|
|
தமிழ், தமிழர் பற்றிய சிந்தனையிலும் தேடலிலும் முனைப்பாக இயங்கியவர்கள் பலர். அவர்களுள் ஒருவரே மறைமலை அடிகள் (1876-1950). இவர் சொற்பொழிவாளர், கட்டுரையாளர், பல்துறைப் படைப்பாளர், ஆய்வாளர், திறனாய்வாளர், இதழாசிரியர், சமயவாசிரியர், பதிப்பாளர், மொழியாசிரியர் எனப் பல நிலைகளில் அடிகள் தமிழ்ப் பணிக்குக் களம் அமைத்துக் கொண்டார். அடிகள் செப்டம்பர் 15, 1950 அன்று மறைந்தாலும் அவர் விட்டுச் சென்ற தடங்கள் இருபத்தோராம் நூற்றாண்டிலும் ஆழமாக ஒளிபாய்ச்சக் கூடியவையாகவே உள்ளன.
நாகைப்பட்டினத்தை அடுத்துள்ள சிற்றூரான காடம்பாடியில் சொக்கநாதர் என்பவருக்கும் சின்னம்மை என்பவருக்கும் ஜூலை 15, 1876 அன்று சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை நிறைவு செய்தபின், நாகைப்பட்டினத்தில் இயங்கிய வெசுலியன் மிஷன் கல்லூரியில் கற்றார்.
இக்கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் தமிழ், ஆங்கிலம் முதலான கல்வி அவருக்குப் போதியதாய் அமையவில்லை. இந்நிலையில் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரத்தின் மாணவரான வெ. நாராணயசாமி என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். தமது பதினாறாவது வயதில் தமிழ்ப்புலமை மிகுந்தவராக வெளிப்பட்டார். அதேநேரம் தாம் படித்த ஆங்கிலக் கல்லூரியில் தமிழ் மாணவர்களுக்குத் தமிழும் சமயமும் புறக்கணிக்கப்பட்டதை எண்ணி மனம் வெதும்பினார்.
அடிகள் தனது மிக இளம் வயதிலேயே சமயத்தைக் காக்கவும், சமயம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படவும் சிந்தித்தார். அதற்கு செயல்வடிவம் கொடுக்கவும் விளைந்தார். மண்ணின் மைந்தர்கள் தம் தாய்வழிச் சமயப் பற்றிலே விளைவுகொள்ளத் தூண்டும் கருத்துடன் 'இந்து மதாபிமான சங்கம்' எனும் நிறுவனத்தைத் தோற்றுவித்தார். மாணவர்கள் பலர் இக்கழகத்தின் உறுப்பினராயினர். அடிகள் இச்சங்கத்தில் பல்வேறு சொற் பொழிவுகளை நிகழ்த்தி வரலாயினர்.
பேரா. சுந்தரம்பிள்ளை எழுதிய மனோன் மணீயம் எனும் நாடகநூலை அடிகள் ஊன்றிக் கற்றுச் சுவை கண்டார். இதன்மூலம் சுந்தரம்பிள்ளை அவர்களை நேரில் கண்டு உறவாட விரும்பி, பேராசிரியருக்கு அகவற்பாவில் ஒரு கடிதம் வரைந்தார். சுந்தரம்பிள்ளையும் மறைமலையடிகள் தமிழ்ப்பாடம் கற்ற நாராயணசாமியிடம் தமிழ் கற்றவர். ஆகவே தனது ஆசிரியரையும் அடிகளையும் சந்திக்க விருப்புக் கொண்டு இருவரையும் திருவனந்தபுரம் வருமாறு பதில் அனுப்பியிருந்தார். 1895 நவம்பரில் அடிகளுக்கும் சுந்தரம்பிள்ளைக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது.
நீண்டநேரம் மறைமலையடிகளும் சுந்தரம் பிள்ளை அவர்களும் உரையாடினர். அடிகளின் நுண்ணிய புலமையை நன்கறிந்த சுந்தரம்பிள்ளை அவர்கள் அடிகளாருக்கு ஒரு நற்சான்றிதழ் வழங்கினார். அந்த இதழில் தாம் அடிகளாருடன் பழகும் பேறு கிடைத்ததற்கு மகிழ்வதாகவும், வருங்காலத் தமிழகத்தில் தமிழ்ப்புலமை தழைத்தோங்கி வளர்வதற்கு அடிகளார் ஒரு சான்றாக விளங்குவார் என்றும், இன்னும் கல்லூரி இடைநிலை வகுப்பு வரையிலாவது ஆங்கில அறிவு பெற்றால் மிகுந்த ஆராய்ச்சியுடைய வராக விளங்குவார் என்றும் குறிப்பிட்டிருந் தார். இந்தச் சான்றிதழ் அடிகளாருக்கு டிசம்பர் 02, 1895 அன்று அளிக்கப்பெற்றது.
பேராசிரியர் சுந்தரம்பிள்ளையின் ஆதரவால் திருவனந்தபுரத்தில் தமிழாசிரியராகக் கற்பிக்கும் வாய்ப்பு அடிகளுக்கு ஏற்பட்டது. இதுவே அடிகள் ஏற்ற முதல் ஆசிரியப் பணி ஆகும். சொற்ப காலத்திலேயே அடிகள் உடல் சுகவீனம் காரணமாக இப்பணியிலிருந்து விடுபட்டுச் சென்றுவிட்டார்.
அடிகளுக்கு சோமசுந்தர நாயகர் என்ற சமய அறிஞரோடு ஏற்பட்ட தொடர்பு அடிகளது ஆளுமை உருவாக்கத்தில் பெரும் செல்வாக்குச் செலுத்தியது என்றே கூறலாம். சோமசுந்தர நாயகர் வடமொழி வேதம், ஆகமம், உபநிடதம், புராணம், இதிகாசம் முதலியவற்றை நன்கு கற்றவர். இவர் இந்து, சமண, புத்த மதங்களின் கோட்பாடுகளைத் தெளிவாக அறிந்தவர். அச்சமயங்களின் பிரிவுகளையும் அவற்றுள் அமைந்திருக்கும் வேற்றுமைகளையும் அறிந்திருந்தார். இவர் தம் இளமைக் காலத்தில் சங்கரரின் ஏகான்மவாதக் கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்தார். பின்னர் இவர் பிற சமயங்களை ஆராயப் புகுந்து இறுதியில் சைவசித்தாந்தமே அறிவுக்குப் பொருந்திய விளக்கமளிப்பதாக உணர்ந்தார். சைவசித்தாந்தத்தைத் தன் சொற்பொழிவுகளால் தமிழகம் எங்கும் பரப்பும் பணியில் ஈடுபட்டார். இவருக்கு 'வைதிக சைவசித்தாந்த சண்ட மாருதம்' என்ற பட்டம் உண்டு.
அடிகள் மாணவராய்ப் பள்ளியில் பயின்றுவந்தபோது நாகைப்பட்டினம் சார்ந்த வெளிப்பாளையத்தில் உள்ள சைவசித்தாந்த சபையிலும் நாகை நீலாயதாட்சி அம்மையின் கோயிலிலும் சோமசுந்தர நாயகர் ஆற்றிய சொற்பொழிவுகளைப் பலமுறை கேட்டவர். இதனால் அடிகள் தாம் முன்பு கொண்டிருந்த வேதாந்தக் கருத்துக்களில் மனம்பதியாது அவற்றைக் கைவிட்டுச் சைவசித்தாந்தக் கருத்துக்களில் ஈர்ப்புற்று விளங்கினார். சைவசித்தாந்தக் கருத்துக்களால் உந்தப் பெற்று சுயபரிசீலனையில் ஈடுபடத் தொடங்கினார்.
1897ஆம் ஆண்டில் நாகையில் இருந்து வெளிவந்த 'சச்சன பத்திரிகா' என்னும் கிழமை இதழ் ஒன்றில் வேதாந்தவாதி ஒருவர் சோமசுந்தர நாயகர் கருத்துகளை மறுத்து எழுதிவந்தார். அடிகள் நாயகர் கருத்துகளே பொருத்தம் உடையன என்றும், அவ்வேதாந்தியின் கருத்துகள் பொருத்தமற்றவை என்றும் 'நாகைநீலலோசனி' இதழில் முருகவேள் என்ற புனைபெயரில் தொடர்ச்சியாகப் பல கட்டுரைகள் எழுதினார்.
சோமசுந்தரநாயகர் அக்கட்டுரைகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்து யார் இந்த முருகவேளென்று அறிய ஆசைப்பட்டார். பின்னர் அடிகளுக்குச் சிறுவயது முதலே நண்பராக இருந்த மதுரைநாயகர் என்பவர் மூலம் முருகவேள் என்பவர் அடிகள் என்பதைத் தெரிந்து கொண்டார். அடிகளைச் சந்திக்கவும் விருப்பம் கொண்டார். சில மாதங்களில் நாகைக்கு சொற்பொழிவாற்ற வந்த சேமசுந்தரநாயகர் அடிகளைச் சந்தித்தார். இவ்வாறு நாயகர் தொடர்பு அடிகளுக்கு கிட்டியது.
