Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2024 Issue
சிறப்புப் பார்வை | பயணம் | வாசகர்கடிதம் | கதிரவனை கேளுங்கள் | மேலோர் வாழ்வில் | சமயம் | சிறுகதை | சின்னக்கதை
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
கோமதி சுப்ரமணியம்
- அரவிந்த்|ஏப்ரல் 2024|
Share:
கோமதி சுப்ரமணியம் சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம் எனப் பல திறக்குகளில் இயங்கியவர். ஆகஸ்ட் 25, 1926 அன்று திருநெல்வேலியில், திருக்கோவில் நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய நம்பிராஜ பிள்ளை – சிவகாமி இணையருக்குப் பிறந்தார். எட்டாம் வகுப்புவரை கற்றார். ஆங்கிலம், ஹிந்தியில் புலமை பெற்றார். தந்தை வாங்கித் தந்த ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் இதழ்கள் மூலம் இலக்கிய ஆர்வம் பெற்றார்.

1941ல், கோமதி சுப்ரமணியத்திற்குத் திருமணமானது. கணவர் சுகி எனப்படும் டி.என். சுகி சுப்ரமண்யம், இலக்கியவாதி. மீ.ப. சோமு, கே.பி. கணபதி, டி.கே.சி., தீத்தாரப்பன், கல்கி, சுந்தா போன்றோருடன் நட்புக் கொண்டவர். வீட்டில் நடக்கும் இலக்கிய விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் கேட்ட கோமதி சுப்ரமணியத்திற்கு இலக்கிய ஈடுபாடு அதிகமானது. கணவரது சிறுகதை, கட்டுரை, நாடகங்களை விமர்சித்தார். ஆக்கபூர்வமான விமர்சனங்களாலும், ஒரு பெண்ணின் கோணத்தில் சில தர்க்கங்களை எடுத்துரைத்ததாலும் மகிழ்ந்த சுகி, மனைவிக்குப் பார்க்கர் பேனாவைப் பரிசாக அளித்து எழுதும்படி ஊக்குவித்தார்.



கோமதி சுப்ரமணியம் எழுதிய முதல் கதை 'மனக் கண்ணாடி' கல்கியில் வெளியானது. தொடர்ந்து கலைமகள், அமுதசுரபி, குமுதம், சுதேசமித்திரன், தினமணி கதிர் போன்ற இதழ்களில் சிறுகதைகள், தொடர்களை எழுதினார். சக்தி, வள்ளி போன்ற புனை பெயர்களிலும் எழுதினார்.

மூன்று பெண் குழந்தைகள், மூன்று ஆண் குழந்தைகளுக்குத் தாயான போதினும், குடும்பச் சுமை அதிகமாக இருந்தபோதிலும் இலக்கிய ஆர்வத்தால் கிடைத்த நேரத்தில் எழுதினார். இதழ்கள் நடத்திய பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டார். கல்கி முதன்முதலாக நடத்திய சிறுகதைப் போட்டியில் கோமதி சுப்ரமணியத்தின் 'பாட்டி சொன்ன கதை' இரண்டாவது பரிசு பெற்றது. 'ஆனந்த விகடன்' வார இதழில் 'துரோகமா?', 'பாசம் என்கிற சொல் எதற்கு?' ஆகிய சிறுகதைகள் முத்திரைக் கதைகளாக வெளிவந்தன. 'சாகாத வாழ்வுக்கு சஞ்சீவி' சிறுகதை, கல்கி ஆகஸ்ட் மாதச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது. 'தியாகத்துக்கு ஒரு தனயன்' சிறுகதை, கல்கி நெல்லை மாவட்டச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. குமுதம் இதழின் முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு குமுதம் நடத்திய முதல் சிறுகதைப் போட்டியில் 'பந்தயம்' என்கிற சிறுகதைக்கு முதல் பரிசு கிடைத்தது. மற்றும் பல போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளைப் பெற்றார். குமுதம் வார இதழில் கோமதி சுப்ரமணியம் எழுதிய 'சட்டத்திற்கு வாழ்க்கைப்பட்டவள்' என்கிற சிறுகதை, இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனால் 'மாலதி' என்ற பெயரில் திரைப்படமானது.

கோமதி சுப்ரமணியம் நாவல்கள்
வாரிசு, புதிய உறவு, பிருந்தாவனம், பாசத்தை கடந்த பகை, பணம் கொத்திய மனிதர்கள், நெஞ்சில் குடியிருக்கும், தொடரும் பயணங்கள், டாக்டர் சாவித்திரி, ஒரே குடும்பம், நெஞ்சே நினைப்பதெப்போ?, நினைவுகள் ஆயிரம், அவனும் குழந்தைதான், உறவைத் தேடும் உள்ளங்கள், வளம் தரும் உறவுகள், உறவுகள் பலவிதம், மைத்துனி, பூஜைக்குரிய மலர், கிரகணம், சிந்தனைச் செல்வம், சிந்தனைச் சிற்பங்கள், குணநாயகத்தின் குடும்பம், கிரகப்பிரவேசம், மற்றும் பல

கோமதி சுப்ரமணியம் சிறுகதைத் தொகுப்பு
மனக்கண்ணாடி, அறிவுக்கு அப்பால், இனிக்கும் சிறுகதைகள்


கோமதி சுப்ரமணியம், கணவர் டி.என். சுகி சுப்பிரமணியன் அகில இந்திய வானொலியில் பணியாற்றியதால் வானொலிக்கு நாடகங்கள் எழுதாமல் இருந்தார். அதேசமயம் இலங்கை வானொலிக்கு கால்மணி, அரைமணி நேர நாடகங்களை எழுதி அனுப்பினார். அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒலிபரப்பாகின. நேயர்களின் வரவேற்பு காரணமாக 'குணநாயகத்தின் குடும்பம்' என்னும் ஐம்பது வாரத் தொடர் நாடகத்தை இலங்கை வானொலிக்காக எழுதினார். கணவர் பணி ஓய்வு பெற்றதும் சென்னை, புதுவை வானொலிகளிலும் சென்னை தொலைக்காட்சியிலும் நாடகங்கள் பலவற்றை எழுதினார்.



சரஸ்வதி ராம்நாத் ஹிந்தியில் மொழிபெயர்த்துப் பதிப்பித்த சிறந்த சிறுகதைகளின் தொகுப்பில் கோமதி சுப்ரமணியத்தின் படைப்பு 'மம்தா' இடம்பெற்றது. சரஸ்வதி ராம்நாத் எழுதிய 'தமிழ்நாட்டுப் பெண் எழுத்தாளர்கள்' என்கிற ஹிந்தி நூலில் கோமதி சுப்ரமணியத்தின் படைப்புகளும் கட்டுரைகளின் கதைச் சுருக்கங்களும் இடம்பெற்றன.

வை.மு. கோதைநாயகி, லட்சுமி, ராஜம் கிருஷ்ணன், அநுத்தமா போன்றோர் கோமதி சுப்ரமணியத்தின் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள். கோமதி சுப்ரமணியம் குடும்பத்தையும் பெண்களையும், குடும்ப உறவுகளையும் மையப்படுத்தியே பல கதைகளை எழுதினார். சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். மே 23, 2011 அன்று கோமதி சுப்ரமணியம் காலமானார். அவரது மகன்களான எம்.எஸ். பெருமாள், சுகி சிவம் போன்றோரும் எழுத்தாளர்களே!
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline