|
ஆகஸ்டு 2013: வாசகர் கடிதம் |
|
- |ஆகஸ்டு 2013| |
|
|
|
|
தென்றல் ஜூலை இதழில் வெள்ளக்கால் சுப்ரமணிய முதலியார் பற்றிய கட்டுரையும் டாக்டர். லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன் நேர்காணலும் படித்து மிகவும் மகிழ்ந்தேன்.
ஸி.ரி. ராமன், ஒமாஹா, நெப்ராஸ்கா
*****
நான் சென்னையிலிருந்து வந்துள்ளேன். நான் தென்றலின் தீவிர ரசிகை. தென்றலைப்பற்றி ஒரு சிறிய கவிதை: மாதம் ஒருமுறை வரும் தென்றல் எப்போது வரும் என ஏக்கம் மனதில் வந்ததும் உற்சாகம் வரும் எண்ணத்தில் கையில் கிடைத்ததும் ஆனந்தத்தில் மறந்துவிடுமே மற்ற நினைவுகள் ஒரு கணத்தில்
சுமதி ராதாகிருஷ்ணன், சாரடோகா, கலிஃபோர்னியா
*****
நான் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் 40 ஆண்டுகள் பலதுறைச் செயலர்களுக்கு அந்தரங்க முதன்மைச் தனிச்செயலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது ஹூஸ்டனில் இருக்கும் பெரிய மகன் இல்லத்திற்கு வந்திருக்கிறேன். தென்றல் இதழை எடுத்துவந்து உடனேயே படித்து விட்டேன். பல விஷயங்களை விரிவாகத் தெரியப்படுத்தி யிருக்கிறீர்கள். தாய் மொழியைச் சிறப்பாக இங்கு வாழும் தமிழ்ச் சிறார்களுக்கும், பிறருக்கும் கொண்டு செல்லும் தங்களின் பணி சிறந்தது. என்னுடைய ஆனந்தத்தை வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை. கண்களில் நீர் தளும்ப மனதாரக் குதூகலித்தேன்.
ஜூலை இதழில் மூன்று கதைகளும் முக்கனிகளாக இருந்தன. அதில் ஓரு வாலிபர் தமிழாக்கம் செய்த ஒரு சிறுகதை மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. அவரது தமிழார்வத்திற்கு என் தலை தாழுகிறது. கீதா பென்னெட்டின் சிறுகதையும் நன்றாக இருந்தது. 'வயசு காலத்தில் கதை'யில் எத்தனை காலம் ஆனாலும் இந்த மாமியார்-மருமகளின் உறவுப்பாலம் கேள்விக்குறியாகத்தான் இருக்க வேண்டுமா? இந்தக் கதையில் வரும் மாமியாரரின் மனதில் சில தெளிவான பரந்த சிந்தனைகள் தோன்றியிருப்பின். அவருடைய உறவு மகனிடமும், மருமகளிடமும் இன்னும் இணக்கமாக இருந்தால், எந்தவிதமான பிரச்சினைகளும் வர வாய்ப்பிருக்காது. மாமியார் என்பவர் தன் மகனுடன் வாழவரும் பெண்ணைத் தன்னுடைய மகளாகவே ஏற்றுக் கொண்டால், குடும்பத்தாரோடு மிகவும் சந்தோஷமாக இருக்கலாம். வயதானாலும் வாழ்க்கையில் கற்றுக் கொள்ளவேண்டியவைகள் உண்டு.
ஜெயரமணி, ஹூஸ்டன், டெக்சஸ்
***** |
|
ஜூலை மாதத் தென்றல் அற்புதம். நேர்மை, கடின உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் டாக்டர் வாடணம்குரிச்சி சத்யவாகீஸ்வர லக்ஷ்மணன் பரத்வாஜ் அவர்களின் உரையாடல் மகிழ்ச்சியைத் தந்தது. அவர் குடும்ப விவரங்களும், பயணித்து வந்த வாழ்க்கையும், செய்யும் தொழிலும் வியப்பைத் தருகின்றன. இப்படியும் டாக்டர் தொழிலில் ஒரு பகுதி உண்டா என்பதைத் தென்றல்மூலம் அறியும்போது நம் தமிழரின், இந்தியரின் திறமைகள் எங்கெங்கெல்லாம் நல்ல வழியில் செலவிடப்படுகின்றன என்று பெருமையாக உள்ளது .
யூமா வாசுகி 'பசுவம்மா'வை நன்றாக மொழிபெயர்த்து இருந்தார். விக்கிரமாதித்தனின் 'ஒருமணி நேரம்' உணர்ச்சிமயமான மொழிபெயர்ப்பாக இருந்தது. தற்கால வாழ்க்கை முறைக்குத் தேவையான ஹீலர் பாஸ்கரின் அணுகுமுறை நன்றாக இருக்கிறது. ஹரி கிருஷ்ணன் அவர்களின் ,பேராசிரியர் நினைவுகளில், நன்றி என்பதன் விளக்கம் அருமை. இரண்டு பக்கங்களில் எத்தனை ஆழமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளமுடிகிறது.
தமிழுக்கு அருந் தொண்டாற்றிய வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் பற்றிக் குறிப்பிட்டிருப்பது நன்று. 'தேனக்காவின் திருமணம்' உண்மையான கரிசனம். 'வயசு காலத்தில்' நிகழ்கால நிஜம் புரிந்தது போலிருந்தது. 'எட்டு டாலர் வெண்டைக்காய்', எனக்கு கீதா பென்னெட்டின் எழுத்துக்கள் எப்போதும் பிடிக்கும். திருவிந்தளூர் பரிமள ரங்கநாதர் பற்றிச் சீதா துரைராஜ் சுருக்கமாகவும் விளக்கமாகவும் சொல்லியுள்ளார். திகட்டாத மற்றுமொரு தென்றலை மீண்டும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
சசிரேகா சம்பத்குமார், யூனியன் சிடி, கலிஃபோர்னியா
*****
ஜூன் இதழில் '77வது திருமண நாளன்று' கட்டுரை எழுதிய சிவகுமார் அவர்கள் மூலம் என் நெடுநாளைய ஆசான் ராமச்சந்திரன் அவர்களுடன் தொடர்பு கொண்டேன். ஐம்பதாண்டுகளுக்குப் பின் அவரோடு பேசியது எனக்குப் பெரிய மகிழ்ச்சி. வெவ்வேறு துறைகள் குறித்த அற்புதமான கட்டுரைகளைத் தரும் தென்றலுக்கு எனது நன்றி.
சாரதா பாலசுப்ரமணியம், ஃபோர்ட் மையர்ஸ், ஃப்ளோரிடா |
|
|
|
|
|
|
|