|
|
காந்தியின் சிந்தனையும் செயற்பாடும் அரசியலில் மட்டுமல்ல, கலை, இலக்கியம், பண்பாடு சார்ந்த புலங்களிலும் மிகுந்த தாக்கம் செலுத்தியதாகவே இருந்தது. இந்த தொடர்ச்சியும் புத்தாக்கமும் தமிழ்நாட்டு மரபிலும் ஆழமாகவே வேர்விட்டுள்ளது. குறிப்பாகத் தமிழ் இலக்கியப் படைப்பாக்கங் களில் காந்திய சிந்தனை புதியதொரு தளமாற்றத்திற்குக் காரணமாக அமைந்தது.
நவீன தமிழ் இலக்கிய உருவாக்கம் காந்தியின் சிந்தனைமரபுத் தொடர்ச்சியின் தாக்கத்திற்கு உட்பட்டு, வாழ்வியல் சார்ந்த அறமதிப்பீடுகளின், வழக்காறுகளின் நடத்தைக் கோலங்களாக உருப்பெற்றிருக் கின்றன. காந்தியின் சிந்தனைத் தாக்கத் திற்கு உட்பட்ட சீர்திருத்த வாதம் படைப்புத் தளங்களில் ஆழமாக வேர்விட்டது. இலட்சியவாதப் படைப்பாளிகள் தமிழில் உருவானார்கள். அத்தகையவரில் ஒருவரே நடேசன் என்னும் இயற்பெயர் கொண்ட சங்கரராம்.
சங்கரராம் என்ற புனைபெயரில் 1940-60 காலப்பகுதியில் சிறுகதை, நாவல் படைப் பாளியாகப் பல பாராட்டுக்கும் உரியவராக இருந்துள்ளார். ஆரம்பத்தில் ஆங்கிலக் கல்விபெற்று ஆங்கில இலக்கிய மரபின் செழுமைகளுடன் வளர்ந்துவந்தார். ஆங்கிலத்தில் நாவல் எழுதும் கலையை நுட்பமாக வளர்த்துக்கொண்டார். இருப்பினும் பின்னர் தம் படைப்புக்களைத் தமிழிலேயே எழுதத் தொடங்கினார்.
தமிழ் நாவல் இலக்கிய உலகில் சங்கர ராமுக்குத் தனியிடத்தை பெற்றுக் கொடுத்தது 'மண்ணாசை'. இந்நாவலை முதலில் ஆங்கிலத்தில் எழுதினார். பின்னர் தானே இந்நாவலைத் தமிழாக்கி வெளியிட்டார். மேலும் 'இன்ப உலகம்', 'காரியதரிசி', 'பானா பரமசிவம்', 'வீரச்சிற்பி', 'பெண் இனம்' போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார். 'பரிசிலோட்டி', 'பாசம்', 'பஞ்சத்து ஆண்டி', 'மணமகளின் அன்பு', 'நாளும் கிழமையும்' முதலிய சிறுகதைத் தொகுதிகளையும் படைத்துள்ளார். |
|
1930களில் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம் நடைபெற்றது. அதன் விளை வாகத் தீவிர தேசிய இலட்சியங்கள் படித்தவர்களிடையே உருவானது. காந்தியத் தின் விழுமிய செல்வாக்குக் காரணமாக 'மீண்டும் கிராமத்திற்குப் போவோம்' என்ற குரல் ஓங்கியொலிக்கத் தொடங்கிற்று. அக்கொள்கையின் பின்னணியில் படைப் புக்களை அமைத்தவர்களில் ஒருவரே சங்கரராம். இவருடன் சண்முகசுந்தரத் தையும் குறிப்பிட முடியும்.
சங்கரராமின் சிறுகதைகள் பெரும்பாலும் காந்தியின் கிராம இராட்சியத்தை மைய மாகக் கொண்டவை எனலாம். குறிப்பாக மரபுவழிப்பட்ட இந்திய பண்பாட்டைப் பேணுதல் என்ற போர்வையில் மரபுவாதம் செல்வாக்குச் செலுத்துவதைக் காணலாம். பழைய சமூக மதிப்பீடுகள் வேறு ஒரு தளத்தில் புத்தாக்கம் பெறுகின்றன. மனித உறவுகளைத் தந்தை மகன் பாசம், நேர்மை, தியாகம் முதலான மனித உணர்வுகளைச் சித்தரிக்கும் பாங்கு தலைதூக்கியுள்ளது. மனித உணர்ச்சிகளை இலட்சிய மயப் படுத்தும் நோக்கில் கதைக்களம் விரிவு பெறும். இதனொரு உயிர்ச் சுடராகவே காந்திய விழுமியம் பேசப்படுகின்றது.
கதைகூறு முறைமையில் எளிமையும் பாத்திரங்களைச் சித்திரிக்கும் உணர்வுக் கோலமும் மரபுவாதத்தில் அழுத்தமான நம்பிக்கையும் இலட்சியமும் 'உபதேசம்' செய்வதாகவே படைப்புத்தளத்தில் ஒலிக் கின்றது. எவ்வாறாயினும் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சியில் சங்கரராம் போன்றவர்களின் எழுத்துக்களையும் நாம் கவனித்துத்தான் ஆகவேண்டும்.
தெ.மதுசூதனன் |
|
|
|
|
|
|
|