Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-18)
- கதிரவன் எழில்மன்னன்|டிசம்பர் 2012|
Share:
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். மூவரும் அக்வாமரீன் என்னும் நிறுவனத்துக்குச் செல்கின்றனர். அங்கு வேலை செய்யும் யாவ்னா என்ற இளம்பெண் மற்றும் நிறுவனரான தாமஸ் மார்ஷ் இருவரையும் சந்தித்தனர். தாமஸின் குடும்பத்தைப் பற்றி சூர்யா சரியாக யூகித்துத் தாமஸுக்குத் தன்மேல் பெரும் நம்பிக்கை பிறக்கச் செய்தார். யாவ்னாவும் தாமஸும், நீருப்பகற்றல் துறையின் சில நவீன நுட்பங்களைப் பற்றியும் அக்வாமரீனின் சில தனிப்பட்ட சொந்த நுட்பங்களைப் பற்றியும் விவரித்தனர். அக்வாமரீனின் சொந்த நுட்பங்கள் சேர்க்கப்பட்ட உப்பகற்றல் தளம் பழைய தளங்களைவிடப் பலமடங்கு அதிக தூய நீரை, மிகக் குறைந்த செலவில், மிகச் சிறிய சாதனத்தைக் கொண்டு உற்பத்தி செய்து உலகின் தூயநீர்த் தேவையைப் பூர்த்திக்க முடியும் என்று விளக்கினர். அதில் என்ன பிரச்சனை என்று ஆராய்வதற்காக, அக்வாமரீனின் மத்திய கன்ட்ரோல் கூடத்துக்குத் தாமஸ் அழைத்துச் சென்றார். அங்குத் தலைமை விஞ்ஞானியான ஜேம்ஸ் கோவல்ஸ்கியுடன் சேர்ந்து உப்பகற்றல் சாதனப் பழுது விவரங்களை சூர்யா ஆராயத் தொடங்கினார். பலமுறை முயன்று, பழுதுகள் ரேண்டமாக அமையாமல், ஒரு வினோதமான வரிசையில் வருவதாகக் காண்பித்து, யாரோ வேண்டுமென்றே செய்திருக்கிறார்கள் என்று சூர்யா நீரூபித்தார். மேற்கொண்டு.‍...

*****


நேனோ உப்பகற்றல் துறை நிபுணரான மேரி வெலாஸ்குவெஸிடம் சூர்யா அவளது நிதிப் பிரச்சனை நிவாரணமாகிவிட்டதா எனக் கேட்டதும், சினத்துடன் சீறிய மேரி தாமஸ்தான் சூர்யாவை விட்டு அவளது நிதி நிலைமையை ஆராயத் தூண்டினார் என்று அவர்மேல் பாயவும், தாமஸ் அதை கட்டாயமாக மறுத்து சூர்யா யூக நிபுணர் என்று கூறி அவளை நிதானப்படுத்தி, சூர்யாவை மேற்கொண்டு விவரிக்கச் சொன்னார்.

சூர்யா விளக்கினார், "மேரி, நீங்கள் இந்த அறைக்குள் நுழையும்போது உங்கள் வலது கையில் ஒரு காகிதத்தைப் பிடித்துக் கொண்டு வந்தீர்கள். உங்கள் முகத்திலும் கவலைப் படர்ந்திருந்ததைக் கவனித்தேன். அந்த காகிதத்தைக் கடைசியாக ஒருமுறை மேலும் கீழும் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சு விட்டதையும் கவனித்தேன். பிறகு சிலிர்த்துக்கொண்டு அந்தக் காகிதத்தை இடக்கையில் மாற்றிக்கொண்டு எங்களுடன் கை குலுக்கினீர்கள். கடைசியாகப் பேச ஆரம்பிக்கும் முன் அதை மடித்து உங்கள் ஆராய்ச்சி மேலங்கிக்குள் சொருகிவிட்டீர்கள்..."

மேரிக்கு சூர்யாவின் கவனிப்புத் திறன் புரிய ஆரம்பிக்கவே ஆர்வத்துடன் தலையாட்டிக் கொண்டு நோக்கினாள். சூர்யா தொடர்ந்தார். "ஆனால், நீங்கள் அதை மறைக்கும் முன் என்னால் அந்தக் காகிதத்தில் பளிச்சென மேல்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த விவரத்தைப் பார்க்க முடிந்தது. அதிலிருந்துதான் உங்கள் வீட்டின் கடன் அதன் மதிப்பைவிட அதிகமாகி விட்டது என்றும், அதனால் அக்கடனின் வட்டி மட்டுமல்லாமல், முதலுக்கும் சேர்த்து அதிகப் பணம் கட்ட வேண்டியிருக்கும் என்று உணர்ந்தேன். அதனால்தான் நிதிப் பிரச்சனையைப் பற்றி விசாரித்தேன்."

சூர்யா கூறி முடித்ததும் மேரி முழுதுமாகத் தணிந்து பிரமிப்புடன் பாராட்டினாள். "பேச்சு மும்முரத்தில் அந்தக் கடிதம் என் அங்கிக்குள் வைத்ததைக் கூட நான் மறந்தே விட்டேன்! ஆனால், வாவ்! அந்த ஒரு நிமிடத்துக்குள் இவ்வளவு கவனித்து, கணித்தும் விட்டீர்களே. பிரமாதந்தான்!"

கிரண் சற்று பலமாகவே சிரித்து, "சூர்யாவுக்கு கழுகுக் கண், கம்ப்யூட்டரை விட வேகமான கணிப்புத் திறன்!" என்றான். தாமஸ், ஜேம்ஸ், யாவ்னா மூவரும் கூட சூர்யா தங்களைப் பற்றி வேகமாக யூகித்ததைப் பகிர்ந்து கொண்டனர். மேரியும் அதிக பிரமிப்புடன் சூர்யாவை முறுவலுடன் நோக்கினாள்.

ஆனால் சூர்யா மீண்டும் அவளது நிதிப் பிரச்சனை குறித்தே கேட்டார். மேரியின் முகம் இருண்டது! குமுறிப் பொங்கினாள். "நான் இன்னும் என் வீட்டுக் கடனைக் கட்ட கஷ்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் அந்தப் பணக் கஷ்டத்துனால அந்தத் தேவையைப் பூர்த்திக்க ஏதோ மோசடி வேலையில ஈடுபட்டு அக்வாமரீனுக்குப் பிரச்சனை வரவழச்சிருக்கறதா நினைச்சீங்கனா, அதைவிட முட்டாள்தனமான விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது. என் கண்ணியமும் நாணயமும் கொஞ்சம் கூட அப்பழுக்கற்றவை. நீங்களே வேணா மொத்தமா சோதிச்சு அலசி ஆராய்ஞ்சு பாத்துக்குங்க. என் சம்பளத்தைத் தவிர ஒரு சல்லிக் காசுகூட என் அக்கவுண்ட்டுல இல்லை. என் கடனும் ஒரு காசுகூட குறையல. அப்படி எதாவது தகிடுதத்தம் செஞ்சிருந்தா கொஞ்சமாவது முன்பணம் வாங்கி என் கடனைக் குறைச்சிருக்க மாட்டேனா? இன்னும் அப்படியே கஷ்டப்படுவானேன்?"

சூர்யா யோசனையுடன் மெல்லத் தலையாட்டினார். "நீங்க சொல்றதுலயும் கொஞ்சம் உண்மை இருக்கு. ஆனாலும் நாங்க உடனடியா எந்த முடிவுக்கும் வர முடியாது. எல்லாரையும் விசாரிச்சுட்டுத்தான் எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குன்னு கணிக்க முடியும். ரொம்ப தேங்க்ஸ். இப்ப நீங்க போகலாம். வேணும்னா மீண்டும் கூப்பிடறோம்."

மேரியும் தணியாத சினத்துடன் விறைப்பாக வெளியேறினாள். அடுத்து சூர்யாவின் வேண்டுகோளுக்கு இணங்கி ஜேம்ஸ் மின்னணு உப்பகற்றல் நிபுணர் பீட்டர் கெல்லரை வரவழைத்தார்.

பீட்டரும் கூட மேரி கூறியபடியே, தன் தனி ஆராய்ச்சிக் கூடத்தில் மின்னணு உப்பகற்றல் மட்டும் பொருத்தப்பட்ட அக்வாமரீனின் சாதனம் பல வாரங்களாக ஒரு பிரச்சனையின்றி இயங்கி வருவதாகவும், மற்ற நுட்பங்களோடு சேர்த்ததில்தான் எதோ பிரச்சனை உண்டாகியிருக்க வேண்டும் என்றும் கூறினார்.
சூர்யா பீட்டரைப் பாராட்டினார். "உங்களைச் சந்திக்கறதுல சந்தோஷம்! உங்க துறையில மேல் நிலையில இருந்தாலும் நீங்க ஒரு நல்ல குடும்ப ஈடுபாடுள்ளவர் அப்படின்னு ஜேம்ஸும் தாமஸும் ரொம்ப சொல்லியிருக்காங்க."

பீட்டர் தலையை மெள்ளக் குனிந்து பாராட்டை ஏற்றுக் கொண்டு, "ஆமாம். என் குடும்பத்தின் மேல் எனக்கு ரொம்பப் பெருமையும் ஈடுபாடும் இருக்கு."

