Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2006 Issue
ஆசிரியர் பக்கம் | சாதனையாளர் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சமயம் | சிரிக்க சிரிக்க | நூல் அறிமுகம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மெய் நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 3
- கதிரவன் எழில்மன்னன்|ஜூன் 2006|
Share:
Click Here Enlargeஇதுவரை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்து, முழு நேரத் துப்பறி வாளரானவர் சூர்யா. அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் ஆர்வத்துடன் அவருக்கு உதவி செய்கின்றனர். கிரணின் தொழில் பங்குவர்த்தகம், ஆனால் கணினி விளையாட்டுகளில் மிக்க வெறி. ஷாலினி ஸ்டான்·போர்டு மருத்துவ மனையில் மருத்துவராகவும் Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். சூர்யாவை மானசீகமாகக் காதலித்தாலும், அவர் தன்னை வெளிப்படையாக நெருங்கக் காத்திருக்கிறாள். சிறுவயதில் சூர்யாவோடு பள்ளியில் படித்த நாகநாதன் தன் மெய்நிகர் விளையாட்டு நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்சனையைத் தீர்க்கச் சூர்யாவை அழைத்தார். சூர்யா, கிரண், ஷாலினி மூவரும் அவரது ஆராய்ச்சிக் கூடத்துக்குச் சென்றனர். நாகு மெய்நிகர் தொழில்நுட்பத்தின் நிஜ வாழ்க்கைப் பயன்களை விவரித்தார். சூர்யா நொடி நேரத்தில் அவர்களது சொந்த விஷயங் களை யூகித்துச் சொன்ன திறமையைக் கண்டு நாகுவும் தலைமை விஞ்ஞானி ரிச்சர்டும் வியந்தனர். அதனால் மிகுந்த நம்பிக்கையோடு அவரிடம் தங்கள் பிரச்சனையை விவரித்தனர்...

முப்பரிமாண மெய்நிகர்த் துறையில் தாங்கள் உருவாக்கும் தொழில்நுட்பத்தைப் பற்றி விளக்க ஆரம்பித்த ரிச்சர்டும் நாகுவும், தங்கள் செல்லப் பிள்ளையின் சாதனை களைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பெற்றோரைப் போன்ற பெருமிதத்துடன் விவரித்தனர்.

ரிச்சர்ட்தான் ஆரம்பித்தார். "இந்த மூன்று பரிமாண மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பற்றி எவ்வளவு வேணா சொல்லிக்கிட்டே போகலாம். ஆனா அதனோட மகத்து வத்துக்கு இணையே கிடையாது. புரியவும் புரியாது. நீங்க அதை நேரிடையா அனுபவிச்ச பின்னால, நான் அதன் அடிப்படை என்னன்னு விளக்கினா நல்லாப் புரியும். என்ன சொல்றீங்க நாகு?"

நாகு உற்சாகத்துடன் குதித்தார். "வாவ்! பிரமாதமான யோசனை! எனக்குத் தோணாமப் போச்சே. சரி, யார் தயாரா இருக்கீங்க?" என்றார்.

கிரண் வழக்கம் போல் முந்திரிக் கொட்டை யாக "ஊ... ஊ... ஊ... பிக் மீ, பிக் மீ! நான் வரேன்" என்று குதித்தான்.

ரிச்சர்ட் முறுவலுடன், "ஏன், நாம் எல்லாருமே சேர்ந்து அனுபவிக்கலாமே? சொல்லப் போனா, இப்படி வெற்று அறையில சும்மா பேசறதை விட எல்லாரும் மெய்நிகர் மீட்டிங்கா சேர்ந்து பேசினா என்ன?"

சூர்யா ஆமோதித்தார். "இன்னொரு பிரமாதமான யோசனை ரிச்சர்ட். சபாஷ்!" என்றார்.

ரிச்சர்ட் அனைவரையும் மெய்நிகர் சாதனங்கள் வைத்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மலைக்க வைக்கும் அளவுக்கு விதவிதமான சாதனங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

ஒரு பக்கம் விண்வெளி வீரர்கள் அணிந்து கொள்ளும் ஆடைபோல் பளபளவென ஜிகினாவாக இருந்த இருந்த முழு உடல் உடுப்புக்கள் பல அளவுகளில் வரிசை வரிசையாகத் தொங்கிக்கொண்டிருந்தன. இன்னொரு பக்கம் தலைமேல் மாட்டிக் கொண்டு முகத்தை மட்டும் மறைக்கும் படியாக இருந்த விசித்திரமான முகமூடிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. வேறொரு பக்கம், தடிமனான கையுறைகள் இருந்தன. எல்லாவற்றிலும் மின்கம்பிகள் இணைக்கப் பட்டு நீட்டிக் கொண்டிருந்தன.

ரிச்சர்ட் மற்ற யாவருக்கும் எல்லாச் சாதனங்களையும் எடுத்துக் கொடுத்துவிட்டு தானும் அணிந்து கொள்ள ஆரம்பித்தார்.

ஷாலினி முழு உடல் உடுப்பை அணிந்து கொண்டு விட்டு முகமூடியை எடுத்துப் பல விதமாகத் திருப்பிப் பார்த்தாள். அது அவள் அதுவரை பார்த்திராத வகையில் விசித்திரமாக இருந்தது. அது தலை முழுவதும் மூடுவதாக இல்லை. முகத்தைக் கூட முழுவதும் மூடுவதாக இல்லை. கண்களை மறைக்கும் படியான இரண்டு தடிமனான வட்டங்கள் இருந்தன. அவற்றின் உள்பக்கத்தில் இரண்டு கண்ணாடி லென்ஸ்கள் இருந்தன. அவற்றின் மூலம் ஊடுருவி வெளியில் பார்க்க முடியவில்லை.

வட்டங்களின் வெளிப்புறத்தில் முழுக் கருப்பாக, சுற்றுப்புற ஒளி சற்றும் உள்ளே புகுந்துவிடாமல் கண்களைச் சுற்றி முழுவதும் மறைக்கும்படியான காப்புத் தகடுகள் இருந்தன.

நாகு நகைத்தார். "என்ன ஷாலினி, அது வழியாப் பார்க்க முடியலையேன்னு குழம்பறையா? அது வெளியில பாக்கறத்துக் காக இல்லை. கண்ணுக்குள்ள பாக்கறது." என்றார்.

ஷாலினியின் குழப்பம் அதிகரித்தது. "கண்ணுக்குள்ள பாக்கறதா? அதெப்படி!"

ரிச்சர்ட் விளக்கினார். "அதுக்குள்ள ரெண்டு பக்கத்துலயும் லென்ஸ் இருக் கில்லயா? அவற்றின் வழியே உங்க விழித்திரை (Retina) மேலயே விழறாமாதிரி நிழற்படங்களைப் ப்ரொஜெக்ட் செய்யுது. ஒவ்வொரு கண்ணுக்கும், அதோட கோணத்துலேந்து பாக்கறா மாதிரி கொஞ்சம் வித்தியாசமான படம் காட்டப்படுது. அதுனால, முப்பரிமாணப் (3D) படமா அது உங்க மூளைக்குத் தோணும்."

கிரண் உற்சாகத்தோடு, "ஹையா! நான் நிறைய 3D iMAX படம் பாத்திருக்கேன். அந்த மாதிரி இருக்கும் போலிருக்கு" என்றான்.

நாகு சிரித்தார். "சே, சே. கிரண் நீ ரொம்ப மட்டமா எடை போட்டுட்டே. இது அந்த மாதிரி முன்னால இருக்கற ஒரு சமதளத் திரையில சும்மா முன்னாடியே பிடிச்சு ஒட்டற படம் தெரியறா மாதிரி இல்லை. நம்ம கண்கள் முன்பக்கம் பாக்கறது மட்டுமல்லாம, பக்கவாட்டுலயும் எவ்வளவு பாக்க முடியுமோ அத்தனைக் கோணமும் தெரியறா மாதிரி. நாம அந்த சுற்றுப்புறத்து நடுவுலயே இருக்கோம்கற உணர்வே வரும். மேலும், நாம நகரறச்சே, சுத்திப் பாக்கறச்சே மெய்-நேரத்துல (Real Time) எப்படி நம்ம கண்கள் பார்க்குமோ அதே மாதிரியான மாற்றங் களைக் காட்டும். நான் சொன்னா சரியாத் தெரியாது. அனுபவிச்சாத்தான் தெரியும்" என்றார்.

கிரண் வாய் பிளந்தபடி, "வாவ், கேட்கவே பிரமாதமே இருக்கே! எனக்கு பொறுக்க முடியலை, ஆரம்பிக்கலாம் வாங்க" என்று அவசரப்படுத்தினான்.

ஆனால் ஷாலினி தன் சோதனையை இன்னும் முடித்தபாடில்லை. அந்த முகமூடி யின் மூக்குப்பகுதியில் இருந்த வினோதமான அமைப்புக்களை ஆராய்ந்துக் கொண்டிருந் தாள். மூக்கின்மேல் அமரும் பாகத்தில் வட்டமான இன்னொரு பாகம் பொருத்தப் பட்டிருந்தது. அதன் வெளிப்புறத்திலும், மூக்குப் பக்கத்தில் வரும் உள்புறத்திலும் சிறிது சிறிதாகப் பல துளைகள் இருந்தன. ஆனால் அவற்றின் மூலமும் வெளியில் பார்க்க முடியவில்லை.

ஷாலினி ரிச்சர்டைக் கேள்விக்குறியுடன் நோக்கவும், அவர் தலையாட்டி ஆமோதித்து விட்டு விளக்கினார். "ஆமாம், ஷாலினி. அது நீ நினைக்கறதே தான். அதன் மூலம் நாங்க சில வாசனைகளை அவ்வப்போது அனுப்புவோம். இருக்கற சுற்றுச் சூழலின் முழு உணர்வையும் அனுபவிக்க வாச உணர்வும் மிக முக்கியம்னு எங்க ஆராய்ச்சி கள் காட்டியிருக்கு" என்றார்.

கிரணும் முகமூடிக் கருவியைத் திருப்பிப் பார்த்துக்கொண்டிருந்தான். தலைமேல் அமர்ந்த தோல் மூடிய உலோகப் பட்டையில் பொருத்தப்பட்டு, இருபுறமும் காதுகளை முழுவதும் மூடக் கூடியதாக இருந்த இரு பாகங்களைப் பார்த்துவிட்டு, "ஓ! இதைப் பத்தி ஒண்ணும் சொல்லவே வேண்டாம். வெளிச் சத்தத்தை முழுசாத் தடுத்து, நீங்க அனுப்பற ஒலிகளை மட்டும் கேட்கறா மாதிரியா இருக்கற ஹெட்·போன்கள், அதானே? என்கிட்டேகூட போஸ் செய்யற இந்த மாதிரியான ஹெட்·போன்கள் இருக்கே" என்றான்.

ஷாலினி முறுவலுடன் நக்கலாக, "அடிடா சக்கைன்னான்னாம். அதை மட்டும் எவ்வளவு சாமர்த்தியமா கண்டுபிடிச்சிட்டே கிரண். உனக்கும் டாக்டர் பட்டம் குடுத்துட வேண்டியதுதான்" என்றாள்.

கிரண் சூடாக, "அங்கமட்டும் என்ன வாழுதாம்? மூக்குல மூடினா வாசனை அனுப்பறதுன்னு தெரியாதா என்ன!" என்று கூறிவிட்டு மேலும் எதோ சொல்லப் போனவன், உடையின் உடல்முழுதிலும், கையுறைகளிலும் பதிக்கப்பட்டிருந்த சிறுசிறு வட்டங்களைக் கவனித்துவிட்டு, "இதெல் லாம் என்ன?" என்றான்.

