|
|
|
|
"எழுத்து என்பது வெறும் பொழுதுபோக்கல்ல. அது வாசகனின் சிந்தனையைத் தூண்டுவதோடு அவனது எண்ணங்களை மேம்படுத்தி வாழ்க்கையையும் தரமுயர்த்த வேண்டும்" என்ற கொள்கையோடு தனது படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர் பொன்னீலன். இயற்பெயர் கண்டேஸ்வர பக்தவத்சலன். இவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் நாகர்கோவில் அருகேயுள்ள மணிகட்டிப் பொட்டல் என்ற கிராமத்தில் டிசம்பர் 15, 1940 அன்று சிவ.பொன்னீலவடிவு - அழகிய நாயகி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். சைவப் பின்னணி கொண்ட குடும்பம். சபாபதி என்ற செல்லப் பெயரும் இவருக்கு உண்டு. தந்தை நிலக்கிழார். தாயார் ஒரு படைப்பாளி என்பதால் இளவயது முதலே பொன்னீலனுக்கும் ஆர்வம் இருந்தது.
இளங்கலைப் படிப்பு முடித்து ஆசிரியர் பயிற்சி தேர்வு பெற்ற இவர், ஆசிரியரானார். 1967ல் உமாதேவி அம்மையாருடன் திருமணம் நிகழ்ந்தது. கிராமங்கள் பலவற்றுக்குச் சென்று கல்விப் பணி ஆற்றினார். அதனால் அடித்தட்டு மக்களின் வாழ்வை, அவர்களது ஏழைமையை, மாணவர்களின் இயலாமை உள்ளிட்டவைகளை இவரால் உணர முடிந்தது. அந்த அனுபவங்களும், சுயசிந்தனைகளும் இவரது படைப்புகளில் வெளிப்பட ஆரம்பித்தன. சமுதாய அக்கறை மிக்க படைப்பாளியாக மிளிர்ந்தார். முதல் நாவல் கரிசல்,1976ல் வெளியானது. மார்க்சீய கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட இந்நாவல் பரவலான வாசக கவனத்தை ஏற்படுத்தியது. இதற்குச் சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் பரிசும் கிடைத்தது. தொடர்ந்து கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், வாழ்க்கை வரலாறு, மொழிபெயர்ப்பு, பயணம் என இலக்கியத்தின் பல தளங்களிலும் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். 'கொள்ளைக்காரர்கள்', 'ஊற்றில் மலர்ந்தது', 'தேடல்', 'புதிய மொட்டுகள்', 'மறுபக்கம்' போன்றவை இவரது நாவல்களாகும். மறுபக்கம் நாவல் நாஞ்சில் நாட்டின் இருநூறு ஆண்டுகால வரலாற்றையும், இன்றைய சமூக பண்பாட்டுச் சூழலையும் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ள முக்கியமான நாவல். நாவல் திருவிதாங்கூர் வரலாறு, மண்டைக்காட்டுக் கலவரம், ஹிந்து-கிறித்துவர் போராட்டம், தோள்சீலைக் கலகம், கன்னியாகுமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டம், வைகுண்ட சாமி என்னும் சமூகப் போராளி பற்றிய தகவல்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய ஆவணமாகத் திகழ்கிறது. இந்நாவல் பற்றி, “பொன்னீலன் எழுதியுள்ள மறுபக்கம் நாவல் சிறந்த வரலாற்று ஆவணமாகும். ஆவணத்தைக் கலைப்படைப்பாக்கி தமிழுக்கு நல்கியிருக்கின்றார்" என்று பாராட்டுகிறார் கி. வீரமணி.
