|
|
தமிழக அரசு புதிய தலைமைச் செயலகம் அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை மெரீனா கடற்கரை எதிரில் அமைந்துள்ள ராணிமேரி கல்லூரியை இடித்துவிட்டு அங்கு புதிய தலைமைச் செயலகம் உருவாக்கப்படுமென முதல்வர் அறிவித்தார்.
இந்த முடிவுக்குக் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் பலத்த எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். போராட்டத்திலும் ஈடுபட்டார்கள். மாணவர்களின் போராட்டத்துக்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. கல்லூரியின் பழைய மாணவிகள் பலரும் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தார்கள்.
ராணிமேரி கல்லூரி தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கல்லூரிகளில் ஒன்று. 1914இல் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் கல்லூரி. இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்லூரியை இடிப்பதற்குப் பலமான எதிர்ப்பு கிளம்பியிருப்பதில் நியாயம் உண்டு.
ஆனால் அரசு தனது முடிவில் உறுதியாக உள்ளது. அதே நேரம், கல்லூரி இடிக்கப் படக்கூடாது என்பதை வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்துக் கல்லூரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
தற்போது கல்லூரியை இடிப்பதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இருந்தும் 30 ஏக்கர் கொண்ட கல்லூரி வளாகம் இடிக்கப்படுமா? என்ற அச்சம் மாணவர்களிடையே பலமானதாகவே இருந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழக அரசு தலைமை வழக்குரைஞர், வழக்கத்திற்கு மாறாக செய்தியாளர்களைச் சந்தித்து கல்லூரி இடிக்கப்பட்டு அங்குப் புதிய தலைமைச் செயலகம் உருவாகும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
இதற்கிடையே ராணிமேரி கல்லூரி மாணவிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தி.மு.க. இளைஞர் அணித் தலைவர் மு.க.ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்ட 6 எம்.எல்.ஏ.க்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கல்லூரி வளாகத்துக்குள் அத்துமீறி உள் நுழைந்தமை, கொலைமிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் இவர்கள் மீது சுமத்தப் பட்டுள்ளன. தற்போது இவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தி.மு.க. தொண்டர்கள் பரவலாகப் போராட்டத்தில் குதித்தனர். இதில் பலர் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் கைது இரவில் நடைபெற்றமையால் 'இரவு கைது' இன்னும் தொடருமென்ற எதிர்பார்ப்பு இருந்துவருகிறது.
கைதுப் படலத்தின் அடுத்த கட்டமாக பத்திரிகையாளர் 'நக்கீரன்' கோபால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு சுமத்தி யுள்ளது. தற்போது 'பொடா' சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். |
|
'நக்கீரன்' கோபாலை 'பொடா' சட்டத்தின் கீழ் கைது செய்ததன் மூலம், ஊடக செயல்பாட்டாளர்களுக்கு மிரட்டல் விடுத்திருப் பதாகவே கருதப்படுகிறது. இந்தியாவிலேயே 'பொடா' சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டிருக்கும் இரண்டாவது பத்திரிகையாளர் கோபால். இந்தக் கைது நடவடிக்கைக்குப் பத்திரிகையாளர் சங்கங்கள் பல விதங்களிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆட்சிக்கு வந்த இரண்டாண்டு காலத்தில், அ.தி.மு.க. அரசு தமிழகத்தின் செய்தித் தாள்கள், வார இதழ்கள் மீது கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தொடர்ந் திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் கைது, பொடா சட்டத்தைப் பயன்படுத்திப் பழிவாங்கும் நடவடிக்கை, சட்டப்பேரவையில் பேச்சு சுதந்திரம் பறிப்பு உள்ளிட்ட விவகாரங்களுக்கு எதிராகத் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் கண்டனக் கூட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கண்டனக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை. பா.ஜ.க. கூட்டணி அரசிலிருந்து தி.மு.க. விலகினால் தான் தாம் ஆதரவு தெரிவிப்போம் எனக் கூறிவிட்டனர்.
இதற்கிடையில் பொடாவுக்கு எதிராக நடைபெற்ற கூட்டத்தில் பொடா சட்டம் திரும்பப் பெற கோரிக்கை முன் வைக்கப் பட்டுள்ளது. பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு பொடா சட்டம் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவு வதற்காக தமிழக அரசு 50 லட்சம் ரூபாயை நல்கைத் தொகையாக ஒரே தவணையில் அளிக்கிறது.
தமிழ்மொழியைக் கற்பித்தல், கற்றல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய திட்டங்களுக்காக இத்தமிழ் இருக்கை நிறுவப்படுவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
துரைமடன் |
|
|
|
|
|
|
|