|
|
|
|
சுதந்திரப் போராட்ட வீரர், சமூக சீர்த்திருத்தவாதி, காந்தி பக்தர், காங்கிரஸ் அபிமானி, அரசியல் கட்சித் தலைவர் இவற்றோடு சிறந்த எழுத்தாளராகவும், கவிஞராகவும் விளங்கியவர் ராஜாஜி என்றழைக்கப்படும் சக்ரவர்த்தி ராஜகோபாலாசாரியார். இவர் ஓசுர் அருகே உள்ள தொரப்பள்ளி என்ற கிராமத்தில் சக்கரவர்த்தி ஐயங்கார்-சிங்காரம்மாள் தம்பதியினருக்கு 1878 டிசம்பர் 10 அன்று மகனாகப் பிறந்தார். இயற்பெயர் ராஜகோபாலன். தந்தையார் கிராம முன்சீஃப். திண்ணைப் பள்ளியில் ராஜாஜியின் ஆரம்பக் கல்வி தொடங்கியது. உயர்நிலைக் கல்வியை ஓசூரிலும் மேல்நிலைக் கல்வியை பெங்களூர் லண்டன் மிஷன் பள்ளியிலும் பயின்றார். பெங்களூரில் உள்ள மத்திய இந்துக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார். பின் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். சிறுவயதிலே கிடைத்த அனுபவங்களும் சமூகச் சூழலும் மனதுள் சிந்தனையைத் தூண்டின. வண்ண வண்ண ஆடைகளை நெய்து தருபவர்கள் கந்தல் ஆடைகளையே எப்போதும் அணிந்திருப்பதும், மூட்டை மூட்டையாக நெல்லை விளைவித்து அடுக்குபவர்கள் கூலி நெல்லுக்காக முதலாளிகளிடம் யாசித்து நிற்பதும் அவருள் தாக்கத்தை ஏற்படுத்தின. தலைவிரித்து ஆடிய தீண்டாமைக் கொடுமையும் அவர் மனதை வாட்டியது. இந்த அவலநிலை மாற வேண்டும்; அதற்காகத் தாம் உழைக்க வேண்டும் என்று நினைத்தார். கல்லூரி ஆசிரியர்களது அரவணைப்பும், அவர்கள் அறிமுகப்படுத்திய புத்தகங்களும் தேசிய சிந்தனையை, சுதந்திர உணர்வை அவருள் விதைத்தன. சமூகத்துக்கும் நாட்டிற்கும் உழைப்பதே முதல் லட்சியம் என உறுதி பூண்டார்.
சென்னையில் சட்டம் படித்துத் தேர்ந்த அவர் சேலத்தில் வழக்கறிஞராகத் தொழிலைத் தொடங்கினார். சிறந்த அறிவாற்றலாலும், கல்வியாலும் விரைவிலேயே புகழ்பெற்றார். சட்ட நுணுக்கங்களை விளக்குவதிலும், வாதிடும் திறனிலும் சிறப்பானவராக இருந்தார். ஆங்கிலப் பேச்சாற்றல் அவருக்குக் கைகொடுத்தது. சித்தூரைச் சேர்ந்த அலர்மேலு மங்கையுடன் திருமணம் நிகழ்ந்தது. மூத்த வழக்கறிஞர் சேலம் விஜயராகவாசாரியாரின் நட்பு ராஜாஜிக்கு மிகவும் துணை செய்தது. சுதந்திரப் போராட்டம் பற்றி அவர்மூலம் தெளிவாக அறிய முடிந்தது. அன்னி பெஸண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கத்திலும் ஈடுபட்டார். ராஜாராம் மோகன்ராய், திலகர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரது கருத்துக்கள் ராஜாஜியின் மனதில் ஆழப் பதிந்தன. சேலம் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாஜி, தீண்டாமை ஒழிப்பு, வறுமை ஒழிப்பு, மது ஒழிப்பு போன்றவற்றில் மிகுந்த அக்கறை செலுத்தினார். நகராட்சியில் பல பணிகளைச் செய்தார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பிய காந்திஜி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதுபற்றிய செய்திகள் மக்களைக் கவர்ந்தன. பலர் தமது தொழிலை, வேலையை உதறி விட்டு காந்திஜிக்கு ஆதரவாக சுதந்திரப் போராட்டத்தில் குதித்தனர். ராஜாஜியும் தேச சேவையில் ஈடுபட்டார். காங்கிரசில் சேர்ந்து ரௌலட் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை 'சிறையில் தவம்' என்ற பெயரில் நூலாக எழுதி வெளியிட்டார். காந்தியின் மீது கொண்ட பற்றால் திருச்செங்கோட்டில் காந்தி ஆச்ரமத்தை நிறுவி அதன்மூலம் சமூகப் பணிகளைத் தொடர்ந்தார். மதுவிலக்குப் பிரசாரம் செய்தார். 'விமோசனம்' என்ற இதழை நிறுவி அதன் ஆசிரியராக இருந்தார். ஆங்கிலம், தமிழ், சம்ஸ்கிருதம் போன்றவற்றில் வல்லவரான ராஜாஜி இலக்கியம், ஆன்மீகம் இரண்டிலும் ஆர்வம் கொண்டிருந்தார். சேலத்தில் இலக்கிய வளர்ச்சிக்காக சேலம் இலக்கியச் சங்கத்தை நிறுவிக் கூட்டங்கள் நடத்தினார். தமிழில் கலைச்சொற்களை உருவாக்க Tamil Scientific Terms Society என்ற அமைப்பை நிறுவிப் பல துறைகளில் தமிழில் கலைச் சொற்கள் உருவாகக் காரணமானார். கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சி. ஆகியோரோடு குற்றாலத்தில் நடந்த இலக்கிய ஆய்வுகளில் கலந்து கொண்டார்.
