Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சாதனையாளர் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
நலம்வாழ
வயதானவர்களின் நோய்களும் அவற்றுக்கு மருத்துவமும்
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|பிப்ரவரி 2008|
Share:
Click Here Enlargeசமீபத்தில் அன்னையின் உடல் நலக் குறைவால், திடீரென்று இந்தியப் பயணம் மேற்கொண்டேன். இந்தப் பயணம் மருத்துவத்துறையின் புதிய பரிணாமத்தைப் பார்க்க வைத்தது. வயதானவர்களைக் கண்காணிக்கும் வழிவகை பற்றிச் சில முக்கியத் தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வயதானவர்களை, குறிப்பாக 70 வயதுக்கு மேலானவர்களை, முதியோர் நலம் (Geriatrics) என்ற மருத்துவப் பிரிவுக்குள் கொண்டு வருவதுண்டு. வயதானவர்களை முதன்மை மருத்துவர்களும் மற்றத் துறை நிபுணர்களும் கையாண்ட போதும், குறிப்பாக முதியோர் நல மருத்துவர்களும் கண்காணிக்கலாம்.

அமெரிக்காவில் தற்போது மருத்துவ மனையில் இருக்கும் பல நோயாளிகள் முதியோர்களே. இதில் பெரும்பான்மை யினரை முதன்மை மருத்துவர்களும் மற்றத் துறை வல்லுனர்களுமே கவனித்து வருகின்றனர். ஒரு சிலரை மட்டுமே Geriatricians கவனித்து வருகின்றனர். இந்தியாவிலும் ஒரு சில மாநிலங்களில் இந்தத் துறை வல்லுனர்களைக் காணலாம்.

வயதானவர்களுக்கு வரும் நோய்கள்

பிறந்த குழந்தை போலவே, வயது முதிர்ந்த வர்களும் ஒரு சில நோய்களால் அதிகம் தாக்கப்படுகிறார்கள். அவை:

  • நிமோனியா (Pneumonia)

  • ·ப்ளூ காய்ச்சல் (Flu)

  • இருதய நோய்

  • பக்கவாதம்

  • சிறுநீரகப் பிரச்சினை (குறிப்பாக, நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு)


இந்த நோய்கள் வருவது மட்டுமின்றி, இதில் இருந்து தேறவும் நாளாவதால், அவர்கள் பல நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேரிடலாம். அதே நிமோனியா ஒரு முப்பது வயதுக்காரரைத் தாக்கினால், 3 நாட்களில் குணமாகிவிடுவார். 70 வயதுக்காரர் குணமடைய அதிக நாட்களாகும்.

முக்கிய அறிகுறிகள்

பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களிடம் பொதுவான (generalized) அறிகுறிகளே காணப்படும். சரியாகச் சாப்பாடு இறங்காம லிருத்தல், வெளி வாசல் நடக்க முடியாமல் போதல், சோர்ந்து போதல் போன்ற அறிகுறிகள் எந்த நோய் ஏற்பட்டாலும் இருக்கக் கூடியவை. இவர்களுக்கு, நெஞ்சு வலி இல்லாமலேயே, வாந்தி, பித்தம் போன்ற அறிகுறிகளோடு மாரடைப்பு ஏற்படலாம். ஆகையால், சிறு குழந்தைகள் போலவே, இவர்களின் தினப்படி நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டாலே மருத்துவரை நாடுவது நல்லது. நோய் முற்றிய பின்னரே சில குறிப்பிட்ட அறிகுறிகள் ஏற்படலாம். ஆகையால் தாமதமின்றி மருத்துவரை நாட வேண்டும்.

