|
|
|
|
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவர்கள் சூர்யாவை அறிமுகம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். ஷாலினி தூய தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி சூர்யாவுக்கும் கிரணுக்கும் எடுத்துக் கூறி இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு விண்ணப்பிக்கிறாள். சூர்யாவும் சமீபத்தில் தூய தண்ணீர் பற்றிய பல கட்டுரைகளைப் படித்திருந்ததால் அதில் மிகவும் ஆர்வமுள்ளதாகக் கூறி அந்நிறுவனத்துக்குச் சென்று விசாரிக்கச் சம்மதிக்கிறார். அங்கு சந்தித்த யாவ்னா என்ற இளம்பெண்ணை, அவளுடைய ஓட்டப் பயிற்சி பற்றிய தனது சரியான யூகங்களால் ஆச்சரியப் படுத்துகிறார் சூர்யா. பிறகு ...
*****
யாவ்னாவைப் பின் தொடர்ந்து ஆராய்ச்சிக் கூடத்துக்குள் நுழைந்த சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் தம் முன் விரிந்தக் காட்சியைக் கண்டு மலைத்தனர்! அவர்கள் நுழைந்த இடம் ஒரு குறுகிய உயர் மேடையாக இருந்தது. ஆராய்ச்சிக் கூடம் சற்றுக் கீழே இருந்தது. அதனால் ஆராய்ச்சிக் கூடம் முழுவதையும் அவர்கள் நின்ற இடத்திலிருந்தே பார்க்க முடிந்தது.
அந்தக் கூடம் முழுவதும் பல கட்டங்களாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு கட்டமும் பல அளவுகளிலிருந்த, பளபளவென்ற சாதனங்களாலும், பலவிதமான குழாய்களாலும் நிரப்பப் பட்டிருந்தது. பல தண்ணீர் பாயிலர்களும், வினோதமாகத் தோற்றமளித்த சாதனங்களும் இருந்தன. சில குழாய்கள் மேல்மட்டம் வரை சென்று நீண்டு வெளிப்புறம் சென்றன. சில குழாய்கள் தரையிலேயே வேறு கட்டங்களில் இருந்த சாதனங்களை இணைத்தன.
இடையில் ஆராய்ச்சியாளர்கள் சிலர் சாதனங்களைக் குடைந்து கொண்டிருந்தனர். எதிர்பக்கம் இன்னுமோர் உயர்மேடையில் ஒரு விஸ்தாரமான கவனிப்பு அறை, ஆராய்ச்சிக் கூடத்தின் நீளம் முழுவதும் இருந்தது. அதில் பற்பல் மின்திரைகள் பச்சை, மஞ்சள், சிவப்பு இன்னும் சில நிறங்களில் மினுக்கிக் கொண்டிருந்தன. அங்கும் சில ஆராய்ச்சியாளர்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டு அவ்வப்போது கீ-போர்டுகளைத் தட்டிக் கொண்டிருந்தனர்.
கிரண் அதைப் பார்த்துவிட்டு "அடேங்கப்பா! எவ்வளவு குழாய்! இதெல்லாம் வச்சுத்தான் இந்தக் கூடத்தையே கட்டிருக்காங்க போலிருக்கே? அதுவும் அந்த கவனிப்பறையைப் பார்த்தா நாஸா விண்வெளி மையம் மாதிரியில்லையிருக்கு. ஒருவேளை இந்தக் குழாயையெல்லாம் இணைச்சு நீட்டி சந்திரனுக்கே தண்ணியனுப்ப முயற்சிக்கறாங்களோ!" என்றான்.
யாவ்னா மீண்டும் மணியாகக் கிண்கிணித்தாள். "முதல்ல பாக்கறவங்க எல்லாம் பிரமிச்சுத்தான் போறாங்க. எங்களுக்குப் பழகிடுச்சு"
ஷாலினி கேட்டாள், "ஓரு கூடத்துல இத்தனை சாதனங்களும் குழாய்களும் அமைக்கப் பட்டிருந்தாலும் இவ்வளவு நேர்த்தியா இருக்கே! பாராட்டுக்கள். ஆமாம், இவ்வளவு சாதனங்களா வேணும் உங்க நுட்பத்துக்கு? ரொம்பச் சிக்கலான விஷயமா இருக்கும் போலிருக்கே!"
யாவ்னா தலையசைத்து மறுத்தாள். "இல்லையில்லை, எங்க நுட்பம் இந்தக் கூடத்தில் ஒரு சின்ன பாகந்தான் - அது அதோ அந்தக் கோடியில சற்றுத் தள்ளி வைக்கப் பட்டிருக்கே அந்தக் கட்டங்களில இருக்கு. மீதியெல்லாம் வேற சுத்தத் தண்ணீர் தயாரிப்பு நுட்பங்கள்."
சூர்யா வியந்தார். "வேறு சுத்தநீர் நுட்பங்களா? அதெல்லாம் எதுக்கு நீங்க வச்சிருக்கீங்க? உங்க நுட்பம் இருக்கற அளவைவிட இதெல்லாமே பெரிசா இருக்கே?"
யாவ்னா முறுவலித்தாள். "எங்க நுட்ப சாதனம் சின்னதா இருக்கறதே அதோட தனி சிறப்புதானே? அதுக்காகவும், அதுக்கு வேண்டிய செலவைக் குறைக்கவும் நாங்க தளராம முய்ற்சிக்கிறோம். மற்ற நுட்பங்களையும் வச்சுக்கிட்டு அவற்றோட பலங்கள், பலவீனங்கள் என்னன்னு நல்லாப் புரிஞ்சுகிட்டு, பலங்களை எங்க நுட்பத்தில் அதிகரிப்பது எப்படின்னும், பலவீனங்களை எப்படித் தவிர்ப்பது அல்லது குறைப்பதுன்னும் முயற்சிக்கிறோம். இதுல சில நுட்பங்களையும், எங்க ரகசிய அம்சங்களையும் ஒருங்கிணைத்துப் புதிய நுட்பமாக்கறோம்."
கிரண் நக்கலாக, "ரகசிய அம்சங்களா, ஆ! தண்ணியில அந்த மாதிரி வஸ்துக்களைச் சேத்தா அப்ப அது சுத்தத் தண்ணியா இல்லாம, ஒரு மாதிரி "தண்ணி" ஆயிடப் போகுது!" என்று கையை மடித்துக் கட்டை விரலை நீட்டிக் குடித்துத் தள்ளாடுவதுபோல் காட்டினான்.
யாவ்னா மீண்டும் கலகலத்தாள்! "அப்படியெல்லாம் இல்லைப்பா! நூறு சதவிகிதம் சுத்தக் குடிநீர்தான்!"
சூர்யா பாராட்டினார், "இது ரொம்ப நல்ல அணுகுமுறைதான்! அப்போ, முதல்ல இந்த மற்ற நுட்பங்களைப் பத்தி கொஞ்சம் விவரிச்சுட்டு அப்புறம் உங்க நுட்பத்தைப் பத்திப் பாக்கலாம். அப்பதான் என் விசாரணைக்கும் அதே மாதிரியான அணுகுமுறை உதவியாயிருக்கும். இந்த சாதனங்கள்ள முதல்ல இருக்கற கட்டங்களில ரெண்டு வெளியில வரவேற்பறையில இருக்கற மாதிரியிருக்கே?" |
|
யாவ்னா குதூகலித்தாள். "கரெக்டா சொல்லிட்டீங்க. அதேதான்! அது ரெண்டுல முதல்ல இதைப் பார்க்கலாம் என்று ஒரு சாதனத்தைக் காட்டினாள்." அது இரண்டு கோளங்களுடனும், அவற்றை இணைக்கும் குழாயுடனும் இருந்தது. ஒன்றில் உள்வரும் குழாயிலிருந்து பழுப்புநிற நீர் சொட்டிக் கொண்டிருந்தது. இணைகுழாயிலிருந்து மற்றொன்றுக்குள் நிறமில்லாத நீர் சொட்டிக் கொண்டிருந்தது. குழாய்க்குள் நீராவி.
கிரண் அதைப் பார்த்து "ஹை! இது கண்ணாடி வீணை மாதிரியிருக்கே! சூர்யா உங்களுக்குத்தான் வீணை வாசிக்கத் தெரியுமே. எங்கயாவது எடுத்து வாசிச்சிடப் போறீங்க, பாத்து!" என்றான்.
சூர்யா சிரித்துவிட்டு, "வீணை வெறும் கம்பியிலிருந்து நல்ல நாதத்தைத் தருது. இது அழுக்கான நீரிலிருந்து நல்ல நீரைத் தருகிற நீர்வீணைன்னு வச்சுக்கோயேன்" என்று ஒரு சொற்பந்தலடித்தார்!
ஷாலினி அவருடைய சொற்திறனில் மனதுக்குள் கிறங்கினாள், 'ஆஹா என்னவர் என்னமாய் வர்ணிக்கிறார்!'
யாவ்னா சூர்யாவின் விளக்கத்தைச் சிலாகித்துவிட்டு விளக்கத்தைத் தொடர்ந்தாள். "நீங்க சொல்ற உவமை ரொம்ப நல்லா இருக்கு. அப்படியே வச்சுக்கலாமே. இது அசுத்த அல்லது உப்பு நீரைக் கொதிக்க வச்சு ஆவியாக்கிக் குளிரவச்சு சுத்த நீர் பிடிக்கற சாதனம்."
ஷாலினி மும்முரமாகத் தலையாட்டி இடைமறித்தாள். "கிரண் எகனாமிக்ஸ். அவனுக்குத் தெரிஞ்சிருக்காது. நான்தான் வேதியியல்ல முழுகியிருக்கேனே? டிஸ்டில்லேஷன் பத்தி நல்லாவே தெரியும்."
யாவ்னா ஆமோதித்தாள். "கரெக்ட். டிஸ்டில்லேஷன் தான். இது பல காலமா சிறிய அளவு குடிநீரைத் தயாரிக்கப் பயன்படுத்தப் பட்ட முறை. பழைய காலக் கப்பல்களில கூடக் குடிநீர் தீர்ந்து போயிட்டா குளிக்க இல்லாட்டாலும் குடிக்கப் பயன்படுத்தினாங்க. நாம் அப்புறம் பார்ப்போம். இப்பவும் கூட இந்த முறையை வேறு நுட்பங்களோட சேர்த்துப் பயன்படுத்தி அதிக அளவில்கூட குடிநீர் உற்பத்தி செய்யறாங்க."
சூர்யா தலையாட்டிக் கொண்டு வினாவினார். "ரைட், சில டிஸேலினேஷன் நிலையங்களில் கூட இதுவும் ஒரு பகுதிதானே?"
யாவ்னா "எக்ஸாக்ட்லி! அதைப்பத்தி கொஞ்ச நேரத்துல பார்ப்போம்" என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தாள். "அது ரொம்பப் புராதன நுட்பம். ஆனா இந்த அடுத்த சாதனம் கொஞ்ச சமீப காலத்துது. கடுமையான உப்புநீரைப் (hard brackish water) பதனப்படுத்தி, ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ் நுட்பத்தின் மூலம் தூய குடிநீராக்குவது."
கிரண் இடைபுகுந்து ஆரவாரித்தான், "ஹை! இது நல்லாத் தெரியுமே. எங்க அப்பா வீட்டுலகூட கிட்ச்சன் ஸிங்க் கீழே இருக்கே. அதோட குழாய்லேந்து வர தண்ணி ரொம்ப நல்லா மினரல் வாட்டர் மாதிரி இருக்கும்!"
