|
|
|
|
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். மூவரும் அக்வாமரீன் என்னும் நிறுவனத்துக்குச் செல்கின்றனர். அங்கு வேலை செய்யும் யாவ்னா என்ற இளம்பெண் மற்றும் நிறுவனரான தாமஸ் மார்ஷ் இருவரையும் சந்தித்தனர். தாமஸின் குடும்பத்தைப் பற்றி சூர்யா சரியாக யூகித்துத் தாமஸுக்குத் தன்மேல் பெரும் நம்பிக்கை பிறக்கச் செய்தார். யாவ்னாவும் தாமஸும், நீருப்பகற்றல் துறையின் சில நவீன நுட்பங்களைப் பற்றியும் அக்வாமரீனின் சில தனிப்பட்ட சொந்த நுட்பங்களைப் பற்றியும் விவரித்தனர். அக்வாமரீனின் சொந்த நுட்பங்கள் சேர்க்கப்பட்ட உப்பகற்றல் தளம் பழைய தளங்களைவிடப் பலமடங்கு அதிக தூய நீரை, மிகக் குறைந்த செலவில், மிகச் சிறிய சாதனத்தைக் கொண்டு உற்பத்தி செய்து உலகின் தூயநீர்த் தேவையைப் பூர்த்திக்க முடியும் என்று விளக்கினர். அதில் என்ன பிரச்சனை என்று ஆராய்வதற்காக, அக்வாமரீனின் மத்திய கன்ட்ரோல் கூடத்துக்குத் தாமஸ் அழைத்துச் சென்றார். அங்குத் தலைமை விஞ்ஞானியான ஜேம்ஸ் கோவல்ஸ்கியுடன் சேர்ந்து உப்பகற்றல் சாதனப் பழுது விவரங்களை சூர்யா ஆராயத் தொடங்கினார். பலமுறை முயன்று, பழுதுகள் ரேண்டமாக அமையாமல், ஒரு வினோதமான வரிசையில் வருவதாகக் காண்பித்து, யாரோ வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்று சூர்யா நீரூபித்தார். மேற்கொண்டு....
*****
பழுதுகளை வினோதமான வரிசையில் வருமாறு செய்து தங்களை வெளிப்படுத்திக் கொண்ட காரண கர்த்தாக்களின் குணாதிசயங்கள் தனக்கு ஓரளவு புரிந்து விட்டதாக சூர்யா கூறியதும், தாமஸும் யாவ்னாவும் அதை விவரிக்குமாறு கெஞ்சினர். ஓரளவு கூறுவதுதான் நல்லது என்று எச்சரித்த சூர்யா, சற்றே தன் கருத்துப் போக்கை விளக்கலானார்.
"சரி, முதல்ல நாம பார்க்க வேண்டியது என்னன்னா, இதைச் செஞ்சிருக்கறவங்க உங்க நுட்பங்கள் மற்றும் அவை அடங்கிய உப்பகற்றல் சாதன நுணுக்கங்களை இண்டு இடுக்கு எல்லாத்தையும் சேத்து விவரமாத் தெரிஞ்சவங்களா இருக்கணும். அப்படியில்லன்னா இந்த மாதிரி பழுதுகளை ஒரு வினோத வரிசையில வரா மாதிரி செஞ்சிருக்க முடியாது. அது மட்டுமில்லை. அப்படி செஞ்சு, உங்களோட மிகத் திறன் வாய்ந்த நிபுணர்கள்கூட சட்டுன்னு கண்டுபிடிக்க முடியாதபடித் தங்கள் தடயங்களை ரொம்ப புத்திசாலித்தனமா மறைச்சிருக்காங்க. இதுக்கு வேண்டிய அளவு பலவிதத் திறமைகள் உங்கக் குழுவுக்குள்ள யாருக்காவதுதான் இருக்க முடியுங்கறது என் கணிப்பு."
ஜேம்ஸ் குழப்பத்துடன் மறுதலித்தார். "எங்க குழுவில திறமை இருக்கலாம், ஒத்துக்கறேன். ஆனா, அவங்க செய்யற வாய்ப்பு ரொம்பக் கம்மின்னு தோணுது. குழுவில தாமஸ் மற்றும் நான், ரெண்டு பேருக்குத்தான் நுட்பங்கள் மற்றும் சாதனத்தோட முழு விவரமும் தெரியும். மத்த உறுப்பினர்கள் எல்லாம் ஒரு நுட்பம், இல்லன்னா ஒரு அம்சம் பத்திய நிபுணர்கள்தான். அவங்க துறையில எங்க ரெண்டு பேரையும் விட அவங்களுக்கு நல்லாத் தெரியும். ஆனா இப்படி எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு செய்யறதுங்கறது ரொம்பப் பெரிய சாதனையாத் தோணுது."
தாமஸூம் மறுத்தார், "அது மட்டுமில்லை. அவங்க ஏன் அப்படி செய்யணும்? இந்த சாதனம் சரியா வேலை செஞ்சு வெற்றி கண்டா அதுல கிடைக்கற பேரும், புகழும், பணலாபமும் மிக மிக அதிகம். அக்வாமரீன்ல எல்லாருக்கும் அதிகப் பங்கு வினியோகிச்சிருக்கேன். அதையெல்லாம் விட்டெறிஞ்சுட்டு இப்படி உடைக்கறதுனால என்ன லாபம் இருக்க முடியும்? இதை வெளியாட்கள்தான் செஞ்சிருக்கணும்."
கிரண் உக்கும் எனக் கனைத்து இடைமறித்தான். "எங்க ஒவ்வொரு கேஸ்லயும் இதே பாட்டுத்தான் பாடுவாங்க. அப்புறம் கூட இருந்தே குழி பறிக்கறதுதான் பொதுவா நடந்திருக்கு. இவ்வளவு பாதுகாப்பையும் மீறி வெளியாட்கள் எப்படி செய்ய முடியும்?"
சூர்யா யோசனையுடன் தொடர்ந்தார். "இருந்தாலும், ஜேம்ஸ், தாமஸ் சொல்றா மாதிரி ஒரு அம்சம் மட்டும் தெரிஞ்ச நிபுணர் எப்படி இதைச் செஞ்சிருக்க முடியுங்கறதும் சரியான கேள்விதான். ஹூம்.... நான் உங்க குழு உறுப்பினர்களோட பேசித்தான் ஆழமா விசாரிக்கணும். நாலு பேரோடவாவது பேசியாகணும். ஒவ்வொரு நுட்பத்துக்கான நிபுணர் ஒருவர், மற்றும் மொத்த சாதனத்தின் செயல்பாட்டு முறை தெரிஞ்ச ஆபரேஷன் மேனேஜர். கூப்பிடறீங்களா ப்ளீஸ்!"
தாமஸ் "அதுக்கென்ன கூப்பிட்டாப் போச்சு. நீங்க குறிப்பிட்ட நாலு உறுப்பினர்களில ரொம்ப சுலபமா சொல்லணும்னா, கடைசியா சொன்னபடி சாதன செயல்பாட்டை அறிஞ்சவங்க ஜென்னா தாம்ப்ஸன். அவங்க விஞ்ஞானியே இல்லை. ஆனா பிரமாதமான பொறியியல் வல்லுனர். பல நுட்பங்களை ஒண்ணு சேர்க்கறத்துக்கன பலநாளாத் தேடித் தடுமாறிக்கிட்டிருந்தோம். ஆனோ எங்க நிறுவனத்துலயே ரொம்ப காலமா இருந்த ஜென்னாவே முன்வந்து ஒருங்கிணைக்க ஆரம்பிச்சதும் சாதனம் கிடுகிடுன்னு முன்னேறிடுச்சு... அவங்களோட முதல்ல பேசறீங்களா?"
சூர்யாவோ தலையசைத்து மறுத்தார். "அப்படிப்பட்ட சாதன நிபுணரா ஜென்னான்னு இருக்கறது தெரிஞ்சது நல்லதுதான். ஆனா, குறிப்பிட்ட நுட்பங்களைப் பத்தி முதல்ல ஆழமா விசாரிச்சுட்டு அப்புறமா ஜென்னாவோட பேசி அதையெல்லாம் ஒண்ணு கூட்டறது நல்லது."
கிரண் சிரித்தான். "நல்ல பொருள் சிலேடை அடிச்சிட்டாரு சூர்யா! நுட்பங்களை ஒருங்கிணைக்கறவங்க ஜென்னா. நுட்பங்களோட நிபுணர்கள் கக்கற விஷயங்களையும் ஒருங்கிணைக்க சூர்யாவுக்கு உதவப் போறவங்களும் ஜென்னாவேதான். இது எப்படி இருக்கு!" |
|
யாவ்னா கிண்கிணித்துக் கூவினாள்! "ஊ, இது ரொம்ப நல்லா இருக்கே கிரண்! சூர்யா சொன்னதா நீ அடிக்கற சிலேடை பிரமாதம்!" கிரண் அவளைப் பார்த்து முறுவலுடன் பெருமிதத்தான்!
ஜேம்ஸ் கர்மமே கண்ணாயினாராக அவசரப் படுத்தினார், "சரி, சரி அப்படின்னா உடனே எங்க சிறப்பம்சங்களின் ஹோலி ட்ரினிடியை உடனே சந்திக்கலாமே. பீட்டர் கெல்லர் அயானிக் உப்பகற்றல் நிபுணர். பால் லேன்ஸ்கி உயிர் நிகர்த்துவ நுட்ப நிபுணர். மேரி வெலாஸ்குவெஸ் நேனோ வடிகட்டல் நிபுணர்."
கிரண் நகைத்தான். "உங்களுக்கு ஹோலி ட்ரினிடின்னா, எங்க மதத்துல மும்மூர்த்திகள்னு வச்சிக்கலாமா? ஆனா, மூணு பேருமே உருவாக்கற பிரம்மான்னு தான் சொல்லணும். அது மட்டுமில்லை. பீட்டர், பால், மேரி அப்படின்னு ஒரு மிகப் புராதன ராக் அண்ட் ரோல் ம்யூஸிக் குழு இருந்ததே தெரியுமா?" இதைக் கேட்டு இம்முறை எல்லாருமே சிரித்தனர். தாமஸ்கூட கிரண் முதுகில் ஒரு ஷொட்டு விட்டார்! "இது நல்லாத்தான் இருக்கு கிரண். ஆனா அவங்களைப் புராதனம்னு சொல்லிட்டயே! நான் வளரும் பருவத்துல இருக்கும்போது அவங்க பாட்டெல்லாம் ரசிச்சிருக்கேன் தெரியுமா? அப்ப நான் என்ன?"
கிரண் சிரித்து விட்டு யாவ்னாவிடமும் ஷாலினியிடமும் மெல்லிய குரலில் முணுமுணுத்தான். "நாந்தான் அப்பவே சொன்னேன் இல்லியா, இவங்க எல்லாம் புராதனமா இருக்காங்கன்னு, இப்ப அவர் தானே நிரூபிச்சாட்டார் பாருங்க!" யாவ்னா சுவர் பக்கம் திரும்பி சிரிப்பை அடக்கிக் கொண்டாள். ஷாலினி கிரணின் கையைத் தட்டி அடக்கினாள். சூர்யா "சரி அவங்களை எந்த வரிசையில வேணும்னாலும் கூப்பிடலாம். யாரோ ஒருத்தரை முதல்ல கூப்பிடுங்க" என்றார்.
ஜேம்ஸ் பதிப்பெடுத்த பழுது வரிசையைப் பார்த்துவிட்டு, "சரி இந்த வரிசையில் முதல்ல நேனோ நுட்பந்தான் பழுதாகியிருக்கு. அதுனால முதல்ல மேரியோட பேசலாம்" என்று கூறி அங்கிருந்து வெளியேறினார். ஒரு நிமிடத்துக்குள்ளேயே மேரி வெலாஸ்குவெஸுடன் திரும்பி வந்தார்.
மேரி நடுத்தர வயதினள். பார்க்க சிக்கென கவனத்தைக் கவரும் தோற்றத்துடன் இருந்தாள். உடல்வாகு வெளியில் தெரியாத படிக்கு ஆராய்ச்சிக் கூட மேலங்கியை அணிந்திருந்தாலும், அவ்வப்போது அங்கி அசைந்து சற்று விலகியதில் அவள் உருவம் கவர்ச்சியைக் காட்டத்தான் செய்தது. தன் சிவப்பும் பழுப்பும் கலந்த நீண்ட தலை முடியை அவள் மேலெடுத்து குதிரைவால் போன்று முடிந்திருந்தாள். அவள் தலையசைத்த போது அந்த முடிவால் ஆடி மினுமினுத்தது. அவளது கச்சிதமான கால்களை முட்டிக்குக் கீழே சற்றே இறங்கியிருந்த அங்கி மறைக்காததால் அவை பளீரென கவனத்தை ஈர்த்தன. மொத்தத்தில் நடுவயதானாலும், கிரணுக்கு கிறக்கமளிப்பவளாகத்தான் தோன்றினாள்.
மேரி நம் துப்பறியும் மும்மூர்த்திகளிடம் கை கொடுத்து வந்தனம் தெரிவித்து அறிமுகம் செய்து கொண்டாள். அவள் பேச்சு ஒரு சங்கீதம் கலந்த குரலுடனும், ஒரு சுவையான ஸ்பானிஷ் மொழி பாணியிலும் இனிமையாக இருந்தது. "உங்களைச் சந்திக்கறதுல மிக்க மகிழ்ச்சி. ஜேம்ஸ் நீங்க இங்க வந்திருக்கற காரணத்தை விளக்கினார். அதுல எனக்கென்னவோ மிக்க ஆச்சர்யமும் அவநம்பிக்கையும் தான். ஆனா ஜேம்ஸ் விளக்கினதை வச்சுப் பார்த்தா நீங்க உங்க துறையில மிக்க சாமர்த்தியமானவர்னு தோணுது."
சூர்யா பவ்யமாகக் குனிந்து அவள் பாராட்டை ஏற்றுக் கொண்டு, "மிக்க நன்றி மிஸ். வேஸ்குவெஸ். ஆனா நீங்க உங்க துறையில பெற்றிருக்கற அளவு நிபுணத்துவம் என் துறையில எனக்கிருக்காங்கறது சந்தேகந்தான்" என்றார்.
மேரி முறுவலித்தாள். "அது ரொம்ப அதிகம் சூர்யா, ஆனால் நன்றி. ஓ! இன்னொண்ணு. என்னை ரொம்ப முறையா மிஸ்னு அழைக்க வேணாம். மேரின்னே கூப்பிடுங்க. நான் கல்யாண மோதிரம் போடாததை சட்டுன்னு பாத்து மிஸ்னு சொல்லிட்டீங்க புரியுது, ஜேம்ஸ் முதல்லயே எச்சரிச்சுட்டார்! உங்களால எங்களுக்கு உதவ முடியம்னு நம்பி முடியணும்னு இறைவனிடம் பிரார்த்திக்கறேன். நான் எப்படி உதவலாம், சொல்லுங்க?"
சூர்யா தொடர்ந்தார். "ரொம்ப நன்றி மேரி. உங்க நேனோ உப்பகற்றல் நுட்பம் எப்படிப் பழுதடையுதுன்னு நினைக்கறீங்க?"
மேரி குழப்பத்துடன் பதிலளித்தாள். "நான் தனியா அந்த நேனோ நுட்பத்தை மட்டும் ஒரு அக்வாமரீன் உப்பகற்றல் சாதனத்துல வச்சு, மீதியெல்லாம் எடுத்துட்டு பரிசோதனை செஞ்சுகிட்டிருக்கேன். பிரமாதமா வேலை செஞ்சுகிட்டிருக்கு. அதுனால, பிரச்சனை அந்த நுட்பத்துல இல்லன்னுதான் நான் நினைக்கறேன். ஒருவேளை மத்த நுட்பங்களோட சேத்து வைக்கும்போது எதாவது கோளாறுக்கு உள்ளாகுதோ என்னவோ. புரியாத புதிராத்தான் இருக்கு..."
சூர்யா யோசனையோடு தலையாட்டிக் கொண்டு ஒரு அதிர்வேட்டை வீசினார். "சரி, சிஸ்டம் கோளாறாவே இருக்கலாம். அதைப்பத்தி இன்னும் ஆழமாப் பார்க்கலாம். அதுக்கும் உங்க உதவி தேவைதான். ஆனா, அதுக்கு முன்னாடி உங்க சொந்த வாழ்க்கையைப் பத்தி ஒரு விஷயம் விசாரிச்சே தீர வேண்டியிருக்கு, மன்னியுங்க...."
மேரி நெற்றியைச் சுருக்கி ஒரு புருவத்தை உயர்த்தி, "சொந்த விஷயமா? என்ன அது?" என்றாள். சூர்யா, "உங்க நிதி நிலைமை சமீப காலத்துல கொஞ்சம் பிரச்சனையாயிருக்கு போலிருக்கே? இப்ப பரவாயில்லையா, இல்லை, இன்னும் தொடருதா?" என்றார். மேரி சீறினாள். "என்ன.... எப்படி.... அதுபத்தி? இதை நிச்சயமா நீங்க இப்ப யூகிச்சிருக்க வாய்ப்பில்லை" என்றவள், தாமஸ் பக்கம் திரும்பி, "தாமஸ், சே, என்னோட நிதி நிலைமையைப் பத்தியெல்லாம் குடாய வச்சிருக்கீங்களே. இது ரொம்ப அநியாயம். அக்வாமரீன் பிரச்சனைக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்?" என்றாள்.
தாமஸ் கை உயர்த்தி விரித்துக் காட்டி மறுத்தார். "இல்லவே இல்லை மேரி. நான் உன்னை மட்டுமில்லை. வேற யாரையும் கூட ஆராய வைக்கலை. சொல்லப் போனா ரெண்டு நிமிஷம் முன்னாடி வரைக்கும் மேரின்னு ஒரு நபர் இருக்கறதா கூட சூர்யாவுக்குத் தெரியாது. எப்படிக் கணிச்சார்னு தெரியலை. சொல்லுங்க சூர்யா, எப்படி?"
சூர்யா விளக்கலானார். அவர் கூறியது மேரியை வியக்கச் செய்தது. அடுத்து மேரியுடனும், மற்றவர்களுடன் சூர்யா விசாரித்ததில் கிடைத்த விவரங்களும் அவற்றின் விளைவுகளும் ஆச்சர்யத்தையே அளித்தன.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|
|