ரிச்சர்ட் விளக்கினார். "மெய்நிகர் விளையாட்டுகளில முன்னாடியே ஒளி, ஒலி உணர்வுகளுக்குத் தேவையானபடி சில முன்னேற்றங்கள் இருந்திருக்கு. இப்பதான் வாச உணர்வு பத்தி சொன்னேன். இது அதைவிடக் கொஞ்சம் முன்னேறியது. ஸ்பரிச உணர்வையும் தூண்டக் கூடியது."

கிரண் பரபரத்தான். "என்கிட்ட கூட அதிர்வு (rumble) கன்ட்ரோலர் இருக்கே, அந்த மாதிரியா?"

"அதெல்லாம் சிறுபிள்ளைத் தனமானது கிரண். இது அதைவிடப் பலமடங்கு அதிக சக்தி வாய்ந்தது. சொல்லுங்க ரிச்சர்ட்!" என்றார் நாகு.

ரிச்சர்ட் தலையாட்டி ஆமோதித்தார். "ஆமாம் கிரண். நீ சொல்றதுல ரொம்ப சிறிய அளவுக்குத்தான் ஸ்பரிஸ உணர் வைத் தூண்டமுடியும். எதோ கார் ஸ்டியரிங் வீல் பிடிச்ச உணர்வுதான் கிடைக்கும். இந்த சாதனத்தால் நாம நிஜவாழ்வுல என்ன ஸ்பரி சங்களை உணரமுடியுமோ அதையெல்லாம் உணரமுடியும். உணர்த்தவும் முடியும். இதை ஹேப்டிக்ஸ்னு (haptics) சொல்வாங்க. இந்தக் கையுறையில மட்டுமே நூற்றுக்கணக்கான ஸென்ஸர்களும் ஆக்சுவேட்டர்களும் இருக்கு. ஒவ்வோரு விரலும் எந்த மாதிரி மடங்கியிருக்குன்னு கம்ப்யூட்டரால உணர முடியும். மேலும், நீங்க எந்த மாதிரி ஸ்பரிசம் உணரணுமோ அதை தத்ரூபமா உருவாக்க முடியும்.
ஊசி குத்தறமாதிரி கூடத் துல்லியமாக் குடுக்கமுடியும். சூடு, குளிர் எல்லாமே உணர வைக்கலாம். அதே மாதிரி உடல் முழுக்க ஆயிரக்கணக்கான இடங்களிலே பதிக்கப்பட்டிருக்கு. ஆனாலும் முன்பு இருந்தபடி ரொம்ப கனமா, தடிமனா இல்லாம, மெல்லிசா, நாம போட்டுக்கற மெல்லிய கையுறை, உடைகள் மாதிரியே இருக்கறபடி செஞ்சிருக்கோம்" என்றார்.

ஷாலினி ஆர்வத்துடன், "ஆச்சரியமா இருக்கே. இந்த ஹேப்டிக்ஸை எப்படிப் பயன்படுத்துவது?" என்றாள்.

