"ஷைலஜா அவர்களின் மொழிபெயர்ப்பு, அந்த அனுபவங்களின் அடிநாதமான உணர்வுகளைச் சேதாரமில்லாமல், அதே ஆழ்மன வலியுடனும், கனத்துடனும் வாசகனுக்குக் கடத்துகிறது" - இப்படிப் பாராட்டுபவர் டாக்டர் ஜெ. பாஸ்கரன். "ஷைலஜாவின் மொழிபெயர்ப்பு மிகச்சரளமாக, மூலத்தின் கவித்துவத்திற்கு நிகராக, அதே நேரம் மலையாள எழுத்துக்கே உரிய தனிச்சொற்கள், பிரயோகங்களுடன் வந்திருக்கிறது. தேர்ந்த வாசிப்பும் இலக்கிய ரசனையும் கொண்டவர் ஷைலஜா" இப்படி விதந்தோதுபவர் எஸ். ராமகிருஷ்ணன். பிரபஞ்சன் துவங்கி மேலாண்மை பொன்னுச்சாமி, பாவண்ணன், வண்ணதாசன் என எழுத்தாளர்கள் பலராலும் பாராட்டப்பட்டிருக்கும் ஷைலஜா, பிறந்தது கேரளாவில். தந்தையின் வியாபார நிமித்தம் காரணமாகக் குடும்பம் தமிழ்நாட்டில் திருவண்ணாமலைக்குக் குடிபெயர்ந்தது. பள்ளி, கல்லூரிப் படிப்பு அனைத்தையும் திருவண்ணாமலையில் முடித்தார். படிக்கும் காலத்திலேயே கவிதை, சிறுகதைகளின் மீது ஆர்வம் இருந்தது. இவரது அம்மா மிகுந்த வாசிப்பார்வம் கொண்டவர். அவர் மூலம் தமிழ் சிறுகதை, நாவல்கள் அறிமுகமாகின. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.காம். முடித்தார். தனியார் பள்ளியில் சில காலம் ஆசிரியை ஆகப் பணியாற்றினார். கல்லூரி ஒன்றில் வேலை கிடைக்கவே அதனை ஏற்றுப் பேராசிரியை ஆனார். கூடவே இலக்கிய வாசிப்பும் தொடர்ந்தது.
திருவண்ணாமலையில் நிகழ்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநாட்டில் கலந்துகொண்டது திருப்புமுனையானது. அந்த நிகழ்வின் மூலம் பல எழுத்தாளர்களும் அவர்கள் தம் படைப்புகளும் அறிமுகமாகின. எழுத்தாளர் பவா செல்லத்துரையின் (பார்க்க தென்றல், ஏப்ரல் 2013 இதழ்) அறிமுகமும் கிடைத்தது. நிறைய வாசிக்க ஆரம்பித்தார். எழுத்தாளர் பிரபஞ்சன் இவரை ஊக்குவிப்பவராக இருந்தார். பவா செல்லத்துரையும் இவரது இலக்கிய ஆர்வத்தைத் தூண்டியவாறு இருந்தார். அவருடனான தொடர் சந்திப்புகள் காதலாய் முகிழ்த்தன. இருவரும் மணம் செய்துகொண்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூலம் பல இலக்கியக் கூட்டங்களை, கலந்துரையாடல்களை இணைந்து நடத்த ஆரம்பித்தனர். பவா செல்லத்துரை நடத்தி வந்த 'முற்றம்' இலக்கிய அமைப்பின் மூலம் ஜெயகாந்தன், அம்பை, பிரபஞ்சன், திலகவதி என பல எழுத்தாளர்களின் அறிமுகம் ஏற்பட்டது.
ஸ்ரீபதி பத்மநாபா நடத்தி வந்த 'ஆரண்யம்' இலக்கியச் சிற்றிதழில், மலையாளக் கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காட்டின் நேர்காணல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருந்தது. அதைப் படித்ததும் அவரைச் சந்திக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அதுபற்றி இப்படிச் சொல்கிறார், ஷைலஜா. "ஆரண்யம் சிறுபத்திரிக்கையில் யாரோ ஒருவரின் கட்டுரை என்ற அலட்சியத்தோடுதான் பாலசந்திரன் சுள்ளிக்காடு எழுதியிருந்த சிவாஜிகணேசனுடனான அனுபவத்தைப் படித்தேன். ஒரு மகா நடிகனோடான அந்த கவிஞனின் சந்திப்பும், அவர்களிருவரும் ஸ்காட்ச் விஸ்கியைப் பகிர்ந்துகொண்டதைக்கூட மிகக் கெளரவமாக கருதவைக்கும் எழுத்தும் என்னை உறைய வைத்தது. ஒரு சாதாரண நிகழ்வைக்கூட இலக்கியத்தில் புறந்தள்ளிப் போக முடியாதவாறு பதிவு செய்யமுடியும் என்ற அந்த எழுத்தின் வலிமைதான், கேரளத்து தெருக்களில் தன் பால்யத்தின் குரல் விற்றுப் பிழைத்த அந்த கவிஞனைத் தேட வைத்தது." அதன் பின் எழுத்தாளர் திலகவதி மூலம் பாலச்சந்திரனைத் தங்கள் இலக்கியக் கூட்டத்திற்குப் பேச அழைத்தனர் பவாவும் ஷைலஜாவும். அவரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியதுடன், 'சிதம்பர ஸ்மரண' என்ற தனது சுயசரிதை நூலை ஷைலஜாவிற்குப் பரிசாக அளித்தார். மலையாளத்தில் இருந்தது அந்த நூல். ஷைலஜாவிற்குத் தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழ்ச் சூழலில் வளர்ந்ததால் அவர் தமிழ் மட்டுமே அறிந்திருந்தார். அதனால் சகோதரி கே.வி. ஜெயஸ்ரீயின் மகளான சுகானா மூலம் மலையாளத்தைக் கற்றுக்கொண்டு அந்த நூலை வாசிக்க ஆரம்பித்தார்.
