில வீடுகள் ஆங்கிலேயர்கள் இருந்து போனதற்கான அடையாளங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. சாரை சாரையாய் எறும்புக் கூட்டங்கள் ஊர்வது போல வீடுகள் மலையெங்கும் பரவிக் கிடக்கின்றன.
ஏற்காட்டில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் என்பது குறைவான இடங்களாக இருந்தாலும், அவையெல்லாம் நிறைவான இடங்கள்.
பகோடா பாயிண்ட் (Pogda point) ஏற்காட்டின் மிக முக்கியமான பகுதி. பகோடா என்பதை நம்மூர் மிக்ஷர், காரா பூந்தி என்பதைப் போலப் புரிந்து கொண்டால் அதற்கு நாங்கள் பொறுப் பாளிகளல்ல! எகிப்துக்கு பிரமீடுகள் எப்படியோ அதுபோல, ஜப்பானுக்கு இந்த Pogdaக்கள். கூம்பு வடிவில் கற்களால் எழுப்பப்பட்டுள்ள ஒரு வித்தியாசமான வடிவமே இந்த Pogda. இந்தப் பகுதியில் இது போன்ற Pogdaக்கள் அதிகமாக இருந்ததால் இந்த இடத்திற்கு பகோடா பாயிண்ட் என்று பெயர் வந்ததாம். இங்குள்ள ஆஞ்சநேயர் கோயில் மிகச் சக்தி வாய்ந்த ஆலயமென உள்ளூர் வாசிகள் நம்புகின்றனர். இங்கிருந்து பார்த்தால், சுமார் ஒன்றரை கிலோமீட்டர் ஆழத்தில் சேலம் நகரத்தின் முழுத் தரிசனமும் கிடைக்கிறது.
ரூபாய் இருபதுக்கெல்லாம் படகுச் சவாரி அழைத்துச் செல்கிறார்கள். சுமார் ஒரு கிலோமீட்டருக்கும் மேல் சுற்றளவுள்ள ஏரியின் இருபுறங்களிலும் பசுமையான மரங்கள் நின்றிருக்க படகில் சவாரி செய்வது சுகமான அனுபவம். இரண்டு பேர் அமர்ந்து போவது, ஆறு பேர் அமர்ந்து போவது என அனைத்துத் தரப்பினர்களுக்கும் ஏற்ற வகையில் படகுச் சவாரிக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
சேர்வராயன் மலைக்குத் திலகமிட்டுள்ளது போல அமைந்துள்ள இடம் சேர்வராயன் கோயில். மலை உச்சியில் சேர்வராயன் தன்னுடைய உடனுறை தேவியான காவேரி அம்மனுடன் வீற்றிருக்கிறார். சுற்று வட்டாரத் தில் உள்ள 67 கிராமங்களையும் சேர்வ ராயன்தான் காத்தருளுகிறான் என்பது மலை வாசிகளின் நம்பிக்கை. கிட்டத்தட்ட சிறு குடிசை போலவே அமைந்துள்ளது சேர்வ ராயனின் கோயில். இது ஒரு குகைக் கோயில். சேர்வராயனைத் தரிசிக்க வேண்டுமெனில், குனிந்தபடியேதான் செல்ல வேண்டும். ஒரே நேரத்தில் மூவர் மட்டுமே செல்ல முடிகிற அளவுக்குக் குகை குறுகலாக இருக்கிறது.
சேர்வராயன், காவேரி அம்மன் சிலைகளுக்குப் பின்புறம் குகை நீள்கிறது. சேர்வராயன் மலையிலிருந்து கர்நாடக மாநிலத்தின் தலைக் காவேரி வரை 480 கிலோமீட்டர் குகை நீண்டு செல்வதாக மலைவாசிகள் கூறுகின்றனர். இதுவரை ஒரு சிலரே சென்று வந்ததாகவும் சொல்லுகிறார்கள். சேர்வராயன் கோயில் அருகில் கடை வைத்திருக்கும் மாதையன், "நான் ஒரு முறை இந்தக் குகைக்குள் போயிருக்கிறேன். ஆனால் 3 கிலோமீட்டர் தூரம்தான் செல்ல முடிந்தது. அதற்கும் 41 நாள்கள் விரதம் இருந்தே சென்றேன். 3 கிலோமீட்டருக்கு அப்புறம் குகைக்குள் சுத்தமாக வெளிச்சம், காற்று இருக்காது. பாம்புகளும் அதிகமாக இருக்கும். முன்பு சில முனிவர்கள் மட்டும் சென்று திரும்பியதாகச் சொல்வார்கள். திப்பு சுல்தான் காலத்தில் போரின் போது திப்பு சுல்தான் இந்தக் குகைக்குள்தான் ஒளிந்திருந்ததாகவும் சொல் வார்கள். வைகாசி பௌர்ணமி காலங்களில் சேர்வராயனுக்குப் பொங்கல் வைப்போம். 67 கிராமங்களிலிருந்தும் மக்கள் வந்து கலந்து கொள்வார்கள்" என்று குகைக் கோயில் பற்றி தெரிவித்தார்.
இந்தக் கோயிலின் எதிரில் தென்கிழக்குத் திசையில் பழமையான கிணறு இருக்கிறது. கோயிலிலிருந்து சிறு கற்கள் மூன்றை எடுத்து வந்து, கிணற்றைப் பார்க்காமல் திரும்பி நின்று கொண்டு மூன்று கற்களையும் ஒவ்வொன்றாக எறிய வேண்டும். மூன்று கற்களில் ஒன்று மட்டும் விழுந்தால்கூட போதும் நினைத்த காரியம் கைகூடும் என்று மலைவாசிகள் நம்புகின்றனர். மலைவாசி மக்களின் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முன்பு இவ்வாறே சேர்வரா யனிடம் அனுமதி கேட்கின்றனர். |
|
சேர்வராயன் கோயிலிருந்து கீழிறங்கி நடைபயணமாகச் சென்றால், கிள்ளியூர் அருவியை அடையலாம். சுமார் 300 மீட்டர் உயரத்திலிருந்து நீர் விழுகிறது. மழைக் காலங்களில் அருவியைப் பார்க்கவே பயமாக இருக்கும் என்றும் பயங்கரச் சத்தத்துடன் நீர் விழும் என்றும் ஊர்வாசிகள் தெரிவிக்கிறார்கள்.
லேடீஸ் சீட் எனப்படும் இடத்திலிருந்து பார்த்தால், நாமக்கல், சேலம் உள்ளிட்ட ஊர்களின் முழுத் தரிசனமும் கிடைக்கும். அண்ணா பார்க் அமைதியாக ஓய்வெடுக்கச் சிறந்த இடம்.
ஆங்கிலேயர்கள் வாழ்ந்து சென்றதை இன்னமும் ஏற்காட்டில் உணர்த்திக் கொண்டி ருப்பது. Montfort ஆண்கள் மேனிலைப் பள்ளி. இந்தப்பள்ளியில் சாதாரண மக்களின் குழந்தை களெல்லாம் படித்து விட முடியாது. ஒரு வருடத்திற்கு சுமார் ஒரு இலட்சம் வரை பள்ளிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்தப் பள்ளியில் படித்து முடிக்கும் ஒரு மாணவன் சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று விடுவான் என்கிறார்கள். விளையாட்டு, அரசியல், இசை, கல்வி என சகல துறைகளிலும் பயிற்சி தருகிறார்கள். நம்மூர் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் தொடங்கி இன்றைய முன்னணி திரையுலக நட்சத்திரம் 'ச்சீய்யான்' விக்ரம் வரை இங்கு பலர் பயின்றிருக்கிறார்கள் என்பது பள்ளியின் தனிச் சிறப்பு.
"அக்டோபர், நவம்பர் மாதங்களில் இங்கு சீசன் பிரமாதமாக இருக்கும். மற்ற நாட்களில் வெளிநாட்டுப் பயணிகளின் கூட்டம் இருக்கும். அக்டோபர் மாதம் தசரா விழா விடுமுறையா கையால் பெங்களூர் மக்கள் அதிகமாக வருவார்கள். நவம்பர் மாதம் தீபாவளி விடுமுறையாகையால், வட மாநில மக்கள் அதிகமாக வருவார்கள். மற்ற சுற்றுலாத் தலங்களை விட ஏற்காடு செலவைக் குறைக்கும் இடமே. மத்தியத் தர மக்களின் விருப்பம் ஏற்காடுதான். எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க கார் செலவு ரூபாய் நானூறுதான். கைடு செலவு 150. ஆக ஆயிரம் ரூபாயில் ஒரு குடும்பமே சுற்றிப் பார்த்து வந்து விடலாம். தமிழ்நாடு ஹோட்டலில் மிகக் குறைந்த வாடகைக்கு அறைகள் கிடைக்கின்றன" என்கிறார் கைடாகப் பணிபுரியும் பிரின்ஸ்.
ஏற்காட்டில் மே மாதம் மலர்க் கண்காட்சி நடக்கிறது. ஆரஞ்ச், மிளகு, ஏலக்காய் போன்றவைகள் முக்கியமான விவசாயப் பொருட்கள். சீசனல் பழவகைகளும் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் கூலித் தொழிலாளிகளே! ஊரைச் சுற்றியுள்ள காபி தோட்டங்களில் கூலியாகப் பணிபுரிகிறார்கள். ஊரில் சுமார் 30 சதவிகித வீடுகள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வீடுகளே!
இன்னும் ஊரில் பல இடங்களில் ஆங்கில வாடை அடிக்கிறது. ஹோட்டல்கள் பலவும் வெளிநாட்டுத் தரத்தில் கட்டப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக மரங்களுக்கிடையில் பதுங் கிக் காத்திருக்கின்றன. இந்த இயற்கையை அணு அணுவாக ரசிக்க வேண்டுமென்கிற நோக்கத்தில் இந்த மலையைக் குடைந்து ரோடு போட்டு, மேலே வீடுகளும் கட்டியவர்கள், இப்போது ரோடு இருக்கும் நிலையைப் பார்த்தால் அதிர்ச்சியடைந்து விடுவார்கள். அந்தளவிற்கு பேருந்துகள் செல்ல முடியாதபடி ரோடுகள் குண்டும் குழியுமாக பராமரிப்பின்றி இருக்கின்றன. சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியவர்கள் ஏற்காடு பக்கமாகவும் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்தான் விமோசனம் கிடைக்கும்.
இந்தியா சுதந்திரமடைந்த பின்பு ஏற்காட்டை காலி செய்து சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்ற ஆங்கிலேயர்கள், அழகழகான பங்க ளாக்கள், இயற்கைச் சூழ்நிலைகள் இவைகளை விட்டெல்லாம் போகிறோமென்று ஒரு சில சொட்டுக் கண்ணீராவது சிந்தியிருப்பர்!
கட்டுரை, படங்கள் :சரவணன் |
|
|
More
தமிழில் : அறிவியல் பரவலாக்கத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|