|
|
|
தீக்ஷிதா துருவபாதா - த்ருபத் மற்றும் கர்நாடக இசையின் மந்திரச் சங்கமம். கிளாசிகல் ஆர்ட்ஸ் சொசைட்டி ஆஃப் ஹூஸ்டன், இந்த நிகழ்ச்சியை 26 மார்ச் 2022 அன்று காலை 10:00 மணிக்கு வழங்கியது. நிகழ்ச்சித் தலைப்பையும், முன்னுரையையும் பார்த்தவுடனேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. தஞ்சையில் பிறந்த முத்துசுவாமி தீக்ஷிதர், தென்னிந்திய பாரம்பரிய இசையான கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர். குரு சிதம்பரநாத யோகியுடன் பல ஆண்டுகள் வாரணாசியில் வாழ்ந்தவர். அப்போது த்ருபத் இசை முறையால் ஈர்க்கப்பட்டு, அதன் தாக்கத்தில் பல அழகிய பாடல்களை, இந்துஸ்தானி ராகங்களில் இயற்றினார்.
ஆவலோடு காத்திருந்தேன். யூடியூபில் ஒளிபரப்பு தொடங்கியது. முதல் பாடலை குரலிசைக் கலைஞர் வித்வான் டி.வி. ராம்ப்ரசாத் அறிமுகப்படுத்தினார். "ராம ராம", ராம்கலி ராகம்; விளம்ப ரூபகம் அல்லது திஸ்ர ஏக தாளம். "ராம்கலி ராகமா? இப்படியொரு ராகத்தைக் கேள்விப்பட்டதில்லையே? முத்துசுவாமி தீக்ஷிதர் இந்த ராகத்தில் பாடல் இயற்றியுள்ளாரா?" என்று எண்ணும்போதே ராக ஆலாபனை தொடங்கியது. சில சங்கதிகளை அங்குமிங்கும் தொட்டவுடன், "இது பௌளி ராகம் போலுள்ளதே, இதற்கு இணையான ராகம், கர்நாடக சங்கீதத்தில் உண்டா?" என்று மூளை தன் வேலையை மும்முரமாக்கியது. இசை நிகழ்ச்சியை ரசித்த நேரம் நண்பகல் என்றாலும், மனம் "இது விடியற்காலை அன்றோ!" என்ற உணர்வை ஏற்படுத்தியது. இது அதிகாலை ராகம் என்றுதானே ராம்ப்ரசாத் அறிமுகப்படுத்தினார் என்பதும் நினைவுக்கு வந்தது. பாடலில், அடிக்கடி வந்த சுத்த தைவதமும், விட்டு விட்டு வந்த சுத்த ரிஷபமும், அதைச் சரியென்று கூறின. இசை அரங்கின் விளக்குகளும், திரையின் வண்ணங்களும், இதர அமைப்புகளும் அதையே உறுதி செய்தன. தொடர்ந்து, வயலின் இசைக்கலைஞர் ராமானுஜாச்சாரியுலு, ராக ஆலாபனையைச் செவ்வனே செய்ய, 'ராம ராம கலி கலுஷா' என்ற வரிகளுடன் பாடல் அழகுற அரங்கேறியது. பாடலின் முதலிரு சங்கதிகளிளேயே, வனத்தில் விடியற்காலையில், விசுவாமித்திரர், ராம லட்சுமணரை 'கௌசல்யா சுப்ரஜா ராமா' என்று எழுப்புவது மனக்கண்ணில் தெரிந்தது. கல்பனா ஸ்வரங்களில், சுத்த தைவதத்தைச் சார்ந்து வந்த ஒவ்வொரு கணமும், நாம் நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும், நம் ஆதியும் அந்தமுமான தெய்வத்தை சார்ந்து அல்லவா வாழ வேண்டும் என்பதை நினைவுபடுத்தியது. குறிப்பாக திடீரென வந்த பிரதி மத்யமமும், கைஷிகி நிஷாதமும் திரும்பிப் பார்க்க வைத்தன. சேர்ந்திசைத்த மிருதங்கக் கலைஞர் சுதீந்த்ராவும், கடம் கலைஞர் கிரிதரும் சில சமயங்களில், வாசிக்கிறார்களா இல்லையா என்ற அளவில் பாடலுடன் இரண்டறக் கலந்துவிட்டனர். தம்பூரா மீட்டிய பிடிஷா ராய், இசையில் மூழ்கிச் சிலையாகிவிட்டார். அடுத்த பாடல் 'ஜம்புபதே மாம் பாஹி', யமுனா கல்யாணி ராகம்; விளம்ப ரூபகம் அல்லது திஸ்ர ஏக தாளம். சிவபெருமான் பஞ்சபூத வடிவானவர். நீருக்குரிய தலமான திருவானைக்காவலில், ஜம்புகேஸ்வரராக அருள் பாலிக்கும் சிவனை; நீர், பெருங்கடல், கங்கை, காவேரி, யமுனை போன்ற நதிகளின் வடிவம் என்று இப்பாடலில் வர்ணித்துப் போற்றுகிறார் தீக்ஷிதர். |
|
திடீரென்று வரும் கார்மேகம், சடசடவென மழை பெய்து, மண்வாசனை தந்து, வேறொரு திசையில் சென்றுவிடுவதைப் போல; யமுனா கல்யாணி ராக ஆலாபனையை, வயலின் இசைக்கலைஞர் ராமானுஜாச்சாரியுலு, கர்நாடக பாணியில் மிக அற்புதமாக, ராக ரசம் ததும்பக் கையாண்டார். அடுத்து, வானிலை மாற்றம் போல், த்ருபத் முறையில் டி.வி.ராம்ப்ரசாத், தன் வசீகரிக்கும் குரலாலும், இசைத் திறத்தாலும், கற்பனை வளத்தாலும், ஸ்வரங்களில் நீண்டு, நின்று, நிறைந்து, மிதந்து, மிக அழகான ஒரு உருவை, யமுனா கல்யாணி ராகத்திற்கு உருவாக்கி, நம் கண்முன்னே காட்டினார். மனம் கொள்ளை போனது.
'தானம்' படிப்படியாக பல நிலைகளில், கால ப்ரமாணங்களில் பாடப்பட்டபோது, உள்ளே கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்த பல முடிச்சுகள், ஒவ்வொன்றாக அவிழ்ந்தன. பல காலமாக உள்ளே தொடப்படாத இடங்கள் தொடப்பட்டன. மூச்சு விடுவதுகூடத் தெரியாத வகையில், ஏதோ ஓர் உலகத்தில், பேரமைதியில் மனம் நிலைத்ததை உணர முடிந்தது. மூன்றாம் நிலை, கர்நாடக இசை முறையிலான தானத்தில் வலம்வந்த விவேகமும், நிதானமும் மனதை ஆட்கொள்ள, மிருதங்கமும் கடமும் சேர்ந்திசைக்க, அறியாமல் மகுடிக்கு ஆடும் அரவம்போல் இடமும் வலமும், தலையும் உடலும் ஆடின. உள்ளம் உருகப் பாடி, இசை என்னும் இன்பக் கடலில், பக்தியில் நம்மை மூழ்கடித்து விட்டார் டி.வி. ராம்ப்ரசாத். அடுத்த பாடல் 'அகிலாண்டேஸ்வரி ரக்ஷமாம்', த்விஜாவந்தி/ஜீஜாவந்தி/ஜெஜெவந்தி ராகம்; ஆதி தாளம். கச்சேரிகளில் மிகப் பிரபலமாக பாடப்படும் பாடல். ஆலாபனை, நிரவல், கல்பனை ஸ்வரம், தனியாவர்த்தனம் என ஒரு கர்நாடக இசைக் கச்சேரியில் பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படும் பாடலுக்கு உரித்தான அத்தனை அங்கங்களுடன் இப்பாடல் மிளிர்ந்தது.
ஆலாபனையில் வந்த நெளிவும், குழைவும், ஏக்கமும், மீண்டும் ஒருமுறை கேட்கத் வேண்டுமென்ற ஆசையைப் பெருக்கியது. ஆழமான சுத்த ஸ்வரங்களுக்கும், அடர்ந்த ஜாரு கமகத்திற்காகவே தனியாகப் பாராட்ட வேண்டும். தொடர்ந்து வந்த சங்கதிகள். அலங்காரமான கல்பனா ஸ்வரங்களில் பொங்கிய மும்முறை பரிமாணம், த்ருபத் முறையை அழகாகப் படம்பிடித்துக் காட்டியது. சிறப்பாகத் தனியாவர்த்தனம் வாசித்தனர் மிருதங்கக் கலைஞர் சுதீந்த்ராவும், கடம் கலைஞர் கிரிதரும். நிகழ்ச்சியின் நிறைவாக வந்தது 'நீரஜாக்ஷி காமாக்ஷி', ஹிந்தோள ராகம்; விளம்ப ரூபகம் அல்லது திஸ்ர ஏக தாளம்.
ஒரு சிறு ஆலாபனையின் நிறைவிலேயே, நிஷாதத்தில் இருந்து 'நீரஜாக்ஷி' என்று ஆரம்பித்த இடமே, ஆஹா! என்ற மன நிறைவைக் கொடுத்து விட்டது.
இப்பாடலை இசைத்ததைக் கேட்கக் கேட்க, நன்றாக பழுத்த பலாச் சுளையை, தேனில் தொட்டுத் தொட்டுச் சுவைத்தால் எப்படி பன்மடங்கு தித்திக்குமோ அப்படி தித்தித்தது. ஒரு சிறு பூனை, ஒரு பெரிய மதில் மேல், எந்தத் தயக்கமும் இன்றி, எவ்வளவு நேர்த்தியாகவும் நிதானமாகவும் இரு பக்கங்களையும் பார்த்துக் கொண்டே நடக்குமோ, அதுபோல் கர்நாடக இசை, த்ருபத் இசை இரண்டையும், சரிசமமாகத் தாங்கிக்கொண்டு பீடுநடை போட்டார் டி.வி. ராம்ப்ரசாத். நிகழ்ச்சியை கீழ்க்கண்ட இணைப்பில் கண்டு களிக்கலாம்:
விகாஷ் ரயாலி, அட்லாண்டா, ஜார்ஜியா |
|
|
|
|
|
|
|
|