|
|
தமிழில் வெகுசன வாசிப்புச் செயல் பாட்டின் நிலைபேற்றோடு நாவல் இலக்கியமும் பல்வேறு மாறுதல்களைத் தன்னளவில் உள்வாங்கிக் கொண்டது. அதாவது நாவல்களின் பெருக்கமும் அதனோடு அமைந்த வாசகர்களின் உருவாக்கமும் பல்கிப் பெருகத் தொடங்கிற்று.
பல்வேறு எழுத்தாளர்கள் வளர்ந்துவரும் வாசிப்பு முறைகளின் தேவையையொட்டித் தமது எழுத்துக்களின் பெருக்கத்தில் அதிகக் கவனம் குவித்தனர். வை.மு. கோதைநாயகி அம்மாள் இந்த வகையில் குறிப்பிடத் தக்கவர். இவருக்கு அடுத்து லஷ்மியின் நாவல்கள் அதிகம் கவர்ச்சிப் பண்டமாகியது.
சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டவர் லஷ்மி. இவரது இயற்பெயர் திரிபுரசுந்தரி. 14 வயதிலிருந்து எழுதத் தொடங்கிய இவர் நூற்றி அறுபதுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். மேலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் பலவும் எழுதியுள்ளார்.
லக்ஷ்மி மருத்துவம் படித்தவர். தென் ஆப்பிரிக்காவில் 22 ஆண்டுகளுக்கு மேல் மருத்துவராகப் பணி புரிந்தார். அங்கு அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை 'ஆனந்த விகடன்' இதழில் தொடராக எழுதினார். பின்னாளில் 'ஆப்பிரிக்கக் கண்டத்தில் பல ஆண்டுகள்' என்னும் நூலாக அந்தத் தொடர் வெளி வந்தது. மருத்துவப் புத்தகங்கள் சிலவும் எழுதியுள்ளார். இதில் தாய்மை, குழந்தை வைத்தியம் போன்ற நூல்கள் பெண்களிடையே வரவேற்பைப் பெற்றவை. 'ஒரு காவிரியைப் போல' என்ற நூலுக்கு 1984 இல் 'சாகித்ய அகாடமி' பரிசு கிடைத்தது.
1950-1975க்கு இடைப்பட்ட காலங்களில் லக்ஷ்மியின் எழுத்துக்கு வெகுஜன ரீதியில் அதிக வரவேற்பு இருந்தது. நன்கு கல்வி கற்றவர்கள் மட்டுமின்றி சாதாரண வாசிப்புப் பயிற்சி உடையவர்கள் கூட லஷ்மியின் நாவல்களில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.
அழுத்தமான குடும்ப அமைப்பும், அதில் பெண்ணுக் குத் தரப்படும் முதன்மையிடமும் இவரது கதைகளில் மையச்சரடாக இருக்கும்.
குடும்ப உறவுகளைப் பற்றிய கதைகளில், பெண்களின் உணர்வுகளே அதிகம் இடம்பெற்றதால் லக்ஷ்மியின் எழுத்தைப் படிப்போர் மகிழ்ச்சியை அனுபவித்தனர். இதை அவரது நெறிமுறை என்றே கூறலாம்.
''வழக்கமாக என் நாவல்களில் கதாநாயகிகள் முக்கிய பாகத்தை அலங்கரிப்பார்கள்'' என்றும் என் கதைகளில் ''கதாநாயகிதான் பிரகாசிக்கிறாள். நாயகன் அவள் பின்னால் மறைந்து தேய்ந்து நிற்கிறான்'' என்றும் குறிப்பிடுவார். அவர் குறிப்பிடுவது போல் அவரது படைப்புகளில் இந்தச் சூத்திரமே மேலோங்கி இருக்கும்.
பெண்களைப் பிரகாசிக்கச் செய்யும் வகையில் இவரது படைப்புகளில் படித்து வேலைக்கு போகும் பெண்களும், இவர்களுக்குத் தொந்தரவு செய்யும் பகைமையாக இருக்கும் பெண்களும், கதைத் தலைவியர்களுக்கு சார்பாக இருக்கும் வயதான பெண்களும் என்னும் நிலைகளில் இடம் பெறுவார்கள்.
காதல், கற்பு, தியாகம், மஞ்சள், குங்குமம், ஆபரணங்கள் என்பன பெண்களுக்கு உரித்தானவை என்ற கருத்தியலை ஆழமாகத் திரும்பத் திரும்பப் பரப்புபவை இவரது நாவல்கள். குடும்ப அமைப்பில் எத்தகைய சிக்கல்கள் வந்தாலும் பெண்களுக்கு காலாதிகாலமாகக் காட்டப்படும் குணநலன்களில் இருந்து பிறழ்வுபட்டுவிடக்கூடாது என்று போதிக்கும் பண்புகளை இவர் எழுத்து கடைப்பிடிக்கும்.
அரக்கு மாளிகை, ஜெயந்தி, வந்தனா, ஒரு காவிரியைப் போல போன்ற பெரும்பாலான படைப்புகளில் கதைத் தலைவி அனுபவிக்கும் இன்னல் இடையூறுகள் அளவற்றதாக இருக்கும். குடும்ப நாவல் என்றால் பெண்கள் படும் இன்னல்களை சோகம் ததும்பக் கூறிக் கண்ணீர் இழுப்பிகளாகக் காட்டும் பாங்கு கொண்டது என்ற புரிதல் வருவதற்கும் லட்சுமியின் நாவல்கள் காரணமாகிவிட்டன. |
|
லக்ஷ்மியின் நாவல்களில் பெரும்பாலும் கார், பங்களா, பணம், பதவி இவற்றைக் கனவாகக் கொண்ட மத்தியதரக் குடும்பங்களே அதிகம் இடம்பெறும். முழுமையான யதார்த்தச் சிந்திப்புமிக்க நாவல்கள் என இவரது படைப்புகளை கூறிவிட முடியாது. சமுதாயத்தில் பல்வேறு மட்டங்களிலும் பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளின் பன்முகத்தையும் வெளிப்படுத்தும் எழுத்துகளாக இல்லை.
ஆனால் வாசக மனநிலை எந்தவித நெருக்கடிக்கும் உள்ளாகாமல் சுகமான வாசிப்பு செயலில் ஈடுபட உன்னதமான மகிழ்ச்சிக்குரிய பொழுதுபோக்கு எழுத்துக்களை லக்ஷ்மி அதிகம் படைத்துச் சென்றுள்ளார்.
எந்தவொரு வாசகரும் லக்ஷ்மியின் எழுத்துகளுடன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் போதுதான் நாவல் இலக்கியம் பற்றிய அறிவுப் பூர்வமான விசாரணையை தனக்குள் ஏற்படுத்திக் கொள்ள முடியும். அவர் காலத்தில் வெகுசன வாசிப்புக் கலாசாரம் பரவலடைவதற்கு அவர் எழுத்து உதவி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இவரது நாவல்கள் படைக்கப்பட்ட காலத்தில் அநேக வாசகர்கள் குறிப்பாக பெண்கள் இவரது கதையில் வரும் நாயகியின் குணநலன்களைப் போல் தாங்களும் குடும்பத்தில் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அளவுக்கு இவரது கதாநாயகிகள் பெண்களை கட்டிப்போட்டனர் என்பது முற்றிலும் உண்மை.
''நான் பார்த்தவற்றைக் கேட்டவற்றை அப்படியே சித்தரித்துவிட்டேன். இது யதார்த்தம் இல்லை யென்றால் எது யதார்த்தம்'' என்று லட்சுமி கேட்கிறார். இந்தக் கேள்விக்கு, அவரது எழுத்துக்களுடன் ஓரளவு பரிச்சயம் கொள்ளக் கூடிய வாசகரால்தான் விடை காணமுடியும்.
நாவல்கள்
- மிதிலா விலாஸ்
- வசந்த கால மேகம்
- அம்மா எனக்காக
- காலம் முழுதும் காத்திருப்பேன்
- லட்சியவாதி
- காஞ்சனையின் கனவு
பயணக் கட்டுரை
- ஆப்பிரிக்கக் கண்டத்தில் பல ஆண்டுகள்
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|