ராஜாஜிக்கு ஐந்து குழந்தைகள். உடல்நலக் குறைவால் திடீரென மனைவி காலமானார். பலர் வற்புறுத்தியும் மறுமணம் செய்து கொள்ளாமல் சமூகப் பணியிலும், சுதந்திரப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டார். 1930ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரையை ஒட்டி வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகம் நடத்திச் சிறை சென்றார். காந்திஜிக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த ராஜாஜி. அவரது மனச்சாட்சி என்று காந்தியடிகளாலேயே போற்றப்பட்டார். காந்திஜியின் யங் இந்தியா இதழின் ஆசிரியராகவும் சிலகாலம் பணிபுரிந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர், மாநில முதல்வர், மத்திய அமைச்சர், மேற்கு வங்காள கவர்னர் என்று பல பொறுப்புகள் வகித்த ராஜாஜி, நாட்டின் விடுதலைக்குப் பின் முதல் கவர்னர் ஜெனரல், உள்துறை அமைச்சர் எனப் பொறுப்புகள் வகித்தார். எல்லாவற்றையும் சிறப்பாகக் கையாண்டு 'அரசியல் ஆசான்', 'அரசியல் சாணக்கியர்' என்று புகழப் பெற்றார். இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா' இவருக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளை நிறுவியது 1959ல் சுதந்திரா கட்சியை நிறுவி அதன் மூலம் அரசியல் பணியைத் தொடர்ந்தார். பின் அக்கட்சியைக் கலைத்துவிட்டார். பின்னர் தீவிர அரசியலிலிருந்து விலகி இலக்கியப் பணியில் ஈடுபட்டார். |
|
புகழ்பெற்ற ஆங்கில நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார் ராஜாஜி. ஆங்கிலத்தில், Gandhi-Jinnah Talks, Hinduism Doctrine And Way Of Life, Marcus Aurelius, The Bhagavad Gita, Tirukkural, Bhaja Govindham, Mahabharata, Ramayana, Upanishads, The Ayodhya Canto Of The Ramayana As Told By Kamban போன்ற நூல்கள் உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இந்தியாவின் இதிகாசங்களான ராமாயணமும் மகாபாரதமும் ராஜாஜியை மிகவும் கவர்ந்தன. ராமாயணத்தை எளிய தமிழில் 'சக்கரவர்த்தித் திருமகன்' என்ற நூலாக எழுதினார். மகாபாரதத்தை பாமரரும் புரிந்து கொள்ளும் வண்ணம் 'வியாஸர் விருந்து' என்ற பெயரில் அளித்தார். பகவத் கீதை 'கண்ணன் காட்டிய வழி' ஆனது. இவை தவிர 'சோக்ரதர்', 'திருமூலர் தவமொழி', 'துறவி லாரென்ஸ்', 'குடிகெடுக்கும் கள்', 'உபநிடதப் பலகணி', 'சிசு பரிபாலனம்', 'திக்கற்ற பார்வதி', 'ராஜாஜி கதைகள்', 'நிரந்தரச் செல்வம்', 'ஆற்றின் மோகம்', 'தம்பி வா', 'திண்ணை ரசாயனம்', 'ஆத்ம சிந்தனை', 'ராஜாஜி கட்டுரைகள்', 'கைவிளக்கு', 'கதோபநிஷத்: பொருள் விளக்கம்' போன்ற நூல்களையும் எழுதியிருக்கிறார். கம்ப ராமாயணத்தையும், வள்ளுவர் குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் அக்கால அறிஞர்களால் பாராட்டப் பெற்றவையாகும். இவரது சக்கரவர்த்தித் திருமகன் நூலுக்கு 1958ல் சாகித்ய அகாதமி விருது கிடைத்தது.
தன் வாழ்நாளில் ஜெமினியின் 'ஔவையார்' தவிர வேறு படத்தைப் பார்க்காதவர் ராஜாஜி. திரைப்படங்களை அறவே வெறுத்தவர். ராஜாஜி எழுதிய 'திக்கற்ற பார்வதி' திரைப்படமாகிப் புகழ் பெற்றது ஒரு நகைமுரண். குடியின் கொடுமையைப் பற்றிப் பேசும் அந்தப் படம் கிராமப்புறங்களில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. நல்ல கவிஞருமான ராஜாஜி எழுதிய பல பாடல்கள் புகழ்பெற்றவை. எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பாடிப் பிரபலமான “குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா” பாடலை எழுதியது அவர்தான்.
டிசம்பர் 25, 1972ல் தமது 95ம் வயதில் ராஜாஜி காலமானார். அவர் வாழ்ந்த தொரப்பள்ளி கிராமத்து இல்லம் நினைவிடமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் அவர் நினைவாக ராஜாஜி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ராஜாஜியின் வாழ்க்கை வரலாற்றை அவரது பேரன் ராஜ்மோகன் காந்தி (காந்திஜியின் மகன் தேவதாஸ் காந்திக்கும் ராஜாஜியின் மகள் லட்சுமிக்கும் மகனாகப் பிறந்தவர்) 'Rajaji: A Life' என்ற பெயரில் எழுதியிருக்கிறார். ஆன்மீகம், சமூகம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களித்த எழுத்தாளர் ராஜாஜி.
அரவிந்த் |
|
|
|
|
|
|
|
|