Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | நூல் அறிமுகம் | சின்னக்கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | பொது
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
ஏ.வி. ராஜகோபால்
- அரவிந்த்|ஜனவரி 2025|
Share:
எழுத்தல்லாத பிற துறைகளில் பணியாற்றிக்கொண்டே எழுத்தைத் தங்கள் முதன்மை விருப்பமாய் வைத்து எழுத்துலகில் செயல்பட்டவர்கள் பலர். அவர்களுள் ஏ.வி. ராஜகோபாலும் ஒருவர். பட்டயக் கணக்காளராகத் தொழில் செய்துகொண்டே சிறுகதை, கட்டுரை, விமர்சனம் என எழுத்துலகில் இயங்கியவர். அக்டோபர் 26, 1938ல் வேலூரில் உள்ள அலமேலுமங்காபுரத்தில், ஏ.வி. வெங்கடராமன் - பார்வதி இணையருக்குப் பிறந்தார். வேலூரில் பள்ளிக்கல்வி பயின்றார். வணிகவியலில் பட்டம் பெற்ற இவர் பின்னர் பட்டயக் கணக்காளர் தேர்வெழுதித் தேர்ச்சி பெற்றார்.

1967-ல் நண்பர் டி.கே. சந்திரசேகரனுடன் இணைந்து ராவ் & கோபால் என்ற பட்டயக் கணக்கர் நிறுவனத்தைச் சென்னையில் தொடங்கினார். மனைவி மீனாட்சி. மகள்கள் ஜெயஸ்ரீ, சுஜாதா.

இளவயது முதலே எழுத்தார்வம் கொண்டிருந்த ராஜகோபால், ஏ.வி. ராஜகோபால் என்ற பெயரிலும், 'ராஜ்' என்ற புனைபெயரிலும் சாவி, கலைமகள், அமுதசுரபி, வாசுகி, மேனா, திருக்கோயில் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதினார். 'கௌண்டின்யா' என்ற புனை பெயரில் 'தி ஹிந்து' உள்ளிட்ட ஆங்கில இதழ்களில் எழுதினார். இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு 'ஒற்றை ரோஜா' 1992ல் இயக்குநர் மகேந்திரனின் முன்னுரையுடன் வெளியானது. இந்நூலில் இடம்பெற்ற 'அதற்கெல்லாம் அவசியமில்லை' என்ற சிறுகதை இந்திய நூலாசிரியர் பெருமன்றத்தின் சென்னைக் கிளையும் உத்திரப்பிரதேச ஹிந்தி சமஸ்தானமும் சேர்ந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது. தொடர்ந்து 'பார்வை நேரம்', 'மல்லிகை முள்' எனப் பல தொகுப்புகள் வெளியாகின. ICAFO Speaks செய்தி மடலில் தலையங்கங்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார். ராஜகோபால் 290 சிறுகதைகளை எழுதியுள்ளார். 14 தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

இவரது 'பார்வை நேரம்' சிறுகதைத் தொகுப்பு கன்னடத்தில், நரஹரிராவால் 'குங்குமத சுந்தரி' என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது. தொலைக்காட்சி நாடகங்களாகவும், குறும்படங்களாகவும் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. இவரது படைப்புகளை ஆராய்ந்து மாணவர்கள் எம்.ஃபில். மற்றும் பிஹெச்.டி. பட்டங்களைப் பெற்றுள்ளனர். பல்வேறு மொழிகளில் ராஜகோபாலின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது சிறுகதைகள் மத்தியதர உயர்தர மக்களின் நடத்தைகள், ஏழைகளின் வாழ்க்கை அவலங்கள், முதுமை, பெண்ணியம், ஆன்மீகம் எனப் பல பொருண்மைகளைக் கொண்டதாய் அமைந்துள்ளன.

ஏ.வி. ராஜகோபால் நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்: ஒற்றை ரோஜா (1992), பார்வை நேரம் (1993), மல்லிகை முள் (1994), நிழல் கோபுரம் (1995), புதிய கற்காலம் (1996), காகிதப் புலிகள் (1996), சாயங்கால வெளிச்சம் (1997), அயல் மகரந்தம் (1997), ஒரு கல் தொலைவு (1998), கொம்புத்தேன் நிலவு (1998), ஓர் இதழ் தாமரை (1999), வெள்ளை யானையும் கருப்புத் தந்தமும் (2000), லஞ்சாமிர்தம் (2001), போதிமரம் கொத்தி (2002), திரைப்படச் சங்கங்கள் ஏன், எப்படி? (திரைத்துறை நூல்)


ராஜகோபால் பட்டயக் கணக்காளர், எழுத்தாளர் என்பதோடு திரைத்துறையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். சினிமா தணிக்கைக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார். திரைப்படங்களை விமர்சிக்கும் 'சர்வதேசத் திரைப்படத் திறனாய்வுச் சங்கம்' என்ற அமைப்பின் செயலாளராகப் பணிபுரிந்தார். தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஃபிலிம் சொசைட்டிகளின் மாநில அமைப்புச் செயலாளராகப் பணியாற்றினார். Federation of Film Societies of India என்ற தேசிய அமைப்பின் மத்தியக் குழு உறுப்பினராகச் செயலாற்றினார். 'இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பு உருவாவதற்கு அடித்தளமிட்டவர்களில் ஏ.வி. ராஜகோபாலும் ஒருவர். அச்சங்கத்தின் வழி உலகளாவிய சிறந்த திரைப்படங்கள் சென்னையில் திரையிடப்படக் காரணமானார். இவரது முயற்சியால் கனடா, ஜப்பான், அமெரிக்க நாடுகளின் திரைப்படங்கள் சென்னையில் திரையிடப்பட்டன.

ஏ.வி. ராஜகோபாலின் படைப்புகளுக்குப் பல்வேறு விருதுகள் கிடைத்தன. இந்திய நூலாசிரியர் பெருமன்றத்தின் சென்னைக் கிளையும் உத்திரப் பிரதேச இந்தி சமஸ்தானமும் சேர்ந்து நடத்திய போட்டியில் 'அதற்கெல்லாம் அவசியமில்லை' என்ற சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்தது. 'பார்வை நேரம்' சிறுகதைத் தொகுப்புக்கு தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான மூன்றாம் பரிசு கிடைத்தது. அதே நூலுக்கு பாரத ஸ்டேட் வங்கியின் சிறந்த நூலுக்கான இரண்டாம் பரிசு கிடைத்தது. தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பரிசு 'மல்லிகை முள்' சிறுகதைத் தொகுப்புக்குக் கிடைத்தது. 'புதிய கற்காலம்' சிறுகதைத் தொகுப்புக்காக லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு பெற்றார். அனந்தாச்சாரி அறக்கட்டளைப் பரிசு, சேவா ரத்னா விருது, ஸ்ரீ ஜயேந்திரர் இலக்கிய விருது, சிறுகதைச் சித்தர் உள்ளிட்ட பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றார்.

ஏ.வி. ராஜகோபால் ஜூலை 14, 2002-ல், தனது 64ம் வயதில் காலமானார்.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline