|
|
|
நுண்ணுயிர்க் கிருமிகளைக் கொல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆயின. ஆனாலும் இந்த புத்திசாலிக் கிருமிகள் சமயோசிதமாக மனித வர்க்கத்தைப் பதம் பார்த்துத்தான் வருகின்றன. இவ்வகையில் சிறுநீரகப் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்று மிகவும் பிரபலம்.
சிறுநீரகப் பாதை சிறுநீரகப் பாதை ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளது. இந்த அமைப்பின் காரணமாக பெண்களை இந்த நுண்ணுயிர்கள் அதிகம் தாக்க வல்லன. மனிதர்களுக்கு இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. சிறுநீரகங்களை, சிறுநீர்க் குழாய்கள் (ureter) சிறுநீரகப் பையுடன் (bladder) இணைக்கின்றன. சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வடிகுழாய் (urethra) வழியே சிறுநீர் வெளியேறுகிறது. இந்தப் பாதையில் எங்கு வேண்டுமானாலும் நுண்ணுயிர்க் கிருமி தாக்கலாம். குறிப்பாக சிறுநீரகப் பையிலும் வடிகுழாயிலும் இந்தக் கிருமிகள் தங்கலாம். தீவிரம் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். ரத்தத்திலும் கிருமிகள் பரவி, மிக வேகமாக septicemia ஏற்படலாம்.
யாரைத் தாக்கும்?
சிறுநீரகத் தொற்று கீழ்க்கண்டவர்களை அதிகம் தாக்கக்கூடும்: * பெண்கள், குறிப்பாக பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள். * மாதவிடாய் நின்று போன பெண்கள் * சிறுநீரக அமைப்பில் கோளாறு உடையவர்கள் * சிறுநீரகப் பையின் வேலைப்பாடு குறைந்தவர்கள் (பக்கவாதம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்) * சிறுநீரகப் பை வேலை செய்யாததால் செயற்கைக் குழாய் மூலம் சிறுநீர் கழிப்பவர்கள் (Catheter use)
அறிகுறிகள்
சிறுநீரகத் தொற்று ஏற்பட்டதன் அறிகுறிகள்: * சிறுநீர் கழிக்கம்போது எரிச்சல் * அடிக்கடி சிறுநீர் கழித்தல் * அதிகமாகச் சிறுநீர் கழித்தல் * வயிற்று வலி * வாந்தி, ஜுரம் * சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல் * நோய் முற்றினால் மனக்குழப்பம், மயக்கம், ரத்த அழுத்தம் குறைதல். |
|
மருந்துகளும் பரிசோதனைகளும் நோயின் ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்ட உடனே சிறுநீரைப் பரிசோதிப்பதின் மூலம் அதில் ரத்தம், புரதம், நுண்ணுயிர்க் கிருமிகள், வெள்ளை அணுக்கள் போன்றவை இருந்தால் இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படும். இந்தச் சோதனைக்கு 48 மணி நேரம் ஆகலாம். இந்தப் பரிசோதனையில் எந்த நுண்ணுயிர் எவ்வளவு இருக்கின்றது, அது எந்த மருந்தினால் கொல்லப்படுகின்றது என்ற விவரங்கள் கிடைக்கும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து ரத்தப் பரிசோதனையும் செய்யப்பட வேண்டி வரும். இதில் வெள்ளை அணுக்களின் அளவு, நுண்ணுயிர்க் கிருமிகள் ரத்தத்தில் கலந்து இருக்கிறதா என்பவை அறியப்படும். பெரும்பாலும் மாத்திரைகள் மூலம் இந்த நோயை குணமக்கலாம். மூன்று முதல் பத்து நாட்கள் வரை மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கலாம். அடிக்கடி இந்தக் கிருமியின் பாதிப்பு இருப்பவர்களுக்கு அதிக நாட்கள் மாத்திரை தேவைப்படும். பரிசோதனை முடிவில் மாத்திரைகள் மாற்றப்படலாம். குறிப்பாக Ciprofloxacin, Bactrim, Levaquin போன்ற மருந்துகள் உபயோகிக்கப்படும். நோயின் தீவிரம் அதிகமானால் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டி வரலாம். இவர்களுக்கு ரத்த நாளங்கள் மூலம் மருந்தும், திரவமும் ஏற்றப்பட வேண்டிவரலாம்.
வருமுன் காப்போம்
இந்த நோய் வரமால் இருக்க மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு முறைகள்: * ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும் முன் பக்கத்தில் இருந்து துடைக்க வேண்டும். * தூய்மை மிகவும் இன்றியமையாதது. * கூடுமானவரை அடிக்கடி சிறுநீர் கழிப்பது நல்லது. அதிக நேரம் சிறுநீரகப் பையில் தேங்கவிடக் கூடாது. * உடல் உறவுக்குப் பின்னர் பெண்கள் சிறுநீர் கழிப்பது இந்த நோய் வராமல் தடுக்கும். * மாதவிடாய் நின்று போன பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதின் மூலமும், வறண்டு போகாமல் இருக்க ஹார்மோன் களிம்பு தடவுவதும் உதவலாம். * வெளியிடத்தில் சிறுநீர் கழிக்கும்போது (கடைத் தெரு, விமான நிலையம், பொதுக் கழிப்பிடங்கள்) மிகவும் கவனம் தேவை. சுத்தம் அதிகமாக கையாளப்பட வேண்டும். * சிறுநீரகப் பை சரியாக வேலை செய்யாததால் தன்னிச்சையாகச் சிறுநீர் கழிக்க நேரிடுபவர்கள் அடிக்கடி சுத்தம் செய்வதின் மூலமும் உள்ளாடைகளை மாற்றுவதன் மூலமும் இந்தக் கிருமிகள் தாக்காமல் செய்யலாம். * அதிகம் தண்ணீர் குடிப்பது அவசியம். இதன் மூலம் நுண்ணுயிர் கிருமிகள் தாக்கினாலும் இவற்றை உடல் விரைந்து வெளியேற்றமுடியும். * கிரான்பெரி பழச்சாறு (Cranberry juice) குடிப்பது சிலருக்கு உதவலாம். ஆனால் ரத்தத்தை இலேசாக்கும் Coumadin மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் இந்த பழச்சாறு அருந்துவது நல்லதல்ல. * அடிக்கடி இந்த நோய் வருமேயானால், ஒரு சிலருக்கு தினம் மாத்திரை கொடுக்க வேண்டிவரலாம்.
மேலும் விவரங்களுக்கு www.mayoclinic.com வலைதளத்தை அணுகவும்.
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |
|
|
|
|
|
|
|