|
செப்டம்பர் 2008: வாசகர் கடிதம் |
|
- |செப்டம்பர் 2008| |
|
|
|
ஆகஸ்டு 2008 தென்றல் இதழில் வெளிவந்துள்ள பூரணலிங்கம் அவர்கள் பற்றிய விவரங்கள், இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டிய நல்ல பல கருத்துக்கள் கொண்ட அருமையான முன்னோடிக் கட்டுரை. ஆங்கிலம் தமிழ் இரண்டிலும் பாண்டித்தியம் கொண்டிருந்த இவரைப்பற்றித் தெரிந்து கொண்ட பிறகாவது ஆங்கிலவழிக் கல்வியால் தமிழ் தெரியாது என்றோ தமிழ்வழிக் கல்வியால் ஆங்கிலத்தில் புலமை இருக்க முடியாது என்றோ யாரும் வாதிட முடியாது.
சென்ற நூற்றாண்டில் பட்ட வகுப்பில் தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்கெல்லாம் தமிழ் இலக்கிய வரலாறு படிக்கப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த ஒரே புத்தகம் பூரணலிங்கம்பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய இலக்கிய வரலாறு. சென்னைப் பல்கலைகழகத்தில் பட்டவகுப்பில் பகுதி-1 ஆங்கிலமாகவும், பகுதி-2 தமிழ் அல்லது வேறு ஏதாவது ஒரு மொழி படிக்கவேண்டும் என்றிருந்த காலகட்டத்தில் பிற பாடங்களை முதன்மையாகக் கொண்டு [பகுதி-3] படிப்பதற்கு ஆங்கில அறிவுமட்டும் போதும், வேறு மொழிகள் படிப்பது தேவையில்லை என்ற முடிவெடுத்தபோது பூரணலிங்கம் பிள்ளையும் பரிதிமாற்கலைஞர் என்றழைக்கப்பட்ட வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி அவர்களும் வீடுவீடாகச் சென்று மக்களிடம் பேசி உயர்கல்வி கற்றாலும் தாய்மொழி அறிவுக்குத் தடை போடக்கூடாது என்று எடுத்துக் கூறி பட்டவகுப்புவரை மொழிக்கல்வியை நிலைபெறச் செய்த சாதனையைத் தமிழ் நெஞ்சங்கள் என்றைக்குமே நன்றியோடு நினைவில் கொள்ள வேண்டும்.
டாக்டர். அலர்மேலு ரிஷி
***
ஆகஸ்ட் மாத இதழில் அன்புள்ள சிநேகிதியே பகுதியில் வெளியான ஒருவரின் கடிதம் விஷயமாக எண்பது வயதைத் தாண்டியவள் என்ற முறையில் என் மனக்குமுறலை வெளிப்படுத்துகிறேன். நானும் அந்த நாளில் ஒரு M.A. (Litt.) படித்தவள்தான். முடிந்தவரை வேலை பார்த்துவிட்டு, குடும்பத்தைக் கவனிப்பதற்காக வேலையை விட்டேன். தன்னைக் கல்யாணம் செய்து கொண்டு MBA வரை படிக்க வைத்து வேலையும் வாங்கிக்கொடுத்த அன்புள்ள கணவனை விட்டு ஓடும்படியாக ஒரு பெண் செய்கிறாள் என்பதை நினைத்தால் என் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறது. எதையும் காப்பி அடிக்கும் இந்தியர்கள் இந்த மேலைநாட்டுக்கு வந்ததும், தாம் ஏதோ சொர்க்க பூமிக்கு வந்து விட்டதாகவும் இந்திய கலாசாரம் ஒன்றுக்கும் உதவாது என்றும் நினைத்து தங்களது சுயத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, அவர்களின் உடைகளை அணிந்து கொண்டு, மேற்கத்திய கலாசாரத்தை மேற்கொண்டு வாழ வேண்டும் என்று தீர்மானிப்பது வேதனையானது.
அதனால்தான் விவாகரத்துக்கள் இந்தச் சமுதாயத்தில் அதிகரித்துள்ளன. கணவனை வா, போ என்று அழைப்பது, பிறருடன் பேசும்போதும் அவன், இவன் என்று குறிப்பிடுவது அவலம்.
பெண்ணுக்குரிய அடக்கம் போய்விட்டதால் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய குடும்பங்கள் யுத்த களங்களாக மாறி, பெரிய இழப்பைத் தருகின்றன. அனுசரித்துப் போவது என்பது கணவன், மனைவி இருவருக்கும் இருக்க வேண்டும். பெற்றோர், பெரியவர்கள் நல்ல புத்தி சொல்வதைக் கேட்பதில்லை. இதனால் பெண்குலம் தானே தன் தலையில் மண்ணைப் போட்டுக்கொண்டு சமூகத்தையும் சீர் குலைக்கிறது.
கணவனும் மனைவியும் வாழ்க்கை என்ற வண்டிக்கு வேண்டிய இரு மாடுகள். இரு சக்கரங்கள். இவை ஒற்றுமையாகப் போக வேண்டியது வாழ்க்கை நன்றாக அமைவதற்கு மிகவும் அவசியமாகும்.
கங்கா, சான்டா க்ளாரா
***
ஆகஸ்ட் இதழின் 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில் வெளியான ஒரு தமிழன்பரின் கடிதம் கண்டு மிகவும் மன வருத்தத்துடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். இதே விஷயங்களை இந்தியாவிலும் பரவவிட அவர்கள் மேற்கொள்ளும் காரியங்கள் மேலும் வேதனையை அதிகரிக்கிறது.
தன்னைத் தொட்டுத் தாலிகட்டிய கணவன், படிக்க வைத்து, வேலை வாங்கிக் கொடுத்ததற்குப் பிரதியுபகாரமாக அவனை விட்டு ஓடிவிடவும் ஒரு பெண் தயாராக இருக்கிறாள் என்பது பயங்கரமான ஒரு விளைவு.
தலைவிரி கோலமாக, கண்டபடி உடை உடுத்திக் கொண்டு இவர்கள் போவதைப் பார்க்கும்போது என் மனம் கலங்குகிறது. நம் முன்னோர்கள் அக்காலத்தில் ஏட்டுக்கல்வி கூட இல்லாமலே நல்ல வாழ்க்கை நடத்தி வந்தார்கள். சமூகத்தில் நல்ல பெயர் பெற்றார்கள். அதுதான் முக்கியம்.
இவர்களைத் திருத்த ஒரு இயக்கம், நல்ல உள்ளம் படைத்தவர்களால் உருவாக வேண்டும். ஆபாச சினிமா, சின்னத்திரை ஒழிய வேண்டும். இதற்குக் கடவுள் அருள வேண்டும்.
கண்ணன், சன்னிவேல்
*** |
|
நான் சென்றமுறை சான்ஹோசே வந்த போது, 'தென்றல் வாங்கி வருகிறேன் அத்தை' என்று மருமகள் கூறியதும், 'இந்தக் குளிரில் தென்றலா!' என்று சற்று பயந்துதான் போனேன். பின் அது கையில் கிடைத்தவுடன் மகிழ்ந்து, அது குறித்து எழுதிய கருத்துக்கள் தென்றலில் வந்தபோது அதை மதுரையில் என் சக ஆசிரியைகளிடம் காட்டி மகிழ்ந்தது சுகமோ சுகம்.
இப்போது தென்றலைத் தேடித் தேடி ஓய்ந்து தென்றல் அலுவலகத்துக்கு எழுதி என் மகன் பெற்றுத்தந்த ஆகஸ்ட் இதழை நான் ஆனந்தமாய் விரித்தபோது, என்னைக் கவர்ந்த 'ஹரிமொழி' ஹனி மொழியாய்
கரமலர் மொட்டித்து இருதயம் மலர என்று
மாணிக்கவாசகர், தெய்வப்புலவர், பெரியாழ்வார், தாகூர், பாரதி, கம்பன் ஆகிய கவிஞர் பெருமக்களை கண்முன் நிறுத்தி, உணர்வுகளை உருக்கி, உள்ளொளி பெருகச் செய்து, பலமுறை படித்துப் படித்து என் கண்களில் ஆனந்தக் கண்ணீர், தமிழ் மொழிக்கு அபிஷேக நீராய். ஹரி கிருஷ்ணன் எழுதிய தமிழின் நடைக்கும் சேர்த்து அபிஷேக நீராய் ஆராதித்து மகிழ்ந்து பெருமிதம் கொள்ளும் தென்றல் வாசகி...
வே. காந்திமதி, சான்ஹோசே
***
ஆகஸ்ட் 2008 இதழில் வெளிவந்த தமிழ் ஆன்லைன் அறக்கட்டளையின் தொண்டு பாராட்டத்தக்கது. தென்றலைப் படித்து மகிழும் வாசகர்களும் உதவிக்கரம் நீட்டுவார்கள் என நம்புகிறேன்.
'காலத்தின் கோலம்' சிறுகதை தற்காலத் திருமணங்களைச் சித்திரிப்பது போல உள்ளது. இக்கால தம்பதிகள் ஒருவர் புரிந்துகொள்ளுதலைச் சற்று அதிகரித்தால் வாழ்க்கைப் பிரச்சனைகள் தவிர்ந்து, மகிழ்ச்சி அதிகரிக்கும்.
காந்தி சுந்தர் எழுதிய சாதனையாளர் ஹேமா முள்ளூர் விவரம் சுவாரஸ்யமாக இருந்தது.
எங்கள் நண்பரின் கர்ப்பிணி மனைவி தான் விரும்பிச் சாப்பிடும் அவொகேடோவை எப்படிச் சமைப்பது என்றே தெரியவில்லை என்று சொன்னார். உடனே தென்றலில் சரஸ்வதி தியாகராஜனின் அவொகேடோ பக்குவங்களைக் காண்பித்தேன். மகிழ்ந்தார். சரஸ்வதி தியாகராஜனுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
லதா சந்திரமௌலி காலேஜ்வில் (பென்சில்வேனியா)
***
என் பெயர் கற்பகம். நான் சென்னைவாசி. தற்போது நியூஜெர்சியிலுள்ள என் மகளின் வீட்டுக்கு வந்திருக்கிறேன். சமீபத்தில் நான் செப்டம்பர், 2006 தென்றல் இதழைப் படித்தேன். அதில் முன்னோடி பகுதியில் சங்கு சுப்ரமணியன் அவர்களைப் பற்றிய கட்டுரையைப் படித்துவிட்டு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
பெரிய தேசபக்தரும் விடுதலைப் போராட்ட வீரருமான சங்கு சுப்ரமணியன் அவர்களை எனக்குத் தெரியும். ராயப்பேட்டையிலுள்ள அவரது வீட்டின் ஒரு பகுதியில் நான் 1960லிருந்து 1966 வரை குடியிருந்திருக்கிறேன். கட்டுரையைப் படித்தபோது என்னால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காலக்கிரமத்தில் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில்லாமல் போய்விட்டது. இந்தக் கட்டுரையை எழுதியுள்ள அவரது பேத்தியான டாக்டர் வரலட்சுமி நிரஞ்சனின் தொலைபேசி எண்ணை எனக்குத் தரமுடியுமா?
கற்பகம், நியூஜெர்சி
***
சென்ற இரண்டு ஆண்டுகளாக நான் தென்றலை மிகவும் விரும்பிப் படித்து வருகிறேன். ஓர் இதழைக்கூடத் தவறவிட்டதில்லை. நான் குடும்பத்தோடு சான்டா கிளாராவில் வசிக்கிறேன். தமிழ்ச் சுற்றுவட்டாரத்தில் சமீபத்தில் நடந்தவற்றைத் தெரிந்துகொள்ள எனக்குத் தென்றல் மிகவும் உதவியிருக்கிறது. என் ஐந்து வயதுப் பெண் வரைந்த படங்களை நான் தென்றலுக்கு அனுப்பி வைக்க விரும்புகிறேன். தென்றலுக்கு நன்றி கூறுவதோடு அது நீடூழி நிலைத்திருக்க எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சரவணன் ராஜமாணிக்கம், சான்டா கிளாரா (கலி.) |
|
|
|
|
|
|
|