|
|
முறையாகத் தமிழ் படித்துத் தமிழிலக்கியத்தில் பட்டம் பெற்றவர்கள் மு. வரதராசன், இந்திரா பார்த்தசாரதி போன்ற சிலரே. தீபம் நா. பார்த்தசாரதி அந்த வரிசையில் வருபவர். இலக்கிய வரலாற்றில் முத்திரை பதித்த தீபம் என்ற இதழைத் தொடங்கி 23 ஆண்டுகள் நடத்திய பெருமை நா. பா. வுடையது. இலக்கண இலக்கியப் புலமை பெற்ற நா. பா. பாண்டித்துரைத் தேவர் பரிசுடன் பண்டிதர் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டம் பெற்றார். நெல்லை கம்பன் கழகம் கம்ப ராமாயணத் தத்துவக் கடல் என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியது. 54 வயது வரை மட்டுமே வாழ்ந்த நா. பா., 45 வயதுக்கு மேல் சென்னை பச்சையப்பன் கல்லூரி யில் தமிழ் எம். ஏ. சேர்ந்து பட்டம் பெற்றார். பிஎச். டி. பட்டம் பெறப் பதிவு செய்து ஆய்வேட்டையும் சமர்ப்பித்த பின் டாக்டர் பட்டம் வழங்கப்படும் முன்பாகக் காலமானார். தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கூடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் என்பனவெல்லாம் அவரது புனைபெயர்கள். தொடக்கத்தில் கொஞ்ச காலம் பள்ளி ஆசிரியராக இருந்தார். பின் கல்கி வார இதழில் துணையாசிரியரானார். நா. பா. வின் புகழ்பெற்ற குறிஞ்சி மலர், பொன்விலங்கு, சத்தியவெள்ளம், துளசிமாடம் போன்ற நாவல்களெல்லாம் கல்கியில் தான் தொடராக வந்தன. கல்கி பணிக்குப் பின் தீபம் இதழ் தொடங்கினார். நெற்றிக்கண், செய்திகள், ஆத்மாவின் ராகங்கள், பொய்முகங்கள் போன்ற படைப்புகளை தீபத்தில் எழுதினார். சுமார் மூன்று ஆண்டுகள் தினமணிகதிர் இதழுக்கு ஆசிரியராக இருந்தார். சாயங்கால மேகங்கள், நிசப்த சங்கீதம், ராணி மங்கம்மாள் போன்ற நாவல்கள் அவர் கதிரில் எழுதியவை. சாகித்ய அகாதமி தமிழ் ஆலோசனைக் குழுவின் தலைவ ராக இருந்தவர். தமிழ்நாடு அரசு பரிசு, ராஜா சர் அண்ணாமலை பரிசு, சாகித்ய அகாதமி பரிசு போன்ற பல பெருமைகள் பெற்றவர். பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர் லாந்து, எகிப்து, குவைத் போன்ற பல வெளிதேசங்களுக்குச் சென்று வந்ததோடு பயண இலக்கியமாகவும் நூல்கள் தந்தவர். |
|
அரசியல் சார்புடையவர். நிறுவன காங்கிரஸ் ஆதரவாளர். காமராஜ் பால் அன்பு பூண்டவர். தம் சத்திய வெள்ளம் நாவலில் காமராஜையே ராமராஜ் என ஒரு பாத்திரமாகப் படைத்திருக்கிறார். மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். 90 நூல்களுக்கு மேல் எழுதியவர். 500 க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்தவர். தமிழ் இலக்கியத்தின் வாடாத குறிஞ்சி மலர் நா.பா.
திருப்பூர் கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|