மருந்துகளின் பின்விளைவுகள்

இவர்களிடம் அதிகமாகப் பின்விளைவுகள் ஏற்படலாம். குறிப்பாக ஒரு மருந்துடன் மற்றொரு மருந்து வினைபுரிதல் (Drug-Drug Interaction) அதிகமாக ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், இவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளின் பெயர்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். இவர் களின் வயது, சிறுநீரக வேலைப்பாட்டின் அளவு ஆகியவற்றை வைத்து இவர்கள் உட்கொள்ளும் மருந்துகளின் அளவுகளை மாற்றியமைக்க வேண்டிவரலாம். அடிக்கடி ரத்தப் பரிசோதனை செய்து அளவுகளைக் கண்காணிக்க வேண்டிவரும். மருத்துவரின் ஆலோசனை இல்லாமால் மருந்துகளின் அளவைக் கூட்டுவதோ குறைப்பதோ சரியல்ல.
உடல் தேறிவரும் நிலை

இதை 'Rehabilitation' என்று அழைப்ப துண்டு. இந்தச் சமயத்தில் குடும்பத்தினரின் பங்கு மிக முக்கியம். நோயின் தீவிரம் குறைந்த பின்னரும் நோயாளி தேறாமல் இருக்க வாய்ப்புண்டு. இது வயதானவரிடம் பெரிதும் காணப்படும். 'Sun Downing' என்று சொல்லப்படும் ஒரு வித சோகம் அல்லது மனவாட்டம் அவர்களுக்கு ஏற்படலாம். இது குறிப்பாகப் புதிய இடத்தில், மருத்துவ மனையில் அடைபட்டு இருக்கும்போது, அதிகமாகத் தெரியும். இதற்கு மருத்துவ மனையின் அறைச் சன்னல்களைத் திறந்து வைத்தல் பயன்தரும். சூரிய வெளிச்சம் படப்படச் சோர்வு நீங்கும். அல்லது அவர் களுக்குப் பரிச்சயமான பொருட்களையும், படங்களையும் கண்ணுக்குத் தெரியும் இடத்தில் வைக்க வேண்டும். அடிக்கடி பழக்கமான விஷயங்களைப் பற்றிப் பேசுதல் முக்கியம். நெருங்கிய உறவினர்கள் அடிக்கடி வருகை தர வேண்டும்.

ஓய்வு தேவை என்று சொல்லி அவர்களைப் படுக்கையிலேயே வைத்திருப்பது நல்லதல்ல. Physical and Occupational therapy மிக முக்கியமாகத் தரவேண்டும். படுக்கையில் இருந்து நாற்காலியில் உட்கார வைக்க வேண்டும். முக்கியமாகப் பகல்வேளையில் அதிகம் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். Walker வைத்து நடைபயில வேண்டும். நடக்க முடியாது, எழுந்திருக்க முடியாது என்று சொல்லி அவர்களைப் படுத்த படுக்கையாக் காமல் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சிப்பது அவசியம். அந்த முயற்சி பொதுவாக நல்ல பயனைத் தரும். சில சமயம் பழைய நிலைக்குத் திரும்பா விட்டாலும், கூடுமானவரை சொந்தக் காலில் நிற்கவைக்க உதவும்.

உணவு உட்செல்லும் போது...

அவர்கள் சாப்பிடுவது அவசியம். அதே சமயத்தில், சாப்பிடும்போது மூச்சுக் குழாய்க்குள் உணவு போகாமல் பார்த்துக் கொள்ளுவது மிக முக்கியம். ஆகையால் நல்ல மனத்தெளிவு இருக்கும்போது மட்டுமே சாப்பிடக் கொடுக்க வேண்டும். சில சமயம் விழுங்குதல் மதிப்பீடு (Swallow evaluation) செய்யவேண்டி வரலாம். அமெரிக்காவில் வெவ்வேறு உணவுப் பொருட்களை உட் கொள்ள வைத்து இந்தப் பரிசோதனை செய்வர். எப்படி மூன்று வயதுக் குழந்தைக் குத் தானே சாப்பிடவும், Diaper பயிற்சியும் தருகிறோமோ அதேபோல் இவர்களுக்கும் சாப்பிடவும் சிறுநீர், மலம் கழிக்கவும் பயிற்சியும் உதவியும் தேவைப்படலாம். இந்த வகை பாதிப்புகள் பெரும்பாலும் தற்காலிக மாக இருக்கும். நல்ல பயிற்சிகளால் உடல்நிலை தேறும் வாய்ப்பு இருக்கிறது.

அமெரிக்க மருத்துவ முறை

அமெரிக்காவில், மருத்துவமனையில் இருந்து அனுப்பும்போது Sub acute rehabilitation facility என்ற ஒருவகை மருத்துவ இல்லங்களுக்கு அனுப்புவர். அங்கு இந்த வகைப் பயிற்சிகள் வழங்கப்படும். உடல் முற்றிலும் தேர்ச்சி பெற்றவுடன் அவரவர் வீடுகளுக்கு அனுப்புவர். இதைத் தவிர வீட்டிற்கே செவிலியர் (visiting nurse) வந்தும் உதவி செய்யக்கூடும். Home health aid எனப்படும் செவிலியர் அல்லாதவரை மற்ற வகை உதவிகள் செய்யவும் அனுப்புவர். இவையெல்லாம் மருத்துவக் காப்பீடு உள்ளவர்களுக்கு மட்டுமே. காப்பீடு இல்லையெனில் குடும்பத்தினரே கவனிக்க வேண்டும்.

இந்திய மருத்துவ முறை

அண்மையில் அம்மாவின் உடல்நிலை காரணமாக இந்தியாவுக்குச் சென்றதில் அங்குள்ள மருத்துவ முறை பற்றி ஒரு புதிய கண்ணோட்டம் கிடைத்தது. அமெரிக்கா வில் கிடைக்கும் எல்லா மருத்துவ வசதிகளும், மருந்துகளும் குறைந்த விலையில் அங்கு சாத்தியமே. ஆனாலும் இந்த மீள்நலம் (rehabilitation) என்ற துறை இன்னும் அவ்வளவாக வளரவில்லை. பெரும்பாலும் குடும்பத்தினர்தாம் நோயாளிகளைக் கண்காணிக்கின்றனர். ஆனால், வேலைக்குச் செல்லும் அல்லது வேற்றூரில் இருக்கும் மக்களால் பெற்றோரை முழுநேரமும் கண்காணிக்க முடிவதில்லை. மருத்துவமனைகளும் தனியார் நிறுவனங்களும் இதற்கென்று பல பெண்கள், ஆண்களை வேலைக்கு நியமிக்கின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் 24 மணி நேரமும் பணி செய்யச் செவிலியர், ஆயா, சமையல்காரர் போன்றோரைப் பெறலாம். நம்பகமானவர் களை நியமித்து இந்த நோயாளிகளைத் தேறவைப்பது நல்லது.

வருமுன் காப்போம்

எந்த நோயையும் வருவதற்கு முன் காப்பது நல்லது. சுத்தமும் தூய காற்றும் அவசியம். மேலும் முன்பு பலமுறை சொன்னது போல், வயதானவர்கள் நலமாக இருக்கும்போதே அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிதல் வேண்டும். நோய் முற்றினால் அவர்களுக்கு மூச்சு விடுவதற்குக் குழாய் வைத்து இயந்திரம் மூலம் மூச்சுவிடும் வகையான சிகிச்சையும் (Intubation and Ventilation), இதயத் துடிப்பு நின்றால் CPR செய்வதும் அவசியமா என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்வது நல்லது. அவர்களின் விருப்பபடி மருத்துவ சிகிச்சையும் மருந்துகளும் தருவது நல்லது.

நமது சிறுவயதில் நம்மைக் கண்ணின் இமைபோல் காத்தவர்களை நம்மால் முடிந்தவரை பேணிக் காப்போம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்
Share: 




© Copyright 2020 Tamilonline