|
|
தமிழ் சிறுகதைகளின் திருமூலர் என்று கணிக்கப்படுபவர் எழுத்தாளர் மெளனி. நவின தமிழிலக்கியத்தோடு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளும் எவரும் மெளனியின் எழுத்துக்களுடனும் பரிச்சயம் கொள்வது தவிர்க்க முடியாது. மெளனி பற்றிய மதிப்பீடு புரிதல் ஓர் விநோதமான படிமத் தன்மைக்குள் ஆட்பட்டுள்ளது. இன்றுவரை மெளனி பற்றிய மதிப்பீடு புரிதல் பல்வேறு விமரிசனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் உள்ளாகிக் கொண்டுதான் உள்ளது.
மெளனி 1907 ஜூலை 27 இல் தஞ்சை மாவட்டத்தில் செம்மங்குடி என்ற கிராமத்தில் பிறந்தவர். இளங்கலை கணிதம் படித்து பட்டம் பெற்றார். திருமணத்திற்குப் பின் கும்பகோணத்தில் தனது வீட்டில் 14 ஆண்டுகள் வசித்து வந்தார். இந்தக் காலத்தில் அவர் எந்த வேலையும் செய்யவில்லை. 1943 இல் தன் குடுமபச் சொத்து மற்றும் தொழிலை கவனிக்க சிதம்பரம் வந்து தங்கினார்.
மெளனி 1935ஆம் ஆண்டு பிற்பகுதியில் 6 சிறுகதைகள் எழுதினார். 1936லிருந்து 1939 வரையிலான காலத்தில் மேலும் 9 சிறுகதைகள் எழுதினார். பின்னர் நீண்டகாலம் எதுவும் எழுதாமல் இருந்தார். 1948இல் எம்.வி. வெங்கட்ராமனின் வேண்டுகோளுக்கிணங்க 'தேனி' பத்திரிக்கைகாக இரண்டு கதைகளை எழுதினார். இதற்கு பின்னர் 1954வரை எதுவும் எழுதவில்லை. பின்னர் இடைவெளிகள் விட்டு ஒரு சில கதைகள் எழுதினார். கடைசியாக 1971இல் 'கசடதபற' எனும் இதழில் 'தவறு' எனும் கதை வெளிவந்தது.
1959ல் 'அழியாச்சுடர்' என்ற தலைப்பில் மெளனியின் முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. பின்னர் 1967இல் 'மெளனி கதைகள்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பும், 1978இல் மற்றொரு தொகுப்பும் வெளியாயின. 1991இல் மெளனியின் முழு கதைகளும் அடங்கிய ஒரு தொகுப்பு வெளியானது.
மெளனி எழுதிக்குவித்த எழுத்தாளர் அல்ல. அவர் எழுதிய கதைகள் 24 மட்டுமே. ஆனால் அவர் எழுதிய அந்தக் கதைகள் அவருக்கான தகுதிப்பாட்டை நிலைநிறுத்துவதற்கான தர்க்கத்தைக் கொண்டிருந்தன. தமிழ்ச்சிறுகதை வளர்ச்சியின் முக்கியமான காலகட்டத்தில் மெளனி செயற்பட நேர்ந்ததால் அவருக்கான முக்கியத்துவம் பெரிதாகிறது. ஆனாலும் அவரைப் பின்பற்றக்கூடிய எந்தவொரு எழுத்தாளரும் தமிழில் தோன்றவில்லை. அந்தளவிற்கு மெளனிக்கான தனித்தன்மை உள்ளது.
இலக்கியம், தத்துவம் ஆகியவற்றிலான புலமை அவருக்குள் இயங்கிய தேடல் உள்ளுணர்வு, கலை இலக்கியப் பார்வையையும் உள்ளாற்றலையும் வழங்கியது. இதுவே அவரது வாழ்வியல் பற்றிய மதிப்பீடுகள் சார்ந்த உணர்திறன் முடிவுகளுக்கும் சாரமாக இருந்தது. இதனால் இவரது கதை மாந்தர்கள் அனைவரும் எப்போதும் ஒரு தீவிரமான பிரக்ஞைநிலையில் சஞ்சரிப்பவர்களாகவே உள்ளனர். தத்துவவிகாரங்களின், உள்ளுணர்வு முடிச்சுகளின், ஆழ்ந்த பிடிமானங்களின் அடிப்படையில் இயங்குபவர்களாகவும் உள்ளனர்.
