|
|
|
ராகு, கேது ஒரே உடலாய் ஈசனை இதயத்தில் இருத்திப் பூசித்த தலம் திருப்பாம்புரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று வகையிலும் சிறப்புற்ற இந்த ஆலயம் தென்னிந்தியாவில் கும்பகோணம் காரைக்கால் சாலையில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கத்தி என்னும் கிராமத்திலிருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம், காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூரிருந்து பேருந்துகள் உண்டு. காரிலும் போகலாம்.
இறைவன் திருநாமம் சேஷபுரீஸ்வரர், பாம்புரேசர். இறைவியின் திருநாமம் பிரமராம்பிகை, வண்டுசேர்குழலி. தல விருட்சம் வன்னிமரம். தீர்த்தம் ஆதிசேஷ தீர்த்தம்.
ராகுவும், கேதுவும் திருக்கோயிலின் ஈசான்ய மூலையில் தனிச் சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். சைவ சமயக் குரவர்களால் பாடப் பெற்ற 59வது திருத்தலம் இது. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் கல்வெட்டு கோவிலில் காணப்படுகிறது. சோழ மன்னர்கள் காலத்தில் செங்கற் கோவிலாக இருந்த கோவில்கள் கற்கோயிலாக மாற்றமடைந்தன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று.
கிழக்கு நோக்கிய மூன்று நிலைகளை உடைய கம்பீரமான ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இறைவன் சன்னதியில் கருவறையில் பாம்புரேசர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். கருவறையைச் சுற்றிலும் அகழி உள்ளது. அகழியை மூடி மூன்று புறமும் மண்டபம் உள்ளது. அம்மன் சன்னதி இடப்புறம் அமைந்துள்ளது. இறைவனை 'மாதினை இடம் வைத்த எம் வள்ளல்' என இத்தலத்துத் தேவாரம் போற்றுகிறது.
| ஜாதகத்தில் கால சர்ப்பதோஷம், களத்திர தோஷம், புத்திரதோஷம், 18 வருட, 7 வருட கேது தசை நடந்தால், ராகு, கேது புக்தி நடந்தால், திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால், கடன் தொல்லை இருந்தால் இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்கின்றனர். | |
ஏனைய கோயில்களில் இருப்பதைப் போல் அல்லாமல் ராகுவும் கேதுவும் ஒரே உடலில் இருப்பது இத்தலத்தின் சிறப்பு. 'பாம்புரத்தில் பூசை பண்ணிப் பதம் பெற்றோர் பன்னிருவர்' என்று தலபுராணம் குறிப்பிடுகிறது. ஆதிசேஷன், பிரம்மன், பார்வதி, அகத்தியர், அக்னி, கங்கை, சந்திரன், சூரியன், தட்சன், சுனீதன் என்னும் வடநாட்டு மன்னன், கோச்செங்கட் சோழன் ஆகியோர் இந்தப் பன்னிருவர்.
ஒருமுறை வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே யார் வலிமையானவர் என விவாதம் ஏற்பட்டது. வாயு தன் வலிமையால் மலைகளைப் புரட்டி வீச, ஆதிசேஷன் தன் வலிமையால் காத்து நிற்க இருவரும் சமபலம் காட்டினர். வெற்றியடைய முடியாத வாயு பகவான் பிராணவாயுவை நிறுத்திவிட உயிர்கள் அனைத்தும் சோர்ந்து போயின. தேவர்கள் வேண்டிக் கொண்டதால் ஆதிசேஷன் ஒதுங்கி நின்றார். வாயுபகவான் வெற்றிக் களிப்புடன் மலைகளைப் புரட்டிவிட்டார். ஈசன் சினமடைந்து வாயு, ஆதிசேஷன் இருவரையும் பேய் உருவாகும்படிச் சபித்தார்.
இருவரும் தத்தமது குற்றத்தை உணர்ந்து இறைவனை வேண்டினார்கள். வாயு பகவான் வைகை நதிக்கு வடக்கில் மதுரைக்குக் கிழக்கில் பூசை செய்து விமோசனம் பெறலாம் எனவும், ஆதிசேஷன் திருப்பாம்புரத்தில் தம்மை 12 ஆண்டுகள் பூசை செய்து விமோசனம் பெறலாம் என்றும் அருளியதின் பேரில் மகாசிவராத்திரி அன்று இரவு முதல் ஜாமத்தில் குடந்தை நாகேஸ்வரரையும் இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும் மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்துக்கும் வந்து வழிபட்டு விமோசனம் பெற்றதாக வரலாறு. |
|
ஒருமுறை விநாயகர் சிவபெருமானைத் தொழுதபோது, பெருமானின் கழுத்தில் இருந்த பாம்பு விநாயகர் தன்னையும் தொழுவதாக கர்வம் கொண்டதாம். அதனால் கோபம் அடைந்த இறைவன் நாக இனம் முழுவதும் சக்தி இழக்கச் சாபமிட்டார். பின் அஷ்ட மகா நாகங்களும் ராகுவும் கேதுவும் ஈசனைத் தொழுது பிழைபொறுக்குமாறு வேண்டினர். அவ்வாறு மகாசிவராத்திரியன்று ராகு, கேது, அஷ்டமகா நாகங்கள் மூன்றாம் சாமத்தில் இறைவனைப் பூஜை செய்து சாபவிமோசனம் பெற்றனர். அதனால் இவ்வூரில் உள்ள பாம்புகள் அனைத்தும் சிவனடியார்களாக விளங்குவதாகவும் யாரையும் தீண்டுவதில்லை எனவும் புராணம் கூறுகிறது.
ஜாதகத்தில் கால சர்ப்பதோஷம், களத்திர தோஷம், புத்திரதோஷம், 18 வருட, 7 வருட கேது தசை நடந்தால், ராகு, கேது புக்தி நடந்தால், திருமணம் தடைப்பட்டால், கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், தெரிந்தோ தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால், கடன் தொல்லை இருந்தால் இத்தலத்தில் வந்து பரிகாரம் செய்கின்றனர். சுவாமி, அம்பாள், ராகு, கேதுவுக்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை முடிந்தபின் உளுந்துப் பொடி, கொள்ளுப்பொடி, அன்னம் நிவேதனம் செய்ய வேண்டும்.
2002ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் தேதி காலை அர்ச்சகர் அம்பாள் சன்னதிக்குப் பூஜை செய்யச் சென்றபோது ஏழரை அடி நீளமுள்ள பாம்பு தனது சட்டையை அம்பாள் மீது திருமாலையாக அணிவித்திருந்ததைக் கண்டார். அதை நினைவுச் சின்னமாக பிரேம் செய்து சுவாமி சன்னதியில் வைத்துள்ளனர். அதே ஆண்டு மே மாதம் 26ம் தேதி சுவாமிக்கு பூஜை செய்ய அர்ச்சகர் உள்ளே சென்ற போது சுமார் எட்டடி நீளமுள்ள நல்ல பாம்பு சுவாமி திருமேனியில் சுற்றியிருந்தது. அர்ச்சகர் உள்ளே சென்றதும் நாகம் வெளியில் சென்றுவிட்டது. அதன் சட்டை சுவாமியைச் சுற்றி மாலை அணிவித்ததுபோல் இருந்தது. எண்ணற்ற பக்தர்கள் அந்த அற்புதக் காட்சியை நேரில் தரிசித்தனர். ஞாயிற்றுக்கிழமை பெளர்ணமி நாளில் சிவலிங்கத்தின் மீது பாம்புச் சட்டை காணப்பட்டது சிறப்பு அம்சமாகும்.
கருவறையில் அவ்வப்போது நாகம் வந்து வணங்குவதாகவும், வரும்போது திடீர் என மல்லிகை, தாழம்பூ மணம் வீசுவதாகவும் சொல்கின்றனர். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புண்ணியம் செய்தோர் நாகவழிபாட்டைக் கண்கூடாகக் காணலாம் எனக் கூறப்படுகிறது. இவ்வூரில் பாம்பு இறையடியாராக உலவிக் கொண்டிருப்பதால் இன்றுவரை அவை யாரையும் தீண்டியதில்லை.
மகாசிவராத்திரி, ராகு, கேதுப் பெயர்ச்சி விழா இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
சீதா துரைராஜ் |
|
|
|
|
|
|
|
|