பாலச்சந்திரனின் அந்த நூல் அதுவரை இவர் அறிந்திராத புதியதோர் உலகை அறிமுகம் செய்தது. அன்பு, கருணை, இரக்கம், கண்ணீர், கோபம், சோகம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி எனப் பலவகை உணர்வுகளின் கலவையாக அந்த நூல் இருந்தது. அதன் சில பகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்து கணவரிடம் காட்ட அவர் உற்சாகப்படுத்தவே முழு நூலையும் மொழிபெயர்க்கும் ஆர்வம் வந்தது. ஒரு வருடம் முழுக்க உழைத்து அந்த நூலை மொழிபெயர்த்தார். அப்படித்தான் இவரது முதல் மொழிபெயர்ப்பான 'சிதம்பர நினைவுகள்' உருவானது. 2003ல், காவ்யா பதிப்பகம் அதனை வெளியிட்டது. அதுதான் ஷைலஜாவின் முதல் எழுத்துலகப் பிரவேசம். மொழிபெயர்ப்பு என்பதே தெரியாத வகையில், எந்தவித மொழி நெருடலும் இல்லாமல் மிக நேர்த்தியாக அந்த நூலைத் தந்திருந்தார் ஷைலஜா. மொழிபெயர்ப்பாளராகத் தனித்ததோர் அடையாளத்தை அந்த நூல் அவருக்குப் பெற்றுத் தந்தது. அந்த நூலுக்குக் கிடைத்த வரவேற்பு மேலும் மொழிபெயர்க்கும் உத்வேகத்தைத் தந்தது.
எழுத்தாளர் திலகவதி மற்றும் சி. மோகன் தந்த ஊக்கத்தால் கணவர் பவா செல்லத்துரையுடன் இணைந்து வம்சி பதிப்பகத்தை ஆரம்பித்தார். மம்முட்டி எழுதிய 'காழ்ச்சப்பாடு' நூலை 'மூன்றாம் பிறை' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். மம்முட்டி என்ற கலைஞரின் எண்ணங்களை, ஏக்கங்களை, ஆசைகளை, இயலாமைகளை, ஏமாற்றங்களை பாசாங்கில்லாமல் வாசகர்கள் புரிந்துகொள்ள உதவிய அந்நூலும் பரவலாகப் பேசப்பட்டது. தொடர்ந்து கேரளாவின் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், மூத்த இலக்கியவாதியுமான என்.எஸ். மாதவனின் தேர்ந்தெடுத்த பத்து சிறுகதைகளை மொழிபெயர்த்து 'சர்மிஷ்ட்டா' என்ற பெயரில் நூலாகக் கொண்டுவந்தார். கே.ஆர். மீராவின் சிறுகதைகளை 'சூர்ப்பனகை' என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார் அதற்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்தது. எம்.டி. வாசுதேவனின் 'இறுதி யாத்திரை' மொழி பெயர்ப்பிற்காக இவருக்கு "கலை இலக்கியப் பெருமன்ற விருது" கிடைத்தது. 'சிஹாபுதீன் பொய்த்தும்கடவு'வின் சிறுகதைகளை 'யாருக்கும் வேண்டாத கண்' என்ற பெயரில் மொழி பெயர்த்தமைக்காக, 2014ம் ஆண்டின், சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருதாக 'கனடா இலக்கியத் தோட்ட விருது' இவரைத் தேடிவந்தது.