சோமசுந்தரநாயகர் பரிந்துரைக்க 'சிவஞானபோதம்' எனும் நூலை நல்லசாமி என்பார் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மேலும் அடிகளின் துணைகொண்டு 'சித்தாந்த தீபிகை' என்னும் திங்களிதழை 1897-ல் ஜூன் திங்கள் முதல் நடத்தினார். அதன் முதல் ஐந்து இதழ்களுக்கு அடிகள் ஆசிரியராயிருந்து எழுதி வந்தார்.
அடிகளது சிந்தனையிலும் தேடலிலும் பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, சோமசுந்தரநாயகர் ஆகிய இருவருக்கும் முக்கியமான பங்கு உண்டு. இவர்கள் வழிவந்த கருத்தியல் பின்புலம் அடிகளது ஆளுமையை ஆற்றுப்படுத்தி உள்ளது எனக் கூறலாம்.
சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியர் பணிக்கு ஓர் இடம் காலியாக இருந்தது. கல்லூரித் தலைவர் அப்பணியில் சேர விரும்புவாரை அழைக்கும்பொருட்டு அறிக்கையொன்று வெளியிட்டார். அப்பொழுது கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் 'பரிதிமாற் கலைஞர்' என்னும் சூரிய நாராயண சாஸ்திரி அவர்கள். இவர்தான் தமிழை முதன்முதலில் செம்மொழி எனக் கூறிவந்தவர். பரிதிமாற் கலைஞர் உள்ளிட்ட குழு தமிழ்ப் பதவிக்கு மறைமலையடிகளை தகுதியுடையவராகத் தேர்ந்தெடுத்தனர். மார்ச் 9, 1898 முதல் மறைமலையடிகள் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
அடிகள் இளங்கலை வகுப்புக்கு 'முல்லைப் பாட்டு' எனும் சங்கநூலைக் கற்றுக் கொடுக்க நேர்ந்தது. அப்போது அடிகள் பாட்டென்பது யாது என்பது பற்றித் தமிழிலும் ஆங்கிலத் திலும் ஆராய்ந்துணர்ந்த முடிவுகளை எடுத்து விளக்கினார். மேலும் முல்லைப்பாட்டுக்குச் சிறப்பான உரை ஒன்று வகுத்துக் கொடுத்தார்.
முன்னர் இருந்த நச்சினார்க்கினியர் உரை ஆற்றொழுக்காகப் பாடலுக்குப் பொருள் கூறாது முன்பின்னாக அடிகளை மாற்றி சுற்றிவளைத்துப் பொருள் கூறுவதாக அமைந்திருந்தது. நச்சினார்க்கினியர் ஆற்றியிருத்தலே முல்லை என்று கொண்டு பாடலில் புலனாகும். தலைவியின் ஆற்றாமையைச் செவ்வனே சுட்டாது தலைவி ஆற்றியிருந்ததாகச் சுற்றிவளைத்துப் பொருள் கூறியிருந்தார். அடிகள் அதற்கு மாறாக ஆற்றொழுக்கு நடையில் நேரிய பொருள் கூறியதுடன் முல்லைத்திணையில் தலைவி ஆற்றாமல் கூறுவதுண்டு எனக்கொண்டு, அதை நெய்தல் திணையாகக் கொள்ளும் நச்சினார்க்கினியரின் கருத்துக்கு மாறாக உரை வரைந்துள்ளார். இவ்வுரையை மாணவர்களும் மற்றவர்களும் போற்றினர். இவ்வாறே பட்டினப்பாலைக்கும் அடிகள் நேரடி உரையும் ஆய்வுரையும் எழுதினார். பின்னர் மாணவர்கள் திரட்டிய பொருளைக் கொண்டு முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை ஆகியவற்றின் ஆராய்ச்சி உரைகள் நூல்களாக வெளியிடப்பட்டன.
கிறித்துவக் கல்லூரியில் அப்பொழுது அடிகளாரிடம் பாடங் கேட்டவர்கள் நாவலர் சோமசுந்தர பாரதியார், செங்கல்வராயர், திருப்புகழ்மணி டி.எம். கிருஷ்ணசாமி, டாக்டர் பி. சுப்பராயன், திவான் பகதூர் ஆர்.வி. கிருஷ்ணன், டி.கே. சிதம்பரநாதர், சி.என். முத்துரங்கம் முதலியோராவார். |
|
அக்காலச் சூழலில் சென்னைப் பல்கலைக் கழகம் கலைப் பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலமே போதும் என்றும் தாய்மொழியை மாணவர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டுவதில்லை என்றும் விருப்பமுடையார் தவிர மற்றவர் ஆங்கிலம் தவிர வேறு மொழிகளை எடுத்துப் பயிலலாம் என்றும் முடிவு செய்தனர். அதனால் கல்லூரிகளில் பணியாற்றி வந்த தமிழாசிரியர் பலர் வேலையிழந்தனர். அடிகளும் வேலையிழக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இருப்பினும் அடிகளுக்கு வேலை தர டாக்டர் மில்லர் முயன்றார். ஆனால் அடிகள் தொடர்ந்து அங்கே வேலைபார்க்க மறுத்துவிட்டார். ஏறக்குறைய 13 ஆண்டுகள் (1893-1911 வரை) சென்னை கிறித்துவக் கல்லூரியில் அடிகள் பணியாற்றினார்.
அடிகளது மனம் துறவுவாழ்வை நாடிக் கொண்டிருந்தது. அமைதியான சூழலில் வாழ விருப்பம் கொண்டார். இதனால் சென்னைக்குப் பக்கத்தில் பல்லாவரத்தில் குடிபுகுந்தார். சைவத்துறவிக்குரிய காவியாடை புனைந்து ஆகஸ்ட் 27, 1911 அன்று அடிகள் துறவு மேற்கொண்டார். அதுவரை 'நாகை வேதாசலம்பிள்ளை' என்று வழங்கப்பட்ட பெயர் 'சுவாமி வேதாசலம்' ஆயிற்று.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் தமிழ்ப்பண்பாட்டு நடவடிக்கைகளில் 'மறைமலை அடிகள்' என்னும் பெயர் தவிர்க்க முடியாததாயிற்று. பல்வேறு புலமையாளர்கள், ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவராகவும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் அடிகளது கருத்து என்ன என்ற எதிர்பார்ப்புகள் உருவாக்கவும் காரணமாக இருந்துள்ளார். குறிப்பாக மறைமலை அடிகளது தமிழ்ப்பணிகள் விரிவுகண்டன. ஏறக்குறைய 50 நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள், 'மக்கள் நூற்றாண்டு உயிர்வாழ்க்கை', 'முல்லைப்பாட்டு ஆராய்ச்சி', 'பட்டினப்பாலை ஆராய்ச்சி', 'மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்', 'அறிவுரைக் கொத்து', 'வேளாளர் நாகரீகம்', 'இந்தி பொதுமொழியா', 'சிந்தனைக் கட்டுரைகள்', 'முற்காலப் பிற்காலத் தமிழ்ப் புலவோர்', 'சிறுவர்க்கான செந்தமிழ்', 'தமிழ்நாட்டவரும் மேல்நாட்டவரும்' 'கோகிலாம்பாள் கடிதங்கள்' போன்றவை அவர் எழுதிய நூல்களுள் சிலவாகும்.
அடிகள் சைவசமயத்தின்பால் ஆழ்ந்த பற்றுடையவர். குறிப்பாக சைவசித்தாந்தம் தொடர்பாக அவருடைய விளக்கமும் அறிவும் தனியாக நோக்கப்பட வேண்டியவை. அதன் விளைவாக எழுதியுள்ள நூல்களில் சில: 'திருவெற்றியூர் முருகர் மும்மணிக் கோவை', 'சைவசித்தாந்த ஞானபோதம்', 'அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மை', 'சைவசமயத்தின் நெருக்கடியான நிலை', 'கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா', 'சாதிவேற்றுமையும் போலிச் சைவமும்', 'தமிழர் மதம்' போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
அடிகளுக்கு வடமொழியில் விரிந்த புலமை இருந்ததால் காளிதாசர் வடமொழியில் எழுதிய 'சாகுந்தலம்' என்னும் நாடகத்தைத் தமிழில் பெயர்த்துள்ளார். இந்நூல் அடிகளின் வடமொழிப் புலமைக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாகும். இதுபோல் ஆங்கிலத் திலும் அடிகளுக்கு நிரம்பிய அறிவு இருந்தது. 'Saiva Siddhatha as a Philosophy of Practical Knowledge' என்னும் நூல் அவர் எழுதியதாகும்.
மறைமலை அடிகள் எழுதிய நூல்களுக்கு அப்பால் மற்றும் அவரது ஆய்வுகளுக்கு அப்பால் அவர் தோற்றுவித்த தனித்தமிழ் உணர்வு ஓர் இயக்கமாக, தனித்தமிழ் இயக்கமாக மறுமலர்ச்சி பெற்றது. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் தனித்தமிழ் இயக்கத்துக்கு முக்கியமான இடம் உண்டு. அதாவது தனித்தமிழ் இயக்கம் தமிழகத்தில் தோன்றிய ஒரு சமூக-அரசியல் இயக்கத்தின் ஆரம்பகட்டத்தில் பண்பாட்டுத்துறை வெளிப்பாடாகவே அமைந்தது.
தமிழில் எழுதும் பொழுது பிறமொழிச் சொற்பிரயோகங்களை, குறிப்பாக வடமொழிச் சொற்பிரயோகங்களை, தவிர்த்து முற்றிலும் தமிழ்ச் சொற்களாலேயே எழுத வேண்டுமென அடிகளால் தோற்றுவிக்கப்பட்ட ஓர் இலக்கிய இயக்கம்தான் தனித்தமிழியக்கம்.
அந்நியச் சொற்பிரயோகங்கள் ஆட்பெயரில் வந்தவிடத்துக்கூட அவற்றை விடுத்து தனித்தமிழிலேயே எழுதுதல் வேண்டுமென்பது அடிகளது வாதம். ஆகவே அடிகளது தனித்தமிழ் இயக்கம் முதன்மையாக எழுத்துவழக்குப் பற்றியதே ஆகும். எனவே நாம் தனித்தமிழ் இயக்கத்தை தமிழ் உரைநடை பற்றிய ஓர் இயக்கமாகவும் புரிந்துகொள்ள வேண்டும். எங்கும் புறமொழிச் சொற்கலப்பு, எதிலும் பிறமொழிச் செல்வாக்கு என்றிருந்த அக்காலச் சூழல்தான் மொழிபற்றி அடிகள் கவலைகொள்ளக் காரணமாக அமைந்தது.
தொடர்ந்து தமிழ்மொழியின் தூய்மை பேணப்பட வேண்டுமென்பதற்காக அடிகள் தம் கட்டுரைகள், நூல்கள் வழியாகக் கருத்துகளை வெளியிட்டும் சொற் பொழிவுகளின் மூலமும் தமிழர் சிந்தனையைத் தூண்டிப் பணியாற்றினார். அடிகள் தாம் எழுதிய 'சிந்தனைக் கட்டுரைகள்' என்னும் நூலுக்கான முகவுரையில் குறிப்பிட்டுள்ளமை இங்கு ஈண்டு நோக்க த்தக்கது.
'தமிழில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதால் தமிழ் தன் இனிமையை இழந்துபோவதோடு பல தமிழ்ச் சொற்களும் இறந்துபோகின்றன' என்று விளக்கினார். தனித்தமிழ் இயக்கம் ஒரு மொழிக்கு எதிராகவோ ஒரு வகுப்பாரின் பேரிலுள்ள வெறுப்பாலோ ஏற்பட்டிருப்பதாகக் கருதுவது தவறு என்பதை அடிகள் உள்ளிட்ட பல்வேறு அறிஞர்களும் தெளிவாக எடுத்துரைத்தனர். அடிகள் ஆங்கிலம் வடமொழிபால் மதிப்புடையாராயினும் அம்மொழிகளின் சொற்களால் தமிழ்மொழிக்கு ஊறு நேராதிருக்கும் பொருட்டே தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்துச் செயற்பட்டார். இது அக்காலகட்டத்தில் தோன்றுவது காலத்தின் கட்டாயமாக இருந்தது.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழியல் வரலாற்றில் மறைமலையடிகள் தமிழ் மீட்பராகவே செயற்பட்டுள்ளார். 1916க்குப் பின்னர் 'தனித்தமிழ் இயக்கம்' சார்ந்த சிந்தனை முனைப்பும் செயல்வாதமும் தமிழ்நாட்டு சமூக அரசியல் இயக்கத்தின் அடிநாதமாக இழையோடி வந்த 'திராவிடக் கருத்து நிலை'யின் தாக்கத்துக்கு உட்பட்டதாக மாறியது.
தெ. மதுசூதனன் |
|
|
|
|
|
|
|
|