|
ஐராவதம் மகாதேவன் |
|
- |டிசம்பர் 2018| |
|
|
|
|
தமிழகத்தின் மூத்த தொல்லியல் அறிஞரும், கல்வெட்டு ஆய்வாளருமான ஐராவதம் மகாதேவன் (88) சென்னையில் காலமானார். இவர், 1930ல் திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூரில் பிறந்தார். செயிண்ட் ஜோசப் கல்லூரியிலும், சென்னைப் பல்கலையிலும் பயின்று தேர்ந்தார். இந்திய ஆட்சிப் பணியியல் அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் 1987-1991 வரை இவர் தினமணி இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அக்காலக்கட்டத்தில் தினமணி இதழில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தினார். வணிகமணி, வெள்ளிமணி எனப் பல புது முயற்சிகளை முன்னெடுத்தார்.. தனித்தமிழுக்கு முக்கியத்துவம் அளித்து எழுதினார். பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு தொல்லியல் ஆய்வின்மேல் புத்தொளி பாய்ச்சினார். பழந்தமிழ் இலக்கியங்கள் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டவர். தமிழ் பிராமி எழுத்துக்களின் மீதான இவரது ஆர்வம் அதுபற்றி ஆராயத் தூண்டவே கல்வெட்டியல் ஆய்வில் ஈடுபட்டார். பிராமி எழுத்துமுறை தமிழகத்தில் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் பரவியது என்பதையும் அந்த நூற்றாண்டிலேயே எழுத்தறிவு தோன்றியது என்பதையும் ஆராய்ச்சி மூலம் நிறுவினார். சிந்துசமவெளி கால எழுத்துக்கள் திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவையே என்பது மகாதேவனின் கருத்து. தமிழ் எழுத்துக்களின் தோற்றமும் வளர்ச்சியும் குறித்து இவர் நடத்திய ஆராய்ச்சிகளுக்காக சர்வதேசப் புகழ் இவரைத் தேடி வந்தது. The Indus Script: Texts, Concordance and Tables, Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D போன்றவை இவரது முக்கியமான நூல்களாகும். உலக அளவில் பல தமிழ்க் கருத்தரங்குகளில் உரையாற்றியிருக்கிறார். பத்மஸ்ரீ, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது, தமிழக அரசின் திருவள்ளுவர் விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிய தொல்காப்பியர் விருது உட்படப் பல விருதுகளும் கௌரவங்களும் பெற்றவர். வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டப் பணிகளைச் செய்துவந்தார். நற்றமிழ் ஆராய்ச்சி அறிஞருக்குத் தென்றலின் அஞ்சலி! |
|
|
|
|
|
|
|
|
|