|
|
சென்ற இதழில் இந்தியா புறப்படுவதற்கான ஆயத்தங்கள் பற்றி அறிந்தோம். நீண்ட விமானப் பயணத்திற்கான ஆயத்தங்களை இப்போது காணுவோம்.
பல மணி நேரம் விமானத்தில் பயணம் செய்யும் போது காரம் மற்றும் தண்ணீர் அளவாக உட்கொள்ள வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிக்க அஞ்சி ஒரு சிலர் தண்ணீர் குடிப்பதை அறவே தவிர்ப்பர். அதனால் நீர்ப்பொருள் குறைந்து வறட்சி (dehydration) ஏற்படும் ஆபத்து உள்ளது. இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை எட்டு அவுன்ஸ் (ounce) தண்ணீர் அருந்த வேண்டும். ஆனால் மதுபானம், காபி, தேநீர் இவற்றை அளவுக்கு அதிகமாக அருந்துவது நீர்ப் பொருள் குறையும் வாய்ப்பை அதிகமாக்குகிறது.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்களின் மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஊசிகளை எப்போதும்போல் எடுத்துக்கொள்ள வேண்டும். விமானத்தில் வேளாவேளைக்கு உணவு உண்பதாலும், தினப்படி செய்யும் சாதாரண உடற்பயிற்சியும், உலாத்தலும் கூட இல்லாத காரணத்தால் உடலில் சர்க்கரை அளவு அதிகமாகும் வாய்ப்பு உண்டு. மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.
இரத்த அழுத்தம் உள்ளவர்களும் தங்களின் மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். காலை எது மாலை எது என்று தெரியவில்லை. அதனால் மாத்திரைகளை அடியோடு நிறுத்தி விட்டேன் என்று சொல்பவர் உண்டு. மாத்திரைகளைப் பன்னிரண்டு அல்லது இருபத்தி நாலு மணி நேரம் என்று கணக்கு வைத்து அதற்கேற்ப உட்கொள்ள வேண்டும்.
இருதய நோய் அல்லது வேறு உபாதைகள் இருப்பவரும் மருத்துவரின் ஆலோசனை பெற்று அதற்கு ஏற்றாற்போல் செய்ய வேண்டும். முக்கியமாக, தங்களுக்கு உள்ள நோயின் விவரங்களையும், மருந்துகளின் பெயர்களையும் எழுதி எப்போதும் தங்கள் சட்டைப் பையில் வைத்திருப்பது மிகவும் அவசியம்.
மேற்கூறியவை குறுகிய நேர விமானப் பயணத்திற்கும் பொருந்தும். நீண்ட பயணம் போகும்போது அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். DVT அல்லது Deep Vein Thrombosis என்று சொல்லப்படும் இரத்தக்கட்டி நீண்ட நேரம் அசையாமல் இருப்பதால் கால்களில் ஏற்படலாம். இதைத் தவிர்க்கக் கால்களை அசைத்த வண்ணம் இருக்க வேண்டும். அவ்வப்போது விமானத்தின் உள்ளேயே நடப்பது நல்லது. மணிக்கு ஒரு முறை விமானத்தின் எல்லை வரை நடக்க வேண்டும். ஒரு சிலருக்கு இந்த இரத்தக் கட்டி ஏற்படும் சாத்தியக்கூறு அதிகமாக இருக்கலாம். இவர்கள் முன்கூட்டியே மருத்துவரின் அறிவுரையை நாடுவது நல்லது.
நீண்ட பயணத்திற்குப் பின்னர் கால்கள் வீங்குவது பலருக்கு ஏற்படலாம். இதைத் தவிர்க்க மேற்கூறியவாறு நடப்பதும் கால்களை அசைப்பதும் மேலும் முடிந்த வரை கால்களைச் சற்று உயர்த்தி வைப்பதும் நல்லது. இந்த முயற்சிகளையும் மீறிக் கால்கள் வீங்கிப் போகுமேயானால் பயணம் முடிந்ததும் கால்களை நன்றாக உயர்த்தி வைக்க வேண்டும். அப்படியும் வீக்கம் குறையாமலோ அல்லது வலியோ மற்றும் காலின் தோல் நிறத்தில் சிவப்போ ஏற்படுமேயானால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. இது DVT - யின் அறிகுறி யாக இருக்கக்கூடும். |
|
மூட்டு வலி, முதுகு வலி அல்லது கழுத்து வலி உள்ளவர்களும் விமானப் பயணத்தின் போது தகுந்த முன் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். இயன்ற பொழு தெல்லாம் கால்களை நீட்டி மடக்கி உடற்பயிற்சி செய்வது நல்லது. கழுத்துக்கு soft collar உபயோகிக்கலாம். முதுகுத் தண்டை கூடுமானவரை நேராக வைத் திருப்பது நல்லது. சாதாரண நாட்களில் கூட கீழே குனிந்து எடுக்க வேண்டியிருந்தால் கால்களை மடக்கி அமர்ந்து எடுப்பது முதுகுத்தண்டைப் பாதுகாக்கும். நம்மை அறியாமலே செய்யும் செயல்கள் நமது மூட்டுகளை பாதிப்பதாலேயே பிற்காலத்தில் Arthritis அல்லது degenerative joint disease ஏற்படுகிறது.
இவற்றை தவிர, புகை பிடிப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக மது அருந்துவது போன்றவை விமானப் பயணத்தின் போது ஊறு விளைவிக்கும் பழக்கங்களாகும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
காது வலி அல்லது காது அடைப்பு ஏற்படுவது விமானப் பயணத்தில் மிகவும் சகஜம். இதைத் தவிர்க்கப் பல வழிகள் உள்ளன. காதையும் தொண்டையும் இணைக்கும் ஒரு குழாய் அடைக்கப்படுவதாலேயே காது வலி உண்டாகிறது. வாயை மெல்லுவதாலும், மூக்கை விரல்களால் பிடித்து, மூச்சை உள்ளிழுத்து வாயைத் திறக்காமல் மூச்சை விடுவதாலும் (Valsalve maneuver), கொட்டாவி விடுவதாலும் இந்த அடைப்பை அகற்றலாம். அதையும் மீறிக் காது வலி ஏற்படுமானால் பஞ்சு வைத்துக் கொள்ளலாம்.
கர்ப்பமானவர்கள் முதல் 28 வாரங்கள் வரை பயணிக்கலாம் என்ற போதும் தங்கள் மருத்துவரை நாடி அவர்களின் ஆலோ சனைப்படி நடப்பது நல்லது. விமானத்தில் நடைபாதை (aisle) ஓரமாக அமர்ந்து கொள்வது நல்லது. இதனால் அடிக்கடி நடந்து செல்வது சாத்தியமாகும். DVT வரும் அபாயம் கர்ப்பமானவர்களுக்கு அதிகமானதால் மேற்கூறிய எச்சரிக்கைகளை அவர்களும் பின்பற்ற வேண்டும்.
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |
|
|
|
|
|
|
|