|
|
|
குளிர்காலத்துக்கென்றே சில வியாதிகள் காத்துக்கொண்டிருப்பது நாம் அறிந்ததே. ஆனால் இப்போது உலகம் முழுவதும் தட்பவெப்ப நிலை மாறி வருகையில் பலருக்கு இந்தப் பிரச்சனைகள் புதிதாகவும் இருக்கலாம். இவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
ஹைபோதெர்மியா (Hypothermia) குளிர் மிகமிக அதிகமாக இருக்கும் போது நாம் உடலுக்குப் போதிய பாதுகாப்புச் செய்து கொள்ளாவிட்டால் ஹைபோதெர்மியா தாக்கக்கூடும். பனிக்கட்டியின் உறைநிலையான பூஜ்ஜியத்துக்கும் குறைவாக வெப்பநிலை குறையுமானால் உடலில் முக்கியமாக கால், கை மூக்கு, காது போன்ற உறுப்புகள் உறையும் வாய்ப்பு உள்ளது. அரை மணிக்கும் மேலாகத் தகுந்த உறை இல்லாமல் இருக்கவேண்டி நேர்ந்தால் ரத்த நாளங்கள் சுருங்கி நிறம் வெள்ளை அல்லது நீலமாக மாறக்கூடும். உணர்ச்சி குறைந்து மரத்துப் போக வாய்ப்பு உண்டு. இன்னமும் அதிக நேரம் குளிரில் இருந்தால் உடலின் வெப்பம் 95 டிகிரிக்கும் குறைந்து பல முக்கிய உறுப்புகளைச் செயலிழக்க செய்யும். இதனால் மயக்கம் மற்றும் கோமா நிலை வரும் அபாயம் உண்டு.
தவிர்ப்பது எப்படி? குளிரில் வெளியே செல்லும்போது அதற்கான உடை அணிவது அவசியம். பல அடுக்கு உடைகள் அணிவதின் மூலம் தட்பவெப்பம் முன்னே பின்னே இருந்தாலும் அதற்கேற்ப மாற்றிக்கொள்ள முடியும். கையுறை , சாக்ஸ், தொப்பி, நல்ல பாதணி முதலியவை அவசியம். இதையும் மீறிக் கைகால் மரத்துத் போனாலோ நிறம் வெளிறிப் போனலோ உடனடியாகக் கவனிக்க வேண்டும். எதிர்பாரத முறையில் அதிக நேரம் குளிரில் நிற்க நேர்ந்தால் வீட்டுக்கு வந்தவுடன் நல்ல சுடுநீரில் கை, கால் கழுவ வேண்டும். அழுத்தித் தேய்ப்பது நல்லதல்ல. சுருங்கிய ரத்த நாளங்கள் விரியும் போது வலி ஏற்படும். வலிப்பது நல்லதே. வலி இல்லாமல் இருப்பதும் உணர்ச்சிகள் குறைவதும் அபாயத்தின் அறிகுறி. நல்ல கம்பளி அல்லது பல அடுக்குப் போர்வை மூலம் குளிர்ந்த பாகங்களைச் சுற்ற வேண்டும். நல்ல சூடான திரவங்கள் உட்கொள்ள வேண்டும். உடலின் வெப்பம் 95 டிகிரிக்கும் கீழே போனால் மருத்துவமனைக்குச் செல்ல நேரிடலாம். சூடேற்றும் போர்வை மற்றும் உடலின் பிற உறுப்புகள் இயங்கும் விதத்தைக் கண்காணிப்பது தேவைப்படலாம்.
மூக்கில் ரத்தம் வடிதல் இதுவும் குளிர்ந்த, வறண்ட பிரதேசங்களில் மிக அதிகம் ஏற்படும். காற்றில் இருக்கும் ஈரப்பசை குறையக் குறைய மூக்கிலிருக்கும் ரத்த நாளங்கள் வறண்டு, ரத்தம் கசிவது இயல்பு. ஒரு சிலருக்குத் தானாகவே நின்றுவிடும். பலருக்கு ரத்தக்கசிவு தொடரலாம். அல்லது சிலவேளை அதிகமாகவும் ரத்தம் கொட்டலாம். குறிப்பாக, இரத்தத்தை நீர்க்க வைக்கும் சில மருந்துகள் (Coumadin, Aspirin) கசிவை அதிகமாக்கலாம். |
|
தவிர்க்கும் முறையும் அவசர சிகிச்சையும் குளிர்காலத்தில் ஈரப்பசையை அதிகரிக்கும் கருவிகளை (Humidifier) உபயோகிப்பது நல்லது. குறிப்பாக படுக்கை அறைகளில் இரவு நேரத்தில் இவற்றை உபயோகிப்பது விரும்பத்தக்கது. நாசிநுனி வறளாமல் அவ்வப்போது தேங்காய் எண்ணை அல்லது Vaseline களிம்பு அடிக்கடி தடவ வேண்டும். ரத்தக்கசிவு ஏற்பட்டால் உடனடியாக நாசிநுனியை ஐந்து முதல் பத்து நிமிடம் வரை அழுத்திப் பிடிக்க வேண்டும். இதையும் மீறி ரத்த அதிகமாகக் கொட்டத் துவங்கினால் மருத்துவ மனை அவசர சிகிச்சைப் பகுதியில் இதற்கான அடைப்பு வைத்தியம் (Nasal Packing) தேவைப்படலாம். மருந்துகள் உட்கொள்பவர்களுக்கு இது தேவைப்படும்.
தோல் வறட்சி குளிர்காலத்தில் தோல் வறண்டு போக வாய்ப்பு அதிகம். இதனால் சிவப்பு சிவப்பாக தடிப்பு ஏற்படலாம். தோலில் வெடித்து ரத்தம் கசியலாம். அரிப்பு ஏற்படலாம். இதனை Ecema என்று சொல்வதுண்டு. இது குறிப்பாக கை, கால் மடிப்புகளிலும், பின்கழுத்து, முதுகு, முகம் போன்ற பாகங்களில் அதிகம் காணப்படும். இதற்கு உடனடி நிவாரணம் எண்ணெய் அல்லது Vaseline தடவுவதுதான். தினமும் குளித்தவுடன் உடலில் ஈரம் இருக்கும்போதே இதைத் தடவுவதன் மூலம் வெடிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியும். அடிக்கடி சோப்புப் போடுவதும் மிகச்சூடான நீரில் குளிப்பதும் தோல் வறட்சியைஅதிகப்படுத்தலாம். இதையும் மீறித் தோல் வறட்சி அதிகமானால் அதற்கு Hydrocortisone களிம்பை மருத்துவர் வழங்குவார்.
புவிக்கோளம் வெப்பமடைவதன் காரணமாக (Global Warming) தட்பவெப்ப நிலை தாறுமாறாகி, வெயில் அடிக்கும் ஊர்களில் குளிரும், குளிர்ப் பிரதேசங்களில் மிகக் குளிரும் ஏற்படுவது இயற்கையின் விளையாட்டு. இதில் நாம் சற்று முன்னெச்சரிக்கையாய் இருப்பதின் மூலம் பல பின்விளைவுகளைத் தவிர்க்கலாம்.
மரு. வரலட்சுமி நிரஞ்சன், கனெக்டிகட் |
|
|
|
|
|
|
|