சாதாரண வாசக அனுபவமும் பிரக்ஞையும் மெளனி கதைகளின் உள்ளோடும் அனுபவ வெளிக்குள் பயணிப்பதற்கு தடைகளாக அமைந்துவிடுகின்றன. இதனால் சாதாரண வாசக அனுபவ வட்டத்துக்குள் மெளனி தனக்கான இடத்தைப் பெறவில்லை. கலை இலக்கிய தத்துவ தேடலின் பல்பரிமான உலகில் உள்ளியங்கும் உணர்திறன் மிக்கவர்களால் மட்டுமே மெளனி புரிந்து கொள்ளப்படும் நிலை உருவானது. |
|
சமூக அரசியல் சார்சிந்தனைகள் கொண்ட பரிமாணங்கள் இலக்கியப் பதிவாக பரிணமிக்கும் போது, அந்த ஓட்டத்திலிருந்து விலகி ஆத்மவிசாரணையில் ஈடுபடும் கலை, இலக்கியத் தத்துவக் கூறுகளுடன் அதன் செல்வாக்கு நிலை நின்று இயங்கிய ஒருவராகவே மெளனி வாழ்ந்துள்ளார்.
சூக்குமமான மாயத்தோற்றம் நிரம்பிய வெளிக்குள் தான் மெளனியின் படைப்பனுபவம் இயங்கியது. அவரது கதை மாந்தர்களும் படைப்புலகும் வித்தியாசமாக இருப்பதற்கு இதுவே காரணம். ஓரளவு அறிவுஜீவித்தன்மை மிக்க வாசகர்கள்தான் மெளனியுடன் நெருங்கிய பரிச்சயம் கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததற்கும் இதுவே காரணம். இதற்கு அரது மொழிநடை கைகொடுத்தது. அதாவது கற்பனை நயமும் ஓசைநயமும் கொண்ட மொழிநடை, மற்றும் பொருள் புலப்படாத கட்டமைப்பு கொண்ட மொழிநடை. இந்த அம்சங்கள் தான் மெளனியின் மொழிநடைக்கான அழகு. தனித்தன்மை. இதனால் தான் சாதாரண வாசக அனுபவத்தளத்தில் மெளனி புரிந்து கொள்ளப்படவில்லை.
''ஆழித் தண்ணீரில் எல்லை பிரித்துக் கோடிட்டது தானோ நம் வாழ்க்கை...?'' (எங்கிருந்தோ வந்தாள்) இப்படி வாழ்க்கையைப் பற்றி தன் ஐயத்தை வெளிப்படுத்த மெளனி பயன்படுத்தும் உவமை அவரது கதாபாத்திரங்களுக்கு பொருத்திப் பார்க்கத் தக்கது. இவ்வாறு மெளனியின் பார்வையில் உணர்த்தப்படும் வாழ்க்கை இலக்கியப்படுத்தப்பட்டது.
மெளனி இன்றுவரை ஆழமான வாசிப்புக்கும் கடுமையான விமரிசன நோக்குக்கும் உரிய படைப்பாளியாகவே இருந்து வருகின்றார். அவருக்குப் பின்னரான மெளனி நடை என்ற கணிப்பீடு அவருக்கு பின்னர் அது தோன்றவில்லை. 1985 ஜூன் 6ல் மெளனி காலமானாலும் விமரிசனத் தளத்தில் வாசிப்புத் தளத்தில் விநோதமாகவே மெளனி இன்றுவரை உள்ளார்.
தமிழ்ச் சிறுகதை உலகில் மெளனி விசேடமாக தனித்துவமிக்க ஓர் எழுத்தாளராகவே இருந்துள்ளார். பரபரப்பு, வணிக எழுத்து நச்சுச்சூழல் எவையும் மெளனியை பாதிக்கவில்லை. இவற்றிலிருந்து ஒதுங்கி தன்வழியே தமக்கான ஆத்ம விசாரணையை நிகழ்த்திக் கொண்டிருந்தார். இவற்றையும் மீறி நவீன தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் மௌனியின் இடம் தனித்தன்மை மிக்கதாகவே உள்ளது.
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|