|
|
பாகீரதி சேஷப்பன். புகைப் படங்கள்: சூப்பர் சுதாகர்.
அக்டோபர் 26ம் தேதி மதியம் இரண்டு மணியளவில் ·ப்ரீமாண்ட் நூலகத்தில்... அந்தப் பெரிய அறை நிரம்பி வழிந்தது. இருந்த இருக்கைகள் பற்றாமல் அவசரமாக மேலும் இருக்கைகள் எடுத்துப் போட்டு வந்திருந்தவர்களை அமரச் செய்ய முயற்சிகள் செய்து கொண்டு இருந்தார்கள் தமிழ் மன்றச் செயலாளர்கள். இலக்கியக் கூட்டம் என்றாலும், மக்களைக் கவர்ந்து இழுத்து வரச் செய்தவர்... வேறு யாருமில்லை... திரு. குமரி அனந்தன் அவர்கள். அன்று அவருடைய உரையை இலவசமாகக் கேட்டுவிட்டு, தமிழ் மன்றத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்கள் பலர்.
திரு. குமரி அனந்தன் அரசியல்வாதியாக அல்லாமல், இலக்கியவாதியாக அமெரிக்கப் பயணம் மேற்கொண்டு இங்கு வந்திருக்கிறார். அவருடைய சுற்றுப் பயணத்தின் பகுதியாக வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றம் அவரை 'சிலப்பதிகாரம்' என்ற தலைப்பில் பேச அழைத்திருந்தது. சிவசுப்பிரமணிய ராஜா அவர்கள் தமிழ் மன்றத்தின் சார்பில் வரவேற்புரை வழங்கினார்.
இந்த அமெரிக்க நாட்டில் வந்ததும் “குமரி... ஜாக்கெட் போட்டுக் கொள்ளுங்கள்” என்று என்னிடம் பலர் சொல்கிறார்கள். “குமரிக்கு ஜாக்கெட் போட சொல்லித் தரவா வேண்டும்...?” என்று ஒரு நகைச்சுவைச் சிலேடையுடன் பேச்சை ஆரம்பித்தார் குமரி அனந்தன். இலக்கியக் கூட்டத்திலேப் பேச அழைத்தால் இலக்கியம் தான் பேசுவேன், அரசியல் பேசுவதில்லை என்று தெரிவித்துக் கொண்டார். சிலப்பதிகாரத்தின் பெருமைகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார். “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்தத் தமிழ்நாடு” என்று பாரதி சிறப்பித்துக் கூறுகிறான். மணியாரமாக மார்புக்கு மேலே மட்டும் கிடக்காமல், நெஞ்சுக்குள்ளும் புகுந்து அள்ளுவது என்று விளக்கம் கொடுத்தார் குமரி.
தமிழும், தமிழர்களும் உச்ச நிலையில் இருந்த காலத்தில் எழுதப் பட்ட காப்பியம் சிலப்பதிகாரம். இந்தக் காப்பியம், சேர, சோழ பாண்டியர்கள் மூவருக்கும் உரியது. சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்கு சிலை எழுப்புகிறான். அவள் சோழ நாட்டில் பிறந்து வளர்ந்தவள். பாண்டிய நாட்டிற்குச் சென்று நீதி கேட்கிறாள்.
சிலப்பதிகாரம் கம்ப ராமயணத்திற்கு முன்பே எழுதப் பட்டது. கம்ப ராமாயாணத்திற்கும் சிலப்பதிகாரத்திற்கும் உள்ள பல ஒற்றுமை, வேற்றுமைகளை அவர் எடுத்துக் கூறினார். தெய்வம் பெண்ணான கதை இராமாயணம். பெண் தெய்வமான கதை சிலப்பதிகாரம்.
குமரி அனந்தன், சிலப்பதிகாரத்திலிருந்து பல அரிய செய்திகளைக் கூறினார். மாதவி நடனமாடிய அரங்கினை எங்கு எழுப்புவது என்று எப்படித் தீர்மானித்தார்கள்... மண்ணை வித விதமாகப் பிரித்துப் பார்த்து அதன் தன்மைகளை அறிவதில் அக்கால தமிழர்கள் எப்படித் தேர்ச்சி பெற்று இருந்தார்கள்... ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் எப்படி அரங்கு அமைப்பதற்கு கணக்குப் பார்த்து வடிவம் செய்வதிலே தேர்ந்திருந்தார்கள் என்ற செய்திகள் எல்லாம் சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது என்று எடுத்துக் கூறினார்.
நாட்டியக் கலையானது தமிழ்நாட்டிலே மிகவும் சிறந்து விளங்கியது. பல நாட்டிய நூல்கள் எழுதப்பட்டு அதற்கென்று இலக்கணங்கள் வகுக்கப்பட்டிருந்தன. மாதவி- செயந்தம், அகவல், முறுவல் போன்ற நூல்களைக் கற்றறிந்து = அவைகளில் கண்ட இலக்கணப்படி நடனம் ஆடினாள் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது.
மேலும் ஒரு அரிய தகவலை குமரி அனந்தன் எடுத்து விளக்கினார். நாட்டியக் கலையிலே, கொட்டிச்சேதம், கொடுகொட்டி விதம் என்ற நாட்டிய அமைப்புக்கள் வழங்கின. அதாவது, உமையொரு பாகனாக சிவபெருமான் ஆடுகின்ற ஆட்டம். அதிலே, இடது புறம் ஆண்பாதி கண்ணில் கோபம் கனன்று சிவக்க, வலப் புறம் பெண்பாதியில் கண் அன்பு பொங்கும். வலதுகால் ஆடும், இடது கால் அசையாது நிற்கும், வலது சடை அழகாக அப்படியே இருக்க, இடது சடைமுடி கலைந்து அலம்பி ஆடும். |
|
நாட்டியக் கலை மட்டுமல்லாமல், தமிழ் மொழியும் சிறந்து விளங்கியதை சிலப்பதிகாரத்தில் காணலாம் என்கிறார் குமரி அனந்தன். மாதவியின் நடனத்தைப் பற்றிக் கூறும் பொழுது, இளங்கோவடிகள் “ பொற்கொடி ஒன்று நுடங்கி, நுடங்கி ஆடுவது போல்” ஆடினாள் என்கிறார். செயலின் தன்மைக்கேற்ப சொற்களின் ஒலி நயத்தைக் கூட்டி பேசுகின்ற ஆற்றலுக்கும், எழுதுகின்ற ஆற்றலுக்கும் இது எடுத்துக்காட்டாக அமைகிறது.
குமரி அனந்தன் மேலும் பல தகவல்களைக் கூறினார். சிலப்பதிகாரம் முழுமையும் பற்றிப் பேச இரண்டு மணி நேரம் பற்றாத காரணத்தால், அவர் அடுத்த முறை வரும் பொழுது சிலம்பை உடைக்கிறேன் என்ற உறுதி மொழியுடன் விடை பெற்றார்.
தமிழ்மன்றத் தலைவர் சிவா சேஷப்பன் குமரி அனந்தன் அவர்களுக்கு தமிழ் மன்றத்தின் சார்பில் நினைவுப் பட்டையம் அளித்தார். மௌலி அவர்கள் நன்றி நவின்றார். சாந்தி கதிரேசன், ஆஷா மணிவண்ணன், சங்கரி சிவசுப்பிரமணியன், சுமதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் நிகழ்ச்சி அமைப்பிலும், குமரி அனந்தனின் குறுந்தட்டுக்கள் விற்பதிலும் உதவி செய்தார்கள்.
குமரி அனந்தன் மொழிக்குச் செய்யும் சேவையாக, கீழ்கண்ட பணியைச் செய்து கொண்டிருக்கிறார். அதாவது, அன்றாடம் உபயோகிக்கும் வழக்கு மொழி வார்த்தைகள் பல, தூய தமிழ் அகராதியில் வராத காரணத்தால் காலப் போக்கில் மறைந்து போகின்றன. உதாரணமாக, “பம்மாத்து” என்ற சொல் வழக்கு மொழியிலே “போலி” என்ற பொருளில் உபயோகப்படுத்தப் படுகிறது. அது போன்ற வழக்கு மொழி வார்த்தைகளைத் தொகுக்கும் பணியில் குமரி அனந்தன் ஈடுபட்டிருக்கிறார். பேச்சைக் கேட்க வந்தவர்களும், இந்த கட்டுரையைப் படிக்கும் வாசகர்களும் உங்களுக்குத் தெரிந்த வழக்கு மொழி வார்த்தைகளையும், அதன் பொருளையும் அவருக்கு அனுப்பி அந்தச் சேவையில் பங்கு பெறலாம். தர வேண்டிய வலைத்தளம்: http://www.tamilsangam.org/projects/marabu.
மொத்தத்தில் இது மேலும் ஒரு நினைவில் நிற்கும் நிகழ்ச்சியாக நடந்தேறியது.
பாகீரதி சேஷப்பன். புகைப் படங்கள்: சூப்பர் சுதாகர். |
|
|
|
|
|
|
|