பொன்னீலனின் முக்கியப் படைப்பு 'புதிய தரிசனங்கள்' என்ற நாவலாகும். இரண்டு பாகங்களாக வெளிவந்த இது நெருக்கடிநிலைக் கால வாழ்க்கையும், அக்கால மக்கள் சிந்தனைப் போக்கையும் சித்திரிப்பதாகும். வரவேற்பையும் கடும் விமர்சனங்களையும் எதிர்கொண்டது இந்நாவல். யாருக்கும் அஞ்சாமல் தன் கருத்துக்களை இந்நாவலில் முன்வைத்திருந்தார் பொன்னீலன். இதற்காக இவர் கடுமையாக ஒரு சிலரால் விமர்சிக்கப்பட்டார். இந்நாவலுக்குச் சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. 'தேடல்' நாவல் மீனவர்களின் வாழ்வை மிகையின்றிச் சொல்கிறது. 'காமம் தப்பாது', 'நித்யமானது', 'இடம் மாறிவந்த வேர்கள்', 'அன்புள்ள', 'திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன', 'அத்தாணிக் கதைகள்', 'பொட்டல் கதைகள்' போன்ற இவரது சிறுகதை நூல்களும் பேசப்பட்டன. இவரது படைப்புகளில் பெரும்பான்மை மார்க்சீயக் கண்ணோட்டத்தில் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னீலன் பற்றி எழுத்தாளர் சுந்தரராமசாமி, “பொன்னீலன், ஆத்மார்த்தமானவர். கடுமையான உழைப்பாளி. சகமனிதனை நேசிப்பவர். ஜாதி, மதம் போன்ற சகல பிரிவுகளுக்கும் எதிரானவர். ஏற்றத் தாழ்வற்ற, குறைந்த பட்சம் ஏற்றத்தாழ்வு மிகுதியாக இல்லாத, வாழ்வு இந்த மண்ணில் இறங்கி வரவேண்டும் என்ற லட்சியம் கொண்டவர். அந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக எழுதி வருகிறார். எழுத்தைத் தாண்டிய செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்" என்று புகழ்ந்துரைக்கிறார். |
|
|
இவரது படைப்புகள் மனித நேயம் போற்றுபவை. வாசகனைக் குழப்பாமல் நேரடியாகக் கதை சொல்லும் பாணி கொண்டது. மண்ணின் மணத்தோடும், வட்டார வழக்கிலும் இருப்பது இவரது படைப்புகளின் சிறப்பம்சமாகும். இவரது நாவல்கள், புதினங்களாக மட்டுமல்லாமல் சமூகப் பதிவாகவும், சமுதாய ஆவணமாகவும் விளங்குவதாகச் சொல்லலாம். இவர் இருநூற்றிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'தற்காலத் தமிழிலக்கியமும் திராவிட சித்தாந்தங்களும்', 'சாதி மதங்களைப் பாரோம்', 'தாய்மொழிக் கல்வி', 'முற்போக்கு இலக்கிய இயக்கங்கள்', 'உறவுகள்', 'சுதந்திர தமிழகத்தில் கலை இலக்கிய இயக்கங்கள்', 'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற வரலாறு' போன்றவை முக்கியமான கட்டுரைத் தொகுதிகள். இவர் எழுதிய 'தலித் எழுச்சியும் கம்யூனிஸ்ட் இயக்கமும்' என்ற ஆய்வு நூல் முக்கியமானது.
'புல்லின் குழந்தைகள்' என்ற இவரது கவிதைத் தொகுப்பு இவரது கவி உள்ளத்தை எடுத்துக் காட்டும் சீரிய படைப்பாகும். 'ஜீவா என்றொரு மானுடன்', 'தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி', 'வைகுண்டர் காட்டும் வாழ்க்கை நெறி' போன்றவை இவர் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்களாகும். 'கரிசல்', 'கொள்ளைக்காரர்கள்', 'புதிய மொட்டுகள்' போன்ற நாவல்களும், 'தவத்திரு குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் ஆன்மீக வழிகாட்டி' என்ற நூலும் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவரது 'உறவுகள்' என்ற சிறுகதை மகேந்திரனால் 'பூட்டாத பூட்டுகள்' என்ற பெயரில் திரைப்படமாக வெளியானது. இவரது 'கரிசல்' நாவல் பஞ்சாபி, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும், சிறுகதைகள் மலையாளம், வங்காளி, இந்தி மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. 'ஜீவா என்றொரு மானுடன்' நூலின் 'ஜீவாவும் இலக்கியமும்' என்னும் பகுதி ரஷ்ய மொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது. இவரது நூல்களை ஆய்வு செய்து பலர் எம்.ஃபில்., முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் பொன்னீலன், மானுடத்தின் மீது அளவற்ற அக்கறை கொண்டவர். சிறந்த சொற்பொழிவாளரும் கூட. ஆசிரியராகத் தம் பணியைத் துவங்கி தலைமை ஆசிரியர், மாவட்டக் கல்வி அலுவலர், கல்வித்துறை உதவி இயக்குநர், முதன்மைக் கல்வி அலுவலர் எனப் படிப்படியாக உயர்ந்து பணி ஓய்வு பெற்ற இவர், தற்போது நாகர்கோயில் மணிக்கட்டிப் பொட்டலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பவர். 'தூப்புக்காரி' நாவலை எழுதி சாகித்ய அகாதமிக்கான இளையோர் விருதைப் பெற்ற மலர்வதி போன்ற படைப்பாளிகளை ஊக்குவித்து வருகிறார். முற்போக்கு இலக்கியத்தின் முக்கியமான முன்னோடி எழுத்தாளர்களுள் பொன்னீலனும் ஒருவர்.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|