|
செப்டம்பர் 2013: வாசகர் கடிதம் |
|
- |செப்டம்பர் 2013||(1 Comment) |
|
|
|
|
தென்றல் ஜூலை இதழில் டாக்டர் லக்ஷ்மணன் சத்யவாகீஸ்வரன் நேர்காணலை ரசித்துப் படித்தேன். ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரியில் முதுகலை மாணவனாக நான் டாக்டர் ரங்கஸ்வாமி (உடற்கூறியல் பேராசிரியர்) அவர்களிடம் பயின்றதுண்டு. அவரைப்பற்றிப் புகழ்பெற்ற 'கிரேய்ஸ் அனாடமி' பாடநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரா. திருவேங்கடம் மருந்தியல் பேராசிரியர். டாக்டர் சத்யவாகீஸ்வரன் நேர்காணல் இவற்றை என் மனக்கண்முன் கொண்டுவந்தது.
ஆகஸ்ட் இதழில் ராஜாஜியின் 'சபேசன் காஃபி' வெகு சுவாரஸ்யம். அவரே ஒரு காஃபிப் பிரியர். அரசியல்வாதி, தலைவர், கவிஞர், எழுத்தாளர் என்று அவரிடம் இத்தனை திறமைகள் இருந்தது வியக்க வைக்கிறது. அமெரிக்காவிலும் பிற இடங்களிலும் உள்ள தமிழர்கள் தென்றலின் சுகத்தை அனுபவிக்கிறார்கள் என்பது நிச்சயம்.
டாக்டர் அனந்தராமன், சான் ரமோன், கலிஃபோர்னியா
*****
ஆகஸ்ட் இதழில் வெளியான ராஜாஜி பற்றிய கட்டுரை தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலையைச் சிந்திக்க வைக்கிறது. அரசியல் சாக்கடையில் ஊறி, அதையே அற்புத வாசனை என்று எண்ணும் அளவுக்குப் பலர் இருக்கும் பாரத பூமியில், அரசியலை புனிதத் தொண்டுக் களமாக மாற்ற நினைத்த மாமனிதர்களுள் ராஜாஜியும் ஒருவர். ஜே.எஃப். கென்னடி கை கட்டி கனிவுடனும் கவனத்துடனும் அறிவுரை கேட்ட அமைதியின் கலங்கரை விளக்கம் இந்த காந்தியின் சம்பந்தி. புகழுக்கும் போலி கௌரவத்திற்கும் கொஞ்சங்கூட மயங்காதவர். அவர் பற்றிய கட்டுரையை வெளியிட்ட தென்றலுக்கு நன்றி.
டாக்டர் சக்ரபாணி சேதுமாதவன், கிங் ஸ்ட்ரீ, தென் கரோலினா
*****
தென்றல் பத்திரிகையைப் படிக்கும்போது இந்தியாவையே இங்கு பார்க்கிறேன். இதில் வரும் ஒவ்வொரு கதையும் அர்த்தம் உள்ளதாகவும், அறிவுறுத்துவதாகவும், நெஞ்சைத் தொடுவதாகவும் உள்ளது. ஜூலை இதழில் டாக்டர் சத்யவாகீஸ்வரன் நேர்காணல் மூலம் டாக்டர் தொழிலில் இருக்கும் பல்வேறு விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. கீதா பென்னட்டின் கதை சுவாரஸ்யம். தமிழாக்கத்தில் வந்த சிறுகதை 'ஒருமணி நேரம்' நெஞ்சைத் தொட்டது. ஆகஸ்ட் மாத இதழின் 'தழும்புகள்' மூலம் அம்மா என்ற சொல்லுக்கு இவ்வளவு நெஞ்சைத்தொடும் அர்த்தம் உண்டு என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது. 'பூரணி என் மருமகள்' சிறுகதை யாழ்ப்பாணத்தில் நடக்கும் அவலத்தை ஒரு மனிதாபிமான நோக்கில் சொல்லி நெகிழ வைத்தது. ராஜாஜியின் 'சபேசன் காபி' மிகவும் அற்புதமான கதை. இன்னும் எல்லாவற்றைப் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம். இந்தியாவில் வரும் எல்லாத் தமிழ் பத்திரிகைகளையும் விடத் தென்றலின் தரம் மிக உயர்வாக உள்ளது என்பதைக் கட்டாயம் இங்கே தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் பகுதி, நிகழ்வுகள், பண்டிகைகள், விழாக்கள் எனப் பல விஷயங்களையும் தொகுத்து பூரணமான பத்திரிகையாகத் தென்றல் வருவது மனதுக்கு நிறைவாக உள்ளது.
காமாட்சி ரெங்கநாதன், சான் ரமோன், கலிஃபோர்னியா
***** |
|
வட அமெரிக்காவில் வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் 'தென்றலை' சுவாசித்தேன். ஆகஸ்ட் மாத இதழில் தமிழின் முச்சுவையை ரசிக்க முடிந்தது. குறிப்பாக பஞ்சாபில் பிறந்து, சென்னை காவல்துறையில் உயர் அதிகாரியாகப் பொறுப்பு வகித்துக்கொண்டே முத்தமிழுக்கும் ஆற்றிவரும் மகத்தான சேவையை, சென்னையில் வாழ்ந்தும் தெரிந்துகொள்ளாத தகவல்களை, 'தென்றல்' மூலம் அறிந்து பெருமை அடைகிறேன். ராஜாஜி பற்றிய கட்டுரையில், எம்.எஸ். அவர்கள் பாடிய "குறையொன்றுமில்லை" பாடலை பலமுறை ரசித்துக் கேட்டுள்ளபோதும், அதனை எழுதியவர் ராஜாஜி என்று வெளிச்சம் போட்டுக்காட்டியது வெகு சிறப்பு. லக்ஷ்மி சங்கர் அவர்களின் 'அண்ணாவின் காதல் கடிதம்' என்ற சிறுகதையில் வரும் கதாநாயகி, "மாலாவோட ஹைஸ்கூல் கவுன்சலர் வேலைல கனத்த செக் வீட்டுக்குக் கொண்டு வர்றதில்லை" என்பதற்கு, டிஸ்ஃபங்ஷனல் ஃபேமிலியிலிருந்து வந்த மாலாவைப் பார்த்து, "மிஸஸ் மாலா, வில் யூ லிசன் டூ மீ?" என்று கேட்டுவரும் மாணவர்கள் பிரச்சனைக்கு மாற்றுக் கூறும்போது ஏற்பட்ட மனநிறைவுக்கு எந்தப் பெரிய செக்கும் ஈடு இணையாகாது.
மு. பாலகிருஷ்ணன், நார்வுட், மசாசூசட்ஸ்
*****
ஜூன் தென்றல் இதழில் சிவகுமார் எழுதிய 77வது திருமண நாள் கட்டுரைக்கு நான் தென்றல் மூலம் ஒரு கடிதம் எழுதி இருந்தேன். அதைப் படித்துவிட்டு என் தலைமை ஆசிரியரும் அவர் குடும்பத்தினரும் என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த தென்றலுக்கு நன்றி.
பங்கஜம் கணேசன், டெட்ராய்ட், மிச்சிகன்
*****
ஆகஸ்ட் இதழில் வெளிவந்த 'அரிசிகள் பலவிதம்' பற்றி விவரித்த வரலக்ஷ்மி நிரஞ்சன் கடைசிப் பாராவில் கூறிய தோசைப் பாட்டை உண்மையில் கடைப்பிடிக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது குறித்து கவலைப்படுகிறேன். என்னைப்போல் அரிசியைச் சாப்பிடப் பழகியவர்களுக்காக டிப்ஸ் கொடுத்தமைக்கு நன்றி.
கமலா சுந்தர், நியூ ஜெர்சி |
|
|
|
|
|
|
|