|
|
குளிர்காலம் ஆரம்பித்த உடன், இருமலும், காய்ச்சலும் வருவது சகஜம். சிலருக்கு இது கடுமையாகி, 'நிமோனியா' அளவுக்குப் போய்விடுவதுண்டு. நிமோனியா என்று மருத்துவர்கள் அழைக்கும் இந்த ஜுரம் பற்றி இங்கு காணலாம்.
நிமோனியா என்றால் என்ன?
மூச்சுக்காற்றை சுவாசித்து வெளியிடும் முக்கிய வேலையை நமது நுரையீரல்கள் செய்கின்றன. நுரையீலுக்குள் காற்று புகுந்து வெளிவர, காற்றுப் பாதை அமைந்துள்ளது. இந்தப்பாதையில் நுண்ணுயிர்க் கிருமிகள் மூலம் சேதம் ஏற்படும் போது, அது தற்காலிகமாக அடைப்படுகிறது. காற்றுப் புகுந்து வெளி வர இயலாமல், நுரையீரலின் ஒரு பகுதி திடமாகிவிடலாம். மருந்துகள் மூலம் ஒரு சில நாட்கள் முதல் வாரங்களுக்குள் இந்த திடமான பகுதியை மீண்டும் இழுபடும் தன்மை (elasticity) உடையதாக மாற்றி விடலாம்.
நிமோனியா வகைகள் என்னென்ன?
வைரஸ் அல்லது பாக்டீரியா மூலம் நிமோனியா ஏற்படலாம். இதில் பாக்டீரியா வினால் ஏற்படும் நிமோனியா கடுமையான தாக இருக்கலாம். 'Community Acquired Pneumonia' அல்லது சமூக நிமோனியா பரவலாகக் காணப்படுகிறது. இதைச் சில சமயங்களில் Atypical pnuemonia என்றும் அழைப்பர். இவை குறிப்பிட்ட சில பாக்டீரியா வகைகளினால் ஏற்படுகின்றன. இவை தவிர 'Hospital Acquired pneumonia' பெரும்பாலும் மருத்துவமனை அல்லது முதியோர் காப்பக நோயாளிகளைத் தாக்கவல்லது. வைரஸ் மூலம் ஏற்படும் நிமோனியாக்களில் Influenza அல்லது ·ப்ளூ மிகவும் பிரசித்தி பெற்றது. குறிப்பாக அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இது அதிகம் காணப்படும்.
சமூக நிமோனியா (Community Acquired Pneumonia)
இந்த வகை யாரை வேண்டுமானாலும் தாக்கலாம். குறிப்பாகப் புகை பிடிப்போரை இது அதிகம் தாக்குகிறது. நீரிழிவு நோய் உடையவர்களையும், முதியோர்களையும் கடுமையாகத் தாக்கவல்லது. சிலர் இதை walk in pnuemonia என்று அழைப்பதுண்டு. இருமல், மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் சளி, இதனுடன் அதிக காய்ச்சல் இருக்குமேயானால் மருத்துவரை நாடுவது நல்லது. ஒரு சிலருக்கு Rusty sputum என்று சொல்லப்படும் இரத்தம் கலந்த சளி ஏற்படலாம். உடம்பு வலியும், சோர்வும் அதிகமாகக் காணப்படலாம். மூச்சு வாங்குதல் ஏற்படலாம். நெஞ்சு வலியும், வாந்தி, குமட்டல் முதலியவையும் இருக்கலாம். இந்த அறிகுறிகள் உடையோரைப் பரிசோதிக்கும் போது மூச்சுக் குழாயில் கேட்கும் ஒலிகளின் வேறுபாட்டை வைத்தே மருத்துவர் அறியமுடியும். பெரும்பாலும் எக்ஸ் ரேயின் மூலம், இந்த நோய் இருப்பது முடிவு செய்யப்படுகிறது.
பெரும்பாலோருக்கு வாய்வழியே கொடுக்கப் படும் Antibiotics மூலம் இந்த நோய் குணப்படுத்தப்படுகிறது. கடுமை அதிகமானல், மருத்துவமனையில் சேர்த்து இரத்த நாளங்கள் மூலம் மருந்து கொடுக்க நேரிடலாம். மூச்சு சீராக விடுவதற்கு Nebulizer கொடுக்க நேரிடலாம். நோயாளிகள் அறிகுறிகளில் இருந்து ஒரு வாரத்தில் விடுபடலாம். ஆனால் எக்ஸ் ரே மாற்றங்கள் சீராக 5 முதல் 6 வாரங்கள் ஆகலாம்.
மருத்துவமனை நிமோனியா (Healthcare Acquired Pneumonia (HAP))
இந்த வகை நிமோனியா மருத்துவமனை அல்லது முதியோர் இல்ல நோயாளிக¨ளைத் தாக்குகிறது. இதில் குறிப்பாக MRSA என்று சொல்லப்படும் பாக்டீரீயா அதிகமாக நோயை ஏற்படுத்துகிறது. ஒரு நோயாளியிடம் இருந்து மற்ற நோயாளிக்கு பரவும் தன்மை இதற்கு உள்ளது. மேலும், தீவிரம் அதிகமானது. சமீபத்தில் இந்த பாக்டீரியா, பள்ளிச் சிறுவர்களிடையே கண்டுபிடிக்கப்பட்டு மிகப் பரவலாகப் பேசப்பட்டது. MRSA வகை சமூக நிமோனியா ஆக மாறி வருவது அச்சம் தருவதாய் இருக்கிறது. இந்த வகை நிமோனியாக்கள், அதிக நாட்கள் மருத்துவமனையில் இருக்க நேரிட்டால் உண்டாகிறது. இரத்ததில் சர்க்கரையின் அளவு அதிக மானால் எல்லா வித நுண்ணுயிர்க் கிருமிகளுக்கும் கொண்டாட்டம்.
மருத்துவர்களும், செவிலியர்களும், நோயாளிகளைக் காண வருபவர்களும், கை கழுவுவது, சுகாதாரம் கடைப்பிடித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் இந்த வகை நிமோனியாக்களைக் குறைக்கலாம்.
·ப்ளூ (Influenza)
அக்டோபர் முதல் பிப்ரவரி வரை ·ப்ளூ காலம். வருடா வருடம் இந்த வைரஸ் தன்னை மாற்றிக் கொள்ளும் சக்தி வாய்ந்தது. அதனால் சென்ற வருடம் தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டாலும் இந்த வருடம் ·ப்ளூ ஏற்படலாம். இந்த வருடம் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், இந்த வைரஸ் தாக்கலாம். ஆனால், தடுப்பூசி போட்டவர்களுக்கு வீரியம் குறைவாக இருக்கிறது.
தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தெரியும் என்பார்கள். இன்றைய கால கட்டத்தில் ·ப்ளூவின் கடுமை ·ப்ளூ வந்தவர்களுக்கே தெரியும் என்று சொன்னால் மிகையாகாது. கடுமையான உடல் வலியும், சோர்வும் ஏற்படுத்தக் கூடியது. இதனுடன், இருமல், காய்ச்சல், குமட்டல், தலை வலி ஆகியவை ஏற்படலாம். மிகவும் சுறுசுறுப்பானவர்களையும் சோர்வடையச் செய்து விடும். ஒரு சிலருக்கு மருத்துவ மனையில் இருக்க நேரிடலாம். முதியோர்களுக்கும் சின்னக் குழந்தைகளுக்கும், நோயின் தீவிரம் அதிகமானால் மரணத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. ஆனால் தடுப்பூசி போட்டவர்களுக்குத் தீவிரம் குறைவாகக் காணப்படுகிறது. அறிகுறிகள் தோன்றிய உடனேயே Tamiflu அல்லது Relenza போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்வதாலும் தீவிரத்தைக் குறைக்கலாம்.
யார் கண்டிப்பாகத் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்?
50 வயதைத் தாண்டியவர்கள்
6 மாதத்தில் இருந்து 5 வயதுக்குட்பட்டோர்
கர்ப்பிணிப் பெண்கள்
முதியோர் இல்லத்தில் அல்லது மருத்துவ மனையில் இருக்கும் நோயாளிகள்
நீரிழிவு நோய் உள்ளவர்கள்
நுரையீரல் நோய் (குறிப்பாக Asthma, Chronic Bronchitis அல்லது Emphysema) உள்ளவர்கள்
இருதய நோய் உள்ளவர்கள், மருத்துவத் துறையில் வேலை செய்பவர்கள் (மருத்துவ மனையில் எந்த வேலை செய்தாலும்) ஆகியோரின் வீட்டில் வசிப்போர்கள்
ஆறு மாதத்துக்கும் குறைவான குழந்தைகள் இருக்கும் வீட்டில் வசிப்போர்கள்
இவர்களைத் தவிர வேறு எவரும் விருப்பப்பட்டால், தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இந்த ஊசியை மருத்துவர்களின் அலுவலகத்திலோ, மருந்துக் கடைகளிலோ, இலவச ·ப்ளூ கிளினிக் முகாம்களிலோ போட்டுக் கொள்ளலாம். |
|
யார் இந்தத் தடுப்பூசியை போட்டுக் கொள்ளக் கூடாது?
முட்டை ஒவ்வாமை (allergy) உடையவர்கள்
ஆறு மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகள்
இந்தத் தடுப்பூசிக்குத் தீவிர ஒவ்வாமை ஏற்பட்டவர்கள்
முன்பு இந்தத் தடுப்பூசியினால் GBS என்று சொல்லப்படும் நரம்பு நோய் ஏற்பட்டவர்கள்
தடுப்பூசியின் பின்விளைவுகள்
காய்ச்சல்
ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் சிவப்பாதல்
மிக இலேசான உடம்பு வலி
மிகமிகச் சொற்ப அளவில் ஒவ்வாமை ஏற்படலாம். GBS என்று சொல்லப்படும் நரம்பு நோய் ஏற்படலாம்.
நிமோனியா தடுப்பு முறைகள்
இதுவரை போடவில்லை எனில், ·ப்ளூ தடுப்பூசியை இன்றே போட்டுக் கொள்ளுங்கள்
புகை பிடிப்பதை நிறுத்துங்கள்
நீரிழிவு நோய் உள்ளவர்கள் சர்க்கரையைக் கட்டுப்படுத்துங்கள்
மருத்துவமனை நோயாளிகளை கவனிக்க நேரிட்டால், கை கழுவுவதை வழக்கமாகக் கொள்ளுங்கள்
சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள்
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |
|
|
|
|
|
|
|