யாவ்னா புன்னகையுடன் தொடர்ந்தாள். "அந்த வகையில இந்த சாதனம் கொஞ்சம் பழசுதான். அளவில் பெரிசானாலும் இது தரும் நீர் சுமாராத்தான் இருக்கு. இப்ப இன்னும் பல நுட்பங்களைச் சேர்த்துப் பல நிலைகளில் அடுத்தடுத்து வடிகட்டி ரொம்ப நல்ல குடிநீராத் தரும் சாதனங்களா ஆகியிருக்கு. அதுவும் சாதனங்கள் அளவுகூட ரொம்ப சிறிசாயிருக்கு."
கிரண் புரியாமல் குழம்பிய முக பாவத்துடன் வினாவினான். "சரி, இந்த ரெண்டு முறைதான் இருக்கே? இதை வச்சுக் கடலில இருக்கற அவ்வளவு தண்ணீரையும் குடிநீராக்கிடலாமே? ஏன் குடிநீர்த் தட்டுப்பாடு?"
யாவ்னா சிரித்தாள். "இப்ப இருக்கற சக்தித் தட்டுப்பாட்டு நிலையில அந்த மாதிரி பெரிய அளவுல செய்யறது முடியாத காரியம்!"
சூர்யா கிரணுக்கு விளக்கினார். "கிரண், சூட்டைப் பயன்படுத்தி நீரை ஆவியாக்கி தூயதாக்கும் டிஸ்டில்லேஷன் முறையைவிட ரிவர்ஸ் ஆஸ்மோஸிஸ் முறைக்கு சக்தி சற்றுக் குறைவாத் தேவைப்படுது. ஆனாலும் பெரிய அளவு உப்பகற்றல் (டிஸேலினேஷன்) செஞ்சு குடிநீர் உற்பத்தி செய்ய ரெண்டு முறைக்குமே அதிக அளவு சக்தி வேண்டியிருக்கு. இப்ப உலகத்துல பயணம், வீடுகள், தொழிற்சாலைகள் எல்லாத்துக்கும் வேண்டிய சக்தியே தேவையைவிடக் குறைவாகவே இருக்கறதால உப்பகற்றலுக்கும் தேவையான இன்னும் அதிக சக்தி பெருமளவில கிடைப்பது கஷ்டந்தானே?"
யாவ்னா பாராட்டினாள். "சரியா விளக்கினீங்க சூர்யா. அதேதான் பிரச்சனை. ரொம்ப நல்லாத் தெரிஞ்சு வச்சிருக்கீங்களே."
சூர்யா பவ்யமாக ஏற்றுக்கொண்டார். "இதுபத்தி நான் என் பட்டப் படிப்பிலும் முந்தைய தொழில்ரீதியாக்கூடக் கொஞ்சம் படிச்சிருக்கேன். இப்பவும் இங்க வரதுக்கு முன்னாடி மின்வலையில் ஆராய்ஞ்சபோது இன்னும் விவரங்கள் தெரிஞ்சுது."
யாவ்னா தொடர்ந்தாள். "சூர்யா விளக்கினபடி, தற்போதைய உப்பகற்றல் நுட்பங்களுக்கு செலவு அதிகம். வருங்காலத்துல செலவுகளைக் குறைக்கறது, ஆற்றல் உற்பத்தி எவ்வளவு அதிகரிக்குதுங்கறதுலயும், உப்பகற்றல் நுட்பங்களே எப்படி முன்னேறுதுங்கறதுலயுந்தான் இருக்கு. சுத்த சக்தித் துறையில் தற்போது உருவாகிவரும் நுட்பங்கள் சக்தி விலையைக் குறைக்கக் கூடும்.
இந்தத் தூய குடிநீர் பிரச்சனையின் மறுபாதியான உப்பகற்றல் நுட்ப முன்னேற்றத்துலதான் எங்க நிறுவனம் கூர்ந்து முயன்று வருது. எங்க நுட்பத்துக்கு முன், இன்னும் சில சமீப நுட்பங்களைப் பத்தி சொல்றேன்."
யாவ்னா தொடர்ந்து விளக்கிய நுட்பங்கள் மிக சுவாரஸ்யமானவையாக இருந்தன.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |
|
|
|
|
|
|
|