கிரண் துள்ளினான். "எப்படிப் பயன் படுத்துவதா! என்ன அப்படிக் கேட்டுட்டே ஷாலூ, வீடியோ விளையாட்டுகளிலே இந்தமாதிரி இருந்தா... ஆஹா! எவ்வளவு பிரமாதம்! கார் ரேஸிங், பறக்கும் ஸிமுலேட்டர், கைச்சண்டை விளையாட்டுக் கள் இதுலெல்லாம் நிஜமாவே செய்யறா மாதிரி இருக்கும். பிரமாதம்! கால்·ப் தடியைத் தூக்கி அடிச்சா எப்படி இருக்கும், கூடைப் பந்தைத் தூக்கிப் போட்டா எப்படி இருக்கும்னு அப்படியே உணரலாமே! நான் வீட்டுக்குள்ளே இருந்துக்கிட்டே என்னோட கால்·ப் ஸ்விங்கைப் பயிற்சி செஞ்சு இன்னும் நல்லதாக்கிக்கலாம்" என்றான்.
"உண்மைதான் கிரண். ஆனா, இது மெய்நிகர் விளையாட்டுக்களுக்கு மட்டும் உதவியில்லை. இதோ இருக்காங்களே ஷாலினி, அவங்க மருத்துவத் துறையிலகூட ரொம்பப் பயனிருக்கு. மருத்துவப் பட்டம் பெற்றுவிட்டுப் புதிதாகப் பயிற்சி பெறுபவர் களுக்கு, சில சிகிச்சை நுட்பங்களை நோயாளிகள் மேலயே செய்வதற்கு முன் னாடி மெய்நிகர் சாதனத்தில் பயிலமுடியும். உதாரணமாக, தொண்டைக்குழாய் வழியாக, இதயத்துக்கு ஒரு கதீட்டரை மெதுவாக நுழைக்கப் பயிற்சி செய்யலாம். இந்தக் கையுறைகளை அணிந்து கொண்டு ஒரு பயிற்சி சாதனத்துக்குள் கதீட்டரை நுழைத்தால் அங்கங்கு அது உடலுக்குள் எங்கு இடிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு, கண் திரையில் அது உடலுக்குள் எங்கு போகிறது என்று பார்த்துக் கொண்டு பயிற்சி செய்தால் உண்மை நோயாளி களுக்குச் செய்யும்போது தவறே இல்லாமல் செய்ய முடியும்" என்றார் ரிச்சர்ட் புன்னகையோடு.

ஷாலினி குதூகலித்தாள். "பிரமாதம்! ப்ரோப் முனையில இருக்கற குட்டி காமிரா வழியா மானிட்டர் திரையில பாக்கற வசதி இப்பவே இருக்கு. ஆனா மெய்நிகர் முறையில சாதனத்துலயே முன்பயிற்சி செய்ய முடியறதால ரொம்பவே பலனிருக்கும்!"

ரிச்சர்ட் தொடர்ந்தார், "மெய்நிகர் தொழில்நுட்பம் பாக்கறதையும் முன்னேற்றி யிருக்கு! நீங்க சொல்ற எண்டாஸ்கோப் ப்ரோப் முனையில் இருக்கற காமிராவில தெரியறதை முப்பரிமாணத்துல பாக்க முடியும். மேலும் உடம்புல எங்கயாவது இடிச்சா ரத்தம் கசியறா மாதிரியும் தெரியும். ப்ரோபை எடுத்து சுத்தம் பண்ணிட்டு, திரும்பச் செய்யணும். தொண்டையில எங்கயாவது குத்தினா, மெய்நிகர் நோயாளி இருமறா மாதிரி கூட செய்யலாம்"
ஷாலினி வியப்புடன் தலையசைத்துக் கொண்டு, "இது நிச்சயமா மருத்துவப் பயிற்சியை ஒரு புது உயரத்துக்குக் கொண்டுபோய்டும். பிரமாதம்!" என்றாள்.

சூர்யாவும் ஆமோதித்து, தன் துறையில் இருக்கக்கூடிய பயனைப் பற்றிக் கூறினார். "தொழிற்சாலை உற்பத்தித் துறையிலகூடப் புதுசா வர தொழிலாளிகளுக்குப் பயிற்சி யளிக்க இது உதவும். ஏன், ரொம்ப அனுபவமுள்ள தொழிலாளிகளுக்குப் புதுசா வர உயர் தொழில்நுட்பக் கருவிகளை எப்படிப் பயன்படுத்தறதுன்னு கத்துக்கறத் துக்கும் இது ரொம்ப உதவியா இருக்கும்."

நாகு பெருமிதத்துடன் சூர்யாவின் முதுகில் ஒரு பலத்த ஷொட்டுவிட்டார்! "சபாஷ் சூர்யா, சரியா பாயின்ட்டைப் புடிச்சுட்டே. ஏற்கனவே நாங்க சில உற்பத்தி நிறுவனங் களோட இந்த மெய்நிகர்த் தொழில் நுட்பத்தை அவங்க எப்படிப் பயன்படுத்த முடியும்னு பேசிக்கிட்டிருக்கோம்"

அப்போது, தன் கையிலிருந்த தலைக் கருவியைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்த கிரண் திடீரெனத் தன் கையிலிருந்த சாதனத்தின் மேல் பகுதியிலிருந்து மின் கம்பிகளால் பிணைக்கப் பட்டுத் தொங்கிக் கொண் டிருந்த வெள்ளையான சில சிறு வட்டங் களைப் பார்த்து விட்டு, "ஹை! இது என்ன?" என்றான்.

நாகு பெருமிதத்துடன், "கிரண், உணர்வு களைப்பத்தி மட்டும் பேசிக்கிட்டிருந்தோம் இல்லையா? இது அதைவிடப் பெரிதும் முன்னேறியது. சொல்லுங்க ரிச்சர்ட்" என்றார்.

ரிச்சர்டும் பெருமையுடன் விவரிக்க ஆரம்பித்தார், "ஆமாம் கிரண்! இது வரைக்கும் நீங்க பேசிக்கிட்டிருந்ததெல்லாம் வெறும் உடல் சம்பந்தப்பட்ட உணர்வுகள் பத்தித்தான். ஆனா இது அந்த மாதிரி இல்லை. அதையெல்லாம் கடந்து நேரடியா உங்க நினைவுகளுக்கே தொடர்பு கொடுக் கறது" என்றார்.

ஷாலினி மிக்க ஆர்வத்துடன், "நினைவு களுக்கே தொடர்பா? அது எப்படி?!" என்றாள்.

"இங்கே தொங்கிக்கிட்டிருக்கற வட்டங் களும், தலைப்பட்டையில் பதிச்சிருக்கற வட்டங்களும் பாருங்க. இது தலையோட மின்தொடர்பு கொடுக்குது. அது வழியா, மூளை வேலை செய்யறச்சே உருவாகற மின்அலைகளை அளந்து அதுக்கேத்த மாதிரியான ஸிக்னல்களை அனுப்புது" என்றார் ரிச்சர்ட்.

சூர்யா, "அந்த ஸிக்னல்களை வச்சுக் கணிச்சு, அதுக்கேத்த மாதிரி மெய்நிகர் உலகத்துல நடக்கறதை மாத்தறீங்களா?" என்றார்.

ஆனாலும் ஷாலினி சந்தேகத்துடன் தொடர்ந்தாள். "ஆனா அந்த ஸிக்னல் களால மனுஷங்க என்ன நினைக்கறாங் கன்னு எப்படித் தெரிஞ்சுக்க முடியும். இதென்ன மைன்ட் ரீடிங்கா? நம்ப முடியலையே!"
கிரண் துள்ளினான். "ஆ, மைன்ட் ரீடிங்! இது ஸ்டார் வார்ஸ்ல வர ஜெடை மாதிரி இருக்கு. யோடா, ஓபி வான் கனூபி மாதிரி யார் கூடவாது விளையாட்டுல சண்டை போடறச்சே தொடாமயே மனசால நினைச்சு தூக்கிப் போட்டுடலாமா!" என்றான்.

நாகு முறுவலுடன் "அந்த அளவுக்கு இன்னும் போயிடலை கிரண்! ஆனா கொஞ்சம் டைம் குடுங்க. மைன்ட் ரீடிங்கை யும் பண்ணிடலாம்" என்றார்.

கிரண் ஏமாற்றத்துடன், "ஓ! இன்னும் இல்லையா? அப்படின்னா இதை எப்படிப் பயன்படுத்தறீங்க இப்போ?" என்றான்.

ரிச்சர்ட் விளக்கினார். "இதுவரைக்கும் நாங்க செய்ய முடிஞ்சிருக்கறது மனுஷங் களோட மனநிலை எப்படி இருக்குன்னு கண்டுபிடிக்கறது. அதாவது, இதை அணிஞ்சிக் கிட்டிருக்கறவங்க ரொம்ப பரபரப்பா இருக்காங்களா, இல்லை அமைதியா இருக்காங்களான்னு தெரியும். அதுக்கேத்தா மாதிரி, கைக்கும் உடம்புக்கும் ஹேப்டிக் ·பீட்பேக், அதாவது அவங்களுக்கும் தெரியறா மாதிரி தொடு உணர்வுல அனுப்பறோம். உதாரணமா, கார் ஓட்டற விளையாட்டா இருந்தா, ரொம்ப பரபரப்பு இருந்தா ஸ்டீயரிங்வீல் ரொம்ப அதிரும், காரை சரியாக் கன்ட்ரோல் பண்ண முடியாது. அவங்க அமைதியாக ஆனாக்க, சரியா ஓட்ட முடியும். அதை சோதனை செஞ்சு கார் ஓட்டறப்போ அமைதி யாயிருக்கப் பழக்கப்படுத்த முடியும்னு காட்டியிருக்கோம்" என்றார்.

ஷாலினி, "அப்ப அது நிச்சயமா கிரணுக் குத் தேவைதான். கிரண், சீக்கிரம் போய் இதைப் போட்டுக்கிட்டு கார் விளையாட்டு ஆடு, போ, போ!" என்று கேலியாக விரட்டினாள்.

கிரண் முகத்தைச் சுளித்துப் பழித்துக் காட்டிவிட்டு, "கார் ஓட்டறவங்க, தூங்கியே போற மாதிரி கிழமா ஒட்டினா என்ன பண்ணும்? ஷாக் அடிச்சு எழுப்புமோ. அதுதான் ஷாலினிக்குப் பொருந்தும்" என்றான்.
அவர்களின் விளையாட்டுப் பேச்சைக் கண்டு சூர்யா முறுவலித்தார். ஆனால் ரிச்சர்ட் மற்றும் நாகு முகத்தில் ஏதோ ஒரு விதச் சுளிப்பு ஏறியதையும் கவனித்தார்.

ரிச்சர்ட் சுதாரித்துக் கொண்டு தொடர்ந் தார். "ஷாலினி, இதை உங்க துறையிலயும் பயன்படுத்தலாம். கவனக் குறைவுப் பரபரப்பு நோய் (Attention Deficit HyperActitivity Disorder-ADHD) இருக்கற சிறுவயதினருக்கு இதை வச்சு எப்படித் தங்களை அமைதிப் படுத்திக்கிட்டு, செய்யறதுல கவனம் செலுத்தறதுன்னு பழக்கவும் ஆராய்ச்சி நடந்துகிட்டிருக்கு" என்றார்.

ஷாலினி, "ஓ, ஆமாம்! நான்கூட எதோ EEG Feedback-னு ஆராய்ச்சித் தாள்களில படிச்சமாதிரி இப்ப கவனம் வருது. இதுவாத்தான் இருக்கணும். இதை எங்க ஆராய்ச்சிக் கூடத்துக்கும் கொண்டுபோக முயற்சி பண்றேன். இன்னும் சொல்லப் போனா இதுவும் கிரணுக்குப் பயன்படலாம். எங்க வீட்டுக்கும் எடுத்துக்கிட்டுப் போகலாமா?" என்றாள்.

கிரண், "ஏய், வாட்ச் இட்! உனக்குத்தான் மென்ட்டல் ஸ்டிமுலேஷன் வேணும், அதை வேணா இருக்கான்னு கேட்டுப் பாக்கலாம்!" என்றான் அதற்கு நாகுவும் ரிச்சர்டும் அளித்த பதிலைக் கேட்டு ஷாலினி அதிர்ந்தே போனாள்!

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline