Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அஞ்சலி | சமயம் | பொது | சாதனையாளர்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல்
Tamil Unicode / English Search
நலம்வாழ
பயண மருத்துவம்
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|ஆகஸ்டு 2015|
Share:
Click Here Enlargeகோடை விடுமுறை காலத்தில் உலகத்தை அல்லது ஊர்களையாவது சுற்றுவது பல வீடுகளில் வழக்கம். பயணத்தின்போது கைக்கொள்ள வேண்டிய எச்சரிக்கைகள், கையில் எடுத்துச் செல்லவேண்டிய மருந்துகள் என்னென்ன என்பதைப் பார்ப்போமா?

தடுப்பூசிகள்
உலக நாடுகளுக்குப் பயணம் செய்யும்போது, சில தடுப்பூசிகளும், அவற்றைப் போட்டுக்கொண்ட சான்றுகளும் பயணச்சீட்டுடன் அவசியம் எடுத்துச் செல்லவேண்டும். குறிப்பாக டெட்டனஸ் தடுப்பூசி பல நாடுகளில் கேட்பார்கள். இதைப் பத்து வருடத்துக்கு ஒருமுறை போட்டிருக்க வேண்டும். தவிர, MMR, போலியோ, சின்னம்மை (Chicken pox) போன்ற தடுப்பூசிகளும் அவரவர் வயதிற்கேற்ப எடுத்திருக்க வேண்டும். தென்னாப்பிரிக்க, கிழக்காசிய நாடுகளுக்கு மஞ்சள் காமாலை (Hepatitis A), டைஃபாய்டு ஊசி தேவைப்படும். தென்னமெரிக்க நாடுகள் சிலவற்றிற்கு மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever) தடுப்பூசி அவசியம். இந்தியா செல்லும் முன்னர் மலேரியா மருந்து எடுத்துக்கொள்ள வேண்டிவரலாம். குறிப்பாக, கொசு அதிகமிருக்கும் இடங்களுக்குப் போனாலும், மழைக்காலத்திலும் முக்கியமாகத் தேவைப்படும். இவற்றைப் புறப்படும் முன்னரும் ஊரிலிருக்கும் போதும் எடுத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி இந்தியா செல்லாதவர்களுக்கு எதிர்ப்புச்சக்தி குறைவாக இருக்க வாய்ப்பு அதிகம். டைஃபாய்டு தடுப்பும் சிலருக்குத் தேவைப்படலாம். இதை மாத்திரையாகவோ ஊசியாகவோ எடுத்துக்கொள்ளலாம். சின்னக் குழந்தைகளுடன் பிரயாணம் செய்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும். வயதிற்கேற்ப மருத்துவ விதிமுறை மாறும். எந்த ஊருக்கு எந்தத் தடுப்பூசி என்பதை அறியப் பாருங்கள்: www.nccdc.gov/travel

தினப்படி மருந்துகள்
புறப்படும்போதே தினப்படி மருந்துகளை அவசியம் பெட்டியில் வைத்துவிடவேண்டும். ஒருவாரம்தானே ரத்தஅழுத்த மருந்து தேவையில்லை அல்லது நீரிழிவு மருந்துகளை விட்டுவிடலாம் என்று தப்புக்கணக்கு போடக்கூடாது. கூடுமானவரை புது மருந்துகளை பயணத்திற்கு முன்னர் தவிர்ப்பது நல்லது. மருந்துகள் சற்றுப் பழகியபின்னர் பயணம் மேற்கொள்வதும் நல்லது. மருந்துகள் எடுத்துக்கொள்வதற்கு முன்னர் பின்விளைவுகளை அறிந்துகொள்வது நல்லது. மருத்துவரிடம் பயணம்பற்றிச் சொல்வதன் மூலம் இவற்றை எளிதாக்கிக் கொள்ளலாம். மருந்துச்சீட்டில் வாங்கப்பட்ட மருந்துகளை அந்தந்த பெட்டியிலேயே மருத்துவரின் ஒப்புதல் தெரியும்படி எடுத்துச் செல்லவேண்டும். பயணகாலம் முடியும்வரை இருக்குமாறு போதிய மருந்துகளை எடுத்துச் செல்லவேண்டும். குறிப்பாக இந்தியாவில் இருந்து வருவோர் இதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். அமெரிக்காவில் மருந்துச்சீட்டு இல்லாமல் பல மருந்துகள் கிடைக்காது. விலையும் அதிகம். தினப்படி உட்கொள்ளும் மருந்துகளின் பெயர்கள், அளவு, உட்கொள்ளும் முறை இவற்றைப் பட்டியலிட்டு சட்டைப்பையில் எப்போதும் வைத்திருப்பது நல்லது.

அவசர மருந்துகள்
இருமல், சளி, தும்மல் இவற்றுக்கென Advil sinus, Mucinex, Delsym, Dayquil, Nyquil போன்ற சளி மருந்துகளை வாங்கிப் பையில் வைத்திருந்தால், மொழிதெரியாத ஊருக்குப் போகும்போது சௌகரியமாக இருக்கும். காய்ச்சல், உடல்வலி மாத்திரைகளும் (Tylenol, Ibuprofen) இந்த வகையில் சார்ந்தவை. ஒவ்வாமை மருந்தாகிய Zyrtec, Benadryl போன்றவை கையிலிருந்தால் உணவு, சூழல் ஒவ்வாமைகள் ஏற்பட்டால் பயன்படும். உணவு ஒவ்வாமை அல்லது தேனீக்கடி ஒவ்வாமை இருப்பவர்கள் Epipen வைத்திருக்கவேண்டும். ஆஸ்துமா தொந்தரவு இருப்பவர்கள் Inhaler மருந்துகளை அவசியம் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக மலையேற்றம் அல்லது குளிர்ப்பிரதேசம் போவதாய் இருந்தால் இவற்றைக் கைப்பையில் வைத்திருப்பது நல்லது. வயிற்று உபாதை உள்ளவர்கள் Gelusil, Tums, Pepcid, Prilosec போன்ற மருந்துகளை வைத்திருக்கலாம். Pepto Bismol போன்ற திரவங்களை விமானத்தில் கொண்டுபோக அனுமதிக்கமாட்டார்கள்.
பயண வயிற்றுப்போக்கு
வயிற்றுபோக்கு ஏற்பட்டால் அதைக் குறைக்க Imodium வைத்திருப்பது நல்லது. இதைத்தவிர 'பயண வயிற்றுப்போக்கு' அதிகமாகக் காணப்படும் இடங்களுக்குச் செல்பவர்கள் சில நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை மருத்துவர்மூலம் வாங்கிக்கொள்ள வேண்டும். இவை Ciprofloxacin வகையைச் சார்ந்தவை. Norflox என்ற இந்திய மருந்தும் கொடுக்கப்படலாம். அடிக்கடி வாந்தி வருபவர்கள் அதற்கான Compazine மருந்து வைத்திருக்கலாம்.

கப்பல் பயணம்
கப்பல் பயணம் மேற்கொள்பவர்கள் தலைசுற்றல், வாந்தி வராமல் இருக்க Dramamine, அல்லது Bonine வாங்கிக்கொள்ளலாம். இதைத்தவிர மருந்துச்சீட்டுடன் Scopalamine என்ற தோல் ஒட்டுப்பட்டை (patch) வாங்கிக்கொள்ளலாம்.

மலைப் பயணம்
மலையேறாத போதும், அதிக உயரம் வாய்ந்த பகுதிகளுக்குச் செல்பவர்கள் கவனமாக இருக்கவேண்டும். இந்தவகைப் பகுதிகளில் Oxygen ரத்த அணுக்களில் குறைவதால் சில தொந்தரவுகள் வரலாம். இதனை Altitude Sickness என்று சொல்வர். அதனால் தலைவலி, மூச்சிறைப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இவை வராமலிருக்க சில மருந்துகளை (Diamox, Prednisone) மருத்துவரிடம் இருந்து வாங்கிக்கொள்ள வேண்டும். அமெரிக்காவில் கொலராடோ பகுதி இந்த வகையைச் சார்ந்தது. இந்தியாவில் டில்லிக்கு வடக்கே இருக்கும் மலைப்பிரதேசங்கள் இவ்வகையில் அடங்கும். மாச்சு பிச்சு போன்ற மலையேற்றப் பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு அவசியம் தேவை. இதற்கான மருந்துகளுக்கு மருந்துச்சீட்டு அவசியம்.

முதலுதவி மருந்துகள்
கீழே விழுந்தால் தேவைப்படும் முதலுதவிச் சாமான்களும், Bandaid, ACE Wrap போன்றவையும் பெட்டியில் வைத்திருப்பது நல்லது. அடிக்கடி பயணம் செய்பவர்கள் இவற்றைக் கொண்டுசெல்ல 'பயணப்பை' ஒன்று தயார்செய்து கொள்வது நல்லது. ஆனால் மருந்துகள் காலாவதி நாளை அவ்வப்போது பார்த்துக் கொள்ள வேண்டும். தகுந்த முறையில் பாதுகாத்து வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளின் கையில் கிடைக்காதபடி வைக்கவேண்டும்.

பிறகென்ன, கிளம்புங்கள் பயணம்!

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்
Share: 




© Copyright 2020 Tamilonline