|
பல்வேறு போராட்டங்கள் |
|
- துரை.மடன்|நவம்பர் 2002| |
|
|
|
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பு காவிரி ஆணைய முடிவு என்று எதையும் கர்நாடக அரசு பின்பற்றத் தயாராக இல்லை. கர்நாடகத்தின் பல்வேறு தரப்பட்ட பிரிவினரும் தமிழகத்துக்கு தண்ணீர் தரக்கூடாது என்று போராட்டம், ஊர்வலம், நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடக திரைப்படக் கலைஞர்கள் நடிகர் ராஜ்குமார் தலைமையில் போராட்டம் நடத்தினர். இந்தப் பேராட்டம் உறங்கிக் கிடந்த தமிழ் திரைப்பட உலகினரை விழிக்கச் செய்துவிட்டது. பாரதிராஜா தலைமையில் கலைஞர்கள் அணிதிரளத் தொடங்கினர்.
நெய்வேலியில் கடந்த 12ம் தேதி கர்நாடக அரசை கண்டித்து திரைப்பட கலைஞர்கள் பெரும் பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்தினர். நெய்வேலியில் இருந்து கர்நாடகத்துக்கு செல்லும் மின்சாரத்தை தடைசெய்ய வேண்டுமென்ற கோரிக்கையை ஆரம்பம் முதல் நடிகர் ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். சென்னையில் போராட்டம் நடத்துவோம் எனவும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் நடிகர் சங்கம் உள்ளிட்டவை ரஜினியின் இக்கோரிக்கைகளை நிராகரித்துவிட்டன. திட்ட மிட்டபடி நெய்வேலியில்தான் போராட்டம் நடைபெறும் என கண்டிப்பாக கூறிவிட்டன.
இந்நிலையில் நெய்வேலிப் போராட்டம் வெற்றி கரமாக நடைபெற பாரதிராஜா தலைமையிலான ஓர் குழு தமிழக முதல்வரை சந்தித்து தமக்கான பாதுகாப்பை வழங்குமாறு கேட்டுக் கொண்டது. முதல்வரும் அனைத்து உதவிகளும் வழங்குவதாக உறுதிமொழி கொடுத்திருந்தார். இதையடுத்து பாரதிராஜாவின் செயற்பாட்டுக்கு அரசியல் முலாம் பூசும் முயற்சிகள் நடைபெற்றன. அதிமுக பாரதி ராஜாவுக்கு பின்னால் உள்ளதோ என்று சந்தேகம் கொள்ள ஆரம்பித்தது திமுக.
நெய்வேலிப் பேராட்டத்தில் கலந்து கொள்ள மறுத்து வந்த ரஜினி அதே நாளில் தான் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். இவரது போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில் ரஜினி தனது போராட்டத்தை நெய்வேலிப் பேராட்டத்தக்கு அடுத்தநாள் வைத்தால் நடிகர் சங்க உறுப்பினர்களும் கலந்து கொள்ள வாய்ப்புண்டு என்று நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் ரஜினியை கேட்டுக் கொண்டார். இதைக் ஏற்றுக் கொண்ட ரஜினி போராட்டத்தை அடுத்த நாள் வைத்தார்.
நெய்வேலிப் பேராட்டம் எதிர்பார்த்தபடி வெற்றி கரமாக நடைபெற்றது. ஆனால் திமுக, அதிமுக அரசியல் கலைஞர்களையும் பிரித்து விட்டது என்பதையும் காட்டியது. இதுபோல் ரஜினியின் உண்ணாவிரதப் போராட்டத்திலும் நடிகர்கள்/நடிகைகள் அரசியல் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்பதற்கான அறிகுறிகள் இந்தப் பேராட்டத்தில் வெளிப்பட்டது.
******
தமிழகஅரசு மதமாற்ற தடைசட்டம் ஒன்றை அவசரமாக கொண்டுவந்துள்ளது. இந்த சட்டத்துக்கு பெரும்பலான இந்துமத தலைவர்கள்-அமைப்புகள் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் சிறுபான்மை யினத் தலைவர்கள் - அமைப்புகள், கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் யாவும் இச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இச்சட்டம் தவறாகவே பிரயோகிக்கப்பட வாய்ப் புண்டு. குறிப்பாக இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களுக்கு எதிராக பிரயோகிக்க வாய்ப்புண்டு. தற்போது கட்டாய மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகவே இச்சட்டம் தேவையற்றது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனவும் கருத்து தெரிவிக்கின்றனர்.
இச்சட்டத்துக்கு திமுக, காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல்வேறு மனிதஉரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
இச்சட்டத்தை எதிர்த்து போராட்டம் வலுக்கிறது. போராட்டக்குழுவினரை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
****** |
|
பல்கலைக்கழகங்களுடன் அரசு கல்லூரிகளை இணைக்கும் முயற்சிக்கு தொடர்ந்து எதிர்ப்பு ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் வளர்ந்து வருகிறது. அரசு இக்கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய இடமில்லை எனக்கூறி விட்டது. இதனால் அடுத்தகட்ட போராட்டத்துக்கு மாணவர்கள், ஆசிரியர்கள தயாராகிவிட்டனர்.
பல்கலைக்கழகங்களுடன் அரசு கல்லூரிகளை இணைப்பதில் சர்ச்சைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க வேலூரில் திருவள்ளுவர் பல்கலைக் கழகம் விரைவில் தொடங்கப்படும் என்று அரசு கூறுகிறது. இதுவரை சென்னைப் பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வந்த 11 அரசுக் கல்லூரிகள் இப்புதிய பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும்.
******
பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் விற்கப்படும் அரிசியின் விலை முதல் பத்து கிலோ விரை ஒரு கிலோவுக்கு ரூ. 3.50. பத்து கிலோவுக்கு மேல் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ. 6 வசூலிக்கப்படும் என்ற அரசின் முடிவுக்கு மக்களிடையே எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. இதனால் சாதாரண ஏழை மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை அரசு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது. ஒரு யூனிட்டிற்கு 50 பைசா அல்லது குதிரை சக்தி கொண்ட மோட்டாருக்கு வருடத்திற்கு ரூ.600 செலுத்த வேண்டும். அரசின் முடிவு விவசாயிகளுக்கு பலத்த அடியாகவே உள்ளது.
பஞ்சமும் பட்டினியும் தமிழகத்தில் தேசியமயமாகி வரும் காலத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
******
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பா சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டு நூறு நாட்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால் அவரை மீட்பதற்கு தமிழக கர்நாடக அரசுகள் ஒன்றுபட்டு செயற்பட மறுத்து வருகின்றன. காவிரி விவகாரத்தால் இந்தக் கடத்தல் விவகாரம் அமுங்கிவிட்டது.
ஆனால் காலக்கெடு குறித்து வீரப்பனால் அடுத்த காசெட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. நாகப்பா ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். வீரப்பனின் கோரிக்கைகள் என்ன என்பதெல்லாம் இன்னும் தெளிவாகத் தெரிய வில்லை.
துரைமடன் |
|
|
|
|
|
|
|