|
மார்ச் 2012: வாசகர் கடிதம் |
|
- |மார்ச் 2012| |
|
|
|
|
தென்றல் பிப்ரவரி இதழில் டாக்டர் வரலட்சுமி நிரஞ்சன் எழுதிய 'சென்னையில் மார்கழி' படித்தேன். ஆஹா, என்ன அற்புதமான வர்ணனை? அவர் என்னைச் சென்னைக்கே அழைத்துப் போய்விட்டார். 30 வருடங்களுக்கு முன் மார்கழி சீஸனில் நானும் தோழிகளும் வாணி மஹால், கிருஷ்ண கான சபா என்று அடுத்தடுத்துக் கச்சேரிகளுக்குப் போன காலம் அது. எத்தனை துல்லியமாக ராக ரசனையுடன் அழகாக வர்ணித்து நம்மையும் கச்சேரியில் உட்கார்த்தி விட்டார்!
எப்போது மாதம் முதல் தேதி வரும் என்று தென்றலுக்காகக் காத்திருக்கும் வாசகர்களில் நானும் ஒருத்தி. முன் அட்டையிலிருந்து பின் அட்டைவரை வாசிப்பதில் ஒரு ஆனந்தம். தென்றல் என்னைப் பல ஆண்டுகள் பின்னிட்டுக் கொண்டு போய் தியாகராய நகரில், என் வீட்டுக் கூடத்தில் கலைமகளும் கல்கியும், விகடனும் வாசித்த நாட்களை நினைவுக்குக் கொண்டுவருகிறது. என்ன விசித்திரம்! அதே ஆனந்தம் இப்போதும் எனக்கு கலிஃபோர்னியாவில் கிடைக்கிறது.
என்னுடைய அபிமான எழுத்தாளர் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன். அவருடைய கருத்துக்களும் ஆலோசனைகளும் தடம் புரண்டு கொண்டிருக்கும் இன்றைய சமுதாயத்திற்கு ஒத்தடம் கொடுப்பது போலாகும். நான் ரசிக்கும் சிறுகதை எழுத்தாளர் எல்லே சுவாமிநாதன். அவருடைய நகைச்சுவை நடைக்கு ஒரு பெரிய சபாஷ்.
தமிழ் உலகுக்கு நீங்கள் செய்யும் தொண்டு மகத்தானது. தென்றல் குழுவினர் அனைவருக்கும் அன்பும் நன்றியும் வணக்கமும். |
|
கஸ்தூரி மேனன், சன்னிவேல், கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|