மொழிபெயர்ப்பு என்பது எளிதானதல்ல. மூலமொழியின் செய்தியை உள்வாங்கி, அதன் சுவை குன்றாமல் மற்றொரு மொழி வாசகருக்குக் கடத்துவது உண்மையில் மிகக் கடினமானது. மூலப்பிரதி சிதையாமலும், மொழிபெயர்ப்பு எனத் துருத்திக் கொண்டு தெரியாமலும் அது இருக்க வேண்டும். இரண்டு மொழிகளிலும், அதனதன் வட்டார வழக்குகளிலும் நல்ல பரிச்சயம் உள்ளவர்களே விதவிதமான நூல்களைச் சிறப்பாக மொழிபெயர்க்க முடியும். அந்த வகையில் மலையாளத்திலிருந்து தமிழுக்குச் சிறந்த ஆக்கங்களை மொழிபெயர்த்து வருகிறார் ஷைலஜா. "பச்சை இருளனின் சகா பொந்தன் மாடன்" இவரது குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பாகும். இவரது "தென்னிந்தியச் சிறுகதைகள்" தொகுப்பு சென்னை ராணி மேரி கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. கல்பட்டா நாராயணனின் முதல் நாவலான (மலையாள மூலம்: இத்ரமாத்ரம்) 'சுமித்ரா' ஷைலஜாவின் மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்பு. பாக்கியலட்சுமி எழுதிய 'ஸ்வரபேதங்கள்' நூலின் மொழிபெயர்ப்பு இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அதற்காக இவருக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான 'சக்தி' விருது கிடைத்தது. தனது மொழிபெயர்ப்பு நூல்களுக்காக திருப்பூர் தமிழ்ச்சங்க விருதும் பெற்றிருக்கிறார் ஷைலஜா.
'முத்தியம்மா' இவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. பால்ய நினைவுகள் துவங்கி இளமைக்காலம் வரையிலான தனது வாழ்வியல் அனுபவங்களை, எழுத்தாளர்கள், கலைஞர்களுடனான தனது சந்திப்புகளை உருக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். இவரது சமீப வெளியீடு, கேரளாவில் மருத்துவ சேவையாற்றி வரும் சாந்தி மெடிக்கல் இன்ஃபர்மேஷனின் நிறுவனர் உமா பிரேமனைக் குறித்ததாகும். மலையாளத்தில் ஷாபு கிளித்தட்டில் எழுதிய 'நிலாச்சோறு' என்ற அந்த நூலை, 'கதை கேட்கும் சுவர்கள்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார் ஷைலஜா. இந்நூலைப் பற்றி அவர், "கதை கேட்கும் சுவர்கள் - நான்கு மாத காலமாய் நான் என்னிலை மறந்திருந்தேன். உமா பிரேமனின் வாழ்வில் முழுகி வெளிவர முடியாமல் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என வீட்டிலுள்ளவர்கள் பயந்து, என்னைப் பத்திரமாக மீட்டுக் கொண்டுவர முயற்சித்தார்கள். ஆனால் மீட்டது அவர்களா... இல்லை அதுவும் உமாவேதான். தமிழ் வாசக மனதை வேறு ஒரு மனநிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு பிரதியை என் மொழியில் மொழிபெயர்த்திருக்கிறேன்" என்கிறார். ஷார்ஜாவில், முதன்முதலாக தமிழ்ப் பதிப்பகங்கள் கலந்துகொண்ட சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இந்நூல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர் என பல திறக்குகளில் இயங்கிவரும் ஷைலஜா, கேரள சாகித்ய அகாதமி மூலம் மலையாள, தமிழ் பெண் எழுத்தாளர்களை ஒன்றிணைத்து தமிழ்ப் படைப்புகளை மலையாளத்துக்கு மொழிபெயர்க்கும் பணிகளை முன்னெடுத்து வருகிறார். "முற்றம்", "கலை இரவு", "வம்சி கூடல்", "நிலம்" போன்ற கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை கணவர் பவா செல்லத்துரையுடன் இணைந்து நடத்தி வருகிறார். கணவருடன் இணைந்து இயற்கை விவசாயமும் செய்கிறார். இவர்களது வம்சி பதிப்பகம் 400க்கு மேல் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. சிறந்த பதிப்பகத்திற்கான தமிழக அரசின் விருதினை வம்சி பதிப்பகம் ஐந்து முறை பெற்றுள்ளது. மகன் வம்சி, மகள் மானசா இருவருமே வாசிப்பில் ஆர்வமுடையவர்கள். கலை, இலக்கிய, குறும்பட முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மகள் மானசா இரா. நடராஜனின் 'ஆயிஷா'வை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இவரது சகோதரி கே.வி. ஜெயஸ்ரீயும் எழுத்தாளர். அவரது மகள் சுகானாவும் எழுத்தாளரே. கணவர் பவா செல்லதுரை ஷைலஜாவின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கிறார். எழுத்தாளர்களின் வேடந்தாங்கலாக இவர்களது திருவண்ணாமலை இல்லம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மலையாளம் - தமிழ் மொழிபெயர்ப்பு உலகின் நம்பிக்கை முகம், கே.வி.ஷைலஜா. |