அதைக் கேட்டுக்கொண்ட சூர்யா திடீரென ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு பீட்டரை அதிரடித்தார்! "ஆமாம், உங்க நாலு பெண்களும் மூணு பிள்ளைகளும் ரொம்ப நல்லாவே வளர்ந்திருக்காங்க. ஆனா, அதுல நாலு பேர் கல்லூரி போற அளவு வளர்ந்திருக்காங்களே அவங்க கல்லூரி செலவெல்லாம் எப்படி சமாளிக்கறீங்க? மீதி மூணு குழந்தைங்க வேற சீக்கிரமே கல்லூரி போற அளவுக்கு வந்துடுவாங்க போலிருக்கே!"

அசந்தே போன பீட்டர் ஆச்சர்யத்துடன் வினாவினார். "எப்படி இவ்வளவு தெரிஞ்சுகிட்டீங்க. ஜேம்ஸ் ரொம்பச் சொல்லிட்டார் போலிருக்கு?"

ஜேம்ஸ் முறுவலுடன் மறுத்தார். "நிச்சயமா இல்லை பீட்டர். இது சூர்யாவோட சொந்த யூகந்தான். எப்படிக் கணிச்சீங்க சூர்யா?"

சூர்யா புன்னகையுடன் பீட்டரின் பாக்கெட்டைக் காட்டினார். "பீட்டர் நீங்க உள்ள வரும்போது உங்க வாலெட்டைக் கையில திறந்தே வச்சிருந்தீங்க. இங்க வந்து கையெல்லாம் குலுக்கிட்டு உட்காரும்போதுதான் அதை உணர்ந்து, மடிச்சு மூடிப் பாக்கெட்டுக்குள்ள வச்சிட்டீங்க. ஆனா அதில ஒரு பக்கத்துல பெரிசா ஒரு குடும்பப் படம் இருக்கறது நல்லாவே தெரிஞ்சுது. அதுல உங்க குழந்தைகளோட வளர்ச்சியும் நல்லாவே தெரிஞ்சுது. மீதியெல்லாம் வெறும் யூகந்தான்."

பீட்டரும் முறுவலித்துப் பாராட்டினார், "பிரமாதம். உங்க திறமை எனக்கு பிரமிப்பளிக்குது." ஆனால் உடனே சூர்யா முன்னர் கேட்ட கேள்வி ஞாபகத்துக்கு வரவே அவர் முகம் சட்டென இருண்டது. "ஓ! ஓ! என் பசங்க கல்விக்காக எனக்கு உள்ள நிதித் தேவையால நான் இந்தப் பிரச்சனையில எப்படியோ சம்பந்தப்பட்டிருக்கேன்னு சந்தேகப் படறீங்க போலிருக்கே?" சூர்யா பதில் பேசாமல் தீர்க்கமாக பீட்டரைப் பார்த்தார்.

பீட்டர் தொடர்ந்து தாமஸைப் பார்த்து படபடவென வெடித்தார். "இது ரொம்ப மட்டமான நினைப்பு தாமஸ்! என்னைப்பத்தி இவ்வளவு மோசமா நினைச்சுட்டீங்களே! இந்த மாதிரி தப்புக் காரியம் செய்யற குணம் எனக்கில்லை. நீங்க வேணும்னா உங்க துப்பறியும் படையை வச்சு என் நிதி நிலைமையை அலசிப் பாத்துக்குங்க. அதுக்கான என்ன விவரம் வேணும்னாலும் தரேன். ஒரு டாலர்கூடத் தவறான முறையில சம்பாதிச்சதா தெரியுதா பாருங்க. ஒண்ணு, ஒண்ணுகூட இருக்காது!" என்று குமுறி கைவிரலை தாமஸிடமும் ஜேம்ஸிடமும் ஆட்டிவிட்டு நாற்காலியிலிருந்து ஆவேசத்துடன் எழுந்தார்.

தாமஸ் தலையைக் குனிந்து, கையை உயர்த்திக் காட்டி மன்னிப்புக் கேட்டார். "ரொம்ப ஸாரி பீட்டர். உங்க உணர்ச்சி எனக்குப் புரியுது. இருந்தாலும், விசாரிச்சே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தால சூர்யா கேட்க வேண்டியதாப் போச்சு. மன்னிச்சுக்குங்க. அப்புறம் பேசலாம்."

பீட்டர் தணியாமல் விறைப்புடன் தலையாட்டி விட்டு மௌனமாக வெளியேறினார். சூர்யா முகபாவம் மாறாமல் ஜேம்ஸிடம் அடுத்த நிபுணரை அழைக்குமாறு கேட்டுக் கொண்டார். ஜேம்ஸ் சங்கடத்துடன், அடுத்த நிபுணரான உயிர்நிகர்த்துவத் துறையாளரான பால் லேன்ஸ்கியை அழைத்தார்.

பால் சலனமின்றி அலட்சியமான முகபாவத்துடன் வந்து அமர்ந்தார். பரஸ்பர அறிமுகங்கள் முடிந்தவுடனேயே சூர்யா ஒரு யூகச் சரவெடி செலுத்திப் பாலை அதிரச் செய்தார். "சந்தித்ததில் மகிழ்ச்சி பால். அதிலும் பங்கு வியாபாரத்தில் பல புள்ளிவிவரங்களையும் அலசி ஆராய்ந்து படுவேக வாங்கல் விற்றல் செய்து விளையாடும் உங்களைச் சந்திப்பதில், இதோ இருக்கிறானே கிரண், அவனுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்! அது ஏன், ஷாலினிக்கும் கூடத்தான்! அவளுக்குப் பரிச்சயமான பயோ நுட்ப நிறுவனங்களின் பங்குகளில் நீங்கள் விளையாடுகிறீர்கள் அல்லவா?!"

பால் தடுமாறிப் போனார். "எப்படி... எங்கே,,, இவ்வளவு விவரங்கள்...?". பாலின் முகபாவம் சென்ற படுகோணலைக் கண்டு தாமஸூம் ஜேம்ஸும் வாய் விட்டு சிரித்தனர்!

யாவ்னா தன் துறை மேல்நிலையாளரைக் கண்டு சிரிக்கக்கூடாது என்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்!

கிரண் முந்திக்கொண்டு குறுக்கிட்டான். "இதை நான்கூட எளிதா விளக்கலாம் பால்! இது ஒண்ணும் பிரம்ம வித்தையில்லை. கண்ணுக்கு நேரே எல்லா விவரமும் காட்டறீங்களே. இதோ பாருங்க உங்க டேப்லட் கணினித் திரையில பங்கு வியாபார விவரங்கள் பல வண்ணங்களில மின்னிக் கிட்டிருக்கு. அதுல பட்டியலாயிருக்கற பங்குகள் எல்லாம் பெயர் பெற்ற பயோ நுட்ப நிறுவனங்கள்தான். அதைப் பார்த்துத்தான் சூர்யா கேட்டிருக்கார்."

ஷாலினியும் தலையாட்டி ஆமோதித்தாள். "நான்கூட சூர்யா சொன்னப்புறம் கவனிச்சேன். எங்க ஆராய்ச்சிக் கூடத்தோட வேலை செய்யற நிறுவனங்கள் பலது அதுல இருக்கு."

பால் மனம்விட்டுச் சிரித்தார். "அவ்வளவுதானா! எதோ என் தனி வாழ்க்கை விவரங்களை ரொம்பக் குடாய்ஞ்சீங்களோன்னு ஒரு நிமிஷம் பதறிட்டேன்."

சூர்யா சிரிக்கவில்லை. மெல்லத் தலையாட்டிக் கொண்டு தொடர்ந்தார். "உங்க உயிர்நிகர்த்துவ நுட்பத்துல ஏன் அப்பப்போ பழுது வருதுன்னு நினைக்கறீங்க?"

இந்தக் கேள்வி பாலைச் சினத்தில் சிலிர்க்கச் செய்தது. "என் உயிர்நிகர் நுட்பம் என் ஆராய்ச்சிக் கூடத்துல பிரமாதமாத்தான் வேலை செய்யுது. ஆறு மாசமா ஒரு பழுது கூட வரலை. தனியாவும், அக்வாமரீன் சாதனத்துலயும் கூட வேற நுட்பங்கள் சேராம இருக்கறப்போ பழுதே இல்லை." சூர்யா தொடர்ந்து கணை வீசினார். "நான் கவனிச்சதுல உங்க பங்கு வியாபாரம் சமீப காலமா நஷ்டத்துல ஓடுது போலிருக்கே? உங்க நிதி நிலைமை பரவாயில்லையா, இல்லை பிரச்சனையா?"

பால் சீறினார். "அது என் சொந்த விஷயம், அதைப்பத்தி இப்ப என்ன..." என்றவர், அந்தக் கேள்வியின் குறிக்கோளை மெல்ல உணரவே, மிக உஷ்ணமாகத் தொடர்ந்தார். "சே! இது ஒரு நீசமான குற்றச்சாட்டு. என் நிதி நிலைமைக்காக இந்தப் பிரச்சனையில காதகத்தனம் செஞ்சிருக்கேன்னு நினைக்கறது மகா மட்டம். தாமஸ், ஜேம்ஸ் – நான் என் ஆராய்ச்சிக் கூடத்துல இருக்கேன். இந்த ஆளோட நான் இனிமே பேசத் தயாராயில்லை" என்று சூட்டோடு வெளியேறினார்.

சூர்யாவின் மேற்கொண்ட விசாரணைகள் தூய தண்ணீரின் தவிப்பின் நிவாரணத்துக்கு வழி வகுத்தன!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline