Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | அமரர் கதைகள் | சமயம் | அமெரிக்க அனுபவம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-3)
- கதிரவன் எழில்மன்னன்|செப்டம்பர் 2011|
Share:
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகக் குறிப்பிடவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். ஷாலினி தூய தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி சூர்யாவுக்கும் கிரணுக்கும் எடுத்துக் கூறி இந்தப் பிரச்சனையை நிவர்த்திக்குமாறு விண்ணப்பிக்கிறாள். சூர்யாவும் தானே சமீபத்தில் தூய தண்ணீர் பற்றிய பல கட்டுரைகளைப் படித்திருந்ததால் அதில் மிகவும் ஆர்வமுள்ளதாகக் கூறி அந்நிறுவனத்துக்குச் சென்று விசாரிக்கச் சம்மதிக்கிறார். அங்கு சந்தித்த யாவ்னா என்ற இளம்பெண்ணை, அவளுடைய ஓட்டப் பயிற்சி பற்றிய தனது சரியான யூகங்களால் ஆச்சரியப் படுத்துகிறார் சூர்யா. பிறகு ...

*****


காலையில் அலுவலகக் கட்டிடத்தைச் சுற்றி ஓடியதைக் கணித்துக் கூறிய சூர்யாவின் அதிர்வேட்டில் அசந்தே போன யாவ்னா, தன் காலணில் ஒட்டியிருந்த சிறிதளவு சேற்றைக்கூட கவனித்துவிட்ட அவரது ஆற்றலைப் பாராட்டிவிட்டு மேலும் விளக்கக் கோரவே, சூர்யா தொடர்ந்தார்.

"நாங்கள் உள்ளே வரும்போது கட்டிடத்தைச் சுற்றி மண் மற்றும் புல்தரையிலேயே ஒரு நடைபாதை போடப்பட்டிருந்ததைக் கவனித்தேன்."

"உம், அப்புறம்?" என்று கிண்கிணித்தாள் யாவ்னா. அவள் குரலில் கொஞ்சும் இனிமையில் கிரண் கிளுகிளுத்தான்!

அதையும் கவனித்துக் கொண்ட சூர்யா முறுவலுடன் தொடர்ந்து விளக்கலானார். "சற்று முன்னர்தான் மழை தூறி நின்றிருந்த தடயங்கள் இருந்தன. அந்த மண்தரையின் மேல் காலணித் தடங்கள் காணப்பட்டன. அந்தத் தடங்களில் இருந்த வட்ட, சதுர முக்கோணத் தடங்கள் உங்கள் காலணி அடியில் இருந்ததையும் கண்டு நீங்கள்தான், அதுவும் நாங்கள் வருவதற்குச் சற்றே முன்னதாகத்தான், பதித்திருக்க வேண்டும் என்று கணித்தேன்."

"ஆஹா, ரொம்ப நல்லாத்தான் கணிச்சிருக்கீங்க. ஆனா நான் ஓடினேன்னு எப்படித் தெரியும்? நான் சும்மா நடந்திருக்கலாமே!"

சூர்யா தலையசைத்து தீர்க்கமாக மறுத்தார். "நிச்சயமாக இருந்திருக்க முடியாது. நடக்கும் காலணிப் பதிவுகளுக்கும் ஓட்டப் பதிவுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இரு பதிவுகளுக்கிடையே உள்ள இடை வெளி, பதிப்புக்களின் ஆழம், மற்றும் வேகமாகப் பதிப்பதால் பதிவின் எல்லைகள் கலைந்திருக்கும் விதம் எல்லாம் ஓட்டத்தைச் சந்தேகத்துக்கிடமின்றிக் காட்டிவிட்டன! அதே மண் ஓட்டத்துக்குச் சரியாக சற்று உங்கள் காலணியிலும் மிஞ்சி ஒட்டியிருப்பதால் என் கணிப்பு பூர்த்தியாகிவிட்டது. அதனால்தான் சற்றும் தயக்கமின்றி உங்களைப் பாராட்டினேன்."

யாவ்னா பலமாகக் கைதட்டிப் பாராட்டினாள், "வாவ்! பிரமாதம் சூர்யா, சூப்பர்லேட்டிவ்! உங்க மேல ஷாலினிக்கு அவ்வளவு நம்பிக்கை ஏன்னு இப்ப எனக்கு நல்லாப் புரிஞ்சிடுச்சு! எங்க பிரச்சனைக்கான காரணத்தையும் கணிச்சு தீர்த்து வச்சிடுவீங்கன்னு நம்பிக்கை வந்திடுச்சு!"

யாவ்னாவுக்கு நம்பிக்கை வளர்ப்பதற்காகவே தன் கணிப்பை சூர்யா திடீரெனெ எடுத்து வீசியிருக்கிறார் என்பதை உணர்ந்த ஷாலினி அவரிடம் இன்னும் பெருகிய நேசத்துடன் கூடிய நன்றிப் புன்னகையைக் கணையாக வீசினாள். சூர்யா முறுவலுடன் தலையை மெல்லத் தாழ்த்தி ஏற்றுக் கொண்டார். யாவ்னாவின் மேலிருந்த கவனத்தை ஒரு கணம் விலக்கிக் கொண்ட கிரணும் அந்த பரிமாறலைக் கண்டு மனம் மகிழ்ந்தான்.

யாவ்னா மீண்டும் கலகலவென இனித்தாள். "சரி வாங்க எங்க ஆராய்ச்சிக் கூடத்தைச் சுத்திக் காட்டறேன்." சூர்யா வரவேற்பறையை நோட்டம் விட்டபடி "ஆராய்ச்சிக் கூடத்துக்குப் போறத்துக்கு முன்னால, இந்த அறையில இருக்கற கலைப்பொருட்கள் பத்திக் கொஞ்சம் விளக்க முடியுமா? இதெல்லாம் எனக்கு ரொம்பவே சுவாரஸ்யமாத் தென்படுது" என்றார்.

யாவ்னா புன்னகையுடன் தலையாட்டினாள். "நீங்க சொல்றது சரிதான். எனக்கும் இந்த கலைப்பொருட்கள் மேல ரொம்ப ஆர்வம் இருக்கு. இதெல்லாம் எங்க நிறுவனர் தாமஸ் மார்ஷ் உலகின் பல மூலைகளில் பயணம் செய்தபோது கொண்டுவந்து சேர்த்து வச்சது..." என்று விளக்கிக் கொண்டே போனவள் கிரண் வாய்விட்டு உரக்கச் சிரிக்கவும் சட்டென்று நிறுத்திவிட்டு அவனை நோக்கிக் கேள்விக் குறியானாள்!

கிரண் சிரித்துக் கொண்டே, "மார்ஷ்! இது ரொம்பவே ironinc பெயர்!" என்றான்

யாவ்னா இன்னும் புரியாததால், முகத்தில் படர்ந்த கேள்வி மறையாமல் "ஏன் அப்படி?" என்று வினாவினாள்.

கிரண் விளக்கினான். "என்ன, புரியலையா?! உங்க நிறுவனமோ சுத்தத் தண்ணீர் எப்படி பெருமளவில் தயாரிக்கறதுங்கற நுட்பத்தை ஆராயுது. அதை நிறுவினவர் பேரோ மார்ஷ்! ஐரானிக் இல்லை? மார்ஷ்-ங்கறது சொதசொதன்னு பொடிமண், உதிர்ந்து மக்கிப்போன இலைகள் எல்லாம் கலந்து மொழுக்குன்னு சேறா இருக்கற இடம். கோடீஸ்வரனுக்கு மகா ஏழையான குசேலன் பேர் வச்ச மாதிரி நேர் எதிர்மறையா இருக்கு."

யாவ்னா கைகொட்டி கலகலவென சிரித்து சிலாகித்தாள். "குசேலன்! அமர்சித்ர கதா காமிக் புக்ல படிச்சிருக்கேன். இந்தப் பேர் எதிர்ப்பொருத்தத்துக்கு ரொம்ப நல்ல உதாரணம்தான்."
கிரண் புளகாங்கிதமடைந்து பெருமையில் பூரித்து மிதக்கலானான். ஷாலினி சுருக்கென்று குத்தி அவனை மீண்டும் கீழே இழுத்தாள். "ஹேய் கிரண் பூரிச்சது போதும்! இன்னும் போச்சுன்னா ரொம்ப ஊதின பலூன் மாதிரி படால்னு வெடிச்சுடப் போறே!"

யாவ்னா தொடர்ந்தாள். "இந்த அறையையே எங்க நிறுவனத்தின் குறிக்கோளை எடுத்துக் காட்டற ஒரு மெய்ம்மைக் கலையமைப்புன்னு (Reality art work) தான் சொல்லணும். இங்க பாருங்க ஒருபக்கத்துல தரையிலேந்து மேல்மட்டம் வரைக்கும் மூணு புறமா வளைஞ்சிருக்கற கண்ணாடியிலான கடல்நீர்த் தொட்டி. அதுல கடல்வாழ்ப் பிராணிகளான டால்ஃபின், கடல்மீன்கள் எல்லாம் இருக்கும். அடுத்த கோடியில ஆறு ஏரியிலேந்து கிடைக்கற மாதிரியான குடிநீர்த் தொட்டி, அதுல இருக்கற மாதிரியான மீன்வகைகள். இரண்டுக்கும் நடுவுலதான் இந்த மாதிரியான சாதனங்கள். இதெல்லாம் வச்சு இது எப்படி எங்க நிறுவனத்தின் குறிக்கோளை எடுத்துக் காட்டுதுன்னு உங்களால சொல்ல முடியுமா?" என்ற சவாலுடன் நிறுத்தினாள்.

ஷாலினி, "கடல் நீரைக் குடிநீரா மாத்தறதுங்கறது புரியுது. அதுக்குமேல என்ன?" என்றாள்.

யாவ்னாவோ, "இன்னும் விஷயம் இருக்கே! சொல்லுங்க!" என்று தூண்டினாள்.

சற்றே யோசனையாக இருந்த சூர்யாவின் முகம் திடீரென பளிச்சென்று ஒளிர்த்தது. கையைச் சொடுக்கிக் கொண்டு, "புரிஞ்சுது. பிரமாதம். தாமஸ் மார்ஷ் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல, நல்ல கலையுணர்வுடையவர் கூட!" என்றார்.

கிரண் "அப்படி என்ன கண்டுட்டீங்க?" என்று வினவவும் சூர்யா விளக்கினார். "இதோ பாருங்க. குடிநீர்த் தொட்டி, கடல் நீர்த் தொட்டியவிட ஒரே ஒரு அங்குலம் உசரத்துல இருக்கு. அதிலிருந்து வளஞ்சு நெளிஞ்சு ஓடற கண்ணாடிக் குழாய் ஆறுகள் குடிநீரைக் கடலுக்குக் கொண்டு போறதைக் குறிக்குது. அது மட்டுமில்ல..."

கிரணும் ஷாலினியிம் ஒன்றாக இடை மறித்துக் கூவினர். "வாவ்! இப்பதான் தெரியுது! அப்புறம்?!"

சூர்யா தொடர்ந்தார். "அந்தப் பக்கம் குடிநீர்த் தொட்டிகிட்ட ஒரு சின்ன பாறை மாதிரி இருக்கு. அதுக்குள்ள ஒரு தண்ணீர் பம்ப் இருக்குன்னு நினைக்கிறேன்."

யாவ்னா "சபாஷ்! சரிதான். மேல சொல்லுங்க" என்றாள்

சூர்யா மேற்கொண்டு விவரித்தார். "அந்த பம்ப் கடல்நீர்த் தொட்டியிலிருந்து குடிநீர்த் தொட்டிக்கு இந்த உலோகக் குழாய்கள் மூலம் இழுக்குது. இந்தக் குழாய்கள் இந்த இரண்டு சாதனம் வழியா நுழைஞ்சு போகுது. அவைகள் கடல்நீரைக் குடிநீரா மாத்தற சாதனங்களா இருக்கணும். மேலும் ..."

"இதுதான் ரொம்ப முக்கியம். மேலிருந்து மழை மாதிரி விழாம உலோகக் குழாயிலிருந்து குடிநீர் அந்தத் தொட்டிக்குள்ள வருது. அது இவங்க நிறுவனம் குடிநீர் உற்பத்தி செய்யறதைக் குறிக்குது. மேலும், இந்த நீர் நிக்காம இரண்டு தொட்டிகளிலுக் கிடையிலும் தொடந்து பரிமாற்றப்படறது, நீருலகம் இரண்டு வகை நீரையும் இணைத்து ஒரு சரிசமான நிலைமையில் (balanced equilibrium) இருக்கறதை குறிக்குது. அது மட்டுமல்ல, இந்த இருவகை உயிரினங்கள், உலகில் வாழும் நாம் தொடர்ந்து நீர் கிடைப்பதால் உயிர் வாழ்கிறோம் என்று காட்டுகிறது. பிரமாதம். மார்ஷ் ஒரு மிகச்சிறந்த அறிவாளி!" என்று போற்றினார்.

யாவ்னா மீண்டும் கைகொட்டி ஆரவாரித்தாள். "மார்ஷ் மட்டுமில்லை, நீங்களும் பிரமாதமான அறிவாளிதான் சூர்யா. குறி தப்பாம சரியா அடிச்சிட்டீங்களே!"

கிரண் "ஆமாமாம், சூர்யாவுக்கு சின்ன வயசிலேந்து அவங்க கிராமத்துல குறி தப்பாம மாங்கா அடிச்சுப் பழக்கம்" என்று நையாண்டவும், ஷாலினி அவனை முறைக்கவும், யாவ்னா புன்னகைக்கவும், அந்த வழக்கமான நாடகம் மீண்டும் கணப்பொழுதில் நடந்தேறியது!

ஷாலினி வினவினாள். "சரி, இது பிரமாதமாத்தான் இருக்கு. ஆனா, எனக்கு ஒரு விஷயம் இன்னும் புரியலை. இந்த மாதிரி பழைய சாதனங்களே கடல்நீரைத் தொடர்ந்துக் குடிநீராக்க முடியும்னா உங்க நிறுவனம் எதுக்கு புது நுட்பம் தேடணும்?"

சூர்யா, "சமயத்துக்கு தக்க சரியான கேள்விதான்! அதைத்தானே நாம இவங்களோட ஆராய்ச்சிக் கூடத்துல பாக்கப் போறோம். போகலாம் வாங்க. யாவ்னா அங்க வந்து இந்த பழைய நுட்ப சாதனங்களைப் பத்தியும் அவங்க நிறுவனத்தோட நுட்பத்தைப் பத்தியும் விளக்கட்டும்" என்றார்.

யாவ்னா முன்னே வழிகாட்ட மற்ற மூவரும் அவள் பின் ஆராய்ச்சிக் கூடத்துக்குள் நுழைந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சியும் யாவ்னாவின் விளக்கமும் அவர்களை பிரமிப்பில் ஆழ்த்தின!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline