|
டிசம்பர் 2020: வாசகர் கடிதம் |
|
- |டிசம்பர் 2020| |
|
|
|
|
20 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள தென்றல் இதழுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உலகம் உள்ளளவும் தங்கள் இதழ்களின் மணம் குறையாமல் ஒளிவீசி மலர்ந்திருக்க வாழ்த்துகின்றோம்.
சரியான தருணத்தில் தங்களின் 2004ம் வருடத்திய சியாமளா ஹாரிஸ், 2010ம் வருடத்திய கமலா ஹாரிஸ் அவர்களுடனான நேர்காணல்களை வெளியிட்டு, தாங்கள் ஆற்றிக் கொண்டிருக்கும் தமிழ் மக்களின் சேவைகளைச் சிறப்பாக வெளியிட்டுள்ளீர்கள்.
டாக்டர் சியாமளா ஹாரிஸ் அவர்களின் நேர்காணலில், அவர் தமிழ்நாட்டில் பிறந்தாலும், தந்தையின் வேலைநிமித்தமாக வடஇந்தியாவிலும் வளர்ந்த காரணத்தினால் அவரின் பெற்றோர்கள் மூலம் நாட்டுநடப்புக்களில் ஆர்வம் செலுத்தியதையும், அதே நாட்டுப்பற்றின் காரணமாகப் படிக்க இங்கிலாந்து செல்லாமல் 1960ம் வருடம் அமெரிக்காவிலுள்ள பர்க்கெலியில் படிக்கவந்துள்ளதையும் கூறியுள்ளார். அவரின் படிப்பு மட்டுமல்லாது அரசியல் பிரவேசம், பெற்றோர் வளர்த்த முறை, திருமணம், குழந்தைகளின் வளர்ப்பு, பெண் இனவாத சம்பள பிரச்னைகள், தென்னிந்திய கலாசாரத்திலுள்ள பழக்கவழக்கங்களின் அர்த்தங்கள், இந்தியாவிலுள்ள பெண் உரிமை எனப் பலவகை சிறப்புக்களை உணர்த்தியுள்ளதைத் தெரிந்துகொண்டோம்
2010ம் வருடத்திய தென்றலில் நேர்காணல் பகுதியில் கமலா ஹாரிஸ் அவர்களிடம் பேசிய உரையாடலின் சுட்டியையும் இந்த மாதத் தென்றலில் வெளியிட்டிருந்தீர்கள். ஜோ பைடன் அவர்களுடன் இணைந்து ஒருமித்த குரலில் நேர்மறையான கருத்துக்களை முழங்கியதும் அவர்மீது நமக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
இளைஞர் ஹ்ரித்திக் ஜயகிஷ் அவர்களின் அற்புதமான சாதனைகள் வியக்க வைக்கின்றன. சந்தேஷ் புரஸ்கார் விருது பெற்றிருக்கும் ஹரன் பிரசன்னா அவர்களின் நேர்காணல் அருமை. ஏர் வழியே நேர்வழி என்றெண்ணி வாழ்ந்த எளிய வேளாண் குடும்பத்துப் பிள்ளையான எழுத்தாளர் உமையவன் பற்றிய கட்டுரையும் அவரது சிறுகதையும் மிகவும் சிறப்பாக இருந்தன. தமிழுக்காகவும் தமிழ் இலக்கியத்திற்காகவும் வாழ்நாள் பூராவும் உழைத்த புலியூர்க் கேசிகன் அவர்களைத் தமிழ் மக்கள் என்றும் மறக்கக் கூடாத முன்னோடியாக நினைக்கவேண்டும்.
சவால்களை எல்லாம் சந்தித்துக்கொண்டே சிறப்பான முறையில் அனைத்தையும் தந்துகொண்டிருக்கும் தென்றலின் அனைத்துப் பகுதிகளும் மிகவும் ரம்யமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளன. நன்றி. |
|
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிட்டி, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|