|
டி.என். சேஷன் |
|
- |டிசம்பர் 2019| |
|
|
|
|
திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் எனும் டி.என். சேஷன் (87) சென்னையில் காலமானார். இவர் டிசம்பர் 15, 1932ல் பாலக்காட்டில் பிறந்தார். மிஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் கற்றபின், விக்டோரியா கல்லூரியில் இன்டர்மீடியட் படித்தார். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் சேர்ந்து இயற்பியலில் பட்டப்படிப்பை முடித்தார். அங்கு சில காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பின் ஐ.ஏ.எஸ். பணிக்குத் தேர்ச்சிபெற்றார். சப்கலெக்டர், கலெக்டர், சென்னை போக்குவரத்துத் துறை இயக்குநர் உள்பட பல பதவிகளை வகித்தார். பின் சில வருடங்கள் ஹார்வர்டு சென்று பயின்று பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இந்தியாவுக்குத் திரும்பியபின் மத்திய அரசின் பல பதவிகள் இவரைத் தேடிவந்தன. அணுசக்தித்துறை குழுச் செயலாளர், விண்வெளித்துறை இணைச் செயலாளர், விண்வெளி அமைச்சகக்தின் கூடுதல் செயலாளர், திட்டக்கமிஷன் தலைவர் உட்படப் பல பொறுப்புகளைத் திறம்பட வகித்தார்.
1990ல் சேஷன், அப்போதைய பிதமர் சந்திரசேகரால் இந்தியாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டது இந்தியத் தேர்தல் மேலாண்மையில் திருப்புமுனை ஆனது. ஆறாண்டுகள் அப்பதவியில் இருந்தபோது உறுதியுடனும் அரசியல்வாதிகளுக்கு அஞ்சாமலும் அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்கள் அவரை நாடறியக் காரணமாயின. இந்தியத் தேர்தல் முறையையே மாற்றி அமைத்தவர் டி.என். சேஷன்தான் எனலாம். "அரசு இயந்திரத்தை பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது. சாதி மற்றும் மத ரீதியிலான பிரசாரங்கள் கூடாது. முறையான அனுமதியின்றி அதிக ஒலியெழுப்பும் ஸ்பீக்கர்களைப் பயன்படுத்தக் கூடாது" என்றெல்லாம் அவர் கொண்டு வந்த சீர்த்திருத்தங்கள் அரசியல்வாதிகளுக்கு உவப்பில்லாமல் போனாலும் பொதுமக்களை மிகவும் கவர்ந்தன. இந்தச் சீர்திருத்தங்களுக்காக சேஷன், ராமன் மகசேசே விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.
தன் நேர்மையாலும், கண்டிப்பாலும் பல்வேறு எதிர்ப்புகளை சேஷன் சந்தித்தாலும் அயராமல் தனது பணிகளைச் செய்தார். பணி ஓய்வுக்குப் பின், 1997ல் நடந்த ஜனாதிபதி தேர்தலில், கே.ஆர். நாராயணனை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1999ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில், குஜராத்தின் காந்தி நகர் தொகுதியில், பா.ஜ. மூத்த தலைவர் அத்வானியை எதிர்த்துக் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுத் தோற்றார்.
முதுமையின் காரணமாக சென்னைக்கு வந்து வசித்து வந்தார் சேஷன். இவரது மனைவி ஜெயலக்ஷ்மி கடந்த ஆண்டு காலமானார். அதுமுதலே நலிவுற்றிருந்த சேஷன், திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் காலமானார். |
|
சேஷனுக்கு தென்றலின் அஞ்சலிகள்!! |
|
|
|
|
|
|
|